சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 21, 2011

இது தான் வாழ்க்கை

புறக்கணித்தலின் வலிகளும்
அரவணைத்தலின் சுகங்களும்
கலந்த நாட்கள் எனது கடந்த காலம்.

கடந்த காலத்தை கவிதையில் சேமித்து
நிகழ்காலத்தை நெஞ்சில் சுமந்து
எதிர்காலத்தை கனவுகளில் சேமித்து
விடியும் பொழுதுகள் எனக்கானதாய்
காலத்தின் கரங்களில் வரங்களை யாசித்து.

வாழ்க்கைப்பாதையை திசை திருப்பிய மரணங்கள்,
பஞ்சம்,நோய், அவலங்கள்,
அழுகையும், சிரிப்புமாய் தொடரும் வாழ்நாட்கள்
புத்தனின் போதனைகள் புரிந்தும்
போதிமரம் தேடி போகக் கூடவில்லை.
தேடிக்கொண்டே இருக்கிறேன்
தேடும் பொருள் தெரியவில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இலக்கு எது புரியவில்லை.

ஒவ்வொரு மணித்துளியிலும்
ஒவ்வொரு நிறம் காட்டும் மனப்பச்சோந்தி.
உதடுகள் பேசும் உன்னதங்களை
உதறித் தள்ளும் உளப்போக்கு.
உடலின் அழுக்கை கூட்டி
உள்ளத்தில் கொட்டி மூடி
புன்னகையால் பூசி மறைத்து
புனிதமாய்க் காட்டிகொள்கிறேன்.

ஊருக்கு உபதேசம் செய்யும்
தத்துவ வியாபாரிகளிடம் கேட்டேன்
"ஏன் இப்படியெல்லாம் நான்?"
அவர்கள் சொன்னார்கள்
"இது தான் வாழ்க்கை"

வியாழன், ஜனவரி 20, 2011

கையேந்துகிறதா அந்தமான் பழங்குடி ஜரவா?


அந்தமானுக்கு வருகை தரும் முக்கிய பூமி அறிஞர் பெருமக்களை அந்தமான் அகில இந்திய வானொலியின் தமிழ்ப்பிரிவிற்கென நேர்முகம் காண்பதுண்டு. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த வெள்ளித்திரை இயக்குனரும், நடிகருமான திருமிகு. பா.சேரன் அவர்களை நேர்முகம் கண்டோம்.இயக்குனர் அவர்களின் மூன்று நாள் பயணத்தில் உள் தீவுகளில் இருக்கும் தமிழர்களை சந்திக்கவும், தீவில் சுற்றுலா செல்லவும் நேரம் போதாத அவரது குறுகிய காலத்தில் விடாமல் துரத்தி மூன்றாவது நாள் மாலை, அந்தமான் தமிழர் சங்கம் "மெகாபோட்" உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்தின் போது அந்த உணவகத்தின் வரவேற்பறையில் வைத்து நேர்முகம் கண்டோம். பிரபலங்கள் பலரும், நேர்முகம் என்ற பெயரில் ஒரே மாதிரியான கேள்விகளைச்சந்திக்க வேண்டி வரும். திரும்பத் திரும்ப அதே கேள்விகள் அதே பதில்கள். செக்கு மாட்டுத்தனமான தன்மை. பதில் சொல்ல ஆர்வமற்று இருக்கும்.இருந்தாலும் இயக்குனர் பா சேரன் அவர்கள் பொறுமையாய் பதில் கூறினார்கள்.

இணையத்தில் அவரைப்பற்றிய செய்திகளைச்சேகரித்து கேள்விகளைத் தயார் செய்திருந்தேன். திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லை. சேரன் அவர்களின் படங்களில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய்தவமிருந்து, மாயக்கண்ணாடி, பிரிவோம் சந்திப்போம் ஆகிய ஏழு படங்கள் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு வந்த படங்கள் பற்றிய ஞானம் இல்லை.அவரின் திரையுலகப்பயணம் பற்றியும் தெரியாது.

