சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், பிப்ரவரி 22, 2010

அந்தமான் கதம்பம்.


அன்பு நண்பர்களே! கதம்பம் என்றதும் பூவோடு சம்பந்தப்பட்டது என்று நினைத்தீர்களா? அந்தமானில்,"பூ" பற்றி மட்டும் பேசக்கூடாது.ஒரு முழம் பூ இருபது ரூபாய்.கதம்பம்,கனகாம்பரம்,மல்லி,வாசமில்லா முல்லை,அனைத்தும் ஒரே விலை.ஒற்றை ரோஜா பத்து ரூபாய். இதுவே ஆயுத பூஜை,கோவில் திருவிழா,பண்டிகைகள் இப்படி நல்ல நாட்களில் இன்னும் விலை கூடும் (அக்கா! அங்க கோயம்பேடுலயே பூக்கெடைக்கல.நீங்க இப்பதான் பேரம் பேசிக்கிட்டு) அப்படியே வாங்கினாலும் நாளும் கிழமையுமாக சாஸ்திரத்துக்கு சூடிக்கொள்வதோடு சரி.அவ்வளவு அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கும்.ஒரு இன்ச் விட்டு அடுத்த கண்ணி இருக்கும். அதனால் பூச்சுடும் ஆசை மறந்து பார்க்கும் ஆசையை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். (எப்புடி?).கடவுளர்களுக்காகவே செம்பரத்தையில் சிவப்பு,வெள்ளை,இளம் சிவப்பு,அடுக்கு செம்பரத்தை இப்படி இருக்கவே இருக்கிறது! அத விடுங்க! இப்ப நா சொல்ல வர்றது அந்தமான் குறித்த சில கதம்பத் தகவல்கள்.

அந்தமான் அச்சடினா நத்தை
அந்தமான் அச்சடினா நத்தைகள் கோடைகாலத்தில் உறங்கும்.மழைக்காலத்தில் விழித்தெழுந்து உலா வரும்.தெருவெங்கும் ஊறித்திரிந்து வண்டிகளிலும்,கால்களிலும் அடிபட்டு உயிர் விடும் இந்த நத்தைகள் 8 முதல் 9 செ.மீ வரையிலும் சில 20 செ.மீ. முதல் 30 செ.மீ வரை நீளம் இருக்கும்.ஆப்பிரிக்காவில் இந்த நத்தை தான் உணவாகப் பயன் படுகிறது என்கிறார்கள்.இந்நத்தைகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்து ஆண்டுகள்.அதற்குள் ஒரு நத்தை கிட்டத்தட்ட 1000 முட்டைகளை இட்டுவிடும்.

அந்தமான் திருட்டு நண்டு
"பர்கஸ் லாட் ரோ" என்ற ஒரு வகை. அடர்த்தியான நீல நிறத்திலிருக்கும் இந்த நண்டுகள் இரவினில் திருட்டு.பகலில் பதுங்கும். இரவு நேரத்தில் தேங்காய்களைத் திருடுகின்றன.Robber crabs என்று சொல்லப்படும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காயைப்பறித்துக் கீழே போட்டுவிட்டு,இறங்கித் தேடி எடுத்து உரித்து,அதன் தடித்த கால்களால் உடைத்து,தண்ணீரைக்குடித்து,பருப்பையும் சுரண்டித் தின்னும். இந்த வகை நண்டுகள் தென் சென்டினல் தீவில் வசிக்கிறது.தென்னையில் ஏறும் போது தலையை நிமிர்த்திக்கொண்டு ஏறி, இறங்கும் போது தலைகீழாக இறங்கும்.இந்த நண்டுகளால் சுமார் 28 கிலோ எடையை சுமக்கவும்,30 கிலோ எடையை இழுத்துச்செல்லவும் முடியும்.

அந்தமான் சிப்பிகள்,கிளிஞ்சல்கள்
அந்தமான் கடலில் முத்துப்போல் ஒளிரும் டர்போ,டிராகஸ் மற்றும் நாட்டிலஸ் கிளிஞ்சல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.ஆண்டு தோறும் பல நூற்றுக்கணக்கான டன் கிளிஞ்சல்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒரு டன் கிளிஞ்சல்களை சுத்தம் செய்தால் 25 விழுக்காடு இறுதிப்பொருள் கிடைக்குமாம்.இந்த கிளிஞ்சல்களில் ஆபரணங்கள்,அழகுப்பொருட்கள் தயாரிக்கிறார்கள்.இதற்கான பயிற்சியினை அரசாங்கமே தருகிறது.மின்னும் இந்தக் கிளிஞ்சல்களை அழகாக வடிவமைத்து தங்கத்திலும் பதித்துக்கொள்ளலாம்.சங்குகள்,ராஜா கிளிஞ்சல்கள் இங்கு கிடைக்கும்.

நண்டு தின்னும் குரங்குகள்
குரங்குகள் பெரும்பாலும் தாவரப்பட்சினி தான்.ஆனால் அந்தமான்,நிகோபார்த் தீவுகளில் கட்சால்,கிரேட் நிகோபார் முதலிய தீவுகளில் ,"Macaque" எனப்படும் ஒரு வகைக்குரங்குகள் வாழ்கின்றன.இவை கடற்கரை ஓரங்களில் வாழும் கரு நிற நண்டுகளை (நம்மூர் வயல் நண்டு) பிடித்து உண்கிறது.

நர்கொண்டம் ஹார்ன்பிள்
அந்தமான் தீவுகளில் ஒன்றான நர்கொண்டம் தீவில் காணப்படும் இந்தப் பறவை உருவில் பெரியது.மாட்டுக்கொம்பு போன்ற பெரிய அலகு உள்ளதால் கொம்பு மூக்கன் என்ற பெயருமுண்டு.மரப்பொந்துகளுக்குள் கூடுகட்டி வாழும் இந்தப்பறவையில் தாய்ப்பறவை குஞ்சுகளுடன் வாழ ஆண் பறவை வெளியில் சென்று உணவு தேடிவரும்.அப்படி வெளியே செல்லும் போது களிமண்ணால் மரப்பொந்தின் வாயை அடைத்து விட்டுச்செல்லுமாம்.

உலகின் நீண்ட நாள் சிறைவாசி
உலகில் நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் முகாய்சிங் அவர்கள்.1857ம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டு மூர் என்ற ஆங்கில நீதிபதி ஒருவர் மற்றும் இரு ஐரோப்பியரையும் கொலை செய்த குற்றத்திற்காக அந்தமான் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.1907ம் ஆண்டு வரை சிறையில் இருந்து தமது 71வது வயதில் சிறையிலேயே காலமானார்.மொத்தம் 47 ஆண்டுகள் சிறையிலிருந்த இவரது சிறைவாசம் ஒரு உலகசாதனையாகும்.

மஜார் பகார்டு
மஜார் பகார்டு மசூதி ஒரு வழிப்பாட்டுத்தலம்.இஸ்லாம் சகோதரர்கள் மட்டுமல்ல.இந்து மக்களும் வழிபடும் சக்தியுள்ள ஒரு தலம்.இங்கு ஆடு வெட்டி,பொது மக்களுக்கு அன்னதானம் செய்வார்கள்.மொகலாயப்பேரரசரின் அவையில் தலைமை நீதிபதியாக இருந்த பாசல் ஹக் ஐதராபாதி மற்றும் படைத்தளபதியாக இருந்தவர் மௌலானா லியாகத் அலி என்ற இவ்விரு அறிஞர்களும் விடுதலைப்போராட்ட தியாகிகள்.1857ம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் கலந்து கொண்டு,அந்தமான் கூண்டுச்சிறைக்கு வந்து 1861ம் ஆண்டு தம் தண்டனை காலத்திலேயே இறந்து விட்டனர்.அவர்களை அடக்கம் செய்து எழுப்பப்பட்ட கல்லறைகள் இன்று வழிபாட்டு மையமாக மாறியிருக்கிறது.

சிறையில் துஞ்சிய சிற்றரசர்கள்.
அந்தமான் கூண்டுச்சிறையில் இந்திய மாகாணச்சிற்றரசர்கள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.1879ம் ஆண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஜெகன்னாத் பூரியின் சிற்றரசர் பிரிஜ் கிஷோர் சிங் தேவ்,1891 ம் ஆண்டு மணிப்பூர் மன்னர் குலச்சந்திரா, அவரது இளவல் அங்குசானா, சம்பல் பூரின் ஹத்தே சிங் ஆகியோர் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டு,மரணதண்டனை பெற்றனர்.அவர்களது உடல் இங்குள்ள தண்டுஸ் முனை என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆமைகளின் அந்தப்புரம் அந்தமான்.
தென் சென்டினல் தீவில் பச்சை ஆமைகள் ஏராளமாக வசிக்கிறது.ஒவ்வொன்றும் 450 முதல் 750 கிலோ வரை எடை உள்ளது.சுமார் 150 முட்டைகள் இடும்.கடலில் இருந்து கரைக்கு வந்து குழிகளைத் தோண்டி முட்டைகளை இட்டுவிடும்.வெளிநாடுகளில் ஆமை சூப்,ஆமை முட்டை ஆம்லெட் என்று உண்டாலும் நம்மவர்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.சமயத்தில் கடலில் snorkeling செய்யும் போது ஆமைகளின் தரிசனம் கிடைக்கும்.

திமிங்கிலம்
அந்தமான் கடலில் கொழுப்பைத் தலையில் சேமித்து வைத்திருக்கும் திமிங்கிலங்கள் அதிகமாக வாழ்கின்றன.இக்கொழுப்புத்திமிங்கிலங்கள் 900 அடி ஆழத்தில் வாழ்கின்றன.இத்திமிங்கிலத்தின் குடல் பாதையில் ,"அம்பர் கிரீஸ்" என்ற சிறிய சாம்பல் நிறமான கோந்து போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.திமிங்கிலம் உண்ணும் ராட்ஷச ஸ்குவிட் மீன்களின் கூர்மையான அலகு பாய்ந்து விடாமல் தன்னைக்காத்துக்கொள்ள இந்த அம்பர்கிரீஸ் பயன்படுகிறது.அவ்வப்போது திமிங்கிலம் வெளியிடும் இந்த அம்பர் கிரீஸ் கடலில் மிதந்து வந்து கரை சேரும்.இது வாணிப முக்கியத்துவம் வாய்ந்த விலையுயர்ந்த பொருள்.இதிலிருந்து தரமான வாசனைப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்டுகிறதாம்.

