சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, செப்டம்பர் 24, 2011

சொர்க்கத்தில் என் காதலி – கவிதை நூல் வெளியீடு


அந்தமான் வாழ் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் கவிதை நூல்களின் ஆக்கிரமிப்பு தான். என்றோ ஒரு சிறுகதைத்தொகுப்பு, என்றாவது ஒரு கட்டுரைத்தொகுப்பு இப்படித் தேட வேண்டும். இங்கும் உண்டு தமிழுக்கான போராட்டங்கள், தீக்குளிப்புகள். சுதந்திரத்திற்குப் பின் தீர்ந்து போகும் நாட்டுப்பற்றைப்போல் கிடைத்ததும் தீர்ந்து போகும் தமிழ்ப்பற்று. அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பில் உயிர் பெறும் நாட்டுப்பற்றைப்போல், தமிழ்ப்பற்றும், மீட்சி பெறும் தமிழுக்கு சோதனை வரும் தருணங்களில். இப்படியாக தமிழ் இங்கு ஆட்சி செய்கிறது.

இளைஞர்களிடம் தமிழ்ப்பற்றை வளர்க்க அந்தமான் தமிழர் சங்கமும் மற்றும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் முயன்று வருகிறது. வாராவாரம் சனிக்கிழமை மாலை பயிற்சிப்பட்டறை உண்டு. இளைஞர்களின் வரவு தான் குறைவு. படைப்பாளிகளுக்கு அந்தமான் தீவில் குறைவில்லை. தங்கள் படைப்புகளை புத்தக வடிவில் வெளிடத் தயக்கம் காட்டுவது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று நமது புத்தகங்கள் விலை போகுமா? முந்தைய படைப்பாளிகளின் அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினை. இரண்டாவது அசிரத்தை, நேரமின்மை மற்றும் தன்னடக்கம். நாமெல்லாம் புத்தகம் போட்டு ஆகப்போவது என்ன? எவ்வளவோ பெரியோர்கள் இருக்கும் போது நமக்கேன் இந்த வேண்டாத வேலை என்கிற எண்ணம். இந்தப்பிரிவில் நானும் அடக்கம்.

தற்போது அந்தமான் தமிழ் இலக்கியப்படைப்பில் புதிதாக ஒரு கவிதை நூல் இடம் பெற்றிருக்கிறது.. எழுதியவர். சகோதரர் தமிழ் சத்யன். இவரது இயற்பெயர் பூமி நாதன். 26 வயது துடிப்பு மிக்க இளைஞர். இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பான ”சொர்க்கத்தில் என் காதலி” என்ற கவிதை நூல் வெளியீடு கடந்த மாதம் எளிய முறையில் நடைபெற்றது. கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்கும் பொருட்டு அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன். இவரது எட்டு நூலும் காதல் கவிதைத் தொகுப்புகள் தான். இவரது ஏழாவது நூல் “ காதல் கேளாய் தோழி” என்ற நூல் வெளியீட்டில் எல்லோரும் புன்னகையுடன் குறிப்பிட்டது ‘வயதுக்கோளாறு’. எட்டாவது நூல் சொர்க்கத்தில் என் காதலி என்ற கவிதைத் தொகுப்பு இறந்து போன காதலியுடன் காதலன் பேசுவதான நடையில் அவலச்சுவையுடன் எழுதப்பட்ட நூல்.கற்பகம் புத்தகாலயம் பதிப்பித்த அழகான வடிவமைப்புடன் கூடிய நூல்.