அப்படியும் நிறையக்கேள்விகள் தயார் செய்திருந்தேன். சட்டியில் இருந்தது அகப்பையில் வந்தது. ஆனாலும் முகம் சுளிக்காமல் எல்லாக்கேள்விகளுக்கும் சலிப்பில்லாமல் தொடர்ந்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி - உங்களின் பன்முகப்பட்ட ஆளுமையின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது?

அதற்கு சேரன் அவர்களின் பதில் - எதுவுமே இல்லை. நா கத்துக்கிட்டத அடுத்தவங்களுக்கு சொல்ல விரும்புறேன். நம்ம நினச்சு எதுவுமே நடக்கப்போறதில்ல.எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல. இப்ப அந்தமானுக்கு நா வந்திருக்கேன். சுத்திப்பாக்குறேன். எனக்கு இந்த இயற்கை அழகு புடிச்சிருக்கு. அதே சமயத்துல அந்த பழங்குடி மக்கள் ஜரவாஸப்பாக்கையில மனசுல ஒரு வலி இருக்கு. இந்த மண்ண ஆண்ட அவுங்கள விரட்டிட்டு நீங்க இங்க ஆண்டுகிட்டு இருக்கீங்க. இலங்கைத்தமிழர்கிட்ட இருந்த பகுதிய சிங்களர்கள் புடிச்சுகிட்டு அவங்கள விரட்டிய மாதிரி. அவுங்க போற வர்ற வண்டிகள்ட்ட கையேந்திகிட்டுருக்கிற நிலமை

ஐயா! உங்களின் ஒப்பீடு முற்றிலும் தவறு. இலங்கை மண்ணைத் தாய் மண்ணாகக் கொண்ட நமது தமிழினம், அங்கே உழைத்தது. ரத்தம் சிந்தியது. இலங்கை என்ற சொர்க்க பூமியை உருவாக்கியது. வாழ்வாதாரங்களை இலங்கையைச்சுற்றியே உருவாக்கிக்கொண்டது. சுயநலம் பிடித்த சிங்கள இனம் அவர்களை வாழ்வாதாரங்களைப்பிடுங்கிக் கொண்டு வெளியேற்றியது மட்டுமல்லாது, அவர்களை மான பங்கப்ப்டுத்தி, ஊனப்படுத்தி, கட்டுக்கடங்காத கொடுமைகளுக்கு ஆளாக்கி அசுர வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஜரவா என்கிற ஆதிக்குடி, அவர்கள் பகுதியில் நுழையும் பொதுமக்களை விஷ அம்பு எய்து கொன்று விடுவார்கள். நம்மவர்களின் லீலைகளும் குறைவில்லை தான். அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தேன், சாம்பிராணி, அம்பர் போன்ற பொருட்களைக் களவாடி, அந்த இனச்சிறுவர்களின் கைக்கட்டை விரலை, அம்பு எய்ய விடாமல் வெட்டிவிடுவார்களாம். அது ஒரு காலம். ஆனால் இன்று மத்திய அரசின் ஆணைப்படி பழங்குடிகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு பழங்குடியினருக்கும் பாதுகாப்பகம், உணவு, ஆடை, மருத்துவம், கல்வி இப்படி வசதி செய்து கொடுத்திருக்கிறது தீவு நிர்வாகம். அவர்களின் இருப்பிடத்திற்கு காவலர் பாதுகாப்பு. எல்லாம் இலவசமாய்க் கிடைக்கவும் அந்த இனம் வேட்டை மறந்தது. உழைப்பற்று சோம்பேறியாய் சுற்றித்திரிகிறது. அவர்கள் இயற்கை உணவை உண்பவர்கள். நமது சமைத்த உணவு அவர்களுக்கு நோயை உண்டு பண்ணுகிறது. ஆகவே நமது உணவுப்பொருட்களை அவர்களுக்கு வழங்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆவல் மிகுதியால் கையேந்துகிறார்கள். அவர்களின் வசிப்பிடம் அடர்காடுகளேயன்றி, நாங்கள் உருவாக்கியுள்ள இந்த நாடல்ல. அவர்களின் பூமியை முக்கிய பூமியுடன் இணைத்து, காலத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுத்தருகிறோமேயன்றி பூமியைப் பிடுங்கிக்கொண்டு அகதிகளாக்கவில்லை. அதற்கு தீவு நிர்வாகமும், தமிழர் மற்றும் தீவு வாழ் மக்களின் நெஞ்சமும் கண்டிப்பாக இடம் தராது.