அந்தமான் பறவைகள்
அந்தமானில் மொத்தம் 246 வகைப்பறவைகள் உள்ளன. இதில் 39 வகை அழிவின் விளிம்பில் இருக்கிறதாம். அந்தமானின் தேசியப்பறவை "wood pigeon" எனப்படும் பறவை.இந்தப்பறவை சாதாரண புறாவைப்போல தோற்றமிருந்தாலும் இதன் வால் நீளம்.இதன் கழுத்தில் கட்டம் கட்டமான அமைப்பும்,தலை வெண்மை நிறமாகவும்,இறக்கைகள் அடர் அரக்கு நிறத்திலும் இருக்கும்.மெகா போட்,ஹார்ன்பிள்,அந்தமான் டீல்,நிகோபார் புறா ஆகியன குறிப்பிடத்தக்கவை.இது போக இடப்பெயர்ச்சி அடைந்து வரும் பறவைகள் நீரில் நடக்கும் பறவை,நீர் காக்கை,குயில்,நீள் சிறை ஆகியன.

அந்தமானின் சில்லறை தகவல்கள்.
அந்தமான் தீவுகளில் சுமார் 600 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் ரப்பர் தோட்டமும்,சுமார் 2400 ஹெக்டேர் நிலப்பரப்பில் செம்பனைத் தோட்டமும்(பாமாயில்) உள்ளது.இங்கு பர்மாவின் கரேன் மக்கள்,இலங்கை மற்றும் பங்களா தேஷ் அகதிகளும் வசிக்கிறார்கள்.அந்தமானில் பசுமை மாறாக்காடுகள்,இலையுதிர்க்காடுகள்,மலைச்சரிவுக்காடுகள்,மாங்குரோவ் காடுகள்,கடலோரக்காடுகள் என ஐந்து பெரும் காடுகள் தீவுகளெங்கும் நிறைந்துள்ளன.அந்தமான் காடுகளில் 110 வகையான மலர்கள்,நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்துள்ளது.இங்கு குட்டிப்பாம்பு அளவில் காட்டுப்பூரான்கள் இருக்கிறது(அது கடித்த கதை தனிப்பதிவில்)அந்தமான் கடல் வளங்களைக்கொள்ளையடிக்கும் வெளிநாட்டவர்களை கடலோரக்காவல் படையினர் பிடித்து அவர்களின் கப்பல்,படகுகளைப்பறிமுதல் செய்வதும் நடக்கிறது.பெரும்பாலானவர்கள்இலங்கை,பர்மா,இந்தோனேஷியா,தாய்லாந்து நாட்டவர்கள்.இவர்களைக் கைது செய்து தண்டனை முடிந்ததும் அவர்களது அரசு விடுவித்து அழைத்துச்செல்லும் வரை அந்தமானில் தங்குவதற்கும்,இலவச உணவிற்கும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இத்துடன் கதம்பச்செய்திகள் நிறைவு பெறுகிறது.மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் நேயர்களே! அட! பழக்க தோஷங்க!

அவளின் அடையாளம்

அவளை
தொட்டிச்செடியாய்க் கொண்டு வந்து
தோட்டத்தில் நட்டுவைத்து
இது உன் இருப்பிடமென்றார்கள்.

அன்பாய் சில நேரம்
அதட்டலாய் சில நேரம்
மென்மையாய் சில நேரம்
வெந்தனலாய் சில நேரம்
நீர் வார்த்தார்கள் அவளின் வேர்களுக்கு
அவளும்
நெகிழ்ச்சி,மலர்ச்சியை
புதுபுது இலைகளின் பசுமையாய்
தளர்ச்சி,வெறுமையை
சருகுகளை உதிர்த்து மொட்டை மரமாய்.

வார்த்த நீரின் அன்பில் உருகி
பூமிக்குள் புழுங்கி
வேர்களை ஓட்டி ஸ்திரமானாள்.
புயலுக்கும்,மழைக்கும்
வெயிலுக்கும்,வேனலுக்கும் நிழலானாள்.
கிளைகளை விரித்தாள்.
பூக்களை முகிழ்த்தாள்.
நான்கு சுவர்களுக்குள் விரிந்த அவளின் கிளைகளில்
கூடு கட்டி,குஞ்சு பொரித்து
அவள் விளைவித்த பழங்களை உண்டு களித்து
வாரிசு வளர்த்து
சுற்றிச்சுற்றி வந்தன அன்றில்கள் பல.
பூக்களை முகிழ்த்தபோது
அவளின் கிளைகளில் அமர்ந்து தேன் பருகின
வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும்.
சிலிர்த்து,நெகிழ்ந்து,மகிழ்ந்து அவள்

வாழ்க்கையின் பருவங்கள் வரிசையாய்...
வசந்தங்கள் வந்த போதும்
இலையுதிர்த்து நின்ற போதும்
மீண்டு வந்த அவளால்
மீளவே முடியவில்லை
விழுதுகள் தன் வேர்களை மீட்டு
வேற்றிடம் பெயர்ந்த போது

வெறுமையாய் மக்கிபோன
வேர்களுடன் தனிமரமாக,
ஊருக்குள் அவளொரு அடையாளம்
மதுரையின் மொட்டைக்கோபுரத்து முனி போல.

சனி, பிப்ரவரி 20, 2010

மனதின் தனிமையில்....

தனிமைச்சிலுவையில்,
வெறுமையின் ஆணிகளில் அறையப்பட்டு
மௌனமாய்க்கிடக்கிறேன்.
மடிக்கணினியில்,
அறிவின் துணையோடு
விரல்களுக்கும் விழிகளுக்குமான வேலை.
வாழ்க்கை வாழப்படாமல்
வெறுமனே நாட்களைக்கடத்தி...
என் மொழிகளை எண்ணமாக்கி
எண்ண அலைகள் அறைச்சுவற்றில் மோதி
எதிரொலித்தது மௌனமாய்...
சாளரமற்ற மனதின் சுவர்களில்
மோதி உடைந்தது ஞாபகங்கள்.

கோபம்,குரோதம்
வெறுப்பின் நெருப்புக் கங்குகளை
வீசிச்சிதறடிக்க
விட்டு விலகியது நட்பும்,உறவும்.
என் வாழ்நாள் தேடல்களின்
இருப்பு நிலைகளும்,
செல்வக்கிடங்கின் திறவுகோலும்
தலையணைக்கடியில் பரிகாசச்சிரிப்பில்.

வீதியின் இயக்கம்
விழிகளில் பிரதிபலிக்கிறது வெற்றுப்படமாய்..
திரைப்படமும் ஊடகமும் பேசிக்கொண்டே இருக்கிறது.
கேட்டுச்சலித்து,
மௌனம் வெறுத்து
நான் மொழிவதைக் கேட்கும்
செவிகளுக்கு ஏங்கும் மனம்.

தோட்டத்தில் மலர்ந்த பூக்களைத்தேடும்
பட்டாம் பூச்சியிடம் என் மௌனம் உடைக்க,
தலையாட்டுகிறது பூக்கள்.

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

வருங்காலத்தூண்களின் நலம்


குழந்தை வளர்ப்பு ஒரு கலை மட்டுமல்ல.பெரிய பொறுப்பான கடமை.நம் குழந்தை குடும்பத்திற்கும்,பரம்பரைக்கும் நல்ல சந்ததியாகவும்,ஊருக்கும்,நாட்டிற்கும் நல்ல குடிமகனாகவும் உருவாக வேண்டுமென்பது நமது ஒவ்வொருவரின் கனவும்,ஆசையும்.பிறந்த குழந்தை களிமண்ணைப்போல. நாம் எப்படி வனைகிறோமோ அப்படி உருவாகிறார்கள் ஒரு வயது வரை.அதன் பிறகு அவர்கள் நண்பர்கள்,அவர்களின் ஆதர்ச ஆசிரியர்கள்,திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் சமூகத்தின் தாக்கத்தாலும் தம்மை வார்த்துக்கொள்கிறார்கள்.இதை நமது பெற்ற மனது ஏற்க மறுக்கிறது.நாம் சொல்லும் வழியில் அவர்களைப்பயணிக்க நிர்ப்பந்திக்கிறோம்.குழந்தைகள் - நம் வழி வந்தவர்கள்.நாம் உருவாக்கியவர்கள் அல்லர்.அவர்கள் நாம் படைத்த பாண்டங்கள் இல்லை.அவர்களுக்கென தனியான உணர்வும்,சிந்தனையும்,எண்ணங்களையும்,விருப்பு வெறுப்புகளும் அமையப்பெற்றவர்கள் என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது.அவர்களை அவர்களின் சொந்த முயற்சியில்,சுயசிந்திப்பில் வளர விடுகிறோமா? அவர்களை," அவளப்பாரு அவ மாதிரி இரு.இவனப்பாரு,இவன மாதிரி மார்க் வாங்கு" இப்படி அவர்களை நாம் விரும்புபவர்களின் பிரதிகளாக,படியெடுக்கும் வேலையைச்செய்யச்சொல்கிறோம்.ஒப்பீடு என்பது குழந்தைகளைக் கடுமையாக பாதிக்கிறது.