நூல் எழுதி, வெளியிட்டு கையைச்சுட்டுக்கொண்டவர்கள் கேட்ட முதல் கேள்வி, “எப்படி வருடத்திற்கு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட முடிகிறது?” அதற்கு அவர்  ”பதிப்பகத்தார் என்னைக் காதல் கவிதைகளை எழுதப்பணிக்கிறார்கள். அது தான் இப்போது நல்ல விதமாக விற்பனையாகிறது என்கிறார்கள். என்னுடைய ஒரு கவிதைத்தொகுப்பு நான்காவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நானும் சமுதாய மேம்பாட்டிற்கு வழிகோலும் கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். காலம் வரும் போது வெளியிடுவேன்” என்றார். மிகுந்த மகிழ்ச்சி! தீவின் இளைய கவியின் ஒரு கவிதை நூல், ஆயிரக்கணக்கான மைல் தாண்டி முக்கிய பூமியில் நான்காம் பதிப்பு காண்கிறது என்றால் தீவு வாசியான நாங்கள் தமிழர் என்ற முறையில் பெருமை கொள்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தீவில் தனது கவிதை நூல்களை தனக்குத் தெரிந்தவர்களுக்கு படித்துப்பாருங்கள் என்று இலவசமாகத் தருகிறார். இங்கு வெளியிடப்படும் எல்லா நூலுக்கும் இது தான் கதி. தீவில் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த என்னதான் தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும் முயன்றாலும் ஒவ்வொரு தமிழரும், தமிழ்ப் படைப்புகளை வாங்க முன் வந்தால் இன்னும் பல படைப்பாளிகள் உருவாக ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்.பொருளாதார சிக்கல் தன்னைப் பாதிக்கும் போது எந்தப் படைப்பாளனும் தனது படைப்புகளை வெளியிட முன் வர மாட்டார்கள். இது இயல்பு.


நல்ல படைப்புகளை, நல்ல படைப்பாளிகளை உருவாக்க களம் அமைத்துக்கொடுக்க தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும் பெருந்துணை புரிகிறது. காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு கரங்கள் இணைத்து தீவின் தமிழரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் நல்ல தமிழ்ப்படைப்புகளை, முக்கிய பூமிப்படைப்பாளர்களுக்கு இணையான படைப்புகளை உருவாக்க தீவுத் தமிழ் படைப்பாளர்களால் முடியும்.

கவிதை நூலில் இருந்து சில வரிகள்.

பிரியும் போது கூட
பிரியம் தானே உரைத்தாய்
கண்களால் அழக் கற்றுத்தரவில்லையே!

உன்
மரணத்தைப்பார்த்த
எல்லாக்கண்களும்
என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது.

தினமும் பூமிக்கும்
வானத்திற்குமுள்ள தொடர்பை
விஞ்ஞானம் கண்டு சொல்கிறதோ இல்லையோ?
நம் காதல் கண்டு சொல்கிறது.

என்னை எட்டிப்பார்த்து விடலாம் என்று
சொர்க்கத்தின் வாசலை விட்டு
வெளியே வந்து விடாதே.
தவறிப்போய்
பூமியில் விழுந்து விடுவாய்

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

சொற்களின் வலிமை


கண்ணகி உடைத்த சிலம்பின்
மாணிக்கப்பரல்களாய்
சிதறிக்கிடக்கிறது சொற்கள்
என் அறையின் வெளியெங்கும்

சில சொற்கள் தீயாய்
சில சொற்கள் பனியாய்
வெயிலாய், மழையாய், நோயாய், மருந்தாய்
நொய்மையாய், வலுவாய்
சொற்கள் சொற்கள்.

.தூங்காத இரவொன்றில்,
எனைக்கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான
சொற்களை வசமாய்க் கோர்க்கும் வேளையில்,
பிணங்கிச்சிணுங்குகிறது நான் தீண்டாத சொற்கள்.
சொற்களுக்குத் தெரியாது அதன் வலிமை.
எனக்குத்தெரியும்
எரிகணைச்சொற்களின் தாக்கமும்
நம்பிக்கை வார்த்தைகளின் ஆக்கமும்

எறியப்படும் சொற்கள் பூக்களாக இல்லாவிடினும்
முட்களாகிவிடக்கூடாதே என்ற கவனத்தில் நான்…

வியாழன், செப்டம்பர் 08, 2011

குழந்தையும், பொம்மையும்




அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
சலசலவெனும் நீரோடையைப்போலவும்
சருகுகள் மீது பெய்யும் அடர் மழையைப்போலவும்
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது

கண்களில் இருந்த கனவுகளின் வெளிச்சம்
கன்னங்களில் பிரதிபலிக்க
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
அதன் பேச்சுக்குத்தலையாட்டும் ஒருவர்
போதுமானதாய் இருந்தது இந்த கணத்தில்.
கேட்பதற்கு யாருமில்லா தனிமையில்
அதன் உலகில் அதுவும் அதன் குழந்தைபொம்மையும்

பொய்ப்பால் புகட்டி
பொய்யாய்த்தூங்கப்பண்ணி
தட்டிக்கொடுத்தபடி தானும் தூங்கிப்போகும்
அதன் கனவுகளில்
உயிர் பெற்று விளையாடுகிறது பொம்மை.

