சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

தமிழ்த்தாய் அறக்கட்டளை, தஞ்சாவூர் – தமிழ் இலக்கியப்பயணம் – 2012



கடந்த 06.08.12 அன்று, தஞ்சாவூர், தமிழ்த்தாய் அறக்கட்டளையினர், தமிழ் இலக்கியப்பயணம் மேற்கொண்டு, தாய்த்தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் அந்தமானுக்கு வருகை தந்திருந்தார்கள்.

அந்தமான் தமிழர் சங்கத்தில் கடந்த 07.08.2012 செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர்,  ராஜபாளையம், ராஜுக்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். க.அழகர் அவர்கள் தலைமையில் திருக்குறள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. உலகப்பொதுமறை திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துக்களை, பேராளர்கள் அழகுத்தமிழில் எடுத்துரைத்தனர்.

அந்தமான் தமிழர் சங்கத்திற்கு இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட, சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தமிழ்த்தாய் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. சிலை அழகோ அழகு. காணக்கண் கோடி வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் உயர்திரு. வி.ஜி.பி சந்தோசம் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத்திற்கு வருகை தந்திருக்கும், சங்கத்திற்கு பெருமையும் அழகும் சேர்க்கும் இரண்டாவது அழகுச்சிலை இது.

இந்தச்சிலை சுவாமிமலை குபேரன் சிற்பக்கலைக்கூடத்தில் திரு.க.மோகன்ராஜ் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்டதாம். தமிழ்த்தாய் அறக்கட்டளைக்காக மூன்றாவதாக உருவாக்கப்பெற்ற சிலையாம் இது. இது போன்ற ஐம்பொன் சிலை ஒன்றை கடந்த 05.11.2011 அன்று மலேசியாவிலுள்ள கிள்ளான் தமிழ்ப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனர் உடையார் கோவில் குணா அவர்கள் தெரிவித்தார். தமிழ்த்தாய் சிலைக்கான செலவுகளை அறக்கட்டளையினரே பகிர்ந்து செய்துவருவதாகவும், வேறெந்த நிதி உதவியும் யாரிடமிருந்தும் பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக்கோரி 2003ம் ஆண்டு பாரதத் தலைநகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, பிறகு தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொண்டது, தமிழ்க்கருத்தரங்கங்கள், இலக்கியப்பயணங்கள் மேற்கொள்வது என நீண்டு கொண்டே செல்கிறது இவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணிகள்.

தஞ்சையில் தமிழ்த்தாய்க் கோட்டம் ஒன்றைக் கட்டிவருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் உலகப்பொது மறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார் அறக்கட்டளை நிறுவனர். தமிழ்த்தாய் அறக்கட்டளையினரின் தமிழ்ப்பணிகள் தொடரட்டும்.


புதன், ஆகஸ்ட் 01, 2012

அவள் விகடனின் பயிற்சி முகாம்



விகடன் குழுமம் என்றாலே எழுத்தை சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மயக்கம் உண்டு. சிறுவயது முதலே ஆனந்த விகடன் என்னை பாதித்த அளவு மற்றெந்த வார இதழும் பாதித்ததில்லை. மணமாகி 1991ல் அந்தமான் வந்ததும் ஆனந்த விகடன் தொடர்ந்து கிடைக்காத காரணத்தாலேயே, அந்தமான் வெறுத்தது. பிறகு 2002ல் அவள் விகடன் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை அவள் விகடனின் தீவிர வாசகியானேன். சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பையும் தாண்டி, சாதனைப்பெண்கள், தொழில் தொடங்க வழிகாட்டும் கட்டுரைகள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு போன்றவை என்னை அவள் விகடனுக்கு அடிமையாக்கின. மற்ற பெண்கள் பத்திரிக்கை படிப்பதும் உண்டு. ஆனாலும் ஒவ்வொரு அவள் விகடன் இதழ் படித்து முடித்ததும் நமது தன்னம்பிக்கையின் அளவு ஒரு அங்குலமாவது உயர்ந்திருக்கும். இதை அவள் விகடனை ஆழ்ந்து படிக்கும் ஒவ்வொரு வாசகியரும் உணர்ந்திருப்பார்கள். நான் அவள் விகடன் வாங்க ஆரம்பித்ததில் இருந்து அத்தனை இதழ்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு இதழிலும் பயிற்சி முகாம் குறித்த அறிவிப்புகளைப் பார்க்கும் போது நாம் தமிழ் நாட்டில் இல்லையே என்று ஏக்கம் இருக்கும். இது ஒரு புறம்.