இப்போது பத்தாம்,மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான மாதிரித்தேர்வு (Pre-Board) முடிந்திருக்கிறது.இந்தத் தேர்வில் வெற்றி பெறாத மாணவ,மாணவியரை 100% தேர்வு முடிவு காட்ட விரும்பும் பள்ளிகள் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை.இது மாணவர்களை மட்டுமல்ல,அவர்களின் பெற்றொரையும் கடுமையாக பாதித்துள்ளது.இங்கு பொதுத்தேர்வு சுரம் ஊரையே பாதிக்கும்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் காலை நான்கு மணி முதல் தொடங்கி விடுவார்கள்.அவர்களைக்கொண்டு விட்டு கூட்டிவரவென பெற்றொரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.படி,படி என்று படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைத்து அவர்களின் தனித்திறமைகளை முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.இன்று என் மகனின் பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர் சந்திப்பிற்குப் போயிருந்த போது ஒரு தாய் தன் மகளை குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைய அந்தப்பெண்குழந்தை வெட்கி அழுதது கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இங்கு மத்திய அரசின் பொறியியல் இட ஒதுக்கீட்டில் இடம் பெற,கடந்த வருடம் முதல் +2 பொதுத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒதுக்குவதில்லை.AIEEE நுழைவுத்தேர்வில் பெறும் தரவரிசையின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுமென்பதால் பெற்றோர் குழந்தைகளை +2 வில் மதிப்பெண் பெறாவிட்டலும் பரவாயில்லை.நுழைவுத்தேர்வுக்கு நல்லமுறையில் தயார் செய்துகொள் என்று அறிவுறுத்த,பொதுத்தேர்வுச்சுமையுடன் நுழைவுத்தேர்வுச்சுமையும் கூடி மாணவர்களைப் படுத்துகிறது.இன்று சமூகம் அடுத்த சந்ததியினரை ஒட்டுமொத்தமாக ஒரே திசை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறது.அதாவது பொறியியல் படிப்பை நோக்கி.வேலை வாய்ப்பும்,அபரிதமான சம்பளமும் காரணமாக இருக்கலாம்.ஆனாலும் ஒரு சமூகத்திற்கு பலவகையான மனிதர்களும் தேவையில்லையா? அறியும் ஆவலுடன் தானே படிப்பது வேறு.அது கூட புத்தகப்புழுக்களாக இருப்பவர்கள்,செய்முறைப்பயிற்சியில் தடுமாறுவதைப்பார்க்கிறோம்.புத்தக அறிவு என்பதை விட நாமே அனுபவித்துக் கற்றுக்கொள்வது தான் நடைமுறை வாழ்க்கைக்குப்பயனளிக்கிறது.இங்கு எல்லாப்பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப்படிக்கவைத்து அரசு வேலை வாங்கிக்கொடுத்துவிட்டால் போதும்.அவர்கள் போராட்டமின்றி வாழ்க்கையைக்கடத்துவார்கள் என்றுதான் சிந்திக்கிறார்களே தவிர அவர்களுக்குப்போராடக் கற்றுக்கொடுத்து அவர்களை சாதிக்க வைக்க மிகச்சிலரே விரும்புகின்றனர்.அதனால் பலருக்கு இங்கு வாழ்க்கை, ஒரு சலிப்பை ஏற்படுத்தி இயந்திரத்தனத்திற்கு வழிகோலியுள்ளது.

இன்று முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்று இப்படியான குழந்தை வளர்ப்பும்.குழந்தைகளுக்கு கல்வியையும்,பணம் சம்பாதிக்கவும்,சொத்துசேர்க்கவும் கற்றுக்கொடுத்த நாம்,கடமைகளை,பொறுப்புகளை ஏற்று,அவற்றை நிறைவேற்றும் உணர்வைக்கற்றுக்கொடுக்கவில்லை.அன்பு காட்டவும்,இரக்கம் கொள்ளவும் கற்றுக்கொடுக்கவில்லை.குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பு,வெறுப்பறிந்து,அவர்களின் பிற திறமைகளை ஊக்குவித்தால் போதும்,சாதிப்பார்கள்.குழந்தைகளுக்கு அடிப்படை நற்பண்புகளைச்சொல்லிக்கொடுத்தால் போதும்.மற்றவற்றை சமூகத்தைப்பார்த்து அவர்களே பகுத்தறிந்து பண்படுவார்கள்.ஒரு மூத்த ஆசிரியை சொல்கிறார்,"70-80 சத்விகித மதிப்பெண் பெறுபவர்களுக்குத்தான் படைப்புத்திறன் அதிகமிருக்கும்.அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் புத்தக அறிவு நிரம்பியவர்கள்.ஒரு சமச்சீர் வளர்ச்சி அவர்களிடம் இருக்காது" என்று.ஆக குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து தனிதிறன் களுக்கான மேடை அமைத்துக்கொடுப்பதும் அவசியமாகிறது.கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி.இந்த உலகிற்கு எல்லாவகையான மனிதர்களும் தேவை.ஒரு குழந்தை ரோஜாச்செடி எனில் ஒரு குழந்தை கத்திரிச்செடி.ரோஜாச்செடி கண்டிப்பாக,நிச்சயமாக கத்தரிக்காய்களைத் தரப்போவதில்லை.கத்தரிக்காய்களைத் தரும்படி நிர்ப்பந்தித்தால்,பலவந்தப்படுத்தினால் அந்தக்குழந்தை முரடனாக,சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் உதவாதவனாக உருவாவான்.ஆனால் அதே சமயத்தில் நாம் செய்யும் தொல்லையினால் அந்த ரோஜாச்செடி ரோஜாக்களையும் தரமுடியாது பட்டுப்போவார்கள்.அப்படி நம் வாரிசுகள் கருகத் திருவுளமோ?

திங்கள், பிப்ரவரி 15, 2010

ஒரு வார்த்த........


பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து வலைப்பூக்களில் காதல் ஜுரம் மெல்ல ஆரம்பித்து,பரவி,உச்சகட்டமாக 13ம் தேதியன்று தகிக்க ஆரம்பித்துவிட்டது.எல்லா வலைப்பூவிலும் காதல் கவிதைகள்,காதல் கட்டுரைகள்,மலரும் நினைவுகள்,பதின்ம வயதுப்பதிவுகள் இப்படி வயதிற்கேற்றாற்போல் விரிந்த பதிவுகள் அழகு. சில உருகி வழிந்த கவிதைகள்,சில உருக்கி வார்த்த கவிதைகள்,சில அனுபவக்கட்டுரைகள்,சில படிப்பினை தரும் கட்டுரைகள்,சில ரசிக்கும் படியான பால்ய காலப்பகிர்வுகள்,சில சிரிக்க,சிந்திக்க வைத்த சிந்தனைகள் இப்படி வலைகளில் சிரித்த விதவிதமான காதல் பூக்கள்.இன்னும் இதில் ஒரு சுவாரஸ்யம், சில இடுகைகளில் பின்னூட்டங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்தது.காதல் என்ற உணர்வு ஒவ்வொரு இதயங்களையும் எப்படி ஊடுருவி, வலிகளையும்,அனுபவங்களையும்,வடுக்களையும் விட்டுச்சென்றதை அறிய வரும்போது நமக்கும் வலித்தது.சிலரின் கவிதைகள் குறிப்பாக குடும்பங்களைப்பிரிந்து அந்நிய தேசங்களில் வாழும் நண்பர்களின் பதிவுகள் சங்கடப்படுத்தியது.காதலைக்கூட தவணைமுறைகளில் பரிமாறவேண்டிய நிர்ப்பந்தம்.பெரும்பாலான நண்பர்கள்,சகோதரர்கள் நேர்மையாக தங்கள் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ள,சிலர் அடுத்தவர்களின் வடுக்களை கிளறி,வலிகளை மீட்டுவந்தது வருத்தமாக இருந்தது.இது தவறில்லையா? வாழ்க்கையில் எல்லாக்காதலும் வெற்றி பெற்றுவிடுவதில்லை.வெற்றி பெற்ற பலரில் சிலரும்,தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்திருக்கலாமோ? என்ற நிலைக்குத்தள்ளப்பட்டவர்கள் தான்.

என்னுடைய கல்லூரி காலத்தில் நான் சுமாராக எழுதுவதால் நிறையத் தோழியர் தங்கள் காதலருக்கு கவிதை எழுதி வாங்கிக்கொள்வதுண்டு.உருகி,உருகிக் காதலித்தார்கள்.அது அவர்களின் நிழலுக்கும் தெரியாமல் பார்த்தும் கொண்டார்கள்.கல்லூரிக்காலம் முடிந்து விடைபெற்று,காலம் கடந்து அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்தது.ஒருவரின் திருமண அழைப்பிதழிலும் அவர்களின் காதலன் பெயர் இல்லை.நான் மாய்ந்து,மாய்ந்து அழுதேன் அவர்களுக்காக.பிறகு அவர்களை,கொண்டவர்,குழந்தைகள் சகிதம் பார்த்த போது நாணச்சிரிப்புடன் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது,சிறந்த இல்லத்தரசிகளாகவும்,கணவரின் மனதை கொள்ளையிட்டவர்களாக ஆகியிருந்த அவர்களின் குணம் என்னை அசரடித்தது.எந்தக்கற்பிதங்களுக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ளாமல்,காலத்திற்கேற்ற படி தன்னை செதுக்கிக்கொண்ட அவர்களால் அவர்களின் குடும்பம் சிறந்தது.இதே என்னுடைய நெருங்கிய தோழி ஒருவர்,அவரிடம் ஒரு தோழி விளையாட்டாக,'அவன் உன்னையே பாக்குறாம்ப்பா!' என்று கூறப்போக,அவரோ,'ஆமா! அவனுக்கு கண்ணு இருக்கு பாக்குறான்.அதுக்காக நா பின்னாடியே போயிருவனா? நா உங்கள மாதிரி இல்ல' என்று சூடாக, சமாதானப்படுத்திய என்னிடம்,'இல்லப்பா! நமக்குன்னு அம்மா,அப்பா இருக்காங்க.அவங்களுக்குன்னு நம்மளப்பத்தி ஒரு கனவு இருக்கும்.அவுங்க யாரப்பாக்குறாங்களோ அவர்தான். அதே சமயத்துல அவர் எனக்கும் புடிச்சிருக்கனும். இவளுங்க மாதிரி கடந்து போறவுங்களை எல்லாம் இவனா? அவனான்னு அலை பாய்றதெல்லாம் நமக்குப்பிடிக்காது' என்றார்.அவரின் சுயம் வரத்தில் ஏகப்பட்ட மாப்பிள்ளைகள்.அவரின் எதிர்பார்ப்பிற்கேற்றார்போல் தோற்றமிருந்தால்,படிப்பில்லை,படிப்பிருந்தால் வசதியில்லை.ஒவ்வொன்றாகக் காரணம் காட்டி,ஒவ்வொரு மாப்பிள்ளையையும் தட்டிவிட்டவர் இன்று நாற்பதை எட்டியும் திருமணம் செய்யவில்லை.அவர் செய்த தவறு என்ன?காலத்திற்கேற்றாற்போல் ஒட்ட ஒழுகாதது.இன்னொரு தோழி பெண்பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையை ஏறிட்டும் பார்க்கவில்லை. வெட்கப்படுகிறாளென்று நினைத்து பார்க்கச்சொல்லிக்கட்டாயப்படுத்திய போது, 'இல்லப்பா! இப்பல்லாம் மனையிலயே மாப்பிள்ள மாறுது,இந்தாளப்பாத்து ட்ரீம் அடிச்சுட்டு இல்லையின்னு ஆயிட்டா கில்டியாயிடும்' என்றார்.அவர் இன்று ஒரு பெண்குழந்தையோடு விவாகரத்தானவர்.காலநீரோட்டத்தில் சிலர் ஆங்காங்கே காரணங்களற்று தேங்கிப்போக வேண்டிய கட்டாயம்.இது தான் தலையெழுத்தென்பதா?.

