சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

சுவர்கள்

சுவர்கள்
ஒரு எல்லையின் முடிவு மட்டுமல்ல
ஒருவரின் சுதந்திர எல்லையும், உரிமையின் எல்லையும் கூட
சரியான இடத்தில் வைக்கப்படும் சுவர்கள்
சச்சரவுகளை தவிர்க்குமாம் சொல்கிறார்கள்
உண்மைதான்
உறவுகளே இல்லைஎன்றானபோது
ஊடல்களுக்கு என்ன வேலை?
சுவர்களுக்கு அப்பால் விளையாடும்
சுட்டிக்குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் அசரீரியாய் ஒலிக்கையில்
முகம் தெரியாத வழிப்போக்கர்களின் பேச்சொலி கேட்கையில்
தெரு நாய்களின் குரைப்பும்
வாகன இரைச்சலும்
வெறும் ஒலி ஆக வந்து செவிப்பறை மோதுகையில்
அன்னியப்பட்டதாய் உணரவில்லை?
ஒலிகள் பழகிப்போனதும்
அந்த முகங்களை காணும் ஆசை பிறக்கவில்லை?
சுவர்கள் ஒரு எல்லையின் முடிவு மட்டுமல்ல
கம்பியில்லா சிறையும் கூட..
நமக்கு நாமே இட்டுக்கொண்ட சிறை
வீட்டு சுவர்களே மற்ற உயிர்களை நிராகரிக்கையில்
மனச்சுவர்களை நினைத்து பாருங்கள்
வெறுப்பு என்னும் கற்களால்
கசப்பென்னும் மண் குழைத்து
கட்டிக்கொண்ட மனச்சுவர்கள்
தனிமையை மட்டுமா தருகிறது?
இன்று
பணம், பட்டம், பதவி
மனித வளர்ச்சியின் அளவுகோல்
பணம் படைத்தவர்க்கு பணமே முகமாக
பட்டம் படித்தவர்க்கு பட்டமே முகமாக
பதவி படைத்தவர்க்கு பதவியே முகமாக
அந்த முகங்களே நிஜமாக
அவர்களின் பின்னே ஒரு கூட்டம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி
இருப்பை நிலையாக்கிக் கொள்ளும் துடிப்பு
என்னுடைய இருக்கை பறிபோகுமோ?
எண்ணி எண்ணி பயந்து
சுவர்கள் நிரந்தரமாயின.
இறுக்கமான மனங்களுக்குள் நுழைய முடியாமல்
உதட்டு சிநேகங்களை உணர முடியாமல்
உண்மை இங்கே ஊனமாகி போகிறது
உறுத்தல்கள் இங்கே தொடர்கதை ஆகிறது
சீனப்பெரும் சுவரும், பிரான்சின் மாகினாட் அரண், பெர்லின் சுவரும்
எல்லைக்காக எழுப்பப்பட்டது மட்டுமல்ல
பிரிவினைக்காகவும் தான்
பிரித்து வைக்கப்பட்ட அன்பு பிரவாகம் எடுத்த போது
பெர்லின் சுவர் தூள் தூளாகிப் போனது வரலாறு
என் இனியவர்களே
அன்பு ஆழிப் பேரலையையும் அடக்கும்
இரும்பையும் தூளாக்கும்
பாறையையும் இளக வைக்கும்
வேண்டாம் பெரும் சுவர்கள்
வீட்டை சுற்றியும் மனதை சுற்றியும்
வேலிகள் அவசியம் தான் - வீட்டிலும் மனதிலும்.
நம் எல்லை உணர, எல்லை மீறாது இருக்க
வண்ண வண்ண ரோஜாப்பதியன் இட்டு
வளமான வேலி உருவாக்குவோம்
வண்ண ரோஜாக்களுடன் உறவாட வரும்
வண்ணத்துபூச்சிகளை வரவேற்போம்
வாழ்வது ஒருமுறை - நல்ல
வண்ணமாய் வாழலாமே!