கடந்த 16ம் தேதி வானொலி நண்பர் வரதராஜனின் தொலைபேசி அழைப்பு. "சாந்தி! அவள் விகடன் இணை ஆசிரியர் வந்திருக்காங்க. நேர்முகம் ஒலிப்பதிவு செய்ய சம்மதம் சொல்லியிருக்காங்க. நீங்க 9 மணிக்கு வரணுமே" என்றார். காலை நேரம் பள்ளிகளுக்கு சத்துணவு தயாரித்து அனுப்ப வேண்டும் என்பதால் காலை 4 மணி முதல் 11.30 மணி வரை காலில் சக்கரம் கட்டிக்கொண்டே ஆக வேண்டும். வேறெந்த வேலையும் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் அவள் விகடன் ஆசிரியரை சந்திக்காமல் விடுவதா? சமையலை முடித்து உதவியாளர்களிடம் பள்ளிக்கு எடுத்து வரப்பணித்து வானொலி நிலையத்திற்கு நிஜமாகவே ஓடினேன். நண்பர் இரண்டு நேர்முகத்தை முடித்திருந்தார். பின் அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணை ஆசிரியர் உயர் திரு. அறிவழகன் ஐயா அவர்களையும், புகைப்பட நிபுணர் உயர் திரு ராஜசேகரன் அவர்களையும் அறிமுகப்படுத்த சந்தோசம் ஒரு நீருற்று போல பொங்கியது. நெருங்கிய உறவினரை சந்தித்தது போல மகிழ்ச்சியான மகிழ்ச்சி. படபடவென பேசிக்கொண்டே இருந்தேன். நேர்முகமும் படபடப்பில் திருப்தியாக இல்லை. தோழியர் என்ன சொதப்பிட்டீங்க? என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் இணை ஆசிரியர் நிதானமாக அழகாக பதிலிறுத்தார். 

பாக்கு மட்டையில் தட்டுகள், குவளைகள் தயாரிக்கும் பயிற்சியை அளிக்க, தஞ்சை பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் திட்ட இயக்குனர் உயர் திரு. ராமசாமி தேசாய் அவர்களையும், இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் திருமதி. நிஷா அவர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார். அந்தமான் மகளிருக்கு இலவசப்பயிற்சி அளித்து அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்த விரும்புவதாக தெரிவித்தார். நீங்கள் எந்தத் துறையில் பயிற்சி பெற விரும்பினாலும் சரி, அதை ஏற்பாடு செய்து தர நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் தொழிலுக்குத் தேவையான கடனுதவியை NABARD வங்கி மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் பொறுப்பாக பதில் சொன்னார். (மேற்படி வங்கியிலும் தற்போது மேலாளராக நம்மவர் பதவியில் உள்ளார்). இந்த பயிற்சி முகாமிற்குப் பாலமிட்டவர் அந்தமான் நிக்கோபாரின் கடலோரக்காவல் படைத் தலைவர் உயர்திரு. சோமசுந்தரம் அவர்கள். இந்த பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு 17.07.12 இதழில் வெளிவந்திருந்த போதிலும், பயிற்சியே முடிந்துதான் எங்களுக்கு இதழ் கிடைத்தது.

மூன்று பேரின் நேர்முகத்தையும் பொருத்தமான வர்ணனைகளுடன், பாடல்களுடன் ஒலிபரப்பினோம். திருமதி. நிஷா தனது நேர்முகத்தில்,
 " எங்களுக்குத் தேவையான பாக்கு மட்டைகளை பெங்களூரு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வாங்கி வருகிறோம்.இங்கு எங்கு நோக்கிலும் பாக்கு, பாக்கு, பாக்கு மரம் தான். அபரிதமான பாக்கு மரங்கள். பாக்கு மட்டைகளும் நல்ல தரமாக உள்ளது. ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு அதிகம். இங்கு தொழில் முனைய விரும்புவோர் ஒரு அடி எடுத்து வைத்தால், நூறு அடி கைபிடித்து அழைத்துச்செல்ல ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு அடி எடுத்து வையுங்கள்" என்று சொல்லியிருந்தார்.

