சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், செப்டம்பர் 16, 2009

நினைவுகள்

இனியவளே !
நான் கடந்து வந்த பாதையில்
உன்னோடான பயண நாட்களை நினைத்து பார்க்கிறேன்.
வியர்வையோடு பாரம் சுமக்கும் போது
தென்றலின் ஸ்பரிசமாய் .......
கொளுத்தும் கோடையில்
குற்றாலகுளிர் சாரலாய்........
உயிரை தாலாட்டும் உன் நினைவுகள்
உருவாக்கும் ஏக்க பெரு மூச்சுகள்
அந்த நாட்கள் நினைவில் மீண்டு வருகையில்
நிகழ் காலம் நழுவி விடுகிறது...
என் கவிதைகளுக்கு முதல் ரசிகை நீ
வார்த்தைகளை தேடித்தேடி
வண்ணமாய் கோர்த்து வந்தேன்.
உன் ஒற்றை தலை அசைப்பு அங்கீகாரம் தேடி
நீயோ ஒரு புன்னகை வெகுமதியுடன் சொன்னாய் சூப்பர்

அன்று
எனக்கு சிறகுகள் முளைத்தது
உள்ளே மத்தாப்பு சிதறி சிரித்தது
அன்றைக்கு பின் இது வரை
சிறகுகள் முளைக்கவும் இல்லை
மத்தாப்பு சிரிக்கவும் இல்லை
ஆனாலும்
என் கவிதை பக்கங்களை காற்றில் பறக்க விட்டேன்.
உன் காது ஜிமிக்கிகள் நடனமிட
தலை அசைத்து நீ பேசுவது கவிதை
இமைகள் படபடக்க நீ
பட்டு உடுத்திய பட்டாம்பூச்சியாய் சிரிப்பது கவிதை
தாவணி பறக்க நீ நடக்கும் நடை ஒரு கவிதை
கவிதைக்கே கவிதை தந்த
அறியாமைக்கு வெட்கினேன்
நீ புகழ்வதற்காய்
நீ பாராட்டுவதற்காய்
நீ அங்கீகரிப்பதற்காய்
நீ மகிழ்வதற்காய் என் ஒவ்வொரு செயலும்
ஓன்று தெரியுமா ?
உனக்காய் நான் செய்த செயல்கள் ஒவ்வொன்றும் தான்
எனது இன்றைய சிம்மாசனத்தை தேடி தந்தது
இனியவளே !
காதலின் வெற்றி எது?
திருமணம் என்று சமூகம் சொல்லலாம்.
ஆனால் என் வரை
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
காதல் என்பது தோள் கொடுத்தல்
காதல் என்பது எதிர்பார்ப்பில்லாதது.
காதல் என்பது பிரியாத நேசம்
காதல் என்பது பிரியாத தோழமை
ஒரு வேளை நாம்
வாழ்க்கை பந்தத்தின் வசப்பட்டிருந்தால்
வசவுகளும் சண்டைகளுமே வாடிக்கையாய் இருந்திருக்குமோ?
அலுப்பும் சலிப்புமே எஞ்சியிருக்குமோ?
நம் உறவு மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்குமோ?
தெரியாது.
ஆனால்
இன்றும் உன் நினைவு
எத்தனை பேர்களுக்கு இடையிலும்
தனிமை உணர வைக்கிறது.
பெண்ணே! எனக்கு
துக்க நினைவுகள் திரும்ப வருகையில்
மீண்டு வந்த நிம்மதி.
சந்தோஷ நினைவுகள் மீண்டும் மலர்கையில்
இதயத்தின் ஏக்கம் விழிகளில் வழிகிறது.
உன்னோடு நடப்பதற்கு
என்
வாழ்க்கைப்பாதையின் கதவுகள் திறந்தே கிடந்தன.
என் பாதங்கள் தவம் கிடந்தன.
எந்தத்தடைக்கல்லும் வழிமறிக்கவில்லை.
ஆனாலும்
சொல்லப்படாத என் நேசம்.....
சிறகு கொண்ட தேவதையே!
உன்னை சுற்றி நின்ற
ஒளிவட்டத்தில் பிரமித்து கிடந்தேன்.
இன்றும்
நான் சோர்ந்த போதுகளில்
உன் ஒற்றை புன்னகை நினைத்து பார்க்கிறேன்.
நிலவுக்கு கிடைக்கும் சூரிய ஒளியாய்....
உன்னோடான
இந்த உறவு காதலா? பக்தியா?