காதலியுங்கள்.காதல் கைகூடாவிட்டால் கைகூடியவர்களைக்காதலியுங்கள்.வாழ்க்கை நமக்கு எதைத்தருகிறதோ, அதை ஏற்று வாழப்பழகுவது தான் வாழ்க்கை.காதல் தோல்வியில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.(பெண்கள் மன்னிக்க) தாடி வளர்ப்பது,கவிதை எழுதுவது,வாழ்க்கையே வெறுத்துப்போய்,எல்லாவற்றையும் இழந்த மனப்பான்மையுடன் தன்னையே வெறுப்பது இப்படி.பிரபல தமிழறிஞர் உயர்திரு.தமிழருவி மணியன் அவர்கள் தமது காதல் தோல்வியினால்,கட்டிய மனைவியுடன் ஐந்து வருடங்கள் எந்தக்கிளர்ச்சியும்,மகிழ்ச்சியுமின்றி வெவ்வேறு அறைகளில் தான் இருந்தனராம்.அவரது மனைவியார் திருமதி.பிரேமகுமாரி அவர்கள்,அவரது தவத்தைக்கலைக்காமல்,பொறுமையாயிருந்து அவரது மனதை வென்றிருக்கிறார்.இன்று தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் அந்த்ப்பொறுமையின் சிகரம் பிரேமகுமாரி அம்மா அவர்களே மனைவியாக வேண்டுமாம்.அவரைக்கலைத்த அந்தக்காதலி எங்கே?காதல் தோல்விக்கு வருந்தி வாழ்க்கையைத் தொலைத்தால் தான்,காதலை வாழ்விப்பதாய் அர்த்தமில்லை.காதலிக்கும் காலங்களில் கண்ணியத்தைக்கைபிடித்துக் காதலியுங்கள்.காதல் கைகூடா விட்டாலும் கூட குற்ற உணர்வின்றி மனதை வேறு வழியில் செலுத்தி,பிறகு உங்களை விரும்புகிறவரை கைப்பிடிக்கலாம்.இது காதலா என்கிறீர்களா? ஆனால் இதுதான் எதார்த்தம்.காதல் என்பது ஒரு விருப்பம்.அந்த விருப்பம் நிறைவேறாவிட்டால்,நிறைவேறும் சாத்தியமுள்ள ஒருவரை அடைவதில் தவறென்ன?

மனிதன் தோன்றிய நாள் முதலாய் போர்கள்,கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிற்கும் காரணம் பாலுணர்வு.அதாவது பெண்ணைக்கவரும் செயல்கள் தான்.மனிதனின் உந்து சக்தியே அந்த உணர்வு தான் என்கிறார்கள் மனவியலாளர்கள்.அதனால் தான் நமது பாரதி தாசனும் "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்றாரோ? ஆதலினால் இளைய பாரதமே இந்தக்காதலர் தினத்துல கொசுவர்த்தி சுத்துனவுங்க எல்லாரும் கடந்த காலத்த சுவாரசியமா சுத்திவிட்டாங்க பாத்திங்களா? ஆனா அந்த காலகட்டத்துல ரொம்பவே வெறுமையா உணர்ந்திருப்பாங்க! காலம் கடந்ததும் அந்த இழந்த காதலே ஒரு படைப்பா மாறிடுச்சு.நீங்களும் காதலிங்க! தோல்வியா! இதெல்லாம் நடக்குமுன்னு மனச மாத்தி வேற பாதையில நடக்க ஆரம்பிச்சிடுங்க!.தாடி,மது,புகைன்னு போகாம,கவிதையோட ட்ராக் மாறிடுங்க.பொண்ணுங்களுக்கா? சொல்றதுக்கு ஒன்னுமில்லங்க! அவங்க ரொம்ப புத்திசாலிங்க!அடிச்சா சிக்சர்.இல்லாட்டி மூச்!

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே


வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது? வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சிலாகிப்பு இது.வாழ்நாளைக் கடமையே எனக்கடத்திக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைபற்றிய பார்வை என்னவாக இருக்கும்.வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களையும்,அதன் மூலம் வாழ்க்கை பற்றிய வெவ்வேறான பார்வைகளையும் தருகிறது.மரணம் பூமியில் ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.ஏன் நிலம்,நீர் நிலைகள் அத்தனைக்கும் உண்டு.ஒரு காலத்தில் கடலாய் இருந்த நீர் நிலை,நிலப்பரப்பாகவும்,ஒரு காலத்தின் பெரு நகரங்கள் சிதிலமடைந்து,சிற்றூர்களாகவும் இருப்பதை வரலாறு சொல்கிறது.ஏன் பூமிக்கும்,சூரியனுக்கும் கூட மரணம் உண்டென் கிறது அறிவியல்.தோற்றம் என்று ஒன்றிருந்தால் அழிவென்பதும் கட்டாயம் உண்டு.ஆனால் அழிவை,மரணத்தைத் தானே வலிந்து தேடிக்கொள்வது இறைப்படைப்பில் மனிதன் மட்டுமே.ஆல்பட் ராஸ் மற்றும் மணிப்புறா தன் இணை இறந்தால் தானும் இறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அது விதிவிலக்கு.ஆனால் துன்பங்களை,இழப்புகளைத் தாங்க முடியாது உயிர் துறக்கும் மனிதர்களை நினைத்தால் ஒரு புறம் கோபமும்,மறுபுறம் வருத்தமும் பொங்குகிறது.நமது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்கில்லை.

அந்தமானில் தற்கொலை செய்துகொள்பவர்கள் நாடும் வழி தீக்குளிப்பது.சமைக்கும் போது கவனக்குறைவினால் விரலில் பட்டாலே எரியும் எரிச்சலில் ஊரைக்கூட்டும் நமக்கு உடலை உரித்துப்போடும் இந்த வன் கொடுமை புத்தியை,நாடி நரம்பை,குலைத்துப்போடும்.பள்ளிசிறுமியில் இருந்து குடும்பத்தலைவி வரை கையில் எடுக்கும் ஆயுதம் அது தான்.தலைக்கூந்தலில் ஆரம்பித்து,கால் நகம் வரை அலங்கரிக்கும் ஒரு பெண்,கூந்தலில் பூச்சூடி, விதவிதமாய்த் தன்னை வெளிப்படுத்தி மகிழும் ஒரு பெண் தன்னையே இழக்க எது காரணமாய் இருக்கக்கூடும்.அவளின் கவலைகளா,துன்பங்களில் இருந்து மீளத்தெரியாத அறியாமையா,தனக்கு மட்டுமே கஷ்டங்கள் என்ற எண்ணங்களில் மூழ்குவதா,தற்கொலை செய்து கொண்டால் இதிலிருந்து விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையா எது? சமீபத்தில் ஒரு பெண் தீக்குளித்த கொடுமை.தாய்,தந்தை இழந்து உறவினரின் அரவணைப்பில் வளர்ந்து,திருமணமாகி கணவனே சதமென்று வந்தவள்,கணவனின் குடிப்பழக்கமும்,அது தந்த மன உளைச்சலும் காரணமாக இந்த முடிவுக்குத் தள்ளப்பட்ட பேதை.தாய்,தந்தையை இழந்தும் உயிர் கொண்டு வளர்ந்தவள்,கணவனுக்காய் உயிர் துறந்தாள்.இப்படி நிறையப் பெண்கள் குடும்பம்,குழந்தைகள்,அக்கறையில் வயதான பெற்றொரை,உடன் பிறந்தோரைத்தவிக்கவிட்டு சொல்லாமல் விடைபெறும் கொடுமைகளை நேரில் காணும் போது தூக்கம் தொலைத்த இரவுகள் எத்தனை? இவர்களின் உயிர் துறப்பால் எவர் மாறினர். எது மாறியது.அவர்கள் புதுமாப்பிள்ளைகளாய் வலம் வர யாரோ மறுபடி தூண்டிலில்.யாருடைய இறப்பும் எதற்கும் தீர்வில்லை என்று இவர்களுக்கு யார் புரிய வைப்பது?

ஒவ்வொரு பிரச்சினைக்கும் மரணம் தான் முடிவு என்று மானுடம் முடிவெடுக்க ஆரம்பித்திருந்தால் அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமா? குழந்தைகளை வளர்க்கும் போதே,கஷ்டங்களை,துன்பங்களை,பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்தாமல் கூண்டுக்கிளிகளாகவும்,தொட்டிச்செடிகளாகவும் வளர்ப்பது தான் முக்கிய காரணம்.பள்ளியில் ஆசிரியர் அடித்தால் மிரட்டி விட்டு வரும் நாம் தான் நம் குழந்தைகளை திசை மாற்றுகிறோம்.நமது இளமையில் பள்ளிக்காலங்களில் நமது பெற்றோர் ஆசிரியர்களிடம் அடி போடச்சொல்லி வளர்த்தனர்.ஒவ்வொரு பிரச்சினையையும் அம்மா,அப்பா வரை கொண்டு போகாமல் நாமே தீர்த்துக்கொண்ட நாட்கள் அவை.அந்தப்பழக்கம் தொடர்வதால் இன்றும் வாழ்க்கையை ரசிக்கிறோம்.இந்தப்பிரச்சினைகள் சர்வ சாதாரணம்,இதைக்கடந்து வருவது நமது சாதனை என்று எண்ணுகிறோம்.ஆனால் குழந்தைகள் தடுக்கி விழுந்தால் ஊரைக்கூட்டுகிறோம்.அவர்களுக்கு முன் நாம் துடிக்கிறோம்.இது தான் பாசம் என்று அவர்களை சிறைப்படுத்துகிறோம்.அவர்களை சுயமாய் இருக்க விடாது,அவ பயப்படுவா!,அவ தாங்க மாட்டா!,அவ துடிச்சுப்போய்டுவா! இப்படி ஒவ்வொரு கருத்தையும் திணித்து 'ஓ! இது தான் நாம்' என்று நாமே அவர்களுக்குள் அவர்கள் குறித்த பிம்பத்தை உருவாக்குகிறோம்.அந்த பிம்பம் வளர்ந்து அவர்களின் கற்பனைகள் ஏறுமாறாக ஆகும் போது இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.அவமானங்கள்,தோல்விகள்,மாறிப்போகும் எதிர்பார்ப்புகளோடு சமரசம் செய்து அவைகளையே வெற்றிப்படிகளாக ஆக்கி உயரச்சொல்லிக்கொடுப்பது அவசியம்.