 பொதுவாக இங்கு சுயதொழில் முனைய இளைஞர்களிடையே மிகுந்த தயக்கம் உள்ளது. கடை நிலை ஊழியனாக இருந்தாலும் பரவாயில்லை. அரசு வேலை வேண்டும் என்னும் மனப்போக்கில் தான் இருக்கிறார்கள். உழைப்பதில் தயக்கம், தடைகளைத் தாண்டி போராடும் மனப்பக்குவமின்மை ஆகியனவையே காரணம்.

பயிற்சி பெற்ற நண்பர் ஒருவரை, "உங்க பகுதியில எத்தனை பேரு தொழில் ஆரம்பிக்கப் போறீங்க? என்ற போது அவர் சிரித்தபடி," இது எத்தனையாவதோ பயிற்சி. எத்தனையாவதோ லோன். லோன வாங்கி தண்ணி அடிப்பானுக. வட்டிக்கு விடுவானுக. லோனு தள்ளுபடியானதும் அடுத்த லோனுக்கு அலைவானுக" என்றார். இது எப்படி இருக்கு? இவர்களை என்ன செய்யலாம்?

திங்கள், ஜூலை 23, 2012

ஆசைப்பட்டாம்பூச்சிகள்




காலத்தின் வாசலில் நொடியில்
கலைந்து போகும் கோலம்
வாழ்க்கை என்பதறிந்தும்
மனவெளியெங்கும் அலைந்து திரிகிறது
ஆசைப் பட்டாம்பூச்சிகள்.

புள்ளியாய் உருவாகி, புழுவாய் வளர்ந்து
பட்டாம்பூச்சியாய் சிறகு விரித்த அவற்றிற்கு,
கனவுகளும், கற்பனைகளும் வண்ணம் கொடுக்க
எது பற்றியும் பிரக்ஞை இன்றி
பேராசைப் பட்டாம் பூச்சி தன் அசுரச்சிறகை விரிக்கும்.

தேனெடுக்கும் குழல்களில் தீ எடுத்து
நம் தோட்டப்பூக்களையும் பற்ற வைக்கும்.
சமயத்தில் கூடுகளும் பொசுங்கிப்போகும்.
ஆசைகள் கைகூடும் போதில்,
வேட்கை குறைய
வேறொரு புள்ளி.

நுகர்வுக்கலாச்சாரமே வாழ்க்கையாய்
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க,
வெறுமையாய் தீர்ந்து கொண்டிருக்கிறது பெண் சக்தி
விளம்பர வலைவிரித்து வேட்டையாடுகிறது
வியாபார யுக்தி.
தேவைகளுக்கும், உடமைகளுக்கும் பாரம் சுமந்து
வாமனராகிப் போன விஸ்வரூபிகள்.

காலத்தின் வாசலில் நொடியில்
கலைந்து போகும் கோலம்
வாழ்க்கை என்பதறிந்தும்
மனவெளியெங்கும் அலைந்து திரிகிறது
அசுரச்சிறகு கொண்ட ஆசைப்பட்டாம்பூச்சிகள் 

வெள்ளி, ஜூன் 29, 2012

சித்திரை விழா.




தமிழ் கூர் நல்லுலகிற்கு எமது இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தை முதல் நாள் தான் வருடப்பிறப்பு என்ற முந்தைய தமிழக அரசின் அறிவிப்பு இருந்த போது அந்தமான் தமிழர் சங்கம் சித்திரை விழாக் கொண்டாடவில்லை. இன்றைய தமிழக அரசு சித்திரை முதல் நாள் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று அறிவித்ததும் தாய்த்தமிழகத்தோடு ஒன்றிணைந்து செல்லும் நோக்குடன் சித்திரை விழாக் கொண்டாடி மகிழ்கிறது. சித்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு சித்திரைக் கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை அரங்கேற உள்ளது. சித்திரைக்கவியரங்கிற்கு எனது கவிதை.