இன்று வரை அர்த்தம் தேடுகிறேன்.

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

இன்றையக்காதல்

அண்ணலும் நோக்கினாள்

அவளும் நோக்கினாள்

அது த்ரேதாயுகக்காதல்

கண்ணனை நினைத்து

கனவுகளை வளர்த்து உயிர் தந்த ராதை

அது துவாபர யுகக்காதல்

கண்ணோடு கண் நோக்கின்

அது சங்க காலக்காதல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

இல்லையில்லை

விழியில் விழுந்ததும் இதயம் நுழையும்

இன்றையக்காதல்

அல்லது

கண் பார்த்து கணக்கு போட்டு

கூட்டி கழித்து - முடிவு

கூடுதல் ஆனால் கண்ணசைவு காட்டும்

இன்றையக்காதல்

அண்ணலிடம் நோக்கியா இருந்தால் வரும்

அவசரக்காதல்

அரசு வேலை பெண்ணாய் இருந்தால்

அவருக்கு வரும் ஆயிரம் காதல்

கைநெடிக் ஹோண்டா கைவசம் இருந்தால் இங்கே

எட்டாக்காதலும் வசப்படும்

இயல்பு என்பது மறந்து போய்

பொய் முகங்களில் போலியான வாழ்க்கை

காலையில் கண் பார்த்து

மாலையில் கடற்க்கரை சென்று

மறுநாள் மணவறையில்

அவசரக்கோலம் அள்ளித்தெளித்து

ஆண்டவனின் தீர்ப்பை அழித்து எழுத முயன்று

தன்னையே அழித்துக்கொள்ளும்

இன்றையக்காதல்

காதல் கொண்ட இதயங்களே

பொய் முகங்களை கிழித்து எறியுங்கள்

உண்மை மறைக்கும் போர்வைகளை உதறுங்கள்

அன்புச்சகோதரியே!

பருவத்தில் நீ நடக்கும் பாதையெல்லாம் உன்னை

பருகும் விழிகள் மொய்த்துக்கிடக்கும் தான்

அந்த கண்களோடு கண்கள் மோதிக்கொண்டால் தீப்பற்றும் தான்

பீனிக்ஸ் பறவை வேண்டுமானால் சாம்பலில் உயிர்த்தெழலாம்.

பெருமை கொண்ட பெண் பிறவி?

யோசியுங்கள்

உண்மைக்காதலை மட்டும் யாசியுங்கள்

கண்கள் மோதிக்கொண்டதும் மனதில் பூ பூக்குமே!

காதலியின் கொலுசு சத்தம் காதலனுக்கும்

காதலனின் காலடி ஓசை காதலிக்கும் உயிரைத்தாலாட்டுமே

ஒருவரை ஒருவர் நினைத்த பொழுதில்

உள்ளே ஏதோ ஒன்று உடைந்து உருகுமே! அது காதல்

அவளுக்காய் அவனும் அவனுக்காய் அவளும்

உருகி உருகி உள்ளத்தோடு உள்ளத்தை

ஒட்டி வைத்து தைத்து கொள்வார்களே! அது காதல்

உடலால் பிரிந்த போதும் உள்ளங்களால் உறவாடுவதும்

எங்கோ இருந்த போதும்

எண்ணங்கள் மட்டும் பின்னி பிணைவதும்

மனதின் ஒவ்வொரு புள்ளியிலும் ஒன்றிக்கிடப்பார்களே! அது காதல்

காதலில் மட்டும் தாம் காத்திருத்தல் சுகம்

காதலில் மட்டும் தான் அழியாத நம்பிக்கை சாத்தியம்

ஒருவருக்காய் ஒருவர் விட்டுக்கொடுப்பதும்

ஒருவர் உயர்விற்காய் ஒருவர் தோள் கொடுப்பதும்

ஆளுமையும் அடிமைத்தனமும் இனிமையாவதும் காதலில் மட்டும் தான்

சோகம் சுகம் ஆவதும்

சுமையும் பெருமை ஆவதும் காதலில் மட்டும் தான்

காதல் பொய்யில்லை

காதலில் மயக்க்மில்லை

காதலால் உயர்ந்தவர் கோடியுண்டு

ஆனால்

வெறும் பருவ மயக்கங்கள் காதலில்லை

உடமைகளால் வரும் நேசம் உண்மையில்லை

உங்களை, உங்களை, உங்களுக்காய் விரும்பும்

உயிரை நேசியுங்கள்

உண்மையாய் வாழுங்கள்

வரலாறுகளில் உண்மைகள் மட்டுமே பொறிக்கப்படுகின்றன.