பக்கத்து வீட்டுப்பெண்ணோடு சண்டை,கணவனோடு சண்டை,நாத்தனார் அவமதிப்பு இப்படி பெண்களும்,பள்ளியில் திருடியதாய்,கடிதமெழுதியதாய்,எதிர்ப்பாலினரோடு பேசியதை ஆசிரியர் கண்டித்ததால்,மதிப்பெண் குறைந்ததால் இப்படி பெண் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வதும்,நான்கு நாட்கள்,மிஞ்சிப்போனால் ஒரு வாரம் அது குறித்த பேச்சு,அதன் பின் சமூகம் மறக்கும்.உருவத்தை,சட்டம் போட்டு,பூச்சூட்டி வருடம் திரும்பியதும் குடும்பம் மறக்கும்.இது தான் யதார்த்தம்.மரணம் எதையும் மாற்றப்போகிறதா? வருங்காலத் தூண்களுக்கு இதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு துன்பம் வரும் போது அடுத்து இன்பம். ஒரு தோல்வி அடுத்து வெற்றி.இது தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொடுப்போம்.ஒவ்வொருவரின் தலைக்குமேல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருக்குமாம்.அதன் ஆரக்கால்களில் இன்பம்,துன்பம்,வெற்றி,தோல்வி,அவமானம்,புகழ் இப்படி எழுதப்பட்டிருக்குமாம்.எந்த ஆரக்கால் நம் தலைக்கு நேரே,(அதாவது கடிகார முள் போல) வருகிறதோ,அப்போது நமக்கு அது கிட்டும்.ஒவ்வொரு முறை துன்பம் வரும்போதும் அடுத்த ஆரக்காலுக்காகக் காத்திருக்கிறேன் நான். நீங்கள்?

வியாழன், பிப்ரவரி 11, 2010

பதின்ம வயது டயரிக்குறிப்பு


பதின்ம வயது தொடர் பதிவுக்கு அழைத்திருக்கும் தோழி தீபா நேஹாவிற்கு நன்றி.முதலில் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறில்லை.செட்டிநாட்டு கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் பதின்ம வயதில்,அதுவும் 1983 முதல் 1989 ம் வரையிலான காலகட்டத்தில் ஒரு ரொமான்ஸான டீன் ஏஜ் பதிவை எதிர்பார்த்தால் சாரி! என்னுடைய பதின்மப்பருவம் ரொம்பவே வித்தியாசமானது.எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள்,ஒரு பையன்.நான் தான் மூத்தவள்.குழந்தைப்பருவம் தங்கைகளுக்கும்,தம்பிக்கும் ஆயாவாக.அதனாலேயே பொறுப்பான பெண் என்று அப்பா,அம்மா,ஆயா,அப்பத்தா,ஐயா,சித்தப்பா,அத்தை இவர்களின் அன்புக்கு பாத்திரமானவள்.அதன் பிறகு காலை ஐந்து மணிக்கு எழுந்தால் பள்ளிக்குப்போகும் வரை வேலை தான்.மாட்டுத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி,குழாய் தண்ணீர் பிடித்து,சட்னி அம்மியில் அரைத்து,பாத்திரம் துலக்கி இப்படி நாங்கள் எல்லோருமே பரபரவென வேலை முடித்து பள்ளிக்கு ஓடுவோம்.மாலை திரும்ப வந்து அதே வேலைகளோடு,ஆட்டுக்கல்லில் மாவரைப்பதுடன் வேலை முடிக்க இரவு ஏழு மணி.அதன் பிறகு இஷ்டமிருந்தால் பாடம்.இல்லையென்றால் தங்கைகளோடும்,தம்பியோடும் விளையாட்டு.என் அப்பா "ஹார்டுவேர்" கடை வைத்திருந்ததால் பெரிய காம்பவுண்டிற்குள் சிறிதாக வீடு. அதனால் அக்கம்,பக்கம் வீடுகள்,நண்பர்கள் இல்லை.இரவு சிலோன் வானொலியில் பாட்டு,ஒலிச்சித்திரம் கேட்டபடி அம்மா பரிமாற அப்பாவோடு பேசி,சிரித்து சாப்பாடு.பள்ளிப்பருவத்தில் கறுப்பு நிறம் என்ற தாழ்வுமனப்பான்மையில் குறுகிக்கிடப்பேன்.சொன்னால் சிரிப்பீர்கள்.அழகான,சிவப்பான பெண்களைத்தான் மிகவும் பிடிக்கும்.காதலுக்கு அர்த்தம் புரியாது.குழாயடியில் சந்திக்கும் பையன் களை,ஐந்தாம் வகுப்பு வரை படித்த தோழர்களை சந்தித்தால், என்னடா!,டேய்!,எப்படியிருக்கடா! என்று ஏக வசனம் தான்.யாருக்கும் பயமோ,நாணமோ கிடையாது.அந்த வயதில் நடந்ததே கிடையாது.தரையில் கால் பாவாமல் ஒரே ஓட்டம் தான்.ட்யூசன் போனது கிடையாது.படிப்பு பற்றியெல்லாம் பெரிய சிந்தனை கிடையாது.கட்டுக்கதைகள்,பாடுவது,வீட்டில் திருடுவது என்று திரில் நிறைந்த பருவம் அது.பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் பார்த்த திரைப்படங்கள் முருகன் அடிமை,வருவான் வடிவேலன் இப்படி பக்திப்படங்கள் தான்.மற்ற படங்கள் கதையாகத்தோழியர் சொல்வர்.(பாவம்ப்பா! இவ சினிமாவுக்கே போறதில்ல.நாமளாச்சும் சொல்லுவம்) பள்ளியில் டான்ஸில் சேர்க்கமாட்டார்கள்,நிறத்தைக்காரணம் காட்டி.நாடகங்களில் தள்ளுப்பட்ட வேடம் தருவார்கள்.ஆனால் வீட்டில் அத்தனை டான்ஸையும் நானே பாடி,ஆடுவேன்.நாடகத்தில் அத்தனை பேரின் வசனமும் சரளமாக மோனோ ஆக்டிங் செய்வதுண்டு.அம்மா அசந்து அப்பாவிடம் சொல்லி நான் காலரைத்தூக்கிவிட்ட நாட்கள் பசுமையானவை.பதினொன்று,பன்னிரண்டாம் வகுப்பு இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி.எல்லா ஆண்களுடனும் சகஜமாகப்பேசுவதால் அண்ணன்,தம்பிகள் நிறைய.அப்பா கடைக்கு வரும் காம்ளிமென்ட் டையரியில் கவிதைகள் எழுத ஆரம்பித்தது இந்த வயதில் தான்.

அதன் பிறகு கல்லூரி.என்னைக்கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்று என் அப்பா,அம்மா,ஆயா ஆசைப்பட மற்ற என் உறவினர்கள்," வேணாம்.காலேஜ்லாம் படிச்சுச்சுக,சொல்றதக்கேக்காதுக.ஓடிப்போகுங்க! அந்த செலவ இன்னும் கொஞ்சம் ரெண்டு மூனு பவுனக்கூடப்போட்டு கட்டிக்குடுங்க!" என்று அறிவுரை கூற என் அப்பா,அம்மா அவர்களை அலட்சியப்படுத்தி என்னைக்கல்லூரியில் சேர்த்தனர்.அந்த வார்த்தைகளின் தாக்கமோ என்னவோ,அல்லது யாரும் ப்ரொபோஸ் பண்ணாத காரணமோ சலனங்கள் இல்லை.என் தோழியர் யாரைக்காண்பித்தாலும் சீ..அவனுக்கு மூக்கு சப்பை,இவனுக்கு பல்லு சரியில்ல,என்பதுண்டு.சிவப்பான ஆண்களை சீ வெள்ளுலுவக்குட்டி மாதிரி.ஆம்பிளையின்னா கறுப்பா இருக்கணும்.அது தான் கம்பீரம் என்பேன்.கனவுகள்,கற்பனைகள் எல்லாம் கவிதை புனையவும்,கல்லூரியில் பெரியாளாகக் காட்டிக்கொள்ளவும் தான்.காதலுக்கு எதிரியோ அன்றி அது கெட்ட வார்த்தை என்றோ இல்லை.அந்த மாதிரி சலனங்கள் தனிமை அதிகம் இருப்பவர்களுக்குத்தான் வருமோ? பாத்தவுடன பத்திக்கிற மாதிரி ஆளுகளப்பாக்கலையோ? பாலகுமாரனும்,ஜெயகாந்தனும் படிக்கும் போது கூட அழகான குடும்பம்தான் கற்பனை. வணிகவியல் இளங்கலை கல்லூரியிலும்,முதுகலை அஞ்சல் வழியிலும் முடித்து 21 வயதில் திருமணத்தின் போதும் என் அப்பா யாரைச்சொல்வார்களோ அவர்தான் என்ற முடிவு தான். என் அப்பாவும்,அம்மாவும் அரிதான புரிதல் உள்ளவர்கள்.அப்பா ரொம்பவே மென்மையானவர்கள்.அப்பா,அம்மா என்றால் போதும்.வெறித்தனமான பாசம்.அதனால் தான் அப்பாவை சீக்கிரமே பறிகொடுத்தோம்.என் தங்கைகள்,தம்பி இன்னும் கூட பெயர் சொல்லி அழைத்துக்கொள்வோம்.நல்ல நண்பர்களாக இருப்போம்.நண்பர்கள் வட்டம் பெரிது என்றாலும் கூட முதல் நட்பு வட்டம் என் குடும்பம் தான்.எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம்.நாங்கள் ஐந்து பேரும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் புரிந்து என் தம்பியை நீயாவது காதல் மணம் செய்ய வேண்டும் என்று கூற ," ம் அது சரி.என் மொகத்துல மக்குத்தனம் அவ்ள வடியுதா? இவளுகள்லாம் நிம்மதியா இருப்பாங்களாம். நா மட்டும் பிச்சுக்கிட்டு அலையவாம்.பொண்ணு பாத்து கட்டிவச்சாக் கல்யாணம்.உங்களுக்கு பட்டுப்புடவை.இல்ல ஆள விடுங்க! நா பிரம்மச்சாரி" என்று கூவ ஆறு பேரில் ஒருவரும் திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லை.திருமணத்திற்குப்பின்.........ஆனா ஒண்ணுங்க! காதலிச்சுத் தான் கல்யாணம்னா, என்ன மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணப் பிராப்தியே இருந்திருக்காதுங்க!