பரிணாமம்




வேற்றுமை நிறைந்த போர்க்குண பூமியில்
பிரளயம் பசியதொரு அசுரனைப்போல

அன்பு நடமாடும் இல்லங்கள்
சுயநலமறுத்த உள்ளங்கள்
நோவாவின் கப்பலாய்…

வானுக்கும் பூமிக்கும் நீர்த்திரையிட்டு
போர்க்கருவிகளையும்,
தீய குணங்களையும் தின்று செரித்து,
கசடுகளையும் கழிவுகளையும் கழுவிப்போட்டு
எஞ்சியவற்றை
யுகங்களையெல்லாம் வயிற்றில் நிரப்பிய
சமுத்திரத்தில் சேர்த்து
விடைபெற்றது பிரளயம்.

நிலவரம் அறிய புறாவாய் நான்
பூமியின் வெளிகளில்.
அன்பின் வெளிச்சத்தில்
பூரித்துக்கிடக்கிறது பசுமை
தாய்மையின் விகசிப்பில் சுரக்கும் முலைப்பாலாய்
பசுமையின் வேர்களில் பாய்கிறது நீரோடைகள்
தென்றலாய்த்தழுவி
நலம் விசாரிக்கிறது காற்று.

எனது, உனது என்ற கோடுகளற்று
நமதாக விரிந்து கிடக்கிறது நிலப்பரப்பு.
இரவில் இறங்கி வந்து
இருளைக்கிழிக்கும் நட்சத்திரங்கள்
ஜொலித்துக்கொண்டிருக்கிறது பூமி
இன்னொரு சொர்க்கத்தைப்போல.

” எவரின் உள்ளத்தில்
எனதென்ற எண்ணம் தோன்றுமோ
அவரின் உடல் சுக்கு நூறாய்ச்சிதறும்”
விக்ரமாதித்தனின் வேதாளமாய் சொல்லிச்சென்றது
வெள்ளுடை தேவதை ஒன்று.


தேவைகளற்ற மனங்களோடு,
எனதென்ற எண்ணங்களற்று,
கடவுள் பாதி மிருகம் பாதி மனிதன் என்றது போய்
மிருகம் அழித்து கடவுள் வளர்த்து பரிணாமம் பெற்றது மானுடம்.
அப்போது சிறகுகள் முளைத்தது.

வியாழன், செப்டம்பர் 01, 2011

அந்தமான் தமிழர் சங்கமும், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய பல்சுவை நிகழ்ச்சி.


அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் 31.08.11 அன்று கலைமாமணி முனைவர். வாசவன் அவர்கள் தலைமையில், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் சுமார் 70 தமிழ்ப்படைப்பாளிகள் குழுவினர் வந்திருந்தனர்.

29.08.11 அன்று ஸ்வராஜ் தீப் கப்பலில் வந்திறங்கிய குழுவினர், 30.08.11 அன்று தீவுகளின் சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்ந்தனர். 31.08.11 அன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் உள்ளூர் படைப்பாளிகளுடன் இணைந்து பட்டிமன்றம், கவியரங்கம், திருக்குறள் விளக்க விளக்கு நடனம், திரைப்பாடல்களுக்கு நடனம் என கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்து படைத்தனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேராசிரியர் திருமதி. பூங்கொடி பாலு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு. வாசவன் ஐயா அவர்கள், அந்தமான் தமிழர் சங்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் திரு. கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் பலர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக கவியரங்கம் அரங்கேறியது. கவியரங்கத்திற்கு தலைமை தாங்கியவர் சிவகங்கை மாவட்ட உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.அய்க்கண் அவர்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் மூன்று நிமிடங்கள் கால அவகாசமாக வழங்கப்பட்டது. ஆறு கவி்ஞர்கள் பங்கேற்றனர். கவியரங்கில் நானும் பங்கேற்றேன்.