சங்கம் வளர்த்த தங்கத்தமிழ்த் தாயின்
தாமரைத்தாளினுக்கு என் முதல் வணக்கம்.
வங்கக்கடலலைகள் வாழ்த்துகின்ற
வண்ணத் தீவு வாழ் வளமார்ந்த தமிழருக்கும்,
தணடமிழ்க்கவியரங்கின் நவையற்ற தலைவருக்கும்
சித்திரைக்கவியரங்கின் முத்திரைக்கவிகளுக்கும்
சிரம் தாழ்ந்த பணிவன்பான வணக்கங்கள்.

எம் தமிழ் மக்கள் அனைவர்க்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் கோடி.
நந்தன ஆண்டு, நலமெலாம் தரவேண்டும்.
வந்தனம் கூறி வாழ்த்துப்பா பாடுவோம்.
பொங்கும் வளமும் பொலிவெலாம் தரவேண்டி
புத்தாண்டு நன்னாளில் இறையை வேண்டுவோம்.

நனவு கொஞ்சம் கனவு கொஞ்சமாய்
நகரும் இந்த இயந்திர வாழ்க்கையில்
இனிமை கூட்டுவதும் – நம்
தனிமை போக்குவதும் இத்திரு நாட்களே.
ஆவணியோ, தையோ அடுத்து வரும் சித்திரையோ
எதுவாகிலும் இருக்கட்டும் வருடப்பிறப்பு.
ஆருடங்களையும், ஆராய்ச்சிகளையும் ஒதுக்கிவிட்டு
ஆனந்தம் கொண்டாடுவோம் சித்திரை நாளில் இன்று.

எட்டுமாத மழையும்
இரண்டு மாதமாய் சுருங்கிப்போனது. – இனி
பத்து மாதமும் தண்ணீர் பஞ்சமாகும்.
அடர்வனக்காடுகளை அழித்து
அலங்காரமாக்கினோம் வீடுகளை
அலங்கோலமாகிப் போனது
அந்தமான் தீவுகள்
நகரமயமாக்கலில் நரகமாகிப் போகும் நம் வாழ்க்கையும்.


தீவு மங்கையின் ஆபரணங்கள் விலையுயர் மரங்கள்
அவள் ஆபரணங்களை சேர்த்து வைத்தாள்
அவள் மக்களுக்குக் கேடயங்களாய்…..
கேடயத்தையே வாள் கொண்டறுத்து
கேடுகளை வாங்கிக்கொண்ட மக்கள் நாம்
அழகிய வனங்களெல்லாம் பாலையாய்ப்போனால்
அடுத்த சந்ததி வாழ்வதெப்படி?
பாலையையும் சோலையாக்கும் வளைகுடா தேசங்கள் முன்
சோலை சிதைத்து பாலையாக்கும் வன்கொடுமை விலக்க,
சிந்திப்போம் சித்திரை திரு நாளில், சீர்பெருக்க சிந்திப்போம்.

விலை நிலமெல்லாம் வீடுகளாக்கினோம்.
வெள்ள நீர் தேக்கி விளைவிக்க இடமில்லை.
வாடகை ஆசையில் வளர்த்த மரம் வீழ்த்தி,
பணப்பை நிரப்பினோம்.
மனம் மட்டும் வெறுமையாக
மரத்தின் நிழலை நினைத்துக்கொண்டே…..

இங்கே
வீட்டு வாசலை கோலங்களைவிட
வாகனங்களே வழி மறித்து நிற்க
காற்று மண்டலமே கலங்கிக் கிடக்கிறது
கரிய மில வாயுவால்.

அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
அகழ, அகழ ஆடும்.
வன்முறையும் தீவிரவாதமும் மட்டும் தான் தேசத்துரோகங்களா?
வனமழித்து சூழல் கெடுப்பதும் தேசத்துரோகம் தான்!
வீட்டிற்கு ஒரு மரம் போதாது. இனி
தலைக்கு ஒரு மரம் வளர்ப்போம்
தழைக்கும் மரங்கள் மழை கூட்டி வளம் சேர்க்கட்டும்.