ஆங்! ஒண்ணு சொல்ல மறந்துட்டனே! பள்ளி,கல்லூரிகளில் அழகரசிகளாக இருந்தவர்கள் இப்போது தலை நரைத்து,ஆட்டுக்கல்,உரல் அளவிற்கு இருக்க,கறு......ப்பு என்று விமர்சிக்கப்பட்ட நான் இன்று அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறேன்.அட நிஜமாங்க! நம்புங்க! "18 வருஷத்துக்கு முன்னால பாத்தமாதிரியே இருக்கியே! " எப்புடி? என்று கேட்க ஒரு புன்னைகை தான் பதில்.ஆனா உங்ககிட்ட அந்த ரகசியத்த சொல்லணுமில்ல."கவலப்படாதீங்க! அதுனால முகத்துல முதுமை தான் வரும்.தன்னம்பிக்கை,தைரியம் முகத்துல ஒரு பொலிவையும் அழகையும் குடுக்கும்.அதோட எளிமையான அலங்காரம்,நமக்கேற்ற உடை,முகத்துல எப்பவும் ஒரு புன்னகை,யதார்த்தங்களை மனசளவுள ஏத்துக்குறது,சரியான உணவு,வீட்டு வேலைகள நாமே செய்யறது (இதுனால உடல் சீரா இருக்கும்),மந்தமா,சோம்பேறித்தனமில்லாம இருக்குறது,தந்திரமற்று,இயல்பாய் இருப்பது,பழைய உணவ ஃப்ரிஜ்ல வச்சு சாப்பிடறத தவிர்க்கிறது,காய்கறி,பழங்கள் அதிகமா உணவுல சேத்துக்கறது இப்புடியெல்லாம் செய்துகிட்டு வந்தா எப்பவும் இளமையா இருக்கலாம்.

புதன், பிப்ரவரி 10, 2010

காதலர் தினம்


காதல் - யுகயுகமாகப் பேசப்படும் இந்த உன்னத உணர்விற்கு வைரமுத்துவின் வரிகளில் வரைவிலக்கணம் சொல்வதென்றால் "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவை" தருவது காதல்.ஆண்டாண்டு காலமாய் பேசப்பட்டாலும்,பாடப்பட்டாலும் காதலின் மொழிமட்டும் அட்சயப்பாத்திரம்.காதலைப்பாடும்,எழுதும் ஒரு படைப்பாளியின் எழுதுகோலுக்கு இறக்கை முளைத்துவிடுவதை,அவனின் படைப்பிலக்கியங்களின் மொழி வீச்சிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.திரைப்பாடல்கள் எல்லாமும் காதலைச்சொல்லும் போது மட்டும் இலக்கியத்தரம் பெற்றுவிடுகின்றன.ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது காதலைக்கடந்து வருகிறோம். அவரவர் வசதி,ப்ராப்தத்திற்கேற்றபடி,புத்திசாலித்தனம்,போராடும் குணம் இவற்றைப்பொறுத்து,கல்யாணத்திற்கு முன் அன்றி கல்யாணத்திற்குப்பின் காதலின் உன்னதத்தை அனுபவிக்கிறோம்.காதல் என்பது மூளையில், "நியோ கார்டெக்ஸ்" இருப்பதாலும்,ஹார்மோன் களின் வேலை,மூளையின் வேதியியல் மாற்றங்கள் என்று அறிவியல் சொன்னாலும் காதல் தரும் ஊக்கமும் ஆக்கமும் வேறு எதுவும் தரமுடியாது.நாம் ஒருவரால் விரும்பப்படுகிறோம் என்பதே மிகவும் சுகமானது.ஆனால் எது காதல் என்பதில் தெளிவும்,காதலிக்கும் போது இருக்கும் வேகம் வாழ்க்கை முழுதும் தொடரும் படியான இறுக்கமும் இருக்கும் போது தான் காலமெல்லாம் காதல் வாழும்.

மேல் நாடுகளில் பிப்ரவரி மாதம் 14ம் தேதியைக்காதலர் தினமாகக் கொண்டாடிவர,உலகமயமாக்கலின் போது இந்தக்காதலர் தினமும் இந்தியாவிற்கு இறக்குமதியானது போலும்.இந்தியாவைப்பொறுத்தவரை காதலர்களுக்கு தினம்தினம் கொண்டாட்டம் தான்.அதென்ன? பிப்ரவரி 14ம் தேதி மட்டும் காதலர் தினம்.பிறகு காதலர்கள் நண்பர்களாகி விடுவார்களா? சுத்த அபத்தம்.அன்னையர்,தந்தையர் தினம் வைத்து அன்றுமட்டும் அவர்களைக்கொண்டாடுவது மேல்நாட்டு நாகரீகம். வருடத்தில் ஒரு முறை கொண்டாடிவிட்டு மற்ற நாட்கள் கண்டுகொள்ளாது இருப்பதா? ரோம் நகரில் கிளாடியஸ் என்னும் கொடுங்கோல் மன்னன், படைவீரர்கள் திருமணம் செய்யக்கூடாது.அது அவர்களின் போர்த்திறமையைப்பாதிக்கும் என்று கி.பி.267ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வர,காதல் வயப்பட்ட பல படைவீரர்களின் திருமணத்தை ரகசியமாக செய்துவைத்தவர் வாலெண்டைன் என்கிற இளம் பாதிரியார்.இந்த விஷயம் கிளாடியசுக்குத்தெரியவர பாதிரியாரின் தலை சீவப்பட்டது என்றும்,அவரின் நினைவாகத்தான் காதலர் தினம் கொண்டாடப்படுகிறதென்று ஒரு கருத்துண்டு.அந்தக்காலத்தில் ரோம் நகரில் நம்ம ஊர் இந்திர விழா போன்று,"லூபர்கேலியா" என்று ஒரு விழா பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட்டு வந்தது.வசந்தகாலத்தை காதலர்கள் வரவேற்கும் ஒரு உற்சாக விழா.அந்த விழாதான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அந்தமானில் பிபரவரி 13ம் தேதியே வண்ண வண்ண ரோஜாக்கள்,அழகாக காகிதம் சுற்றப்பட்டு, வந்து இறங்கிவிடும்.பள்ளிச்சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் கைகளில் விளையாடும்.வெறும் இனக்கவர்ச்சிக்கும்,காதலுக்கும் வேறுபாடறியா பிஞ்சுமனங்கள் ஏதோ ஒரு உந்துதலினாலும்,ஊடகங்களின் தாக்கத்தாலும் காதலைக் கண்டதே கோலமாகக் கையாளும்.பரிமாறப்படும் ரோஜாக்களையும்,பரிசுகளையும் பகிரங்கப்படுத்தமுடியாது பெண்குழந்தைகள் குழம்பும்.அடுத்த காதலர் தினத்தின் போதும் அதே ரோஜாக்கள்.அதே பரிசுகள்.கொடுக்கும் கரங்களும்,பெறும் கரங்களும் மாறுபடுகிறது.புரிதலில்லை.காதலில் ஆழமில்லை.உணர்வு வழி ஆரம்பித்து உணர்வு வழி முடிந்து விட,காதலின் வேகம் திசை மாறிவிடுகிறது.எங்கோ சிலர் உணர்வு வழி ஆரம்பித்து அறிவு வழி முடித்து நல்வாழ்வு வாழ, பலரின் காதல் பிசுபிசுத்துப்போகிறது.

Love before wedding இருக்கிறதே, அது LBW கொஞ்சம் தடுமாறினாலும் நம்மைக் களத்தினின்று வெளியேற்றிவிடும்.காலத்திற்கும் குற்ற உணர்வை விதைத்துவிடும்.ஆனால்,Love after Wedding இது தான் LAW நமது சட்டம்.திருமணத்திற்குப்பின் காதல் - பாதுகாப்பு,சமூக மதிப்பீடு,பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவு,சந்ததியினரின் நலவாழ்வு இப்படி நன்மைகள் ஆயிரம்.திருமணத்திற்கு முன் காதல் - தெளிவு,போராடும் குணம்,விடாமுயற்சி,உலகே எதிர்த்து நின்றாலும் தனது நிலைப்பாட்டில் உறுதி இப்படித் தன்னை உணர்ந்து செயல்படும் சிலருக்கே வாய்க்கிறது.மற்றோருக்கு வானவில்லாய் வர்ணஜாலம் காட்டிப்போகிறதோடல்லாமல்,மனதில் தீராத வடுக்களை விட்டுச்செல்கிறது.பிரச்சினைகள்,விவாகரத்துக்கள் இரு திருமணங்களிலும் உண்டு என்றாலும்,காதல் திருமணங்களின் தோல்வி காதலைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.காதல் தோற்று விடுவதில்லை.காதலர் தோற்று விடுகின்றனர்.காதலைக்கேவலப்படுத்திவிடுகின்றனர்.காதலின் பெயரால் ஓடிப்போவது,தோல்வி என்று தாடி வளர்த்து கவிஞனாவது,இவையெல்லாம் தவிர்த்து, அறிவின் பாற்பட்டு,ஒரு முதிர்ந்த மனநிலையில் உருவாகும் காதல் தான் சமூகத்தில் வரவேற்கப்படும்.

காதலர்களுக்குத்தான் காலமும் பொழுதும்.காதலுக்கேது தினமும்,பொழுதும்.காதல் சர்வ வியாபி.சூரியனிடம் கொண்ட காதலால் தான் பூமி பூ பூக்கிறது.இயற்கையின் படைப்புகள் காதலின் விளைவுகள். ஆனால் மனிதனைப்போல் மற்றெதுவும் காதலைத்தவறாகப் பயன்படுத்துவதில்லை.காதலின் பெயரால் துணையை ஏமாற்றுவதில்லை.அதனால் தான் காதல் சாதரணமானவர்களைப் பயமுறுத்திவிடுகிறது.கண்டதும் காதல்,காணாமல் காதல்,தொலைபேசிக்காதல்,சொல்லாமல் காதல் இப்படிப் பல காதல்களைச்சொல்லும் திரைக்குக்காதல் -கதை. கவிஞனுக்கு காதல் - பாடுபொருள்.சாதாரண மனிதர்க்குக் காதல், வாழ்க்கை.அதனால் காதல் துணையைத்தேடும் போது கணக்குப்போட்டு, தனக்குப்பொருத்தமான (மனம்,உடல் இரு பொருத்தமும்)  துணை தேடுவதில் தவறில்லை.