பெண் குழந்தை

மகப்பேறு மருத்துவனையில்
தவிப்பாய் விரல் பின்னிக்கிடக்கும் தந்தை
கவலையாய் காத்துக்கிடக்கும் உறவுகள்
ஜீவ மரணப்போராட்டமாய்
தாயின் வயிற்று சுவர்களில் முட்டி மோதி
பூமியில் அவதரித்தேன்
தொப்பூழ்க் கொடி அறுத்து
தொட்டிலில் கிடத்தினர்
உறவுகள் ஓடிவந்து
ஒட்டு துணி விலக்கிப்பார்த்தது
உதடு பிதுக்கியது 'பெண்'
துக்கமொன்று அரங்கேறியதாய்
எங்கும் சத்தமில்லாத வெறுமை
முப்பிறவி தீவினையை கரைக்கவந்த
மனிதப்பிறவியில் ஆணென்ன? பெண்னென்ன?
அம்மா! அழைக்கிறேன்
என் குரல் தாய்க்கு சிலிர்க்கவில்லை
அப்பா!
என் குரல் தந்தையை கலைக்கவில்லை
புரிகிறது
பிறப்பு உரிமைகளே மறுக்கப்பட்ட
பெண் பிறவி
அம்மா நீ பெண்
பெண்ணை வெறுக்க
வெம்பிப்போன உன் கனவுகள் காரணமோ?
உன் கனவுகளுக்கு நான் வண்ணம் தருகிறேன்
திரேதாயுகத்தில் சீதை
வனத்தில் குடியிருந்தும்
அனலில் குளித்து எழுந்தாள்
துவாபரயுகத்தில் திரௌபதி
பங்காளி துகில் களைய
பனையபொருள் ஆனாள்
பெண்
போகப் பொருளாய்
அடுப்படி அடிமையாய் கிடந்த காலம் போனது
சிறையெடுக்க நான் சீதையும் இல்லை
துகிலுரிய நான் திரௌபதியும் இல்லை
பெண்ணை
பணயப் பொருளாக்க இது என்ன
பங்காளி ராஜாங்கமா?
பெண்ணடிமை பேசும் இடங்களில்
ஆண் அடிமைக்காலம் அரங்கேறும் தெரியுமா?
பெண்ணாய்ப் பிறந்தும்
பெண்ணை வெறுக்கும் தாய்க்குலமே!
இந்த பூமி பெண்ணுக்காய் தவமிருக்கும் காலம் வரும்.
இன்றும் பெண் தீபமாயிருக்கிறாள்
அவளை
தீப்பந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டால்
உலகமே சாம்பலாய் சரிந்து போகும்
அவளை தீபமாகவே இருக்கவிடுங்கள்

இன்றைய முதிர்கன்னிகள்

பெண்கள்
படித்தால் நீங்கும் அறியாமை என்றார்கள்
பட்டங்கள் பெற்றோம்
வேலைக்குப்போனால் விடுதலை என்றார்கள்
வளமான சம்பளம் தான்
ஆனாலும்
இன்று நாங்கள் முதிர் கன்னிகள்
அழகுக்கு இலக்கணம் சொல்லும்
பருவத்தின் வாசலில் நாங்கள்
பெற்றோர் சொல்லுக்காய்
காதலுக்கு கதவடைத்தோம்
விளைவு
இன்று நாங்கள் முதிர் கன்னிகள்
எங்களின்
சுயம்வரத்தில் வருகை தந்தனர்
மாப்பிள்ளைகள் வரமாலையோடு
மாலையிடும் உரிமை தான் மறுக்கப்பட்டது
வரமாலையுடன் வந்தவர்களை
தரம் பார்த்து தள்ளி விட்டே
மாறிப்போனது எங்கள் பருவங்களும்
எங்களின்
திறக்காத சம்பள உரைகளை
திறந்தே பழக்கப்பட்ட பெற்றோர்க்கு
மகளுக்கு பூச்சூட மனமில்லை
மனது மரத்து புத்தி விழித்துக்கொண்ட போது
கடந்து போயிருந்தது காலம்
இன்றும் நாங்கள் முதிர் கன்னிகள்