இந்த அந்தமான் என்னும் தண்ணீர் தேசத்தை உருவாக்கியதில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. எங்கள் தீவுக்கவிஞர் மற்றும் கல்வித்துறையின் துணை இயக்குனர் தஞ்சை மா. அய்யா ராஜு அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் " தமிழன் இந்த தேசத்தின் பிரம்மா. அவன், இவன் என்பதெல்லாம் சும்மா" என்று. அந்தமானில் தமிழர்களை வரவழைத்து அவர்களுக்குத் தங்குமிடம் தந்து, வேலைக்கு ஏற்பாடு செய்து தந்த பேராளர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். தமிழ் மொழிக்காக, தமிழ் கல்விக்காக, தமிழர் சங்கத்தை தம் உழைப்பில் உருவாகிய எண்ணற்ற தமிழர்கள், மற்ற மாநிலத்தவருக்கும் உதவும் பண்பாளர்களால் இந்த பூமி செழிக்கிறது.இன்று அரிசி முதல் பருப்பு வரை அத்தனையும் முக்கிய பூமியின் தரத்திற்கும், பயன்பாட்டிற்கும் ஈடாய் கிடைக்கிறது என்றால் அது தமிழனின் முயற்சி.ஒவ்வொரு துறையிலும் சீரிய முறையில் பணியாற்றும் மக்களால் உருவானது இந்த பூமி.காடு அழித்து நாடாக்கியதும், கலாச்சாரம், பண்பாடு என்று வாழ்க்கையை சீரிய முறையில் வாழ மற்றோருக்கும் கற்றுக்கொடுத்தவர் தமிழர். இங்கே அனைத்து மாநில மக்களோடு, இலங்கை அகதிகள், பர்மா அகதிகள்,வங்காள தேச அகதிகள் உண்டு. எல்லோருடனும் தமிழர் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு இனம் தனது பசி தீர்க்க பிச்சை பெறலாம். ஆனால் வாழ்க்கையை பிச்சையாய்ப் பெற முடியாது. அது தன் முனைப்பாலும், சுய முயற்சியாலும், அதீத விழிப்புணர்வாலும் மட்டுமே பெற முடியும். வாழ்வாதாராங்களை உருவாக்க முடியாத, சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அறியாத ஒரு சமூகம் அடுத்தவர்களை சார்ந்திருப்பது தவிர்க்கமுடியாதது. இதில் ஆண்டான், அடிமை எங்கு வந்தது?. ஜரவா இன மக்கள் கொடூர குணத்தில் இருந்து இப்போது தான் திருந்தி இருக்கிறார்கள். அவர்களில் சில சிறுவர்கள் இன்று பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களின் மூலம் அந்த இனம் விழிப்புணர்வு பெறலாம். சிகரங்கள் தொடலாம். அவர்களிலும் உருவாகக்கூடும் ஒரு மகாத்மா! ஒரு விவேகானந்தர்! ஒரு பகத் சிங்! தன் இனத்தை ஒரு நல்ல தடத்தில் வழிநடத்தி செல்லலாம். நாங்கள் விரும்புவதெல்லாம் மற்ற பழங்குடியினரைப்போல நம்முடன் உறவு கொண்டாடும் உணர்வைத்தான். தீர்வு காலத்தின் கைகளில்!.