இளையோரே!
செல்வத்தைச்சேமியுங்கள் - வருங்கால நலனுக்கு.
கனவுகளைச்சேமியுங்கள் - வருங்கால வளர்ச்சிக்கு.
காதலை மட்டும் செலவழித்துக்கொண்டேயிருங்கள் - மனித வளர்ச்சிக்கு. ஏனென்றால் மனிதம் வளர்க்கும் சக்தி காதலுக்கு மட்டும் தான் உண்டு. உண்மைக்காதலுக்கு மட்டும் தான் உண்டு..
அனைத்துக் காதலர்களுக்கும் (தம்பதியர் உட்பட) காதலர் தின நல்வாழ்த்துகள்

சனி, பிப்ரவரி 06, 2010

அந்தமானுக்கு சுற்றுலா வர்றீங்களா? - 2


அந்தமானுக்கு சுற்றுலா வர்றீங்களா? கட்டுரையைப்படித்துவிட்டு நிறைய நண்பர்கள் அந்தமான் வருவதற்கு விருப்பம் கொண்டுள்ளார்கள் என்பது கருத்துரை வாயிலாகவும்,தமிலிஷில் ஓட்டுப்பதிவு மூலமும்,விகடனில் குட் பிளாகில் சேர்ந்துள்ளதையும் வைத்து அறிந்துகொள்ளமுடிகிறது. (எப்புடி பந்தா!) அந்தமான் தமிழோசை வலையில் பழைய கட்டுரைகளைப்பார்த்தால் தங்களுக்கான விடைகள் கிடைக்குமென்றபோதிலும் மீண்டும் தங்கள் அனைவருக்கும் தீவுகள் ஒரு அறிமுகம்.அந்தமான்,நிகோபார்த்தீவுகள் இந்தியாவின் ஒன்றியப்பகுதிகளில் ஒன்று.அந்தமான் நிகோபார்த்தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கும் தீவுகள் 36.நீலக்கடலில்,பச்சை நிறத்தீவுகள் இது என்பதால் இதனை "எமரால்டு" தீவுகள் என்றும் அழைக்கின்றனர்.தென்னையும்,கமுகும்,வானுயர்ந்த அடர் காடுகளும் கொண்ட மழை வளமும்,மண்வளமும் மிக்க தீவுகள்.உயர்ந்தமலைகளும்,தூரத்துதீவுகளும்,சதாஉலவும் கப்பல்களும்,படகுகளும்,அமைதியான சூழலும் கொண்டு,சுற்றுலாப்பயணிகளைத் தன்னை மறந்து,நான்,நீ என்பதும் மறந்து,இயற்கையோடு இயற்கையாய் ஒன்ற வைத்து,நம்மை வசியப்படுத்தும் அழகி.அந்தமான்,நிகோபார்த்தீவுகளை சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து நீர் மற்றும் வான்வழியாகவும்,விசாகப்பட்டினத்திலிருந்து நீர்வழியாகவும் அடைய முடியும்.தாயகத்திலிருந்து கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த அந்தமான் தீவுகளில் எல்ல மாநில மக்களும் வசிக்கிறார்கள் என்றபோதிலும் இந்தி மொழிதான் ஆட்சிமொழியாக உள்ளது.ஆனாலும் தமிழ் எங்கும் உள்ளது.இந்தத்தீவின் மக்கள் தொகையில் இரண்டாவது இடம் தமிழர்களுக்கு.அதனால் மொழி குறித்த பயம்,கவலை தேவையற்றது.அதோடு இங்கு ஏமாற்றுவது கிடையாது.வருபவர்கள் தீவுமக்களை ஏமாற்றினால் தான் உண்டு.தீவுகளில் சுற்றூலாக்காலம் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை.

கப்பலில் வர பயண நேரம் 3 நாட்களும்,விமானப்பயணம் சுமார் இரண்டு மணி நேரமும் ஆகும்.அவரவர் விருப்பப்படி பயணத்தைத் தேர்வு செய்யலாம்.தீவுகளுக்கு வருவதற்கு கப்பல் பயணச்சீட்டு நான்காம் வகுப்பு ரூ.1960/,அத்தோடு சாப்பாட்டுச்செலவு தனி.வான்வழிப்பயணம் எனில் மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செய்துகொண்டால் குறைவான கட்டணத்தில் பதிவு செய்யலாம்.(ரூ.4000/ க்குள்)இங்கு தென்னக மற்றும் வங்காள,பஞ்சாபி உணவு வகைகள் கிடைக்கும்.உணவுப்பிரச்சினை இருக்காது.இங்கு வருடம் முழுதும் பருத்தியாடை அணியலாம்.

இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் - 1.கூண்டுச்சிறை 2.ரூஸ் தீவு (முன்னாள் தலைநகர்) 3.மெரினாபூங்கா 4. நீர் விளையாட்டரங்கம் 5. அபர்தீன் போர் நினைவுச்சின்னம் 6.நீர்வாழ் உயிர்க்காட்சியகம் 7. காந்தி பூங்கா 8. மானுடவியல் அருங்காட்சியகம் 9. சாமுதிரிகா 10. அந்தமான் வனத்துறை காட்சியகம், 11.குறு விலங்ககம்,12 சாத்தம் மர ஆலை (ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை,13.சுண்ணாம்புக்குகை மற்றும் மண் எரிமலை (பாராடாங்), 14.வண்டூர் கடற்கரை, 15.ஜாலி பாய் மற்றும் ரெட் ஸ்கின் (இங்கு கடலுக்கடியில் பவளப்பாறை மற்றும் snorkeling),16.மவுண்ட் ஹாரியட் (உயரமான மலைச்சிகரம்),17.நார்த் பே இதோட வைப்பர் தீவு,சிடியா டாப்பு,கார்பின்ஸ் கோவ்,சிங்க் தீவு, கொலின்பூர்,சிப்பிகாட் பண்ணை,மதுபன்,நீல்,ஹேவ் லாக் தீவுகள் மற்றும் உள்தீவுகள்.இங்கு பாரன் தீவில் உயிரூள்ள எரிமலை ஒன்றும் உள்ளது.

அது ஒரு பெரிய பட்டியலே இருக்குங்க.நமக்கு இருக்குற நேரத்தையும்,கையிருப்பையும் கணக்குப்போட்டு சுத்தலாம்.இல்ல ஏதாவது ஒரு கட்சி சார்ந்து வந்தா அரசு கஜானாவுக்கு ஆப்பு வைக்கலாம். சென்னைத் துறைமுகத்தப்பாத்தா கப்பல் பயணமே வெறுத்துப்போய்டுமே! இங்க வந்து பாருங்க.உள்தீவுத் துறைமுகங்கள்,தாயகத்துறைமுகம்லாம் எவ்வள சுத்தமா இருக்குன்னு.கப்பல்,படகு சலிக்க,சலிக்க சுத்தலாம்.அலைகடல்,அமைதியான கடல் இப்படிக் கடலோட எல்லா முகத்தையும் இங்க தரிசிக்கலாம்.கடலாடலாம்.தனிமை வேண்டுமா? தனிமையான கடற்கரைகள் உண்டு.தங்குமிடம் மற்ற அனைத்து விபரங்களுக்கும் www.and.nic.in இந்தத் தளத்தில் பார்த்து உங்க வருகையைத் திட்டமிடுங்க.உங்க வாழ்க்கையில மறக்க முடியாத இன்பச்சுற்றுலாவாக அந்தமான் சுற்றூலா இருக்கும்ங்க! என்ன இவங்களுக்கு ஏதும் கமிஷன் இருக்குமோன்னு யாருங்க இப்ப சொன்னது? யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். சுற்றுலாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லங்க! மேலதிக விபரங்களுக்கு எங்களை இந்த வலைப்பூவின் கருத்துரை மூலம் தொடர்பு கொண்டால் கண்டிப்பாக இயன்ற உதவிகள் செய்யக் காத்திருக்கிறோம்.(விருந்தோம்பல் தமிழனுடைய குணமில்லையா? நான் பச்சத்தமிழச்சிங்க!)

புதன், பிப்ரவரி 03, 2010

திருநங்கையர் - அர்த்தநாரீஸ்வரர்கள்


இன்று எதிர்ப்படும் முகங்களை ஒரு நிமிடம் உற்றுப்பாருங்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு களைப்பு,ஒரு சோகம்,ஒரு சலிப்பு. யார் முகத்திலும் உற்சாகமில்லை.ஒவ்வொருவர் முகத்திலும்,மனதிலும் ஒளிந்திருக்கும் சஞ்சலங்களைக் கணக்கெடுத்தால் இந்த உலகம் கொள்ளாது. பேருந்திலோ,அலுவலங்களிலோ எங்கு போனாலும்,யாருடனும் அருகில் அமர்ந்து முகத்தை ஏறிட்டாலும் சோகக்கதைகள்.பெண்களுக்கு நிறம்,அழகு,புடவை,நகை,உறவுகள்,குழந்தைகள் படிப்பு,குண்டாகிப்போன உடல்,பொருந்தாத திருமணம் இப்படி நீண்டு............கொண்டே போகும் கவலைகள்.ஆண்களுக்கு,படிப்பு,வேலை,காதல்,அம்மாவிற்கும்,மனைவிக்கும் இடையிலான யுத்தம்,இப்படி நீளும் பிரச்சினைகள். யாருக்கும் பிரச்சினைகளின் வேர்களை,மூலங்களை அறிந்து அதிலிருந்து மீண்டு வரும் வழி பற்றியோ,அல்லது தன்னிடமிருக்கும் பலங்கள் பற்றிய விழிப்புணர்வோ கிடையாது.இருப்பதை மறந்து இல்லாததை நினைத்து ஏங்கும் சராசரி வாழ்க்கை வாழத்தெரிந்தவர்கள் தானா நாம்? தகுதி உள்ள உயிரினங்கள் தான் தம் இருப்பைத் தொடரும்.இருக்கும் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப்பொருத்தி வாழ்வது, அன்றி போராடி தமக்கேற்ற சூழ்நிலைகளை அமைத்து வாழும் தகுதியை வளர்த்துக்கொள்வது, இவை இரண்டும் தான் இறைவன் நமது இருப்பை நிலைப்படுத்த நமக்குத் தந்திருக்கும் வழிகள் என்று நினைக்கிறேன்.இதில் சூழ்நிலைக்கேற்ப பொருத்திக்கொண்டு வாழ்கிறவர்கள் வாழ்க்கை,ஒரு அமைதியான நீரோட்டம் போல இயல்பாய் ஓடிக்கொண்டிருக்க,தமக்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்பவர்களது வாழ்க்கை, போராட்டம் மிகுந்து,வலிகள் சுமந்து,காயம் பட்டு,கண்ணீரைக்கூட உறைய வைத்து, நெருப்புடன் வெந்து தணியும் வாழ்க்கையாய் இருக்கும்.ஆனால் அவர்களை, இந்த உலகம் உள்ளவரை ஞாபகம் வைத்திருக்கும்.

