சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 31, 2010

நினைவுக்குமிழிகள்

வாசலில் ஓடிய மழை நீரில்
பழைய காகிதம் தேடிக்கிடைக்காமல்
பள்ளி நோட்டுகளின்
பக்கங்கள் கிழித்து மிதக்கவிட்ட கப்பல்கள்.
தெருவின் முடிவில், அன்றி
தேங்குமிடங்களில் தேங்கும் குப்பைகளாய்..

உன்னுடையதா? என்னுடையதா?
போட்டிகளில் பலியாகும்,
காகிதக்கப்பலில் பயணம் செய்யும் கட்டெறும்புகள்.

பால்யகாலத்து நினைவுக்குமிழிகள்
சட்டென வெடித்து வெளிவரும்.
நீயா? நானாவென போட்டியிடும்
இடங்களில்,
யாரோ பலியாகும் தருணங்களில்.

இடைவெளிகள்.

பிணைப்புகள் ஏதுமற்று
திசையற்ற கானகங்களில்
உலவித்திரியவும்,

இரவு பகல் ஏதுமின்றி
நட்சத்திர,நிலவொளியில்
அலைகள் மோதிச்செல்லும்
சமுத்திரக்கரைகளில் அமர்ந்திருக்கவும்,

பசுமை விரித்த மலைமுகடுகளில்
சிந்தனைகள் ஏதுமின்றி
இயற்கையோடு ஐக்கியமாகவும்,

கொட்டும்மழையில்
நான் என்ற பிரக்ஞையற்று
குளிரக்குளிர நனையவும்,

ஆளரவமற்ற வயல் வெளிகளில்
குடிசைகளின் மண்தரையில்
சாணமிட்டு மெழுகி, கோலமிட்டு
சுள்ளிபொறுக்கி, கல்கூட்டிப்பொங்கியுண்ணவும்,

தூங்காத இரவுகளின் கற்பனையாயும்,
தூங்கும் விழிகளின் கனவுகளாயும்.
மின்சாரமற்ற நேரங்களில்
முடங்கிப்போகும் இயக்கங்களில்
அறிவிற்குப் புரிகிறது
கனவுகளுக்கும் நனவுகளுக்குமான இடைவெளிகள்.

விபத்துக்களும்,பிரார்த்தனைகளும்

வெற்றியா? தோல்வியா?
நிர்ணயமற்ற ஒரு போரின் முடிவில்
சினம் கொண்ட முகத்தோடு
சீறிக்கிளம்பும் உன்னைப்
பின் தொடரும் மனது
பிரார்த்தனைகளோடு.

எங்காவது கேள்விப்படும்
இருசக்கர வாகன விபத்துகளின் போதெல்லாம்
இருண்டு வெளிக்கும் என் வானம்.
இறந்து போனவனின் கவனம்
இல்லத்தில் சண்டையிட்ட மனைவியிடமோ?
தவிக்கும் மனது தீர்வு தேடும்.
நீ
வெளிக்கிளம்பும் தருணங்களில்
வேண்டாம் இனி விவாதங்கள்.

முற்றுப்புள்ளி வைத்தும்
முற்றுப்பெறாத உன் கோபம் விலக்க
புன்னகைப் பூக்களுடன்
உனக்குப்பிடித்த எல்லாமும் வீடு முழுதும்,
ஆனாலும்
தொடர் கதையாகும்
உன் கோபங்களும்
என் பிரார்த்தனைகளும்.

வெள்ளி, ஜனவரி 29, 2010

குழந்தைகளின் பாதுகாப்பு


கசியும் மௌனம் வலைப்பூவின் ஆசிரியர் திரு.ஈரோடு கதிர் அவர்களின் "குழந்தைகளைப் பாதுகாப்போம்" கட்டுரை இன்றைய சமுதாய அவலத்தை எடுத்துரைக்கிறது.ஒவ்வொருவரின் வாழ்க்கையின் நம்பிக்கை ஆதாரம்,உலகம்,எதிர்காலம் குழந்தைகள் தான். இன்று இரு பாலரும் பணிக்குச்செல்லும் கட்டாயமிருப்பதால் குழந்தைகள் தனிமையில் விடப்படுகிறார்கள்.உலகமறியாப் பச்சிளம் மொட்டுகளை சீரழிக்கும் இந்தக்கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பைப் பெற்றோர் தரவேண்டும்.குழந்தைகள் ஓரளவு வளரும் வரை,வெளியுலகம் புரிந்து,விழிப்புணர்வு பெறும் வரை பெற்றோர் தங்கள் நேரடிக்கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.முதலில் பெற்றோர்களுக்குத்தான் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.


அந்தமானில் இதேபோல் ஒரு சம்பவம்.ஆந்திரப் பெண்மணி தன் தம்பியிடம் விட்டுச்சென்ற மூன்று வயதுக்குழந்தைக்கு நடந்த கொடுமை. அந்த நேரத்தில் என் குழந்தைகளின் பள்ளியில் ஆசிரியர்கள்,பெற்றோர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, அந்த சந்திப்பில் குழந்தைகள் நலம் மற்றும் மனநல மருத்துவர் ஒருவரையும் அழைத்திருந்தார்கள்.அவர் கூறிய முதல் வாக்கியம்,"குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பாலியல் மற்றும் கடத்தல் ஆகியவை பெரும்பாலும் உங்கள் உறவு,நட்பு வட்டாரங்களால் தான் அரங்கேறுகிறது என்பதை உணருங்கள்.குழந்தைகளை உங்கள் வீட்டு வேலைக்காரர்கள்,வாகன ஓட்டுனர்கள் சாதரணமாகக் கூடத் தொடுவதை அனுமதிக்காதீர்கள்.அக்கம்,பக்கம்,உறவு,நட்பு வீடுகளுக்குக் குழந்தைகள் போக மறுத்து அடம்பிடித்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தாமல்,அதே நேரம் பதட்டமில்லாமல் அன்பாக விசாரித்து உண்மையறிந்து சரியான நடவடிக்கை எடுங்கள்.குழந்தைகள் மனம் காயப்படாமல் கவனம்.ஏனென்றால் இது போல் பாதிக்கப்படும் குழந்தைகள் பின்நாட்களில் திருமண வாழ்க்கையில் வெறுப்படைகிறார்கள்.உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தொடுகை,கெட்ட தொடுகை பற்றிய விழிப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்.பெற்றோர் குழந்தைகளை அடுத்தவரை நம்பி விட்டுச்செல்வதோ,அடுத்தவர் வீடுகளில் தங்க அனுமதிப்பதையோ கூடிய வரை தவிருங்கள். குழந்தையின் பெற்றொரைத்தவிர வேறு யாரும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை." என்றார்.

இங்கு ராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு,குடியிருப்புகள் போதிய அளவு இல்லாமையால் ஒரு குடியிருப்பை இரு குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் சிக்கல் இருக்கிறது.இது பெண்குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.அப்படிப்பாதிக்கப்பட்ட பெண்குழந்தைகள் கல்வியில் பின் தங்கியிருப்பது,எதிலும் ஈடுபடாது சோர்ந்த மனநிலையில் இருப்பது,எப்போதும் ஒரு பய உணர்வு என்றிருக்கக்கண்ட ஆசிரியைகள் பலர் அந்தக்குழந்தைகளுடன் பேசி,அவர்களின் பெற்றோர்களை வரச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு தந்தனர்.குழந்தைகள் மீதான வன்முறை எதுவாக இருந்தாலும் அது பெற்றோரின் விழிப்புணர்வுக்குறைவாலும்,கவனக்குறைவாலும் தான் நடக்கிறது.இன்னொன்று குழந்தைகளுடன் நட்புறவோடு பெற்றோர்கள் இருக்க வேண்டும்.எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சகஜ மனநிலையை,உரிமையைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி,இன்று 90% பெண்குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வழியில் பாலியல் வன்முறை நிகழ்கிறது.இதற்குக் காரணம் சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் சீர்கேடடைந்துள்ளது.ஒவ்வொருவரும் போதிய விழிப்புணர்வோடும்,நமக்கென்ன என்ற மனநிலையற்று ஒற்றுமையாய்க் குரல் கொடுப்பதும்,வெளியில் தெரிந்தால் வெட்கம் என்று மூடிமறைக்காது பதிலடி கொடுப்பதும் தான்,இது போன்ற குற்றங்கள் மறுபடி நடக்காமலிருக்க வழிகள்.அதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவும்,உதவியும் மற்ற அனைவரும் வழங்குவதால் குற்றவாளிகள் பயந்து குற்றங்களைக் கைவிடும் வழியுண்டு. யாருக்கோ நடக்கிறது நமக்கென்ன என்றிருந்தால், அதே குற்றங்கள் நம் வீட்டிற்கு வர அதிக நேரம் பிடிக்காது என்றுணர்ந்து,ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம். அவலங்களற்ற சமுதாயம் உருவாக முயற்சி செய்வோம்.

வியாழன், ஜனவரி 28, 2010

தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்



தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,சனவரி,30,2010



சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும், புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார். பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்
.
முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி),தமிழ்நிலவன்(கணிப்பொறி வல்லுநர், பெங்களூர்)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்),செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம், சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள்,ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில்  இதுவே முதல் முயற்சியாகும்.

செய்தி : மு.இளங்கோவன் muelangovan@gmail.com

குறுந்தொலை பேசியின் தாக்கம்


தூரம் சுருங்கி உலகம் ஒரு கிராமமாக மாறிவிட்டது.இந்த அற்புதம் இன்றைய தொழில் நுட்ப உலகின் தொலைத்தொடர்பில் உண்டான புரட்சி.மக்களுக்கிடையேயான தூரம்,தொலைவுகளைக்கடந்து,நினைத்த மாத்திரத்தில் குரலோடு விளையாட வைப்பதில் மற்ற எல்லா கருவிகளையும் விட இன்று குறுந்தொலைபேசிக்கு இணை எதுவும் கிடையாது.உலகின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கும் தொடர்புப்பாலமாக குறுந்தொலை பேசி விளங்குகிறது.அல்லும் பகலும் ஒரு பிரியா நட்பாக விளங்கிக்கொண்டிருக்கும் இதன் பயனைத் தள்ளி வைத்து விடமுடியாது தான்.ஆனால் உலகம் முழுமையும் பாலர் முதல் பல் போனவர் வரை இதற்கு அடிமையாய்க்கிடக்கும் ஒரு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.இந்த பேசி வந்த போது அறிவியல் அறிஞர்கள் இதன் கதிர்வீச்சு அபாயத்தால் உபயோகிப்பவர்களுக்கு மூளைப்புற்று நோய்,காது,நரம்பு மண்டலப்பிரச்சினைகள் இன்னும் பல நோய்க்கு இது வழி வகுக்கும் என்று அறிக்கைகள், கட்டுரைகள் வந்த வண்ணமிருந்தன.ஆனால் இன்று அலை பேசி உலகில் ஒரு புரட்சியை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.அதன் பயன்கள் எண்ணிலடங்காதவை தான்.

அலை பேசிகளின் விலை குறைந்ததின் காரணமாக இன்று ஒரு வீட்டில் பல பேசிகள்.ஒருவரிடமே ஒவ்வொரு நிறுவனத்தின் சிம்மிற்கும் ஒவ்வொரு பேசிகள்.உறங்கும் பொழுதிலும் தலையணை அருகில் இடம் பிடித்துக்கொள்கிறது.இந்த அலை பேசியின் தாக்கத்தால் தூக்கம் குறைந்து மனநலக்கேடுகளும்,குடும்பத்தில் மனவருத்தங்களும் உருவாவதை யாரும் சொல்ல அவசியமற்று நாம் கண்கூடாகப்பார்க்கிறோம்.யாருக்கும் இப்போது அமைதி,தனிமை கிடைப்பதில்லை.தொலை பேசி ஒலிக்காத தூக்கமில்லை.இதில் பெண்கள் அலைபேசி வைத்த இடம் தெரியாமல் தேட வேண்டியுள்ளது எண்று தங்கள் சேலை மடிப்பு,ரவிக்கையினுள் வைத்துக்கொள்கின்றனர்.இதனால் நெஞ்சு வலி,இதய நோய்கள் வரும் என் கின்றனர்.சாலை ஓரங்கள்,பேருந்து நிறுத்தங்கள் எங்கு பார்த்தாலும் இளசுகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நேரம்,அவர்கள் முகத்தில் நவரசங்களும் மாறிமாறி வருவதைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.சொந்த விசயங்கள்,அந்தரங்கங்கள் அத்தனையையும் பின் விளைவு தெரியாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.இவர்கள் இப்படிப்பேசுவது பெற்றோர்களோ,உற்றோர்களோ அறியார்.அலைபேசிகள் இப்போது ஒலிகடத்துவதோடு,ஒளிகடத்தியாகவும் இருக்கிறது என்பதுதான் பெரிய வேதனை.அந்தமானில் பள்ளிக்குழந்தைகள் தனிவகுப்பிற்கு வரும்போது நிலவரம் தெரிவிக்க வசதியாகப் பெற்றோர் அவர்கள் கையில் பேசியைத்தர அதில் அவர்கள் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்.அதுவும் பெண்குழந்தைகள்.இதற்கு நேரடி சாட்சி என் மகன். ”அந்தப் பொண்ணுங்களப் பாத்தாலே அருவருப்பா இருக்கும்மா!” என்கிறான்.இன்று நிறையக்குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாக அலைபேசி.நிலவழித் தொலைபேசி (Land Line) மட்டுமே இருந்த போது மனிதகுலம் இத்தனை அல்லல்களை அனுபவிக்கவில்லை.சிலருக்கு அலைபேசி இசை காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறதாம். இதுகூட ஒரு மனநோய் என்கின்றனர்.பெண்குழந்தைகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி,அறியாதவர்களின் ஆபாசப்பேச்சு என்று அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடுமைகளும் நடை பெறுகின்றன.வயது வித்தியாசமின்றி அனைவரும் இப்போது "வாக் அன்ட் டாக்,டாக் அன்ட் வாக்" தான்.அலைபேசிகளுக்கு அடிமையாகிப்போனார்களோ? அறிவியல் புதுமைகள் என்றுமே இருபக்கம் கூரான கத்தி.எப்படிப்பயன் படுத்தினாலும் ஒரு நாள் தாக்கும்.நன்மைகள் அளவு, தீமைகள் இருக்கும்.