நிகழ்ச்சியில் அடுத்து “இன்றைய இளைஞர்களின் தேடல் -  பணமே! பாசமே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ’பணமே’ என்ற அணியில் அரிமா. அனகை. நா.சிவன் அவர்கள், திரு.கரடிப்பட்டி பொன்னுசாமி அவர்கள், மற்றும் திரு. பி.செண்பகராஜா அவர்கள் ஆகியோரும், ’பாசமே’ என்ற அணியில் திரு கருமலைத் தமிழாளன் அவர்கள், திரு ந. நாகராஜன் அவர்கள் மற்றும் திரு ந.ஜெயராமன் அவர்கள் ஆகியோர் வாதிட்டனர். வாதி, பிரதிவாதிகளில் திரு.பி.செண்பகராஜா அவர்களும், திரு. ந. ஜெயராமன் அவர்களும் தீவின் தமிழ்ப்படைப்பாளர்கள். பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்தவர் தீவின் கல்வித்துறைத் துணைத்தலைவர் முனைவர் திரு தஞ்சை மா.அய்யாராஜு அவர்கள். பட்டிமன்றத்தின் நிறைவில் நடுவர் அவர்கள் ’பாசமே’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

அடுத்து உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் தமது புத்தகங்களை வெளியிட்டனர். அனைவரும் தமது புத்தகங்களின் பிரதிகளை அந்தமான் தமிழர் சங்கத்தின் நூலகம் “பாரதி படிப்பகத்திற்கு” வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் கவியரங்கம், பட்டிமன்றம், கப்பலில் நடைபெற்ற கவிதைப்போட்டி, சொல்லாடல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு, உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வாசவன் ஐயா அவர்கள் தமது திருக்கரத்தால் பரிசு  வழங்கினார்கள்.

கவியரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. வாசவன் ஐயா அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றது எனது பாக்கியம்.

கவியரங்கில் பரிசு பெற்ற எனது கவிதை.

காற்றிலும் உப்பிடும் கன்னித்தீவு வாழ் தமிழ்ப்பெருமக்களுக்கும்
எழுத்தாளர் பெருமக்களுக்கும்
பாலைய நாட்டின் பைந்தமிழ் படைப்பாளர் எங்கள் கவியரங்கத்தலைவர் அவர்களுக்கும்
கொஞ்சு தமிழ் கவிதையிலே நெஞ்சங்களை அள்ள வந்திருக்கும் கவிகளுக்கும் என் பொன் மாலை வணக்கம்.

இருந்தமிழே! இருந்தேன் உன்னால்
இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்னும்
இளையவள் நான்
இந்த மன்றினிலே வடிக்கும் கவிதை
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன.

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நா வறண்டு
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், தொலைக்காட்சி வட்டுகளுமாய் எங்கள் கிராமங்கள்
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்..
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வீதியின் அகன்ற முச்சந்திகளில்
உழுதுகிடக்கும் புழுதியின் படிமங்கள்
முழங்கால் வரையிலும்.

வீதிச்சண்டையை வீதியில் தொலைத்து
காயும்,பழமும் நூறு முறை.

விருந்துகள் வரவறிந்தால்
கைவிரித்தோடி எதிர்கொண்டு
கைச்சுமை பகிர்ந்து
கண்களில் சிரிக்கும் பிரியமும் பாசமும்.

வறுமையும்,வெறுமையும் அறியா எனது
குழந்தைமையின் காலங்கள்
கடுகு போட்டிசைக்கும் ஒற்றை பலூனில்
எனக்கான உலகம்

இன்று
ஒற்றைக் குழந்தைக்காய்
உலகின் நவீனங்கள்
ஒட்டு மொத்தமாய் வீட்டிற்குள்.

வாரா விருந்து வலிய வந்தாலும்
சாளரத் திரையகற்றி சின்னதாய்
உதடு விரிப்பார்.