சனி, ஜனவரி 15, 2011

அந்தமானில் பொங்கல் விழா


அந்தமானில் பொங்கல் திருநாள் உண்மையிலேயே தமிழர் அனைவரும், இன வேறுபாடு இன்றி கொண்டாடும் ஒரு திருநாள். இதற்கு முக்கிய காரணம் அந்தமான் தமிழர் சங்கம். ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் முக்கிய பூமியின் பிரமுகர்களில் ஒருவரை அழைத்து, தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் நடிகரும், இயக்குனருமான திரு மிகு சேரன் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அந்தமானில் இந்த வருடம் வெல்லம் ரூ.58, கரும்பு ரூ.30, வெங்காயம் ரூ.70 என்று உயர் விலைப்பொங்கலாக (costly?) இருந்தாலும் கூட திரைத்துறை சார்ந்த ஒருவரின் வருகை எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டது. அந்தமான் தமிழர் சங்கம் போகி அன்று எளிய மக்களுக்கு பொங்கல் பை வழங்கினர். பொங்கல் பை வாங்கிய மகளிரில் பெரும்பான்மையானோர் தெலுங்கர்கள். பொங்கல் அன்று அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் காரணியாக இயக்குனர் சேரன் இருந்தார் என்றால் மிகையில்லை. அவரின் எதார்த்தமான, எளிமையான, அலங்காரமற்ற, இயல்பான பேச்சு, பேச்சில் தொனித்த உண்மை,கோபம், தாய் மொழி பற்று எல்லாம் அனைத்து தமிழ் மக்களையும் கவர்ந்தது. அவரின் ஆடம்பரமற்ற தோற்றம், நம்மவர் என்ற உணர்வைத் தந்தது.

திரு சேரன் அவர்களுக்கு, இந்த ஊரும், இங்கு எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர்கள் என்பது குறித்து மிகுந்த ஆச்சர்யம் கொண்டு பேசிய அவரின் அப்பா, 1960களில் இங்குள்ள குருசாமி & சன்ஸ் என்கிற பெரிய வணிக நிறுவனத்தில் பணி புரிந்ததாகக் குறிப்பிட்டார். அதோடு அந்தமான் தமிழர் சங்கத்தின் பொருளாளர் திரு. ராமையா ஐயா அவர்களைத் தனது சித்தப்பா என்றும் மேடையிலேயே குறிப்பிட்டார்."தமிழர்கள் தமிழிலேயே பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழை பேச, படிக்கக் கற்றுக்கொடுங்கள். வயதானதும் உங்களின் கடைசிக்காலத்தில் உங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுங்கள். ஒரு மனிதன் எவ்வளவு வள்ர்ந்தாலும் அவனின் கடைசி மணித்துளிகள் அவனின் சொந்த ஊரில் தான் இருக்க வேண்டும். சொந்த ஊரில் தான் மடிய வேண்டும்.நான் சென்னையில் வீடு வாங்கவில்லை. எனது சொந்த ஊரான பழையூர் பட்டியில் தான் பெரும் செலவில் கட்டியுள்ளேன். அப்படியிருந்தால் தான் என் மனைவி, மக்கள் எனது சொந்த ஊருக்குப் போகவேண்டுமென நினைப்பார்கள்.

எதிர் காலத்தில் விவசாய பூமி கூட இருக்கும். ஆனால் விவசாயம் தெரிந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். எனது திரை வாழ்க்கை இன்னும் ஐந்து, அல்லது பத்து வருடங்கள் இருக்கலாம். அதன் பிறகு எங்கள் ஊருக்குச்சென்று நானும் விவசாயத்தில் ஈடுபடுவேன்.உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருப்பதைப்போல எனக்குத் தொழில் திரைப்படம். திரைப்படத்தில் என்னைப்பார்த்து உங்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கிறது. எனக்குப்படித்து பதவிகளில் இருப்பதைப் பார்த்து பிரமிப்பாய் இருக்கிறது" என்று பேசினார்.

எவ்வளவொ அறிஞர்கள் இலக்கியச்சொற்பொழிவு ஆற்றிய சங்க மேடையில் சேரன் அவர்களின் இயல்பான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. நடைமுறை  வாழ்க்கைக்கு இயைந்ததான அவரின் பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது. மனதளவில் அவர் இன்னும் பழையூர் பட்டி வாசி என்பதை அவரின் பேச்சு சொன்னது. மக்கள் கூட்டம் அவரின் கையெழுத்து வேட்டைக்கு அலை மோத மேடையை விட்டு இறங்கி வந்து "உங்கள் அனைவருக்கும் கை கொடுக்கிறேன். கையெழுத்துப் போடுவது இயலாது" என்று கை கொடுத்தார்.

இயக்குனர் சேரன், நடிகர் சேரன் என்ற இந்த முகங்களை விட இயல்பான, எளிமையான, நல்ல மனிதர் சேரன் என்ற இந்த முகம் தான் எனக்குப்பிடித்திருந்தது.