"அலைபேசி டவர்களில் இருந்தும்,அலைபேசிகளில் இருந்தும் வெளிவரும் ரேடியேஷன் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது என்பது தவறு.அலைபேசி டவர் மற்றும் அலைபேசியில் இருந்துவரும் ரேடியேஷனின் அளவு,ஒரு வாட்டுக்குக் குறைவான அளவுதான் இருக்கும். சிட்டுக்குருவிக்கும் இதற்கும் தொடர்பில்லை.கூடு கட்ட இடமின்மையும்,மரமின்மையும்,ஜங்க் ஃபுட் யுகத்தில் சாப்பிட தானியமின்மையும் தான் காரணம்" என்று எழுத்தாளரும்,பொறியாளருமான அமரர் சுஜாதா அவர்கள் அறிக்கை விடுத்தாலும் (கற்றதும்,பெற்றதும்),சிட்டுக்குருவிகளை விடுங்கள்.நமது சின்னக்குழந்தைகளைக் கவனியுங்கள். ஆங்!.. என்ன கேக்குறீங்க? உங்ககிட்ட செல் இல்லையான்னா? இருக்கு.ஆனா அவசியத்துக்கு மட்டும் பயன் படுத்தறேன்.இரவு அதற்கு விடுமுறை.

குழந்தைகள் கையில் விளையாடக்கொடுப்பதைத் தவிருங்கள்.இரவுத்தூக்கத்திற்கு இடையூறின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.வண்டி,வாகனங்களை ஓட்டும் போது பயன்படுத்தாதீர்கள்.குழந்தைகள் பின்விளைவுகள் அறியாதவர்கள்.குழந்தைகளின் அலைபேசியை அடிக்கடி சோதனையிடுங்கள்.அதன் தீமைகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள்.சட்டைப்பைகள்,பேண்ட் பைகளில் அலைபேசி வைப்பதைத் தவிர்த்து கைப்பைகளில் வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.பெண்கள் அடிக்கடி குறுந்தொலை பேசியில் மணிக்கணக்காக உரையாடி சச்சரவுகளை வளர்த்து,மன நோய்க்கும் ஆளாகிறார்கள். அலைபேசி கையில் இருந்தால் தூரம் சுருங்குவதோடு,உலகமே நமது கையில் இருப்பது போல் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனாலும் அளவோடு பயன்படுத்தி,ஆரோக்கியம் காத்து, நல்ல வண்ணம் வாழ்வோமே!

செவ்வாய், ஜனவரி 26, 2010

புதுக்கவிதைகள்

காலத்தின் சிதறும் துளிகளைச்சேமிக்க மனிதன் கண்டறிந்த வசதியான கலன் கள் கவிதைகள் என்பார் கவிப்பேரரசு. வைரமுத்து.கவிதை என்பது கவிஞனின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி.எண்ணங்களை வடிக்க உதவும் ஒரு இலக்கியப் படிமம், இலக்கியக்குறியீடு புதுக்கவிதை.யாப்பு,வெண்பா,தளை,சீர் என்ற வரம்புகளில் உட்பட்டுக்கிடந்த மரபுக்கவிதை வடிவம்,சமஸ் கிருத மந்திரங்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் உரித்தானதாய் இருந்தது போல்,தமிழறிஞர்களுக்கு மட்டுமேயான தளமாக இருந்தது.புதுமையில் நாட்டம் கொள்வது மனித மரபு.புதுமையை வரவேற்கும் ஆர்வமிக்க தமிழர்களால், தமிழ்க்கவிதை தனது மரபுக்கட்டுகளை உடைத்து சுதந்திரமாக புதுக்கவிதையாய் உருவெடுத்து உலவுகிறது.இலக்கணக் கூண்டிலிருந்து வெளியேறி,இளைஞர்கள் இலக்கிய உலகை அளந்து பார்க்கும் ஒரு கருவியாக, இன்று புதுக்கவிதை இருக்கிறது.சங்க இலக்கியத்தில் அகம்,புறம்,இயற்கை,ஆன்மீகம் பாடுபொருட்களாய் இருந்த காலம் போய்,பூமியின் வானத்திற்குக்கீழேயும்,பூமி தாண்டி பிரபஞ்சம் முழுமையும் பாடுபொருளாகிவிட்டன.மழைநீரை மட்டும் பருகும் சக்கரவாகம் போல், நாங்கள் புதுக்கவிதைப் பூக்கள் எங்கு பூத்திருந்தாலும் அதன் மகரந்தத்தில் அமர்ந்து தேன் பருகி,தேனின் சுவை உணர்ந்து,மகரந்தத்தைப்பரப்பும் வண்ணத்துப்பூச்சிகள்.புதுக்கவிதை வடிவம் அமெரிக்காவின் கவிஞர் வால்ட் விட்மன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு,1930ம் ஆண்டுவாக்கில் பாரதி,ந.பிச்சமூர்த்தி,புதுமைப்பித்தன்,சி.சு.செல்லப்பா,நா.சு.வல்லிக்கண்ணன் ஆகியோர் தமிழில் புதுக்கவிதைப் பயணத்தை தொடங்கிவைத்தனர்.புதுக்கவிதை என்பது என்ன?

"யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி
முகிலுடைத்த மாமழை
முரட்டுத்தோல் உரித்த பலாச்சுளை".

மின்னலுணர்வுடன்,சொல் ஆளுமை,உள்ளடக்கத்தைக் கூறுவதில் சிறந்த மதிநலன்,ஆழ்ந்த நோக்கு,இவை தான் புதுக்கவிதைக்கு இலக்கணம் என் கின்றனர்.புதுக்கவிதைகள் மரபுக்கவிதைக்காதலர்களால் பலவாறு விமர்சிக்கப்பட்டது.ஒரு நீண்ட வரியை மனதிற்குத் தோன்றியபடி எழுதி,அதை மடக்கி,மடக்கி எழுதிவிட்டால் அது புதுக்கவிதை என்றார்கள்.இன்று எல்லோரும் கவிதை எழுதத்தொடங்கிவிட்டனர் என்றார்கள்.காதலில் தோற்றவரெல்லாம் கவிஞனாகிவிட்டனர் என்றார்கள்.அவர்களின் விமர்சனங்களைத் தாண்டி தினமொரு புதுக்கவிதை புத்தகம் சந்தைக்கு வந்து கொண்டுதானிருக்கிறது.புதுக்கவிதை அத்தனை பேரையும் வசீகரித்தற்குக் காரணம் அதன் எளிமை,படிப்பவருக்குப் புரிதல்,படைப்பவருக்கு சுலபமாகிப்போன அதன் உரு,இப்படித்தான் புதுக்கவிஞர்களும் மலிந்து போனோம்.அங்கீகாரம் தேடி படைக்கும் கவிஞர்களை விட தன் ஆத்மதிருப்திக்குக் கவி படைப்பவர்களே அதிகம்.கூடவே அங்கீகாரம் கிடைப்பின் மகிழ்ச்சி.தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசும் உயிர்ச்சித்திரங்களாய்க் கவிதை உருமாறியிருக்கிறது.படைப்பவன்,தன் கவி படிப்பவனின் உள்ளத்தை நேசபாவத்துடன் தொட்டுப்பேச வைத்துவிட்டால் அது படைப்பவனின் வெற்றி.

அந்தமானில் இலக்கியப்படைப்பாளிகள் கையிலெடுக்கும் ஆயுதம் புதுக்கவிதை தான்.தீவுப்படைப்பாளிகளின் பாடுபொருள் பெரும்பாலும் தமிழ்ப்பற்று,இயற்கை,சித்திரை விழா,தைப்பொங்கல்,காதல் ஆகியன.

"தேசத்தில்
சிறைச்சாலை
சிருஷ்டிக்கப்படுவதுண்டு.
ஆனால்
சிறைச்சாலைக்காக
எங்காவது ஒரு தேசம் சிருஷ்டிக்கப்பட்டதுண்டா?
எங்கள் அந்தமானில்
அதிசயம் பாருங்கள்
சிறைச்சாலை பெரிதாகி
சிரமங்கள் அதிகமான போதுதான்
தீவுக்குடியேற்றத்திற்கே
திறப்புவிழாதொடங்கியது"

இந்தக்கவிதை ஒரு உதாரணம் தான். தரமான கவிதைகள் தரும் கவிஞர்கள் பலர் தீவில் இருக்கின்றனர்.தீவின் இலக்கியப்படைப்புகளில் எழுபது சதம் கவிதை நூல்கள் தாம்.

வலையுலகத்தில் கவிதைகளுக்கென தனித்தமிழ் பயன் படுத்தப்படுகிறதோ என்று அச்சம் கொள்ளுமளவு வலையின் நல்ல கவிதைகள் பல புரியவில்லை.தமிழகத்தை விட்டு தள்ளி வந்ததும் தமிழ் அர்த்தம் மாறிவிட்டதா? அடிக்கடி ஊருக்குச்சென்று உறவுகளைப் புதுப்பிப்பது போல் தமிழைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டோமோ?.நம்மை வழியனுப்பிய தமிழ்நாடு,நமக்குப்பின்னால் தமிழ் அகராதியை மாற்றிவிட்டதோ? இப்படியெல்லாம் புலம்புகிறோம் நாங்கள்.ஏன் தெரியுமா? புரியாத அழகுச்சொற்கொவைக் கவிதையின் கீழ் பின்னூட்டம் நூற்றுக்கும் மேல்.பின்னூட்டம் அத்தனையும் புகழும் அந்தக்கவிதையின் வரிகளை."புரியாத கவிதையா? அப்படியென்றால் அது அறிவாளிகளுக்கான கவிதைகளாக இருக்கும்.அல்லது ஆண்களுக்கான கவிதைகளாக இருக்கும்.அந்த வலைப்பக்கம் எதற்காகப்போகவேண்டும்,அப்புறம் எதற்காகப் புலம்புவது?" என்றார் ஒரு நண்பர்.பாடு பொருள்,அப்பப்பா! பிரபஞ்ச எல்லைகள் தாண்டி எங்கோ பயணிக்கிறது தமிழ்.மரபுக்கவிதை பரவாயில்லையோ! யாராவது தமிழாசிரியரிடம் பொருள்  கேட்டுக்கொள்ளலாம்.வலைக்கவிஞர்களே! அற்புதமான உங்கள் கவிதைகளுக்குக்கீழ், என் போன்ற சிறுமதிக்கும் விளங்குவது போல் பொருளுரையும் தந்தால் புண்ணியம்.புரியாத கவிதைகளுக்குப் பின்னூட்டம் பார்த்து பெருமூச்சுடன் ஓட்டுப்போட்டு ஒதுங்கிக்கொள்ளும் கொடுமை இனிமேலாவது ஓழியுமா? நண்பர்களே!

ஞாயிறு, ஜனவரி 24, 2010

வெற்றியின் மூலம் தன்னம்பிக்கை


"அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை" எத்தனை உண்மை.பிரச்சினைகளற்ற வாழ்வு,சமதளச்சாலையிலான பயணம்.நீண்ட நேரம் பயணிக்க, சலிப்புவந்து, அலுப்புத் தோன்றி,வாழ்க்கையே ஒரு மாயம் என்று பேசவைக்கும்.பயணத்தின் போது - மலையுச்சி,பள்ளத்தாக்கு,நீரோடை,வீழும் அருவி,எதிர்ப்படும் காட்டு மிருகங்களோடு போராடி,ஒளிந்து, கடந்து சவாலான பயணமாய்ப்போகும் போது பயணிப்பவருக்கு ஒவ்வொரு தடையை மீறும் போதும் ஊவென உற்சாகக்கூச்சல்,நம்மால் முடியுமென்ற தன்னம்பிக்கை,நமது பயண நிகழ்வுகளில் இருந்து,நமது பயணத்தின் பார்வையாளருக்கு கிடைக்கும் பாடம் இப்படித்தொடரும் பயணம் ரசிப்பிற்குரியது..திரு.இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஒரு பொன்மொழி"அழகான கப்பல்கள் கட்டப்படுவது கரையில் நிறுத்தி வைத்து அழகு பார்ப்பதற்கல்ல.அவை அலைகளையும்,சூறாவளிகளையும் எதிர்த்து கடலில் வெற்றிகரமாகப் பயணம் செய்வதற்கு". இந்த பொன்மொழியை எங்களின் போர்ட்பிளேயர் வானொலித் தமிழமுதம் நிகழ்ச்சியில் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.காரணம் தினம் கப்பலில் பயணம் செய்யும் எங்களை விட சிறப்பாய் இதன் அர்த்தத்தை யாரும் உணரமுடியாது என்பதால்.துக்கமும் தோல்வியும் நம்மைப் புரட்டிப்போட்டு விடுகிறது.என்னைப்பொறுத்தவரை அகால மரணம் தரும் வலியைத்தவிர வேறொன்றும் என்னை அசைத்துவிட முடியாது.ஏனென்றால் என் ஒவ்வொரு தோல்வியும் என்னை நிரூபிக்க, என் தகுதி,ஆற்றலைப்புரிய வைக்க,உண்மை நட்பைக்கண்டறிய,என்னை நான் அறியும் பாடங்களாய்த் தான் இருந்து வந்திருக்கிறது.மாறாக, வெற்றி என்னை உறவுகளினின்றும்,நட்புகளிடத்தும் தள்ளி வைத்திருக்கிறது.எனது அடுத்த அடி தோல்வியா, வெற்றியா என்ற எதிர்பார்ப்பை உறவு,நட்புக்குள் உருவாக்கி என்னை பயங்கொள்ள வைத்திருக்கிறது. தோல்வியான போது கடுமையான விமர்சனங்களையும்,வெற்றியான போது பாராட்டுகளையும் வைத்தது.தோல்வியின் விமர்சனங்கள் முகத்தில் வடுக்களாகவோ,வெற்றியின் பாராட்டுக்கள் கழுத்தில் ஆரங்களாகவோ விழுவதில்லை.நமது வாழ்க்கை நமக்குத் தான் வாழ்க்கை,ஜீவ மரணப்போராட்டம். நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கை.போற்றலையும்,தூற்றலையும் ஒன்றே போல் புன்னகையோடு ஏற்கும் பக்குவம் வருகிறது. அதனால் வெற்றியை விட எனக்குத் தோல்விகளும்,பிரச்சினைகளும் பிடித்துப்போனது.ஏனென்றால் தோல்வி நிரந்தரமில்லை.தோல்வியைக் கடுமையாய் விமர்சித்தவர்கள் அடுத்து நமது வெற்றியின் போது அசடு வழிவார்களே,அதை மனதில் ஓட்டிப்பார்த்து,நானே சிரித்துக்கொண்டு என்னை நிரூபித்தும் இருக்கிறேன்.எப்போதும் மனதின் எண்ண ஓட்டங்கள்,சுய முன்னேற்றம் குறித்த நூல்கள் சொல்லும் கருத்துகளின் மீதான சிந்தனைகளை மனதில் கொண்டு வந்து ஆராய்ந்து கொண்டிருப்பேன்.அந்தமானில் ஒவ்வொரு சகோதர,சகோதரிகளும் கைகளையும்,உழைப்பையும்,நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு முன்னேறியவர்கள்.ஆனால் சிலர், சிறு சறுக்கல் வந்ததும் "ஐயோ ஐயோ" என்பார்கள்.இத்தனை நாட்களும் சறுக்கி,எழுந்தவர்கள் தானே நாம் என்ற நம்பிக்கை இழந்து நோய்களை வரவழைத்துக்கொள்வார்கள்.