வானவியலும்,வடிவியலும்
வசமான அளவு
வசமாகவில்லை கூடி விளையாடுவது

தனித்தனி தீவுகளாய்
சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
அடித்து,அடிவாங்கி,
சண்டையிட்டு சமரசம் செய்து
இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

இன்று
ஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்
பாண்டவரும்,கௌரவரும்.

பாஞ்சாலிகள் வரும் வரை
பாண்டவர்கள் தான்.
பாசத்தையும், நேசத்தையும் மட்டுமே
பகிர்ந்து கொண்டவர்கள்
பாஞ்சாலிகளின் வருகைக்குப்பின்
பங்கீட்டை மட்டும் விவாதிக்கிறார்கள்.

முகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை
பாகம் பிரித்து கோடு போட்டு
பங்காளிகளாய் அண்ணன் தம்பிகள்
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட
வேற்றுமை விதைகளின் விஷம்
வேர்வழி ஊடோடி விழுதுகளுக்கும்.

குருஷேத்திர சீற்றம்
பிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்க.

கோடுகள் அழியும்
நாட்களுக்காய்க் காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
அழும் மனதை ஆற்றுப்படுத்துகிறது அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

பி.கு.: என்ன இந்தக்கவிதைகள் எல்லாமே எங்கோ படித்தது போல் இருக்கிறதா?
சரிதான். எனது வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் சிறு மாற்றங்கள் செய்து வழங்கினேன். நடுவர் அவர்கள் எனது கவிதை குறித்து கூறுகையில் அருமையான ”உருவகக்கவிதை” என்று பாராட்டினார்கள்.


அந்தமான் முரசு–தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏட்டின் 43வது ஆண்டு விழா



வலையுலக உறவுகளுக்கு வணக்கம். 

அந்தமான் நிகோபார் தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏடான ”அந்தமான் முரசு” தனது 43 வது ஆண்டு விழாவைக் கடந்த 30.08.11 அன்று கொண்டாடியது. தினசரி செய்தி ஏடாக வெளிவந்த ”அந்தமான் முரசு” நிர்வாகக் காரணங்களால் வார இதழாக மாற்றம் பெற்றது. இந்த அந்தமான் முரசு செய்தி ஏடு தெய்வத்திரு. சுப. சுப்ரமணியன் அவர்களால் தொடங்கப்பெற்று தற்போது அவரது திருமகனார் திரு. சுப. கரிகால்வளவன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தெய்வத்திரு சுப. சுப்பிரமணியன் அவர்கள் தீவுகளில் தமிழர் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் தம் உரிமைகளை மீட்டெடுக்கவும் போராட்டங்கள் பல புரிந்தவர். இன்று தீவுகளில் தமிழர்கள் உன்னத நிலையில் இருப்பதற்கும், வாணிபம், அரசுப்பணிகளில் வெற்றியுடன் உலாவருவதற்கும் துணை புரிந்த பெருமக்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.தந்தை விட்டுச்சென்ற பணியினை தமையன் செவ்வனே செய்துவருகிறார். தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்.
 தீவுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3,79,000. இவர்களில் தமிழர்கள் சுமார் 1,00,000 பேர். மொத்தத்தமிழர்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இந்த செய்தித்தாளை அந்தமான் முரசு ஆசிரியர் திறம்பட செயல் படுத்த இயலும். மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு தமிழ் வழிக்கல்வி இருக்கிறது. முக்கிய பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவில் தமிழர்கள் இந்தியர் என்ற உணர்வுடன்,ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வந்தாலும், தாய்த்தமிழை தமிழன் என்ற உணர்வோடு பேணுவதும் அவசியமாகிறது. தமிழ் இதழ்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம்து தார்மீகக்கடமையாகிறது. அதோடு மட்டுமல்லாது தமிழர் மேம்பாட்டிற்காக உழைத்த அன்னார் தெய்வத்திரு.சுப.சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியும் ஆகும் என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.

அந்தமான் முரசு செய்தித்தாள் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட வேண்டுமென வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.