அப்படி என் உயிர் உள்ளவரை ஒருவர் ஞாபகம் இருப்பார் அவர் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்.திருநங்கைகளை சிறு வயதில் மதுரை,திருச்சி போகும் போது பேருந்து நிலயங்களில் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான ஒப்பனைகள்.நான் திரும்பித்திரும்பி பார்த்தால் என் தாய் சட்டென தலையில் ஒரு குட்டுக்குட்டி அழைத்துச்செல்வார்கள். வீட்டிற்குப்போனதும் கேட்டால் அவர்கள் அப்படித்தான்.உனக்குப்புரியாது.ஆனால் அவர்களைக்கேலி செய்தாலோ அன்றி அவர்களுடன் சண்டையிட்டாலோ அவர்கள் சபித்துவிடுவார்கள் என்பார். அதன் பிறகு அவர்களைப்பற்றி பின்நாட்களில் அறிந்து கொண்டபோது மனம் மறுகும்.சர்வ யோக்கியதைகளுடன், கறுப்பாய்ப்பிறந்ததற்கே வருத்தப்பட்டுக்கொண்டிருந்த, தாழ்வுமனப்பான்மையில் சிக்கித்தவித்த எனக்கு இவர்களைப்பற்றிய ஆனந்த விகடன் கட்டுரைகள், எனக்குள் தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்து,தன்னம்பிக்கை விதைத்தது.

தற்செயலாக இன்று கிழக்குப்பதிப்பகத்தின் நூல் அறிமுகத்தில் வித்யா அவர்களின் நேர்முகம் கேட்க நேர்ந்தது.இரு பெண்குழந்தைகளுடன் ஒரே ஆண் குழந்தையாக செல்லமாகப் பிறந்து,சிறுவயதிலேயே தாயைப்பறிகொடுத்து, சிறிய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து,சிறிய தாயாருக்கும் ஒரு பெண் குழந்தை.இதை அவர் சொல்லும் போதே எனக்கு விழிகளில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.காரணம் ஐந்து பெண்களில் மூத்த பெண்ணாகப்பிறந்து, தம்பிக்குத் தவமிருந்து,என் தம்பி பிறந்ததும் அவரைக் கொண்டாடும் எங்களுக்குத் தம்பியின் அருமை புரியும்.ஒரே நேரத்தில் வித்யாவாக,வித்யாவின் அக்காக்களாக,பழிக்கும் சமுதாயத்தின் முன் துவண்டு போன அவரது அப்பாவாக,அம்மாவாக,சித்தியாக அவதாரமெடுத்தேன். வலி தாங்கமுடியாது,நான் தேம்பியழ, வித்யாவோ ஒரு சிரிப்போடு கதை சொல்லும் பெண்ணின் இயல்போடு வாழ்க்கை வரலாற்றைச்சொல்லிக்கொண்டிருக்கிறார்.அவரது இளமை,அவர் அனுபவித்த கொடுமைகள்,குடும்பத்தினரின் அதிர்ச்சி,படிப்பு,பட்டம்,யாசகம் பெற்று ஆணிலிருந்து பெண்ணாய் மாறியது முதல் தற்போது திரைத்துறையில் இருப்பது வரை அவர் எந்தத் உணர்ச்சித் தளும்பலும் இன்றிக் கூறிமுடிக்கிறார்.அவரது வார்த்தைகளில் இருந்த அழுத்தம்,சிந்தனைத் தெளிவு,தனது தேடல்,தேவை பற்றிய வரையறை எல்லாவற்றையும் சொல்லிமுடிக்கும் போது,"இந்த சமூகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினரை விமர்சனம் செய்யாமல்,அவர்களை சாதாரணமாக வாழவிடுங்கள்.எங்களை உங்களில் ஒருவராகப்பாருங்கள்" என்றார்.உண்மை.யாருடைய வாழ்க்கையையும் சிதைக்கும்,விமர்சிக்கும் உரிமை நமக்கு இல்லை.அவர்களது பிறப்புரிமையைக்கூட மறுப்பது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகுமல்ல.ஆணும் பெண்ணும் இணைந்த இறைக்கோலத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று போற்றி வழிபடும் நாம் நம் கண் முன் வாழும் இவர்களைப் போற்றாவிட்டாலும் அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கும் கொடுமைகளைச்செய்யாதிருக்கலாம் இல்லையா? இவரது லிவிங் ஸ்மைல் வலைப்பூவில் இவரது எழுத்துக்கள் வலிமையானவை.வலிகளை மறந்து,தன்னை திருநங்கையரின் பிரதிநிதியாக முன்னிறுத்தி,மொத்தமாய்ப் போராடும் வலிமை "சபாஷ் வித்யா!". அவரது வார்த்தைகள் விதைத்த கனம் மனதில் நிரந்தரமாக இருக்கும்.

எந்தக்குறையும் இல்லாத போது சிணுங்கிச்சிணுங்கி வாழும் நாமெங்கே? இது தான் வாழ்க்கை,இதற்கு நம்மை எப்படி தயார் செய்வது என்று யோசித்து படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வாழ்ந்து வருவதோடு, அறிவு மயங்கி இருந்த பிற திருநங்கையர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் வித்யா எங்கே? மானசீகமாக அண்ணாந்து பார்த்தேன்.என் தாயார் அடிக்கடி சொல்வது, ”அடுத்தவர்க்கு வரும் துன்பம் நம் வாசலுக்கு வர அதிக நேரமாகாது.எந்தத் துன்பம் யாருக்கு வந்தாலும் அதைத் தன்னோடு பொருத்திப்பார்த்தால் தான் அதன் வலி நமக்குத் தெரியும்” என்பார்கள்.ஆனால் வித்யாவின் வலிகளையும்,போராட்டங்களையும் என்னோடு பொருத்திப்பார்க்க மனம் பயம் கொள்கிறது.இனி ஒருவருக்கும் இந்த நிலை வேண்டாம் இறைவா! என்னும் பிரார்த்தனையை விட வேறென்ன செய்ய முடியும்?

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

உளவியல் மயக்கம்.

அதிகாலைக்கனவு கலைத்து
ஆனந்தத் தூக்கம் விரட்டும்
கடிகார எழுப்புமணி,
சாட்டை சொடுக்க
அரக்கப்பரக்கசுழலும்  உடல் பம்பரம் .

அலங்காரமும்
அழகு ஆடையும் புனைந்து
அலுவலகம் நுழைந்தால்
பெண்ணின் இருப்பில் இருவேறு உணர்வுகள்.

கொஞ்சம் வேலை,கொஞ்சம் வம்பு
கொஞ்சம் ஊடகம்,கொஞ்சம் விமர்சனம்
கொஞ்சம் சமையல்,கொஞ்சம் குடும்பம்
கலவையாய் பொழுதுகழித்து
மாலை கூட்டுக்கு.

மறுபடி ஊடகம்,ஊடல்கள்,கூடல்கள்
யாரோ விதைத்த கடிகார சுழற்சியாய் வாழ்க்கை
நாட்காட்டிகளிலும்,
கடிகார முட்களிலும் நகர்ந்து,நகர்ந்து
உளவியல் மயக்கத்தில் முடிந்தது.

அமைதி தேடி
ஆன்மீகம்.
பக்தி செய்யவே விடவில்லை
பக்கத்தில் நின்றவரின் பட்டுப்புடவை

தியான வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது
புருவங்களுக்கிடையே கவனம் குவிக்க.
அங்கோ,அணுக்கத்தில்
அமர்ந்திருந்த அடுத்த பெண்ணின்
கனத்த கழுத்துச்சங்கிலியில்
கவனம் குவிந்தது.

வாசிப்புப்பழக
வரவேற்பறை முதல்
அடுப்படி மேடை வரை புத்தகங்கள்
வாசிக்கும் கணங்களின்
வார்த்தைகளின் மணம்
பின் வாசமற்று காகிதப்பூக்களாய்...

இங்கே
மயக்கங்கள் தொடரும்
மனதில் மாற்றம் வரும் வரை....

திங்கள், பிப்ரவரி 01, 2010

நானொரு பெண்ணென்பதால்.....

எப்போதும்
என் செயல்பாடுகளின் அர்த்தங்களும்
என் நிலைப்பாடுகள் குறித்த கேள்விகளும்
நான் கடந்துவரும் ஒவ்வொருவருக்குள்ளும்
வெவ்வேறானவை.

என்னைப்பற்றிய
புதிர்களும்,புனைவுகளும்
இப்படி,அப்படி என்கிற ஆருடங்களும்
என் கண்வழி பயணித்து,
என் மனத்தைத் துழாவும் பார்வைகளும்
என்னை, என்னிடமே அந்நியமாக்கும்.

நான்
நடைபழகிய நாள் முதல்
என்
நடையும், பேச்சும்
பொதுவெளி நடவடிக்கைகளும்
எனக்கான அளவீடுகள்.

நான் யாரென அறியும்
அறிதலின் ஆர்வம்.
மூளையின் அணுக்களில்
நுணுகிக்கிடக்கும் குணத்தின் வேர்களை
என் மனத்தின் மூலையில்
முடங்கிக்கிடக்கும்
எண்ணங்களின் வடிவங்களை
என் பதில்களாய் வரவைக்கும் கேள்விகள்.

நான்
சீதையா? நளாயினியா?
கண்ணகியா? ஆதிரையா?
ஆராயும் கண்கள்.
அங்கே
எனது சுயம்வரத்தில் காத்திருப்பது
ராமனா? ராவனனா?
நளனா?கோவலனா?
யாருக்கும் கவலையில்லை.
எரிவதும்,எரிப்பதும்
தேசியச்சடங்குகளாகிப்போன இங்கே
சொல்லித்திரிகிறார்கள்
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்".