பெண்கள் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் சமையல்,அழகுக் குறிப்புகள் நான் சொல்வதில்லை.அதெல்லாம் வேண்டுமளவு சொல்லியாகிவிட்டது.எப்போதும் தோற்றம்,ஆளுமை, தன்னம்பிக்கை,நேர்மறைசிந்தனை,புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு,குழந்தைகளுக்குப் போராடக்கற்றுக்கொடுப்பது இவைபற்றித்தான் பெரும்பாலும் என் தொகுப்புரை இருக்கும்.இது சரியா? தேவையா? என்ற சிந்தனையற்று,நன்றாக நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே குறிக்கோள்.
ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து வாடகை வாகனத்திற்காய் காத்து நின்றபோது நாலைந்து பெண்கள் வந்து,"மேடம்! நீங்க ரேடியோவில தான இருக்கீங்க. உங்க ப்ரொகிராம் தவறாமக் கேப்பேன். ஒரு நா நான் ரொம்பக்கஷ்டத்துல இருந்தேன்.அன்னிக்கு நீங்க நிகழ்ச்சில இன்பம் என்பது ஆண்டவன் தரும் பிரசாதம்.துன்பம் என்பது ஆண்டவன் தரும் மகாப்பிரசாதம்னு ஆதி சங்கரர் சொன்னாருன்னு சொன்னீங்க.அதிலர்ந்து இன்னி வர கஷ்டம் வர்றப்பல்லாம் அதத்தான் நெனச்சுக்கிறேன் மேடம்" என்றதும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க,"இங்கபாருங்கம்மா! பிரச்சினை இல்லாத மனுசங்கள கடவுள் இன்னிக்கு வர படைக்கவேயில்ல.பிரச்சினைய எப்புடி எதிர்கொள்றீங்க! அதை எப்புடிக்கடந்து வர்றீங்கங்கறது தான் கடவுள் நமக்கு வைக்கிற பரிட்ச.அதுல தேறி வந்துட்டா நம்மள நம்ம குடும்பம் கொண்டாடும்.அதுனால இனிமே கஷ்டம் வந்தா இதுவும் கடந்து போகும்னு நெனச்சுகிட்டு அதுலர்ந்து மீண்டு வந்துடுங்க!" என்று சொல்லி விட்டு கண்ணீரை மறைக்க சட்டென நடக்க ஆரம்பித்து சற்று தள்ளிவந்து வாகனம் பிடித்து வீடு வந்தேன்.கண்ணீர் வந்ததற்கு முக்கிய காரணம் வானொலி நிகழ்ச்சிக்கு "இன்னிக்கு என்ன சொல்லாலாம்.சரி இது தான் சொல்லவேயில்ல.இதை இன்னிக்கு சொல்லலாம்" என்று தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போவது.அதாவது வித்தியாசமாகச்செய்ய வேண்டும் என்ற ஒரே உணர்வுடன்.அந்த அம்மா சொன்னதிலிருந்து நிறைய புத்தகம் படித்து பொறுப்புடன் நிகழ்ச்சி வழங்குவதோடு,சகாக்களிடமும் வலியுறுத்துவதுண்டு.இன்று நிறையத் திறமையாளர்கள் தன்னம்பிக்கையின்றித்தான் துவண்டு போகிறார்கள்.ஒரு இடர்,ஒரு சறுக்கல் இவர்களின் முயற்சியைக் கைவிட வைத்து விடுகிறது.சளையாத மனமும் விடாமுயற்சியும் தான் வெற்றியின் காரணிகள் என்பதை மறந்து,அதிலிருந்து விடுபட மது,மாது என்று திசை திரும்பி நிரந்தரமாகத் தன்னிரக்கத்தில் மூழ்கிப்போகிறார்கள்.இப்படிப்பட்டவர்களைத் தூண்டினால் போதும் துலங்குவார்கள்.

இன்று அந்தமானில் கொடிகட்டிப்பறக்கும் அத்தனை வணிகப்பெருமக்களும் முக்கிய பூமியில் இருந்து மூலதனம் கொண்டுவந்தவர்கள் அல்லர்.அவர்களுக்குப்பணம்,பணத்தை சம்பாதித்துத் தரவில்லை. அவர்களின் உழைப்பு,நேர்மை,விடாமுயற்சி,நெருக்கடிகளை சந்திக்கும் திறன்,எளிமை ஆகியவற்றோடு முடியும் என்ற தன்னம்பிக்கையும் தான் அவர்களை உயர்த்தியது.வாழ்வின் போராட்டங்கள் தான் இறைவன் நமக்குத்தரும் உயர்வின் படிகள்.படிகளைக்கடக்கும் போது உயர்வு தானே வரும்.தொட்டாச்சிணுங்கி குணத்தை விட்டு,சகிப்புத்தன்மை,உற்சாகம்,முடியாது என்கிற எதிர்மறைச்சிந்தனை விடுத்து முடியும் என்கிற நேர்மறை சிந்தனை ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது நலம் தரும்.உயர்வு தரும்."நீ எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய். உனக்கு நீயே நண்பன்,நீயே எதிரி" என்கிறது கீதை.தோல்வியாளர்கள் சூழ்நிலைகளைக்குற்றம் சொல்கிறார்கள்.வெற்றியாளர்கள் அதையே படிகளாக்கி உயர்வதற்கான காரணியாக்கி உயர்கிறார்கள்.
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா?

சனி, ஜனவரி 23, 2010

சிலுவைகள்

திருச்சுதனுக்கு யூதர்கள்
தந்த சிலுவையை விடவும்
சிலுவைகள் காத்துக்கிடக்கின்றன பெரியனவாய்
இந்த பூமியின் புத்திரர்களுக்கு.

ஆசைகள் ஒழி என்றவனையும்
ஆசைகள் துற என்றவனையும்
அலட்சியப்படுத்தி எக்காளமிடுகிறது இளைய தலைமுறை.
என் காதலியின் அழகைப்பார்த்து ஆசை ஒழி
என் உடமைகளின் வசதியறிந்து ஆசை ஒழி
துறந்தவனை வம்பிக்கிழுத்து
சாபம் கொள்கிறது.

இளமையின் ஆர்ப்பரிப்புகளில்
அமைதியின் விலை புரியாது
அரைக்காசுக்கு அடகு வைத்து
ஈசலின் ஒரு நாள் வாழ்க்கையாய்
இளமை விடை பெற்றதும்
மூளைக்குள் புதைத்து வைத்த
ஆர்ப்பரிப்புகளின் ரீங்காரம் வண்டாய்க்குடைய
அமைதியின் ஞாபகம்

தியானம்,யோகா,அளவான உணவு
வட்டியாய்க்கொடுத்தாலும்
காதலியின் ஊடலாய் கூட மறுக்கிறது
அமைதி மட்டும்...
மும்மூர்த்திகளின் அலட்சியத்தால்
ஊடிச்சென்ற ஆதியின் அம்சமாய்
கைகூடவில்லை அமைதிமட்டும்

அமைதியை மீட்டுத்தர யாரை அழைக்கலாம்?
ஆதியை,சோதியை,அம்பலவாணனை,
பாவங்களின் சம்பளம் மரணம் என்றவனை, அன்றி
வல்லோன் ஒருவனே என்ற நபியின் நாயகனை
யாரை அழைக்கலாம்?

தவங்கள் புரிவோம்.
தினமொரு சிலுவை சுமப்பதைக்காட்டிலும்
வரங்களைப் பெற்று விடலாம்.
ஆனால்
அவை அசுரனின் வரங்கள் போல்
சாபங்களாகி விடாமல்..
கவனம் இனியேனும் !

வியாழன், ஜனவரி 21, 2010

வெற்றியின் முகவரி


அந்தமான் தமிழர் சங்கமும்,வி.ஜி.பி உலகத்தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது திருக்குறள் மாநாடு மற்றும் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் கடந்த வருடம் நவம்பர் திங்கள் 6ம் நாள், அந்தமான் தமிழர் சங்கத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.அந்த விழாவிற்கு வருகை தந்திருந்த பெருமக்கள்,பேராளர்களில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு இன்றும் என்னை நெகிழ்த்தி விழிகளை ஈரமாக்கும்.இப்படிப்பட்ட தன்னம்பிக்கையாளர்களால் தான் உலகம் வீறுநடை போடுகிறது என்று தோன்றும்.வெள்ளை வெளேரென்ற உடையில் நடுத்தர வயது ஐயா ஒருவர் கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.தஞ்சை தமிழ்ப்பல்கலையின் மேனாள் துணை வேந்தர் மேடையில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அந்த ஐயாவைப்பார்த்து, "அந்தோனியைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நெகிழும்.முன்னேற்றத்திற்கு ஊனமோ,வயதோ ஒரு தடையல்ல என்பதற்கு வாழும் உதாரணம்" என்றார்.அப்போது அந்த வெள்ளுடை அந்தோனி ஐயா அவர்கள் எழுந்து அவைக்கு வணக்கம் செலுத்திய போது பார்த்தால் இரண்டு காலும் இழந்த மாற்றுத்திறன் கொண்டவர்.வி.ஜி.சந்தோசம் ஐயா அவர்களுடன் வந்ததால் ,' சரி.பெரிய ஆளுக உதவியிருப்பாக! குடும்பத்துல ஆதரவு குடுத்து பெரிய தொழிலதிபர் ஆயிருப்பாரு' என்று மனதில் நினைத்து மறந்து விட்டேன்.

மறுநாள் நடுவண் அமைச்சர் மாண்புமிகு D.நெப்போலியன் அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது,"ஒருத்தர ஒங்களுக்கு அறிமுகப்படுத்தனும்.இவரு அந்தோனி ஐயா!.தன்னுடைய சின்ன வயசுல பொழைக்க வழியில்லாம பிச்சை எடுத்து,பதினோரு வயசுல அது தப்புன்னு புரிஞ்சுகிட்டு கெடச்ச வேலையெல்லாம் செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்து இன்னிக்கு சென்னைல சொல்லிக்கிற மாதிரியான ஒரு தொழிலதிபர் ஆயிருக்காரு" என்றதும் மொத்தக்கூட்டமும் நிசப்தமானது.சின்ன தோல்விகளுக்கெல்லாம் துவண்டுவிழும் இன்றைய மனிதர் முன் இமயமாய்த் தெரிந்தார் அவர்.தன்னம்பிக்கை,உழைப்பு,விடாமுயற்சியின் மொத்த உருவம்.அங்க அவயங்கள் சரியாக உள்ளவரே ஒவ்வொரு நாளும் சலித்து துவண்டு விழும் இந்த நாட்களில்,நடக்க முடியாத கால்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி ஒரு உன்னத நிலையை அடைந்திருப்பார் என்ற எண்ணம் எழுந்துவிட்டால், வரும் சிந்தனை அலைகளில் தூக்கம் போய்,நம்மால் என்ன முடியும் என்ற சுய ஆராய்ச்சி எழுந்து விடும். அவரும் எத்தனை அவமானங்கள்,துக்கங்கள்,தோல்விகளைக்கடந்து வந்திருப்பார்.பிச்சை எடுக்கும் வறிய நிலையில் இருந்து,சிகரத்திற்கு உயர்ந்திருக்கும் இவரைப் போன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.நிச்சயமாய் இவர்களின் உயர்வு மாயமந்திரமன்று.உழைப்பு - தன்னலம் கருதாத, தன்னம்பிக்கையுடன் கூடிய,விடாமுயற்சியுடன் கூடிய வெறித்தனமான உழைப்புதான் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

உயர நினைக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இவர்களைப்போன்றோரின் சுய சரிதைகள் தான் நம்பிக்கை விதைகளை விதைக்கிறது.சாதனைகள் புரிவதற்கு வறுமை,வயது,ஊனம்,தோற்றம் இப்படி எதுவுமே தடையில்லை.எத்தனை நெருக்கடிகள் தோன்றினாலும் சளைக்காத மனதிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். நெருக்கடிகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் நழுவி ஓடாமல் உறுதிப்பாட்டுடன் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பவர்களுக்குத்தான் வெற்றி வசமாகிறது."வாழ்க்கைப்போராட்டத்தில் வெல்பவர்கள்,உடல் வலிமையானவர்களோ,வேகமானவர்களோ இல்லை.தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே! " என்ற சோம.வள்ளியப்பன் அவர்களின் இந்த வரிகளுக்கு, வாழும் உதாரணமாக வேறு யாரைக்கூறமுடியும் நண்பர்களே!.