ஒருமைப்பாட்டிற்காய் உயிர் தந்த
உன்னத பூமி இது.
கற்காலமும் தற்காலமும்
கலந்து வாழும் கருணை தேசமிது.
இங்கும் தான் எத்தனை வேற்றுமைகள்
மாநிலத்தின் பெயரால் பிரிவினைகள்
மொழியின் பெயரால் பிரிவினைகள்
இனத்தின் பெயரால் பிரிவினைகள்
சாதியின் பெயரால் பிரிவினைகள்
இருப்போர், இல்லார் – கற்றோர் கல்லார் இப்படி
பிரிவினைக்கோடுகளால் பின்ன பின்னமாய் நாம்
ஒற்றுமைக்கேட்டிற்கு இன்னும் எத்தனை பாடம் படிப்பது?
பாலகர் போல் பாடங்கள் மறப்பதா?
கொலையும் கொள்ளையும் தான் மாபாதகமா?
பிரிவினை வளர்ப்பதும் பெரும் பாவம் தான்
சிந்திப்போம், சித்திரைத் திரு நாளில் சீர் பெருக்க சிந்திப்போம்
தமிழனாய் கை கோர்ப்போம் – மொழி வளர்ப்போம்,
புது இலக்கியம் செய்வோம்
     இந்தியனாய் ஒன்று கூடுவோம் – உழைப்பால் ஒளி கூட்டி
புதியதோர் உலகம் செய்வோம் நாம்
புதியதோர் உலகம் செய்வோம்.

பி.கு : எந்த ஆட்சி வந்து என்ன சட்டம் கொண்டு வந்தாலும் தங்கமணிகள் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடுவது சித்திரையில் தான். இந்தப்பதிவு தாமதமானதிற்கு காரணம் சொந்த ஊருக்குப் போனதாலும், இணையம் தகராறு செய்ததாலும்.

புதன், ஜூன் 27, 2012

ஷஹீத் திவஸ் – 23.03.12





அந்தமான் தீவுகளில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அன்று ஷஹீத் திவஸ் அதாவது நாட்டுக்காக உயிர் தந்த தியாகச் செம்மல்களின் தினம் என்று பொருளாம். பஞ்சாப் சிங்கம் பகத்சிங் மற்றும் அவர் நண்பர்கள் இருவரும் தூக்கிலிட்ட தினத்தை ஷஹீத் திவஸ் என்று அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் தீவுகளின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையினர், சர்வ பாஷா கவி சம்மேளன் – அனைத்து மொழிக் கவியரங்கம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இக்கவியரங்கில் தேசப்பற்று குறித்த கவிதைகள் இடம் பெற்றன. தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, நிக்கோபாரி, பெரு அந்தமானி ஆகிய மொழிக்கவிதைகள் இடம் பெற்றன. இந்தக் கவியரங்கின் சிறப்பு, முதல் முதலில்,தீவுகளின் பெரிய அந்தமானியர் என்ற ஆதிவாசி இனத்து இளைஞர் ஒருவர் அவர்களது மொழியில் கவிதை அரங்கேற்றினார்.
மொழி புரியாத போதும், கவிதை என்பது எல்லா மொழியிலுமே அழகானது சேமிப்புக்கலன் என்பது புரிந்தது. கவிதை என்பது மின்சாரம் போல, எல்லா மொழிக்கும் ஒளி கொடுத்து உயிர் கொடுக்கும் சமாச்சாரம்.
ஷஹீத் திவஸ் கவியரங்கில் தமிழ் மொழியில் கவிதை வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதற்கு அ. & நி தீவுகளின் கல்வித்துறை துணை இயக்குநர் உயர்திரு ம. அய்யாராஜு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
பசுமை வயல்களும் பரந்த வெளிகளும்
ஓடும் நதிகளும் உயர்ந்த மலைகளுமாய் அழகிய பாரதம்.
பண்பாடும் பாரம்பர்யமும், கலைகளும் கலாச்சாரமும்
அழகியலும், ஆன்மீகமும் செழித்த பாரதம்.
வளங்களும் செல்வங்களும் வறுமையற்ற வாழ்க்கை நெறிகளும்
பொன்னும், மணியும், முத்தும் கொழித்த பாரதம்
பழுத்த மரம் கண்டால் பரங்கியர் உள்ளம் பொறுக்காது.
நாடு பிடிக்கும் ஆசையில் வந்து காலைப்பிடித்து, வாலைப்பிடித்து
பின் கழுத்தைப் பிடித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில்
பாரதத்தைப் பிணைத்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.