சனி, ஜனவரி 08, 2011

அந்தமானில் தீவுச்சுற்றுலா விழா


வலையுலக உடன் பிறப்புகள் அனைவருக்கும் (தாமதமான) 2011ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரும் புத்தாண்டில் நிறைய சபதம் எடுப்பார்கள். குறிக்கோள், இலக்குகள் குறிப்பார்கள்.எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது இது வரை.ஆனால் இந்த வருடம், வலைத்தளத்தில் முடிந்தவரை அடிக்கடி பதிவுகள் இடவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.வேலை பளு அதிகரித்ததன் விளைவு வலையுலகத் தொடர்பு கிட்டத்தட்ட அற்றுப்போய் விட்டது.இந்த வருடம் வலையுலகச்சொந்தங்களை மீட்டெடுக்க வேண்டும். புதிப்பித்து தொடர வேண்டும்.சரி!

அந்தமான் தலை நகர் போர்ட் பிளேயரில் கடந்த 5 ம் தேதி தீவுச் சுற்றுலா விழா,
தீவுச்சுற்றுலா விழாத் திடலில் தொடங்கியது.அந்தமான், நிகோபார் தீவுகளின் துணை ஆளுனர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) பூபேந்தர் சிங் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.இந்த சுற்றுலா விழாவை முன்னிட்டு, முக்கிய பூமியில் இருந்து பல மாநிலக் கலைஞர்கள் வந்துள்ளனர்.இந்த வருடம் காஷ்மீர் மாநில நாட்டுப்புறக் கலைஞர்களும் வந்துள்ளனர்.விழாத் திடலிலும், தீவின் பல்வேறு பகுதிகளிலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னர் இந்த விழாவில் பல மாநிலங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள் மற்றும் நுகர் பொருட்கள் அங்காடிகள் இடம்பெறும். இப்போதெல்லாம் கொல்கத்தா நகர் அங்காடிகள் ஒன்றிரண்டு இடம்பெறுவதோடு உள்ளூர் கடைகளே மிகுதி. காரணம் மக்களின் வாங்கும் திறன் மற்றும் விற்பனையாளர்களின் குறைந்த லாபமும் காரணமாயிருக்கலாம். அந்தமான் தீவின் அனைத்து அரசுத் துறைகளும் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

பொழுது போக்கிற்கு திரை அரங்குகளோ, கூடிக்களிக்க உறவுகள் அருகில் இல்லாத குறையும் உள்ள எங்களுக்கு, இது போன்ற விழாக்கள் மிக அரிய வடிகால். தமிழ் நாட்டிலிருந்து கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டக்கலைஞர்கள் வருகை தந்து, தமது கலைத் திறனால் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்.இவர்களோடு உள்ளூர் கலைஞர்களும் தமது கலைத் திறனைக்காட்டிவருகிறாகள். இங்கு, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, மாலை நேர கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒலி- ஒளி பரப்பு செய்து வருகிறது.

தீவுச்சுற்றுலா விழாவில் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் தமது தொகுப்புரையில், "காஷ்மீரக்கலைஞர்கள் தாங்கள் இந்தத் தீவுக்கு வருகை தருவதற்கு முன் எங்கள் மாநிலம் மட்டும் தான் இயற்கை அழகு நிறைந்தது என்று எண்ணியிருந்தோம். இந்தத் தீவுகளைப் பார்த்ததும் எங்களை மறந்தோம் என்றார்கள்" என்றார்.

காஷ்மீர் உடன்பிறப்புகளே! உங்களுக்கு ஒரு வார்த்தை. அந்தமான் தீவில் பனி இல்லை. உயிரை உறைய வைக்கும் குளிரில்லை. உயிரை நடுங்க வைக்கும் வன்முறை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தீவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கிறது. செந்தமிழ் மணக்கிறது. அமைதி மலர்ந்து, அலை ஓசை மட்டும் தாலாட்டுகிறது.சமயத்தில் நிலமே தொட்டிலாய் ஆடும். ஆனாலும் ஆபத்தில்லை.

என்ன? அடுத்த பயணம் அந்தமானுக்கா? நல்வரவு!!!