இளைய பாரதம்.

நண்பா!
உடமைகளில் வேறுபாடுகள் இருப்பினும்
உனக்கும் எனக்கும் ஒரே பயணம் தான்
கருவறை தொடங்கி கல்லறை வரை
இடையில் கிடைக்கும் வாய்ப்புகளில் உறங்குகிறது,
நமது சிகரங்களும், பள்ளங்களும்.
உயர்வும்
தாழ்வும் பார்வைகளின் மாயம்
நாணயத்தின் இரு பக்கம் போல

இப்போதெல்லாம்
யாரும் யாரின்
வீழ்ச்சிகளுக்கும் வருந்துவதில்லை.
யாரும் யாருக்காகவும் அழுவதுமில்லை.
ஞானிகளாகி விட்டனரோ?
இல்லை நண்பா! நேரமில்லை.

உண்டு,உயிர்க்க
கண்டு,களிக்க
பேசி,சிரிக்க யாருக்கும் நேரமில்லை
மனிதனுக்கு மனிதன்
உடலால் அருகில்.
மனதால் வெளிகளில்.
இடைவெளிகள் நீள்கிறது

அப்பாவும் அம்மாவுமே
அந்நியமாகிய குழந்தைகள்.
பரிசுகளின் பரிமாற்றங்களில்
பல் தெரிய நகை செய்யும் காதலிகள்.
முகமூடி மனிதர்களின்
முகத்திரை அகற்றி
உள்முகம் பார்த்து மறுகும் மனது
இயற்கை உலகை
அடக்கி அரசாள்கிறது செயற்கை.

வா! நண்பா!
பயணம் தொடர்வோம்
பயம் தவிர்
அவலங்களைச்சிந்திப்பது
சிகரம் நோக்கிய நம் பயணத்தின் தடைகள்.
தாண்டிப்போ!
தகர்த்தெறி!
நமது வாழ்க்கையின் இலக்கு இவைகளில் இல்லை
அதனால் தாண்டிப்போ!
இறுக்கங்கள் அகற்றி எல்லைகள் தாண்டு.
துணிந்தவனுக்குத்தான் சமுத்திரம் முழங்கால் வரையிலும்.
சிறகை விரித்தவனுக்குத்தான் வானமும் விரியும்.

பழமையின் முத்தெடுத்து
புதுமையில் கோர்த்து
பண்புகளோடு நடையிட
பாரத தேசத்தினரால் மட்டுமே முடியும்.
வானமே எல்லை என்ற கோடு
இன்று பிரபஞ்சங்களோடு.
அதனால்
சிந்தனைகளின் எல்லைகளை விரித்து
சாதனைச்சிகரங்களை எட்டு.
நீரின் உயரம் தாமரையின் உயரம் போல்
எண்ணத்தின் உயரம் எட்ட
எண்ணங்களை உயர்த்து.
பிறகென்ன
வெற்றி உன் முகவரி விசாரிக்கும்.

திங்கள், ஜனவரி 18, 2010

என் வலையுலகப் பயணம்

மகளின் படிப்பிற்காக கணினி வாங்கி இணைய இணைப்பும் பெற்று ஆனந்த விகடனில் சொல்லப்படும் வலைப்பக்கங்களை படிப்பது என்று சொல்வதை விட மேய்வது வழக்கம்.ஒரு நாள் திடீரென்று நாமும் ஒரு வலைப்பக்கம் தொடங்கினால்... உடனே செயல்பட்டு அந்தமான் தமிழ்க்கனவுகள் என்ற பெயரில் வலைதொடங்கி சில கவிதைகளை உள்ளிட்டு அத்தோடு விட்டுவிட்டேன்.கடந்த நவம்பர் மாதம் தமிழர் சங்கத்தில் நடைபெற்ற 9 வது திருக்குறள் மாநாட்டிற்கு வலைஞர் முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.அவரைப்பற்றி எதுவும் தெரியாது.நாங்கள் வானொலியில் இருந்து நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்கு சென்றிருந்தோம்.முனைவர் ஐயா மடிக்கணினியை வைத்து வலையில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார்.இந்தச்செய்தியை மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த தஞ்சை தமிழ்ப்பல்கலையின் மேனாள் துணை வேந்தர் திரு.ஔவை நடராசன் ஐயா அவர்கள் கூற மனதில் குறித்துக்கொண்டேன்.நிகழ்ச்சி முடிந்து போகும் போது முனைவர் மு.இ ஐயா அவர்கள் அம்மா! நீங்க ரேடியோவிலர்ந்து வந்துருக்கீங்களா? என்றதும் நான் சட்டென சார்! நீங்க வலை எழுதுறீங்களா?,நா ஒன்னு எழுதுறேன் சார்.அதுல கொஞ்சம் எனக்கு உதவ முடியாமாங்க சார் என்றதும் புன்னகையுடன்,ஆமாம்மா! நான் கண்டிப்பா உதவுறேன்.இது நா எழுதுன புத்தகம்.படிச்சுப்பாருங்க.உங்களுக்கு உதவும் என்று சொல்லிவிட்டுப் போக எனக்கு அப்போது படிக்க நேரமற்று மறுநாள் ஒலிப்பதிவிற்குப் போனபோதும் ஐயா அவர்களுடன் உரையாட முடியவில்லை.

பிறகு இணையம் கற்போம் நூலை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னரே பொறுமையற்று அவரது வலைப்பக்கம் படித்து ஐயா அவர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உதவி பெற ஆரம்பித்தேன்.அந்தமான் தீவிலேயே முதன் முதலில் தமிழில் வலைப்பூ ஆரம்பித்ததால் வலைப்பக்கத்தின் பெயரை அந்தமான் தமிழோசை என்று பெயர்மாற்றம் செய்தேன்.கட்டுரை குறித்த வழிகாட்டுதலில் ஆரம்பித்து,தமிழ் மணம் அறிமுகம்,ஐயா அவர்களின் நண்பர்களுக்கு என் வலையை அறிமுகம் செய்து அவர்கள் பலரும் கருத்துரையும்,பாராட்டுதலும் வழங்கியது,முக்கியமான வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தது, மின்னஞ்சல் அரட்டையில் தமிழில் தட்டச்சு செய்வது வரை வலையுலகம் குறித்து இன்று வரையிலும் வழிகாட்டும் முனைவர் மு.இளங்கோ ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது.

தீவிரமாக வலையில் எழுத ஆரம்பித்தேன்.ஒரு கருத்துரை வந்தாலும் போதும்.மனம் துள்ளும்.நாள் செல்லச்செல்ல அட! நமது எழுத்தும் வலையுலகில் அங்கீகாரம் பெறுகிறதே! என்று மகிழ்ச்சியடைந்தேன்.கணினி முன் உட்கார்ந்துவிட்டால் சூழல் மறந்தேன்.ஒரு நாள் அடுப்பில் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வைத்து வலையில் ஆழ்ந்து,தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த என்னவர் அடுப்படியில் வெளிச்சம் தெரிய போய்பார்த்துவிட்டு அலற ச்சூ சத்தம் போடுறதப்பாரு சலித்துப்போய் பார்த்தால் பாத்திரத்துடன் எரிய அந்த சூடு தாங்காமல் பக்கத்தில் பலகையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கொள்கலன் கள் அனைத்தும் வடிவம் மாறி பறங்கி,பூசணியாக மாறியிருந்தது. நீதான் எதாயிருந்தாலும் மறந்திருவியே! அப்பறம் அடுப்புல வச்சிட்டு இங்க என்ன பண்ற.அடுப்புல அஜாக்கிரதையா இருக்காத என்று சொன்ன நாள் முதல் சமையல் முடித்துவிட்டு வலைப்பக்கம் வருவேன்.வீட்டில்,வெளியில்,உறவுகளுடன் பேசியில் எது பேசினாலும் அது வலைபற்றியதாக மாறிப்போனது.

என் கணவர் அதிக விழிப்புணர்வு உள்ளவர்.பேச்சை ஆரம்பித்தால் "இரு! யாரோ வர்றாங்க போல நாய் கொலைக்குது" நகர்ந்துவிடுவார்.மகனிடம் டேய்! இங்க பாரேன்! யு.எஸ் லர்ந்து மெயில் வந்திருக்கு என்றால் "அம்மா! என் ஃபுயூச்சரோட வெளையாடாதீங்க இந்த வருசம் எனக்கு போர்ட் (10ம் வகுப்பு) மார்க்கு குறைஞ்சா என்ன கேக்கக்கூடாது ஆமா! ஒருத்தரும் தெளிவா இருந்துரக்கூடாது". "ஐயா சாமி போப்பா.போய் படி.டியூசனுக்கே ஒரு தொகை கட்டிக்கிடக்கு" என்று விடுவேன்.இப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் நண்பர்கள் உணவு வேளையின் போது,'என்ன சாப்பாடு சிம்பிளா இருக்கு.செட்டி நாட்டு சமயல் அசத்துவீங்க.இப்ப டயட்ல இருக்கீங்களா' என்றால் இல்ல அவங்க ப்ளாக்ல இருக்காங்க! என்பார் என்னவர்.வந்தவர் ப்ளாகா? என்று முழிக்க என் கணவர் கலவரத்துடன் இந்தா! தண்ணியக்குடி.இதுக்குத்தான் நாங்க சாப்பிடும் போது பேசமாட்டோம்.புரை தலைக்கேறிரும் என்று மௌனமாக சாப்பிட வேறு வழி நான் மௌனமாகிவிடுவேன்.போங்க பெரீய்ய.. என்று விட்டு தமிழ்நாட்டில் படிக்கும் மகளுக்கு என் வலை பற்றி சொல்லி பார்க்கச்சொன்னதும் சந்தோசமாக ஒரு கும்பலையே கூட்டிகொண்டு போய்,அம்மா! நா ப்ரௌசிங் சென்டர்ல இருக்கேன் URL சொல்லுங்க என்று கேட்டு விட்டு ஐந்தே நிமிடத்தில் அம்மா பாத்துட்டேன் சூப்பர் என்றாள்.முழுசா படிச்சுட்டு சொல்லும்மா என்றால் அம்மா ஒன் அவருக்கு 15 ருபீஸ். அதோட என்னோட தமிள் நாலெஜ் உங்களுக்கு தெரியும்.சுட்டிக்கு(விடுமுறைக்கு) வீட்டுக்கு வருவேன்ல.அப்ப ஃபுல்லா படிக்கிறேன்.பைம்மா! டேக் கேர்.சீ யூ என்றுவிட்டு பதில் எதிர்பாராமல் துண்டித்துவிடுவாள்.இப்படிப் பயணிக்கிறது என் வலைப்பயணம்.

போங்க! அப்பூ! எங்க பக்கத்தையும் பத்துப்பேரு படிக்கிறாகப்பு.(கூகுள் அனாலிடிக்ஸ் உபயம்) தெரியுமில்ல.இப்புடி யாராவது குடும்பத்தாரால,உறவுகளால,நண்பர்களால கைவிடப்பட்டவுக இருக்கீகளா?

ஆனால் தமிழ்மணத்தோட உதவியினால ஒரு தமிழ் வலையுலகம் எனக்குக்கிடச்சிருக்கு. தெனமும் முனைவர் மு.இளங்கோ அவர்கள்,ரத்தினப்புகழேந்தி அவர்கள்,பலா பட்டறை,பா.ரா.பக்கம்,கவிஞர் கவிமதி,குட்டி ரேவதி,தேனம்மை,சித்ரா,அண்ணன் இஸ்மத்,ஜீவா,ராமலெக்ஷ்மி,முத்துச்சரம்,கலகலப்ரியா,இன்னும் நெறைய.... இவுங்கள எல்லாரையும் ஒரு ரவுண்டு பாத்துட்டு தூங்குறது வழக்கங்க.இல்லையின்னா இப்பல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது.


சிதறடிக்கப்படும் சிலம்புகள்

சிலப்பதிகார
சிலம்புகள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு வீடுகளிலும் இன்னும்
காலங்கள் கடந்தும்
கோலங்கள் மாறியும்....

கண்ணகிகள்
தங்களின் கனவுகள் கொலையுண்டதற்காய்
கோவலன்களிடமே நீதி கேட்டு
சிலம்புகளை சிதறடிக்கிறார்கள்.

கோவலன்களோ
கண்ணகியின் கற்பையும்
மாதவியின் கற்பையும்
பழைய காகிதம் எடை போடும் உணர்வுடன்
தராசில் நிறுத்தி
விவாதங்களைத்தொடர்கிறார்கள் காலகாலமாய்

மாற்றம் என்பது உலக நியதி
ஆனாலும்
மாறாத நியதிகளை
மாற்ற முயலும் மணிமேகலைகள்
அட்சய பாத்திரங்களை இழந்து
அவமதிப்புகளை சுமந்து.....

போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுங்கள்.