ஒற்றுமையே பலம் என்பதை
உணராத இந்தியர்கள் பட்ட பாடுகள் எத்தனை?
மண்ணோடு மண்ணான மாநிலங்கள் எத்தனை?
சிதைந்து போன சிம்மாசனங்கள் எத்தனை?
அழிக்கப்பட்ட அடையாளங்கள் எத்தனை?
உடைக்கப்பட்ட கோவில்கள், கலைச்சின்னங்கள் எத்தனை?
அடிமையாய் உயிர் நீத்த அரசர்கள் எத்தனை?
வீரம் காட்டி போர்க்களத்தில் உயிர் தந்த உத்தமர்கள் எத்தனை?
பாழும் பரங்கியர் முன் அத்தனையும்
பலியானது போக வேறொன்றும் மிச்சமில்லை.

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழர்
வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன்
ஊமைத் துரை, மருது சகோதரர்கள்
மண்டியிட மறுத்தவரை பரங்கியன்
கொன்று பழி தீர்த்தான்.

சுடர் கவிதை கொண்டு
சுதந்திர கனல் பெருக்கிய சுப்ரமண்யபாரதி
புதுமைகள் சொல்லும்
புதுவைக்குயில் பாரதிதாசன்
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்
சிறைவாசப்பரிசாய், தொழு நோய் கண்ட சுப்ரமண்ய சிவா
கொடி காத்த குமரன், தில்லையாடி வள்ளியம்மை தாய் நாட்டு  
விடுதலைக்காய் தன்னையே தந்த வீர வாஞ்சி இவர்கள்
தமிழ் நாடு தந்த தியாகச்செம்மல்கள்

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் செய்த அண்ணல் காந்தி
அவர் வழி, தனி வழி அது அறவழி
அந்த வழி வந்தவர்கள் கோடி என்றால்
இள ரத்தம் கொதிக்க ஆயுதமே பதில் என்று
யுத்த வழி வந்தவர்கள் கோடி.
ரத்தம் சிந்தி மாண்டவரும் கோடி
ரத்தம் கொடு சுதந்திரம் தருகிறேன் என்ற சுபாஷ்
வீழ்ந்தவனல்ல நான் விதைக்கப்பட்டவன் என்று
தூக்கிலிடும் போதும்
தூக்குக்கயிறை முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்
இப்படி கோடானுகோடி சடலங்களின் மீது
எழுப்பப்பட்டது தான் இந்திய சுதந்திரக்கோட்டை
தியாகிகளின் எலும்புகளைக் கோர்த்து கம்பங்களாக்கி
உயரப்பறக்கிறது நமது தாயின் மணிக்கொடி

இங்கே
நீல நிறக்கடலும் கரு நீரானது கூட
எங்கள் சுதந்திரப்போராட்ட தியாகிகள் சிந்திய ரத்தத்தால்.
கூண்டுச்சிறையின் ஒவ்வொரு சுவரும்
கோடிக்கதைகள் சொல்லி நிற்கும்.
கசையடி பட்டோரின் கண்ணீரும் ரத்தமும் வலியும்
புழுத்த உணவில் உயிர் வளர்த்த கொடுமைகளும்
அந்த ஆலமரத்தின் வேர்களே அறியும்.
இனி வேண்டாம் இப்படி ஒரு கொடுமை
மானுடம் வாழும் எந்த மூலையிலும்

இருக்கட்டும் நமக்குள் எத்தனையோ வேற்றுமைகள்.
உடையில்,உணவில், மொழியில், மதத்தில், பண்பாட்டில்
இருக்கட்டும் நமக்குள் எத்தனையோ வேற்றுமைகள்
என்றும் வேண்டாம் வேற்றுமை
நாம் இந்தியர், நாம் இந்தியர் என்னும்  உணர்வில்
என்றும் வேண்டாம் வேற்றுமை
நாம் இந்தியர், நாம் இந்தியர் என்ற உணர்வில் மட்டும்
என்றும் வேண்டாம் வேற்றுமை.