சுவர்கள்

சுவர்கள்
ஒரு எல்லையின் முடிவு மட்டுமல்ல
ஒருவரின் சுதந்திர எல்லையும், உரிமையின் எல்லையும் கூட
சரியான இடத்தில் வைக்கப்படும் சுவர்கள்
சச்சரவுகளை தவிர்க்குமாம் சொல்கிறார்கள்
உண்மைதான்
உறவுகளே இல்லைஎன்றானபோது
ஊடல்களுக்கு என்ன வேலை?
சுவர்களுக்கு அப்பால் விளையாடும்
சுட்டிக்குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் அசரீரியாய் ஒலிக்கையில்
முகம் தெரியாத வழிப்போக்கர்களின் பேச்சொலி கேட்கையில்
தெரு நாய்களின் குரைப்பும்
வாகன இரைச்சலும்
வெறும் ஒலி ஆக வந்து செவிப்பறை மோதுகையில்
அன்னியப்பட்டதாய் உணரவில்லை?
ஒலிகள் பழகிப்போனதும்
அந்த முகங்களை காணும் ஆசை பிறக்கவில்லை?
சுவர்கள் ஒரு எல்லையின் முடிவு மட்டுமல்ல
கம்பியில்லா சிறையும் கூட..
நமக்கு நாமே இட்டுக்கொண்ட சிறை
வீட்டு சுவர்களே மற்ற உயிர்களை நிராகரிக்கையில்
மனச்சுவர்களை நினைத்து பாருங்கள்
வெறுப்பு என்னும் கற்களால்
கசப்பென்னும் மண் குழைத்து
கட்டிக்கொண்ட மனச்சுவர்கள்
தனிமையை மட்டுமா தருகிறது?
இன்று
பணம், பட்டம், பதவி
மனித வளர்ச்சியின் அளவுகோல்
பணம் படைத்தவர்க்கு பணமே முகமாக
பட்டம் படித்தவர்க்கு பட்டமே முகமாக
பதவி படைத்தவர்க்கு பதவியே முகமாக
அந்த முகங்களே நிஜமாக
அவர்களின் பின்னே ஒரு கூட்டம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி
இருப்பை நிலையாக்கிக் கொள்ளும் துடிப்பு
என்னுடைய இருக்கை பறிபோகுமோ?
எண்ணி எண்ணி பயந்து
சுவர்கள் நிரந்தரமாயின.
இறுக்கமான மனங்களுக்குள் நுழைய முடியாமல்
உதட்டு சிநேகங்களை உணர முடியாமல்
உண்மை இங்கே ஊனமாகி போகிறது
உறுத்தல்கள் இங்கே தொடர்கதை ஆகிறது
சீனப்பெரும் சுவரும், பிரான்சின் மாகினாட் அரண், பெர்லின் சுவரும்
எல்லைக்காக எழுப்பப்பட்டது மட்டுமல்ல
பிரிவினைக்காகவும் தான்
பிரித்து வைக்கப்பட்ட அன்பு பிரவாகம் எடுத்த போது
பெர்லின் சுவர் தூள் தூளாகிப் போனது வரலாறு
என் இனியவர்களே
அன்பு ஆழிப் பேரலையையும் அடக்கும்
இரும்பையும் தூளாக்கும்
பாறையையும் இளக வைக்கும்
வேண்டாம் பெரும் சுவர்கள்
வீட்டை சுற்றியும் மனதை சுற்றியும்
வேலிகள் அவசியம் தான் - வீட்டிலும் மனதிலும்.
நம் எல்லை உணர, எல்லை மீறாது இருக்க
வண்ண வண்ண ரோஜாப்பதியன் இட்டு
வளமான வேலி உருவாக்குவோம்
வண்ண ரோஜாக்களுடன் உறவாட வரும்
வண்ணத்துபூச்சிகளை வரவேற்போம்
வாழ்வது ஒருமுறை - நல்ல
வண்ணமாய் வாழலாமே!