அந்தமானில் ஒரு காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தை விட்டால் தனியார் பேருந்துகள் மிகக்குறைவு.அந்த ஓடுகிற ஒன்றிரண்டு வண்டிகளும் இப்ப நிக்குமா? அப்ப நிக்குமா? கதைதான்.இறுதி மூச்சிக்கு சிரமப்படும் நோயாளிகள் போல.அந்த கால கட்டத்தில் வாடகைக் கார்களுக்கு குறைந்த பட்சக்கட்டணம் பத்து ருபாய்.தூரத்திற்கேற்றார் போல் கட்டணம் மாறும்.பெரும்பாலும் நடராஜா சேவைதான்.அதன் பிறகு ஒவ்வொன்றாக தனியார் பேருந்துகள் பெருக ஆரம்பித்து இப்போது நிறையத் தனியார் பேருந்துகள்.ஒன்றை ஒன்று முந்துகிறேன் பேர்வழி என்று பயணிகளின் வாழ்க்கையை அடகு வைக்கும் அவர்களின் அட்டகாசம் தாங்க முடியாது.மூன்று சக்கர வாகனங்கள் வந்த பிறகு அந்தமான் சாலைகளை இவர்கள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல இவர்கள் கொடிதான்.பெரிய போக்குவரத்து நெரிசல் அற்ற அந்தமான் சாலைகளில் அடித்துப்பறக்கும் வேகம் நம்மை பயமுறுத்தும்.இங்கிருக்கும் சொற்ப மக்கள் தொகைக்கு இந்தப் போக்குவரத்து வசதிகளே அதிகம் என்ற நிலையில் இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களின் பெருக்கம் தற்போது அளவு கடந்து விட்டது.வெறிச்சோடிக்கடந்த சாலைகள் இப்போது புதுப்பொலிவுடன் சுறுசுறுப்பான இயக்கத்துடன் இருந்தாலும் கூட,முன்னேற்றத்தின் ஒரு அறிகுறியாக இதைக்கொண்டாலும்,சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகள் வாகனங்களைக்கையாள்வது அச்சம் தருகிறது.சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள்,குறுகிய சாலைகளில் அடுத்த வாகனங்களுக்கு வழிதராமல் இடைஞ்சல் தருவது இங்குள்ள சிலருக்கு கைவந்த கலை.சிறிய இடம் என்பதால் கடைநிலை ஊழியர் முதல் பதவிகளில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்து வைத்திருப்பதால் எதற்கும் யாரும் அலட்டிக்கொள்வதில்லை.பள்ளிக்குழந்தைகளுக்கு வேகம் அதிகமுள்ள இரு சக்கர வாகனங்கள்.அவர்கள் பறக்கும் வேகம் பார்த்து யார் பெற்ற பிள்ளையோ என்று பரிதாபம் பிறக்கும் நமக்கு.

இது ஒரு புறமிருக்க தோளுக்கும் காதுக்கும் இடையில் குறுந்தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டே வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள்.அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டத்தடையிருந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.அப்படியென்ன உயிரைவிட முக்கியமான வேலை.சில நாட்களுக்கு முன் ஒரு அனுபவம்.மூன்று சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்க,ஓட்டுனர் அலைபேசியில் பேசியபடி ஓட்டிவர முன்னால் ஒரு பேருந்து போக,பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்,ஒரு கட்டத்தில் அலுத்து பேருந்தை முந்த முற்பட்டு, சட்டென வலது பக்கம் வளைக்க ராணுவத்தின் பெரிய வாகனம் நாலு அடி முன்னால் 'என்ன பண்றீங்க?' என்று நான் அலற இரு ஓட்டுனரும் ஸ்தம்பிக்க, சடக்கென இடதுபக்கம் வளைக்க பேருந்தின் பக்கத் தடுப்பில் உரசி விபத்து தடுக்கப்பட்டது.பேருந்து ஓட்டுனர் நன்றாகத் திட்டிவிட்டார்.நான் ஒன்றுமே சொல்லாமல் இருந்து விட்டு இறங்கும் போது பணத்தைக்கொடுத்துவிட்டு,"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்க,இ.கா.கோ முதல் வ.கா.கோ வரை உதடுகளை விரித்து வெட்கச்சிரிப்புடன் ஒரு பையன் இருக்கான்! என்றார்."ஓ! குழந்த வேற இருக்கா? பாத்து ஓட்டுங்க.உங்கள நம்பி உங்க வீட்டுல ரெண்டு பேரு. எங்க விட்டுல என்னை நம்பி மூனு பேரு.ஒவ்வொரு தரம் வண்டிகள்ல ஏறுரப்ப எங்க உயிர உங்க கையில் குடுத்துட்டு பத்திரமா கொண்டு சேப்பீங்கன்னு நம்பிக்கையில தான் வர்றோம். ஞாபகம் வச்சுக்கங்க" என்றதும் அசடு வழிந்து இல்ல மேடம் இப்புடி எல்லாம் ஸ்பீடா வண்டி ஓட்டுனாத்தான் நெறைய சம்பாதிக்க முடியும் அதான் என்று சொல்லிவிட்டு மறுபடி அழைப்பு வர பேசியில் பேசியபடி சென்று விட்டார்.இவர்களைத்திருத்த முடியாது.யாருடைய தலைவிதி யார் கையிலோ?

சில வருடங்களுக்கு முன் ஒரு முறை வாகனம் ஏற்றிச்செல்லும் கப்பலில் இருந்து பேருந்தை எடுக்கும் போது சற்று பிசக ஒரு பேருந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.எத்தனை மரணங்கள்? விபத்துக்கள் எல்லாமே கவனக்குறைவினால் தான்.கவனக்குறைவால் வரும் சிலரால்,கவனமாக வரும் பலரும் பாதிக்கப்படுவது சாலை விபத்துக்களில் என்பதை வாகனம் ஓட்டுனர்கள் என்று உணர்வாகள்? அரசு சட்டம் தான் போட முடியும்.சட்டம் போடுவதே மீறுவதற்கு என்று நினைக்கும் மக்களை யார் கண்டிப்பது? இறைவன் இவர்களைத் தண்டித்துவிடக்கூடாது என்று மனம் இறைஞ்சுகிறது! போக்குவரத்து விதிகளைக்கடைப்பிடிக்காமல் விபத்து எனும் தண்டனைக்குள்ளாகுபவர்கள் ஒன்று உயிரை அல்லது உறுப்புகளை இழக்கிறார்கள்.அதன் வலி அவர்களை விட அவர்களைச்சார்ந்தவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.தண்டனை பெறுபவர்களுக்குப்பின்னால் ஒரு குடும்பம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தால் போதும்.

(இ.கா.கோ - இடது காது கோடி)

ஞாயிறு, ஜனவரி 17, 2010

அம்மா,அப்பா

சொல்லத்தான் நினைக்கிறேன்.
நீயும் நானும்
அருகிலிருந்தும்
மனங்களுக்கான இடைவெளிகள் நீண்டு
அந்நியத்தனம்
ஒரு
புல்லாய் முளைத்து
கள்ளியாய் முள் கொண்டு
விருட்சமாய் வேரோடி
உனக்கு என் தேவையும்
எனக்கு உன் தேவையும் அற்று
நிர்ப்பந்தங்களுக்காய் கூடி இருப்பதை
சொல்லத்தான் நினைக்கிறேன்.

வீடாய் இருந்த இடம்
வெறும் சுவர்களாய் இப்போது
பொது வெளிகளில்
உன் உடமையாய் நானும்
என் உடமையாய் நீயும்
உன்னைப்பற்றிய விசாரணைகளை
ஒற்றைப்புன்னகையில் தவிர்க்க முயல
வெட்கம் என்று அது திரிக்கப்பட
சொல்லத்தான் நினைக்கிறேன்.

காதல்,கல்யாணம்,வாழ்க்கை
கசப்பான அனுபவங்களாய்,
கால நீட்டிப்பு அவசியமற்று
உன்னை விட்டு
கடந்து போய்விட எண்ணும் போதுகளில்
பொய்யாய்க்கூட
புன்னகைக்க முடியாத போதுகளில்
சொல்ல நினைத்த போது
முந்தானை பற்றி இழுத்த பிஞ்சுக்கரங்கள்
மழலையில் மொழிகிறது!
"பாப்பா அப்பா செல்லம்,அம்மா செல்லம்"

ஒரு ஒலி மொழியானது.

வரலாற்று ஏடுகளைப்புரட்டினால் அந்தமான் தீவுகளில் ஆதியில் எண்ணற்ற பழங்குடியினர் வசித்துவந்து காலப்போக்கில் அழிந்து இப்போது ஆறு இனத்தவர் மட்டுமே வாழ்கின்றனர்.அழிந்த பழங்குடி மக்களில் ஓரிரு இனங்கள் மிகச்சிறுபான்மையினராக இருந்துவந்திருக்கிறது.6,800 உலக மொழிகளில் பத்து மற்றும் இருபது பேர் மட்டுமே பேசும் மொழிகள் 184.மொழியியல் வல்லுனர்களின் கருத்துப்படி அந்தமானில் பழங்குடி மக்களில் ஒரு குடும்பம் மட்டுமே பேசும் மொழிகள் - ஐந்து அல்லது ஆறு பேர் மட்டுமே பேசும் மொழிகள் இருக்கிறது.அந்தக்குடும்பம் அழிந்து போகும் போது அந்த மொழியும் அழிந்துவிடுகிறது என்கின்றனர்.இதை செய்தியாகக் குறிப்பிட்ட பொங்கல் விழா சிறப்பு விருந்தினர் சொல்லின் செல்வர்.திரு.கம்பம்.P.செல்வேந்திரன் அவர்கள் அமெரிக்க எழுத்தாளர் பிராட்மன் அவர்களின் ஒரு சிறுகதையைப் பகிர்ந்து கொண்டார்.


"இரண்டாம் உலகப்போரில் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது. அந்த நாகசாகியில் இருந்து அந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.அணுகுண்டு வீசப்பட்ட அந்த நாகசாகியில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது.அந்தக்குழந்தை எடையே இல்லாமல் பிறக்கிறது.ஒரு அலுமினியத்தகட்டில் பென்சிலால் படம் வரைந்தால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது அந்தக்குழந்தை.அது உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு நம்பிக்கை அதன் இதயம் மெதுவாக,மிக மெதுவாகத்துடிக்கிறது.மருத்துவர் வந்து பார்த்து,குழந்தையை சோதித்து உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.உங்கள் குழந்தையை வளர்த்து வாருங்கள், என்கிறார்.பெற்ற தாய் அந்தக்குழந்தையை பொத்திப்பொத்தி வளர்ப்பதில் ஒரு தவமே இருக்கிறாள்.முழுக்கவனத்தையும் குழந்தையின் மீதே வைக்கிறாள்.குழந்தை ஒரு நாள் திடீரென்று ஒரு விசில் சத்தத்தோடு ஒரு ஓசை எழுப்புகிறது.பயந்து போன அந்தத்தாய் மருத்துவரை அழைக்க அவர் வந்து சோதித்துப்பார்த்து விட்டு பயப்படாதீர்கள்.அந்தக்குழந்தை எழுப்பிய விசில் சத்தம் ஒன்றுமில்லை.உங்கள் குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது, என்கிறார்.ஒரு விசில் சத்தத்தை வைத்து மருத்துவர் சொல்கிறார்,உங்கள் குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது என்று.  அந்தத்தாய்க்கு பெரிய ஆச்சர்யம்.ஒரு விசில் சத்தம் என்றைக்கு மொழியானது? ஆனால் மருத்துவர் பேசுகிறது உங்கள் குழந்தை என்கிறாரே என்று எண்ணி அந்த விசில் சத்தத்தை மிகக்கவனமாகக் கேட்டாள்.அந்த விசில் சத்தத்தை வைத்தே அனுபவத்தில் அந்தக்குழந்தை பாலுக்கு அழுகிறதா?நோய்க்கு அழுகிறதா? என்று உணர ஆரம்பித்தாள்.அந்தக்குழந்தை விசில் சத்தம் எழுப்புகிற போது தாயும் ஒரு விசில் சத்தம் போட்டுப்பார்த்தாள்.இந்த விசில் சத்தத்தை அந்தக்குழந்தை புரிந்து கொள்கிறது. தாயும் குழந்தையும் அந்த விசில் சப்தத்தாலேயே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.தாயும் குழந்தையும் பேசிக்கொள்கிற அந்த விசில் சப்தத்தை வீட்டிலேயே வாழ்கிற அந்தக்குழந்தையின் தந்தையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.அந்த வீடு விசில் சப்தத்தாலேயே ஒரு புதிய மொழியை உருவாக்கிக்கொண்டு வாழ ஆரம்பித்தது. ஒரு நாள் அந்தக்குழந்தை திடீரென்று மரணத்தைத் தழுவியது.குழந்தையின் மரணத்தோடு அந்தக்கதை முடிந்து போகிறது.கதையின் முடிவை கதாசிரியன் எழுதுகிறான் இப்படி ,’இப்போதெல்லாம் அந்த வீட்டில் யாரும் யாரோடும் பேசிக்கொள்வதில்லை.ஆனால் அந்த வீட்டில் இருந்து எப்போதாவது விசில் சப்தம் கேட்கிறது’"



என்ன அற்புதமான சிறுகதை.ஒரு மூன்று பேர் ஒரு விசில் சப்தத்தை வைத்து வாழ்ந்துவந்த அந்தக்கதையில் இன்னும் படைப்பாளி வாழ்கிறான்.எண்ணங்களை,உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ளும் ஒரு மொழி, ஒரு ஓசையினால் மட்டும் நிரப்பமுடியும்,ஒரு ஓசையைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு கதையை நெய்ய முடியும் என்று சொல்கிற நெகிழ்ச்சியான இந்தக் கதையைக் கேட்ட போது தான் கேள்வி இன்பம் புரிகிறது. ஒவ்வொரு இலக்கிய வாதியும் தங்கள் வாசிப்பின் வழி கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்ளும் போது ஒவ்வொரு பாதிப்புகளைத் தன்னையும் அறியாமல் கேட்பவர் மனதில் விட்டுச்செல்கிறார்கள்.வரலாற்றுப் பக்கங்களில் புதைக்கப்பட்ட சோகங்களின் மிச்சங்கள் இன்னும் ஹிரோஷிமாவிலும்,நாகசாகியிலும் இருக்கிறது என்றாலும் கூட அந்த சோகங்களுக்குப்பழகிப்போன அந்த மக்களைவிட அதைக்கற்பனையாய் உணரும் நமக்கு இன்னும் மனம் கனத்துத்தான் போகிறது!

சனி, ஜனவரி 16, 2010

கொத்தடிமைகள்

கண்ணாடிப்பாத்திரமாயும்
மண்பாத்திரமாயும் வர்ணிக்கப்பட்ட நான்
சிகரங்களை நோக்கி
பயணப்படும் போதெல்லாம்
உடைந்துவிடுவேனென்று ஒளித்துவைக்கபட்டேன்.
சிட்டுக்குருவியாய்
சிறகசைக்கத் துடித்தபோதெல்லாம்
என் வானமே மறைக்கப்பட்டது.

மண்ணுக்குள் புதைத்த
மரம் கரியாகும் இயற்கை மாற்றம் போல்
என்னை நொறுக்கி
எண்ணம் திருத்தி
புடம் போட்டு புடம் போட்டு
இரும்பாய் என்னை வடித்துக்கொள்ள
உறுக்கி வடிக்க உலையாய்த் தேடி ஒப்புக்கொடுக்க
உள்ளே இரும்பாய் வெளியே பூவாய்..

நீரருவியாயிருந்த
என் பிரவாகங்களை அணைகட்டி
துடிக்கும் கன்றாய்த் துள்ளிய என்
திமிறல்களை இறுக்கி அடக்கி
மூக்கணாங்கயிறால் முறுக்கிப் பிணைத்து
மதம் கொண்ட பிடியாய் முறித்துக்கிளம்ப
அங்குசமிட்டு அடக்கி
உத்தரவுகளுக்கு பணித்து
தும்பிக்கை நீட்டி யாசகம் கேட்டு நான்...
இன்றும்
என் சக்தி நினைவு வரும்போதெல்லாம்
குடும்பம் என்ற சங்கிலியும்
குழந்தை என்ற சொடுக்குதலும்...

ஜாதிகள் இல்லையடி பாப்பா

சாதி இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியார்,இடாதார் இழிகுலத்தார் என்று பாடிய ஔவையும்,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இன்னும் எத்தனையோ சமூகசீர் திருத்த வாதிகள் படித்துப்படித்துச்சொன்ன கருத்துக்களை காற்றில் விட்டு தமிழர்களாகிய நாம் தாயை,தந்தையை விட்டு, உறவுகளை விட்டு,ஊரை விட்டு,நாட்டை விட்டு,சொத்து பத்துக்களைவிட்டு இன்னும் இன்னும் எத்தனையை விட்டுச்சென்றாலும்,தொலைத்துச்சென்றாலும் விடாமல்,தொலைக்காமல் பத்திரமாய் கூடவே எடுத்துச்செல்வது சாதியை.மதம் பெரிதா,சாதி பெரிதா? என்று பெரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட போது,'சாதி தான் பெரியது என்றார். அது எப்படி? மதம் தானே பெரிசு,மதம் உலகமெல்லாம் இருக்கு,பெரிய,பெரிய கிளைகள்,கோடிக்கணக்கான நிதி,மதம் தானே பெரியது என்ற போது பெரியார் அவர்கள் தப்பா சொல்றே.நம்ம நாட்டுல சாதி தான் பெரிசு.நீ நெனைச்சா மதம் மாறமுடியும்.சாதி மாறமுடியுமா? என்றாராம்.அந்த அளவு தமிழர் வாழ்க்கையில் இரண்டறக்கலந்தது சாதி.பிறப்பு ஒருவனின் சாதியை நிர்ணயிக்கிறது.பிறகு சாதி தான் வாழ்க்கையை, உரிமையை,சலுகையை,அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.


அந்தமான் தீவுகளில் பள்ளியில் சேர்க்க உங்கள் சாதியைக் கேட்க மாட்டார்கள்.இங்கு பள்ளியில் மாணவர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஒன்று பழங்குடியினர் இரண்டு அரசாங்கப்பணி நிமித்தம் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய அரசுப்பணியாளர்களின் வாரிசுகள்,மூன்று 1942க்கு முன் இங்கு குடியமர்ந்தவர்கள் நான்கு பத்து வருடம் தீவுகளில் தொடர்ந்து கல்வி பயின்றவர்கள்,ஐந்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தீவுகளில் படித்த எல்லா மாணவர்கள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் மேற்கல்விக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.வேலை வாய்ப்புகளில் மட்டும் பழங்குடி,பிற்படுத்தப்பட்டவ்ர்கள்,பொது என்ற மூன்று பிரிவுகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டுப்படி வாய்ப்பளிக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் அந்தமான் தமிழர் சங்கம், தமிழருக்கும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கலப்பு மணம் பெருகிய நிலையில் சாதிய அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கும் போது யாருடைய சாதி சலுகைகளை வழங்குகிறதோ அந்த சாதியைப்பின்பற்றுவார்கள் மக்கள்.ஆகவே அந்தமானில் தமிழர்களுக்கு வாழ்வியல் அடிப்படைகளையோ,மரியாதைகளையோ சாதி நிர்ணயிப்பதில்லை.அந்தமானில் ஒருவரின் கௌரவத்தை நிர்ணயிக்கும் கூறுகளாகஉழைப்பு,நடத்தை,பொருளாதாரம்,நற்குணங்கள்,பதவி,ஆகியனவாக இருக்கிறது.நிறையத்தமிழ் குழந்தைகளுக்கு தமது சாதி தெரியாது. தமது அடையாளங்களைக்காக்க வேண்டி,தற்போது தமிழர் சாதிச்சங்கங்களை உருவாக்கிக்கொண்டுள்ளார்கள்.அந்த சாதிச்சங்கங்கள் இன்று வெறுமனே ஒரு சமூகத்தைக் குறிக்கும் குறியீடாக இருக்கிறதேயொழிய,தமது சாதிமக்களை,மாணவர்களை உயர்த்தும்,ஊக்கப்படுத்தும் நோக்குடன் செயல் படுகிறதேயொழிய பிரிவினை வாதங்களிலோ,உயர்வு தாழ்வு குறிக்கும் நோக்கிலோ இது வரை இல்லை.இங்கு குழந்தைகளுக்கு ஒன்று பட அவர்கள் அறிந்தது தமிழன் என்ற ஒரு இனத்தைத்தான்.பெரியவர்களும் அப்படித்தான்.பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் மட்டும் சாதி கவனிக்கப்படுகிறது.அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரையில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும்,பாரதீய ஜனதா கட்சியும் என்பதால் தமிழ்நாட்டைப் போல இனவெறி எழுப்பும் வாய்ப்பு அரசியல் வாதிகளுக்குக் கிடைக்கவில்லை.இனி வருங்காலமும் சாதி அறியாத ஒரு ஒன்றியப்பகுதியாக இந்தத் தீவுகள் அறியப்படவேண்டுமென்பதே எங்களைப் போன்றோரின் அவாவும்,பிரார்த்தனையும்.

வெள்ளி, ஜனவரி 15, 2010

ஜல்லிக்கட்டு


     அந்தமானில் வாழும் தமிழர் பெருமக்களில் கணிசமான மக்களுக்கு தென்னை,கமுகு தோட்டங்கள், வயல்,ஆடு,மாடுகள் உண்டு.மாடுகளைப்போற்றும் மாட்டுப்பொங்கல் மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.ஆனால் அந்தமானில், தமிழரின் வீர விளையாட்டாக,தமிழரின் அடையாளமாக அறியப்படும் மஞ்சுவிரட்டு,ஜல்லிக்கட்டு கிடையாது.


         அந்தமான் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர் சொல்லின் செல்வர் கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் தமது சிறப்புரையில் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு கருத்தைப்பகிர்ந்துகொண்டார்."1977ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற அரசு பொங்கல் விழாவில் முத்தமிழ்க்காவலர் திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள் ஜல்லிக்கட்டு நம் தமிழர் வரலாற்றில் எப்படித் தோன்றியிருக்கும் என்று ஒரு அர்த்தம் கற்பித்த கதை ஒன்றைக்கூறினாராம்.தைத்திருநாளில் ஒரு உழவனின் இல்லம் அவனது ஒரு வருட உழைப்பின் பயனான நெல்,கரும்பு,வாழை,மஞ்சள் எல்லாம் நிறைந்திருக்க அவனது உள்ளமோ மகிழ்ச்சியால் நிறைந்திருக்க அவன் தன் மனைவியை அழைத்து 'அடியே! பார்த்தாயா? எனது ஒருவருட உழைப்பை' என்று தனது மீசையைத்தடவியபடி மெல்லிய கர்வத்துடன் கூற அந்த நேரம் கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த காளையின் கழுத்தில் ஈ கடித்ததால் அது தலை அசைக்க அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி தன் நாவை அசைத்து ஒலி எழுப்ப அந்த உழவனின் மனைவி,'மாமா நீங்க இதெல்லாம் உங்க உழைப்புன்னு சொல்றீங்க.நம்ம காள மாடு இல்ல அதெல்லாம் என் உழைப்புன்னு சொல்லுது பாருங்க' என்று கூற உழவன்,'அப்புடீன்னா இந்தக்காளமாடு என்னவிட வலிமையானதுன்னு சொல்றியா? நாங்கவேன்னா மோதிப்பாக்கட்டுமா' என்று கேட்டு அப்படியே இந்த காளை பொருதும் வீர விளையாட்டு தமிழகத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என்றாராம்.

     அறிஞர் அண்ணா அவர்கள் மஞ்சுவிரட்டு பற்றிக்குறிப்பிடும் போது,'பெண்கள் பயப்படக்கூடாது.இந்தக்காளை மாடே இவனிடம் இந்தப்பாடு படுகிறதே.நம்மை என்ன பாடு படுத்துவானோ இவன் என்று பெண்கள் பயப்படக்கூடாது' என்றாராம்.அந்தக்காலத்தில் பெண்கள் காளை வளர்த்து அந்தக்காளையை அடக்குபவனைத்தான் திருமணம் புரிவார்கள்.அந்த அடிப்படையில் தான் வெள்ளையத்தேவன்,வெள்ளையம்மா திரைக்கதை அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.இன்று காளை அடக்கினால் தான் பெண் என்றால் எத்தனை பேருக்கு திருமணப்பிராப்தி என்ற போது என் கணவர் காளை வளர்க்கும் இளம்பெண்கள் இருந்தால் காளை அடக்க இளைஞர்களுக்கா பஞ்சம் என்றார்.போர்கள் மலிந்த காலத்தில் திணவெடுத்த தோள்களுக்குத் தீனியாக,உயிரைத்துச்சமாக மதித்த காலத்தில் காளை பொருதும் வீர விளையாட்டுகள் இருந்ததைப் பெருமையாகக் கூறமுடியும்.ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு இந்த விளையாட்டு அவசியமா? இதைப்பண்பாட்டுக்கூறு என்று சொல்வதையும்,நமது அடையாளம் என்று சொல்வதையும் தவிர்த்து மிருகவதை,மனித உயிரிழப்பைத்தடுக்கும் முகமாக,மனிதநேயத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டைத் தவிர்ப்பதே நல்லது.

போதைஅடிமை மனைவியின் பொய்முகம்

தேன் நிலா ஞாபகங்கள்
நினைவில் மீண்டெழ
நெற்றி திருத்தி
நேர் வகிட்டில் குங்குமமிட்டு
தொடுத்த மலர்ச்சரம்
கூந்தலில் சூட்டி
உனக்குப்பிடித்த புடவையில் நான்
நிலாக்காயும் மொட்டை மாடியில்
நட்சத்திரங்களிடம் உரையாடியபடி
உன்னோடான
காதல் நாட்களின்
கனவுகளில் லயித்து.
உன் வருகைக்கு காத்து...

கள்ளின் மயக்கத்தில்
கண்கள் கிறங்க
நீயோ
உன்னையும்,என்னையும்,உலகையும் மறந்து...
உள்ளுக்குள் பொங்கிய
உற்சாக ஊற்றுக்கள் கண்களில் வடிய
நிலவின் தண்கதிர்கள் சோகையாய் மறைய
உறக்கம் தொலைத்த இரவுகள் அதிகம்
ஊடலும் கூடலும் இன்றி...
அலைபேசிவழி அளவளாவும் உறவுகளிடம்
அவலத்தை மறைத்து புன்னகைபூக்க..
கூடல் நிகழாத இரவின் சாட்சியாய்
கொட்டிக்கிடந்த கூந்தல் மலர்கள் பரிகசிக்கிறது

வியாழன், ஜனவரி 14, 2010

அமெரிக்காவில் தமிழர் திருநாள்

         தமிழன் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெற்றவன்.தமிழனின் பண்பாடும்,கலாச்சாரமும்,மரபு வழிப்பிணைப்புகளும்,மொழியுணர்வும் பாராட்டுதலுக்குரியது.இன்று தமிழனின் இருப்புணர்த்தும் திருநாட்கள் அவனிருக்கும் இடங்களில் எல்லாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவது நாமெல்லாம் அறிந்ததே!.நாகரீகத்தொட்டிலான அமெரிக்காவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து நான் செய்தி ஏடுகளில் அறிந்தது தவிர வேறில்லை. இன்று அன்பு நிறை நண்பர் திருவாளர் சோம.இளங்கோவன் அவர்கள் அமெரிக்காவில் தமிழர் திருநாளை நேரடி வர்ணனை போல் நமக்கு  அறியப்படுத்தும் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.இப்படி ஒரு அழகான கட்டுரை கிடைக்கப்பெற்றது, அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தக்கட்டுரை அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.நான் அறிந்ததை வலை நண்பர்களுக்கும் அறியத்தரும் ஆவலில் தான் இந்தக்கட்டுரை என் வலைப்பூவில் இடம் பெறுகிறது.   நன்றி அன்பு நண்பரே! 


தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களைத் தமிழ்மணத்தில் படிக்கின்றேன். அந்தமான் தமிழ்ச் சங்கப் பொங்கல் பற்றி எழுதியிருந்தீர்கள்.படித்து மகிழ்ந்தோம். அமெரிக்காவில் பொங்கல் பற்றி நான் எழுதியதை அனுப்புகிறேன் ,பாருங்கள்.





அன்புநிறை,
சோம.இளங்கோவன்.
அமெரிக்காவிலே பொங்கலோ பொங்கல்.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆண்டுதோரும் பொங்கல் கொண்டாடுவோம் !
அது தமிழ்நாட்டுப் பொங்கலிலிருந்து பல விதங்களில் மாறு பட்டு இருக்கும்.
அமெரிக்க வாழ்க்கையே சனி,ஞாயிறு களில் தான் .வேலை நாட்களில் அவரவர் வேலைக்குச் சென்று வந்து சேருவதே பெரிய சாதனை ஆகி விடுவதால் கொண்டாட்டங்கள் பலவும் சனி,ஞாயிறுகளில் தான்.
    பொங்கலன்று பெரும் பாலும் அவரவர் வீடுகளிலே பொங்கல் செய்து கொண்டாடி, தொலை பேசியிலே,இப்போதெல்லாம் மின்னஞ்சலில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடி விடுவார்கள். முழுப் பொங்கல் கொண்டாட்டமே ஆங்காங்கே தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாக்களில் தான்! அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெரு நகரங்களே இல்லை என்ற அளவிற்குப் பல மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. முதன் முதலில் நியூ யார்க் நகரத்திலே அறுபதுகளிலே ஆரம்பிக்கப் பட்டது.தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. பல தமிழ்ச் சங்கங்கள் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கி ஆண்டு தோறும் சூலை 4ந்தேதி வரும் மூன்று நாட்கள் விடுமுறையில் பெருஞ்சிறப்பாகத் தமிழ் மாநாடு நடக்கும்.


ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு பெரும்பான்மைத் தமிழ்ச் சங்கங்கள் சனவரி 23 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். குடும்பங்களாக வந்து பங்கேற்பார்கள். பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.ஆங்காங்கே உள்ள திறமைகள் பல விதங்களில் வெளிப்படுத்தப் படும்.மகளிர்,குழந்தைகள் பங்கேற்கும் பல ஆட்ட பாட்டங்கள்,கோலாட்டங்கள்,கும்மிகள்,நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள்
நடக்கும். திருக்குறள் போட்டிகள் நடக்கும்.தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே இருப்பதால் போட்டிகள் நிறைய இருக்கும்.பங்கேற்பும் பல நிகழ்ச்சிகளில் இருக்கும்.இப்போதெல்லாம் குழந்தைகள் அவர்களாகவே நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் என்று தமிழிலேயே வியக்கத் தக்கும் படி செய்வது மனமகிழ்ச்சியைத் தரும்.


பட்டி மன்றங்கள் பல இனிய நகைச்சுவை கலந்து நடக்கும்.இந்த ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கப் பட்டி மன்றத்தின் தலைப்பு " இன்பம் பொங்குவது இருபதுகளிலா ,அறுபதுகளிலா?". கவியரங்களில் ஆண்களும் பெண்களும்
வெளுத்து வாங்கு வார்கள். ஒரு முறை நாரதர் பிரம்மாவிடம் சென்னையிலே தமிழ் சினிமா நடிகர்கள் கடவுளை விடச் சிறப்பாகப் பல இளம் நடிகைகளுடன் நடனமாடி வாழும் அருமையைச் சொல்கிறார்.அதை அனுபவிக்க வந்த பிரம்மா கோடம்பாக்கத்தில் படும் இன்னல்களை அற்புதமாக நடித்திருந்தார்கள்.


பொங்கலும், உணவும் சிறப்பாக இருக்கும்.  பல இடங்களில் புதுச் செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் நடத்தும் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.ஆகவே திறமைகளின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் சில பொருள்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். இப்போது அம்மா,அப்பா தவிர இங்கு எங்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறதால் நாங்கள் வெளி நாட்டில் இருக்கும் உணர்வே இல்லாமல் அமெரிக்கத் தமிழ்நாட்டில் தமிழர்களாக இருந்து மகிழும் நாளாகப் பொங்கல் விழாக்கள் மனது நிறைந்து வீடு திரும்புவோம். பல நகரங்களில் கடுங்குளிராக இருக்கும்,கொட்டும் பனியும் இருக்கும்.


           இருந்தாலும் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி பொங்கலோ பொங்கல் அமெரிக்காவில் தமிழரின் இனிய விழாவாக இருக்கும்.

அந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா


        அந்தமான் தமிழர் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை (14.01.10) 5.30 மணியளவில் தொடங்கியது.நிகழ்ச்சித்தலைவர் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை இயக்குநர் திரு.A.நெடுஞ்செழியன்,சிறப்பு விருந்தினர் தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர்.திரு.கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் முதலியோர் நிகழ்ச்சியை தமிழ் மரபுப்படி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.நிகழ்ச்சியின் தொடக்கமாக மோகன் புரா (பகுதியின் பெயர்),அரசினர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினர்.விழா நாயகர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்ததனர் அந்தமான் தமிழர் சங்கத்தினர். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,வாழ்த்துரை வழங்கினார் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் திரு.கு.ராஜ்மோகன் அவர்கள்.துணைத்தலைவர் அவர்கள் தமது வாழ்த்துரையில் "அந்தமான் வாழ் தமிழர்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாங்கள் உதவ வேண்டும் அன்று தங்களுக்கு இதே சங்க வளாகத்தில் இந்த மேடை நன்றி பாராட்டு விழா எடுக்கும் மேடையாக இருக்கும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்" என்று சிறப்பு விருந்தினருக்கு வேண்டுகோள் விடுக்க அரங்கில் பலத்த கரவொலி.இதனைத்தொடர்ந்து தீவுக்கவிஞர்.திரு தமிழ்சத்யன் அவர்களின் ஏழாவது கவிதை நூல் "காதல் கேளாய் தோழி" மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.ஞா.குழந்தைசாமி அவர்களின் பண்டைய உலா இலக்கிய முறையில் இயற்றப்பெற்ற,அடி வெண்பாவினால் உருவாக்கப்பெற்ற நூல் "கல்வாரியில் காவலன் உலா" ஆகிய இரண்டும் பொங்கல் விழா மேடையில் நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றது.

    அடுத்துத் தலைமையுரை ஆற்றிய நிகழ்ச்சித்தலைவர் திரு.A.நெடுஞ்செழியன் அவர்கள் தமது உரையில், " 2,000 ஆண்டுகளுக்கு முன் அட்சய பாத்திரம் கொண்டு உறுபசி நீக்கிய மணிமேகலையும் என் உறவினர்,இன்று உணவுப்பற்றாக்குறையை நீக்க முயன்று வரும், பாடுபடும் தமிழர்களும் என் உறவினர்.மனை சிறக்க வீட்டுப்பொங்கல்,மாடுகளைப்போற்றமாட்டுப்பொங்கல்,உறவுகளைப்பாதுகாக்க காணும் பொங்கல் கொண்டாடுகிறோம்." என்ற அவர் தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைக்கூறி தமது எளிமையான உரையை நிறைவு செய்தார்.

            தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி,சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.பொங்கல் திருநாளின் பொன் மாலை நேரத்தை பயனுடையதாய் ஆக்கிய சிறப்புரை.அவர் தம் சிறப்புரையில்," அந்தமானுக்கு வருகை தந்திருப்பது எனக்கு அண்ணன் வீட்டிற்கு வந்தது போல் உள்ளது.ஏனென்றால் அந்தமான் தமிழர் சங்கம் என்னைவிட ஒரு வயது மூத்தது.இது போன்ற விழாக்கள் நமது சுய அடையாளங்களை,பண்பாட்டுக்கூறுகளைப் பாதுகாக்கும் விழா.காலப்போக்குகளின் மாற்றங்களில் நமது அடையாளங்களை நாம் இழந்துவிடக்கூடாது.காலப்போக்கிலும் நமது அடையாளங்களை நாம் காப்பாற்றி வரும் வரைதான் நாம் தமிழர்கள்.உலகில் தமிழன் ஒருவன் தான் வாழ்க்கையை அகம், புறம் என்று இரண்டாகப்பிரித்து வாழ்ந்தவன்.இறை ஒன்று (இறைவன் ஒருவன்),இனம் இரண்டு(ஆண்,பெண்),தமிழ் மூன்று (இயல்,இசை,நாடகம்) என்று பிரித்து வாழ்ந்தவன் தமிழன்.காலத்தை பருவத்திற்கேற்ப பிரித்துக்கொண்டவன் தமிழன்.இன்று தமிழ்ப்புத்தாண்டு. கடந்த இரு வருடங்களாக கலைஞரின் அறிவிப்பின் பேரில் தைத்திருநாளை, தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடுகிறோம்.தமிழ் வருடங்கள் அறுபதில் தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஆரியர்கள் நம்மீது எடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாக நமது தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத்திற்கு மாறியது.தமிழ் நமக்கு மொழி மட்டுமல்ல,உயிர். சொல்வளம் மிக்க ஒரு மொழி உலகில் தமிழ் மட்டும் தான்.சொல்லுதல் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் தமிழில் நாற்பது வார்த்தைகள் உள்ளன,சொல்லுதல், கூறுதல்,மொழிதல்,கரைதல்,கதறுதல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழைப்பாதுகாக்க தீக்குளித்தது,வெஞ்சிறை சென்றது மட்டுமல்லாது,தமிழை வளர்க்கவும் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தமிழர்கள்.படித்தவர்,பாமரர் அனைவரும் வளர்த்த மொழி தமிழ்." என்றார்.இலக்கியத்தில் இருந்து மேற்கோள்கள் காட்டி உண்மையாகவே ஒரு அற்புதமான சிறப்புரையாற்றினர். நிறைவாக,"இந்த மேடையில் ஒரு உத்தரவாதம் தருகிறேன்.இனிமேல் புதுதில்லி வந்தால் உங்களுக்கு அந்தமான் இல்லம் மட்டுமல்ல.தமிழ்நாடு பவனும் உங்களுடையது.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்"என்றார்.பலத்த கரகோஷம்.(ஏங்க கம்பன் விட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொல்லுவாங்க.கலைஞர் பக்கத்துல இருக்கறவங்க எல்லாரும் எப்புடீங்க இலக்கியம் பேசறாங்க.தி.மு.க.வுக்கு வருகிறவர்களுக்கு இலக்கியம் சொல்லிகொடுக்கப்படுகிறதா? இல்லை இலக்கியம் கற்றவர்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு வர்றாங்களா? சிறப்புரையை வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்வோம்.)

  பள்ளி மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கோலப்போட்டி,ஓவியம்,வினாடி-வினா,பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றொருக்கு நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினர்.சங்கத்தின் துணைச்செயலர் திரு.ஆ.செல்வம் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது.மணி 8.30 க்கு விழா நிறைவுற்றது.வீடு வந்து இடுகையிட்டு முடிக்க இரவு 11.15 மணி ஆகிவிட்டது.பொங்கல் வேலைக்களைப்பு வேறு.

வானொலிக்கென நிக்ழ்ச்சியை நானும் நண்பர் திரு.வரதராஜன் அவர்களும் ஒலிப்பதிவு செய்தோம்.இந்த ஒலிப்பதிவினை வானொலி வடிவமாக்கி நாளை (15.01.10) மாலை 5 மணிக்குத் தமிழமுதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவோம்.உள்தீவுகளில் வசிக்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கு பொங்கல் விழா நிகழ்வு குறித்த பகிர்தலாக இது அமையும்.ஒவ்வொரு பொங்கல் விழாவும் இப்படித் தாயக உறவினரால் சிறப்பிக்கப்படுவது அந்தமான் தமிழருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது.இந்தப்பெருமைக்கும்,மகிழ்ச்சிக்கும் காரணம் அந்தமான் தமிழர் சங்கம் என்பதைத் தீவு தமிழரில் ஒருவராக நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். வாழ்க தமிழர் நலம்,புகழ்! வளர்க அந்தமான் தமிழர் சங்கம்.

செவ்வாய், ஜனவரி 12, 2010

அந்தமானில் தமிழர் திருநாள்


        
           அந்தமானில் தமிழர் திருநாள் தாய்த்தமிழ் நாட்டின் மரபுப்படி,உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.எனக்கு இந்த வருடப்பொங்கல் மிக்க சிறப்பு வாய்ந்த ஒன்று.வலைப்பூவில் எழுதும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே.ஒவ்வொரு வருடமும் அந்தமான் தமிழர் சங்கம், அந்தமான் தமிழர்களுக்கு பொங்கல் போனஸ்,சித்திரை விழா போனஸ் தருவதுண்டு. எப்படி என்கிறீர்களா? தாய்த்தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அழைத்து நிகழ்ச்சிகளை சிறப்பு செய்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர்.கடந்த ஞாயிறன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் மகளீர் மற்றும் மாணவிகளுக்கான கோலப்போட்டி,பள்ளிக்குழந்தைகளுக்கானஓவியப்போட்டி,வினாடிவினா,பேச்சுப்போட்டி ஆகியன நடந்து முடிந்திருக்கிறது.(நா கோலப்போட்டிக்கெல்லாம் போறதில்லங்க.யாருக்கும் பரிசு கெடைக்காது பாருங்க.அதுனால) இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டுப்புறப்பாடல் பாடி பரிசு வாங்கி வந்தேன்.(நெசமாங்க) இந்தப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர் திருக்கரங்களால் பரிசுகள் வழங்கப்படும்.