அந்நிய நாட்டிலுருந்து ஒரு கணவனின் கடிதம்

அந்நியமாய்ப் போகாமல்
அண்ணன் மகளே மருமகளாய் வேண்டும்
அன்னையின் ஆசையில் நீ என்னவளாய் ஆனாலும்
அக்கரையில் நீ
அந்நியமாய் நான்
ஆளுக்கொரு தேசத்தில் உத்தியோகம்
பொருளாதார சுதந்திரம் வேண்டி.
பிரிந்து நடந்தோம் வெவ்வேறு திசைகளில்
பொருளாதார சுதந்திரம் தேடி
மிச்சமானதும் பொருள் ஆதாரம் மட்டுமே
வீடுகள், மனைகள் , ஆபரணங்கள் வெளிச்சமாய்...
பரிமாறப்படாத காதலும்துய்க்காத இன்பங்களும்
தூங்காத இரவுகளும் ரகசியமாய்...
உன்னை
நினைத்த மாத்திரத்தில் என் அறைஎங்கும்
நிரம்பி வழியுது உன் கொலுசின் ஓசை.
உன் அண்மையை
நினைத்த பொழுதில்
நிரம்பி வழியுது விழி இரண்டும்.
பூக்கள், காதலர்கள்,குழந்தைகள்
பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்.
உன் ஞாபகம் தந்த சிவராத்திரிகள் எத்தனையோ
கணக்கில்லை எனக்கு
வார்த்தைகளை மட்டுமே பரிமாறும் மின்னஞ்சலும் தொலைபேசியும்
நம்மிடையே வழியும்
அன்பைப் பரிமாறத் தெரியாது தவிக்கும்.
அழகான ஆடை, மின்னும் ஆபரணம்
இன்னும் என்னன்னவோ
உனக்குப் பிடித்தது எல்லாம் இறைந்து கிடக்கிறது என் அருகாமையில்.
அந்நியமானது நீ தான் , நீ மட்டும் தான் அன்பே.

காதல் என்பது...

கண்டதும் பற்றிக்கொள்ள
காதல் ஒன்றும் நெருப்பில்லை
கன்னியரும் தீக்குச்சியில்லை
புரிதலினால் வரும் காதலில் தான்
பூமியே புனிதம் ஆகிறது
ஏனென்றால் காதல்
பூமியில் போர்க்களங்களை உருவாக்குவதில்லை

* * * * *

நேசம் உள்ள இதயம்
அழகுக் கண்கள்
ஆப்பிள் கன்னங்கள்
கொவ்வை செவ்விதழ் தேடி வருவதில்லை
உண்மைக் காதல்
உள்ளம் பார்த்து உருகும்.
நெற்றிப் பரப்பில் வறுமை உழுத ரேகையிலும்
கன்னக்கதுப்புகளில் வயது உழுத சுருக்கங்களிலும்
கருத்த கூந்தல் நரைத்து
கண்கள் குழி விழுந்து
கல்லறை போகும் வரை தொடரும்...
மரணத்திற்குப் பின்னும் அந்தக்
காதலை
கல்லறை பேசும்...
காற்று பேசும்.....
காலமெல்லாம் அந்தக் காதல் வாழும்.

* * * * *

அறிமுகம்

ஆழி பேரலை ஊழி தாண்டவமாடி

மாடமாளிகையையும் மண் குடிசையையும்

ஒன்றாய் புரட்டிப் போட்டு

சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில்

புது யுகம் காண பூபாளம் பாடும்

புதுக்குயில்கள் நாங்கள்

சுனாமி விளையாடிப்போன

சுவடுகள் மிச்சமிருக்க

நாளை விடியும் என்ற நம்பிக்கையில்

சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்

அழிவு என்பதும் ஆக்கத்தின் தொடக்கம் தானே

இழப்புகள் என்றும் நிரந்தரம் இல்லை

இயற்கை ஒருபோதும் சுமையாவதில்லை

வந்தோர்க்கு வாழ்வு அளிக்கும்

வசந்த தீவின் வாசிகள் நாங்கள் நலம்

நலம் அறிய ஆவல்