       தை மாதம் முதல் நாள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சங்க வளாகத்தில் பொங்கல் வைத்து படைத்து பின் மாலை 5.30 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கும்.     இந்த வருடம் பொங்கல் விழாவிற்கு தலைமை ஏற்க அந்தமான்,நிகோபார் பொதுவினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை இயக்குனர் திரு.A.நெடுஞ்செழியன் அவர்களும்,சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் புது தில்லி சிறப்பு பிரதிநிதி சொல்லின் செல்வர் கம்பம்.P.செல்வேந்திரன் அவர்களும் இசைந்துள்ளார்கள். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் சிறப்புரை ஆற்றுவார்.தமிழ் நண்பர்களே! வாங்க இந்த வருசம் பொங்கலுக்கு எங்க ஊருக்கு.எல்லாருக்கும் மனசு நெறஞ்ச பொங்கல் நல்வாழ்த்துகள்.

உலகமெலாம் பருவ மழை பருவத்தே பொழியட்டும்.
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
அமைதியும் அன்பும் அவணியெலாம் தழைக்கட்டும்
நலமுடனே நல்லோர் வாழ பொங்கட்டும் பொங்கல்
வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை சிறக்க பொங்கட்டும் பொங்கல்.

படைப்பின் மூலம் வாசிப்பு


      வாசிப்பு என்பது ஒரு படைப்பாளிக்குப் பல கதவுகளையும்,சாளரங்களையும் திறந்து விடுகிறது என்பதை வாசிக்க,வாசிக்கத்தான் உணர்கிறேன்.எனக்கு சிறு பிராயத்திலிருந்து வாசிப்பு வாய்த்ததில்லை.பல்வேறு தலைப்புகளின்,பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளை வாசிக்க வாய்க்கவில்லை.வாசிப்பு தாகம் இருந்தாலும் கூட வாழ்க்கை அமைப்பு சிறகுகளை முடக்கிப்போட்டு எனக்கான அந்த உலகத்தை அடையவொட்டாமல் தடுத்தது.நம்மவர் பெண்களைக் குடும்பங்களை குத்தகை எடுக்கச்சொல்லிக் கொடுத்த அளவு,தன்னை உணர, தன் வழியை சுயமாய்த் தேடி அடையக் கற்றுக்கொடுப்பதில்லை.அவளை ஒரு அறிவு ஜீவியாக,சுய சிந்தனை உள்ளவளாக வளர்க்க எந்தத் தாயும் விரும்புவதில்லை.அதனால் ஆணுக்கு வாய்த்த அளவு வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு பின் தங்கிய பெண் சமூகத்தின் உறுப்பினராகத்தான் வளர்க்கப்பட்டேன்.கட்டுகளற்ற வெளியறியாது பெற்றொரின்,உறவுகளின் எண்ண வார்ப்புகளாக,அரசமரத்தின் விதையிலிருந்து வரும் விருட்சம் அரசு என்பதைப்போலொரு அம்மாவின் அடுத்த பிம்பமாகப்,பிரதியாகத்தான் வளர்க்கப்படுகிறாள் நம் சமூகத்தில் பெண் -நகை,புடவை,பூ,அழகு,கல்வி,வேலை,குடும்பம்,குழந்தைகள் தாண்டி அறிவதில் உடன்படுவதில்லை.பெண்ணும் ஆவல் கொள்வதில்லை.அதையும் தாண்டி வெளிவந்த,வகுத்த வரையறை கடந்த பெண்கள் விமர்சனங்களுக்குள்ளாகிறார்கள் இன்றும்.
   
      ஒரு பெண் நல்ல அறிவு முதிர்ச்சி பெற்று,சுய ஆளுமையும்,மொழி ஆளுமையும் பெற வேண்டுமாயின் வாசிப்பு அவசியமாகிறது. இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு இது ஒரு காரணம்.வாசிக்கும் பழக்கம் நாளடைவில் படைக்கும் ஆசையை உருவாக்கும்.ஒரு பரந்து பட்ட அறிவை,வாழ்க்கைப்பாதையின் கிளைப்பாதைகளை,வெவ்வேறு துறைகள் பற்றிய அறிவையும் வாசிப்பு நமக்கு அறிமுகப்படுத்துவதை மத்திய வயதில் உணரும் ஒரு நிலையில் நான்.ஆக, படைப்பாளி ஆக வேண்டின் பிறர் எழுத்துகளின் போக்கை அவதானிப்பது நமக்கான எழுத்தின் போக்கை நிர்ணயிக்க உதவுகிறது.ஒரு படைப்பு படைப்பாளியின் கம்பீரத்தையும்,சமூகத்தின் உண்மையையும் பிரதிபலிப்பதாய் - படிப்பவனின் கற்பனையை வளர்ப்பதாய்,உயர்வு நோக்கி ஒரு புள்ளியளவு பயணப்படவைத்தால் அது அந்த படைப்பின் வெற்றி.

    சிறுகதைகள் என்னவோ என்னைக்கவர்வதில்லை.என் வரை சிறுகதைகள் அந்தக்கதையின் கதாபாத்திரங்களின் ஒரு முகத்தை மட்டும் காட்டும் என்பதாய் உணர்த்துகிறது.படைப்பாளியின் ஒற்றை சாளரப்பார்வையைச்சொல்லும்ஒருபடிமம்.கவிதைகள்,புதினங்கள்,கட்டுரைகள் பிடித்த அளவு சிறுகதைகள் பிடிப்பதில்லை.கவிதைகள் என்னுள் ஏற்படுத் தும் தாக்கம் அதை உணர்த்த முடியாது.அது உயிர் உணர்ந்த அனுபவம்.
                                                                   புதினங்களில்பாலகுமாரன்,சாண்டில்யன்,அகிலன்,சுஜாதா,சிவசங்கரி,வாசந்தி இவர்களின் எழுத்துக்கள் ஒரு மயக்கத்தை உண்டு பண்ணின என்னுள்.பிற எழுத்துக்கள் பிடிக்காது என்பதில்லை.நான் அறியாதவள் என்பதுதான்.ஜெயக்காந்தனின் எழுத்துக்களைப் படிக்காமலே பிறர் சொல்லக்கேட்டு ஈர்ப்பு வந்தது என்றாலும் அதிகம் வாய்க்கவில்லை.கட்டுரைகளில் கவர்ந்தது லேனா தமிழ்வாணன்,எம்.எஸ். உதயமூர்த்தி,விகடன் மதன்,ஜக்கி வாசுதேவ்,ஸ்வாமி சுகபோதானந்தா,ஸ்வாமி மித்ரானந்தா,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர்.கட்டுரைகள் படைப்பாளியின் பரந்த அறிவை,ஒரு செய்தியை அல்லது அவரது அந்தரங்கத்தை,அனுபவப்பகிர்தலாய் இருக்கும்.ஆனால் நமக்குப்பாடமும் கிடைக்கும்.

      கவிதைகள் என்றால் பாரதி,மு.மேத்தா,வைரமுத்து,ஆகியோரது கவிதை பிடிக்கும்.மற்றவரது கவிதைகள் அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையில் நிறையப்பேர் எழுதுகிறார்கள்.கவிதை வரிகள் பிரமிக்க வைத்த அளவு என் சிற்றறிவிற்கு அர்த்தம் எட்டவில்லை. அதனால் முழுதாய் ரசிக்கமுடியவில்லை.பாரதியின் கவிதைகள் வீரத்தையும்.மேத்தாவின் கவிதைகள் நமது பயணத்தின் திசைகளை சுட்டுவது போலவும்,வைரமுத்துவின் கவிதைகள் கம்பீரமாய் இருப்பது போலவும் தோன்றும்.

       எழுத்துகளை வெவ்வேறான பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் ஒரு படைப்பாளி வாசிப்பவனை சலிப்படையச்செய்வதில்லை.ஒரேமாதிரியான எழுத்து அலுப்பையும்,சலிப்பையும் உருவாக்குகிறது. சில பேச்சாளர்கள்,பட்டிமன்ற வாதி,பிரதிவாதிகள் ஒரே நகைச்சுவைகளை ஒவ்வொரு மேடையிலும் சொல்லி,கையிருப்பு தீர்ந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.ஒவ்வொரு திசையிலும் பயணப்பட்டு புதிது புதிதாக எழுதும் எழுத்தாளர் தான் போற்றப்படுவர்.ஆக,விவாதிக்கவும்,படைக்கவும்,புதிய கற்பனைகளை உருவாக்கவும் வாசிப்பு அவசியமாகிறது.நாமும் எழுத்துகளின் திசைகளை உணரவேண்டுமானால் நிறைய வாசிக்க வேண்டுமென உறுதி கொண்டேன்.எல்லாம் வலையுலகப்படைப்பாளிகளின் உபயம்.

திங்கள், ஜனவரி 11, 2010

என்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்


             சிங்காரச்சென்னையை விட்டுப்போய் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை விஜயம்.குழந்தையாய் நமது பார்வை வேறு.அதுவே வளர்ந்த பின் நம் பார்வை வேறு.சென்னை மாநகர் குறித்து கதைகள்,கட்டுரைகளில் வாசித்த ஒரு பிம்பம்,திரைப்படங்களில் நான் அவதானித்த ஒரு பிம்பம்,பிறரின் பேச்சுவழி எனக்குக்கிடைத்த பிம்பம் இவை எல்லம் கலந்து எனக்குள் எழுந்த பாதிப்புமாய் சென்னை விஜயம்.கணவருடன்,உலா வந்த போது,அந்த நகரின் பரபரப்பு,ஜன சந்தடி,போக்குவரத்து நெரிசல்,நாகரீகப்பெண்கள்,அலட்சியமாக வாகனங்களைக்கையாளும் பெண்கள்,கடைகள் இன்னும் இன்னும் என்னை பிரமிக்க வைத்த விசயங்கள் சென்னையில் அதிகம்.சுற்றுலாத்தளங்கள் அதைவிட ஒருபடி மேலாய்...அதன் பிறகு நான் குழந்தையுடனும் ஒன்பதாவது படித்த என் தம்பியுடனும் வந்து இறங்கிய இடம் கிண்டி.என் கணவரின் அண்ணன் வீடு கிண்டி அம்பாள் நகரில்.நாங்கள் மூன்று சக்கர வாகனம் அமர்த்தி போய்க்கொண்டிருக்க நான் கவனமாக (அங்க ரொம்ப கவனமா இருக்கனும்.இல்லையின்னா காடு மாத்திப்புடுவாய்ங்க) வழியைக்கவனித்து வரும்போது , "ஹல்லோ! என்ன இந்தப்பக்கம் போறீங்க!.சிப்பட் பக்கந்தானே போகணும்" என்றதும் ஓட்டுனர் "அம்மா! பயப்படாம வா!.நானும் புள்ளகுட்டிக்காரன்.ஒன் மாதிரித்தங்கச்சிங்க எனக்கும் உண்டு.எவனோ செய்யுற தப்புக்கு எல்லாரையும் அப்புடி நினக்காதீங்க" என்று வீட்டில் கொண்டுவந்து விட்டு வீட்டுக்கதவைத்தட்டி," அண்ணா தங்கச்சி ரொம்ப பயந்துருச்சு.பாத்துக்கப்பா" என்று விட்டுப்போனார் அந்தச்சகோதரர்.

    அதன் பிறகு சென்னை வந்த போது தனியே சொந்த,பந்தங்களை சந்திக்கப்போனாலும் பேருந்தில் சென்று நடந்து,நடந்தே செல்வது வழக்கம்.ஊரைச்சுற்றியது,பணம் மிச்சம் அதோடு மூன்றுசக்கர வாகன பயம்.2009 ல் சென்னை வந்த போது வில்லிவாக்கம் தோழியும்,குரோம்பேட்டை சொந்தமும் கண்டிப்பாக வரவேண்டுமென கட்டளையிட்ட பின் தவிர்ப்பது கூடாது என்று முடிவெடுத்தேன். கையில் இருப்பது இரண்டு நாள்.என் அக்காவும்,மைத்துனரும் ஒரு நாளை கோவில்கள்,ஆசிரமம் என்று என்னை ஓட்டித்திருப்பி வீடுகொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த வெம்மையும் நெரிசலும் தாங்கவில்லை.(வயசாயிடுச்சோ?)மறுநாள் காலை குறுந்தொலைபேசியில் இருப்பைச்சரிசெய்து குரோம்பேட்டை போனால் போய் இறங்கிய இடம் புரியவில்லை.மேம்பாலங்கள் இடத்தின் அமைப்பையே மாற்ற என்ன செய்யலாம் யோசனையோடு பழம் வாங்கப்போனால் பழக்கடைக்காரர் இது கிலோ நூறு,இது நூத்தி இருவது என்று ஆப்பிளையும்,மாதுளையையும் கை காட்டி விலை சொல்ல நான் நல்ல ரகம் பார்த்து விலை கேட்க அதெல்லாம் ஆப்பிள் 120/ மாதுளை 140/ என, நான் அதில் கை வைக்க,'அம்மா! இதா! நாந்தா சொல்றேன்ல? என்று அதட்ட 'இங்க பாருங்க இஷ்டமிருந்தா வியாபாரம் பண்ணுங்க.இல்லாட்டி நா வேற கடையில வாங்கிக்கிறேன்' என்று அதட்டலாய் சொல்லி நகர ஐய! ஏம்மா கோச்சுக்கிற! இங்க இதுல அதுல கை வைக்குங்க.அப்பறம் ஒண்ணுமே வாங்காதுங்க! அதான்' என்று வழிய நான் வாங்கிக்கொண்டு அவரிடமே வழி கேட்டு விளங்காது மூன்று சக்கர வாகனம் பிடித்து போனால், அந்த அடுக்குமாடி வீட்டில் பெயர்ப்பலகை இல்லாது அடையாளம் காணமுடியாது, தவித்து இறங்கி, வாகனத்தை அனுப்பிவிட்டு அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களே வர நான் நின்ற இடம் அவர்கள் வீட்டு வாசல்.திரும்ப நான் நடந்தே நிறுத்தம் வந்து கோயம்பேடு சென்று பேருந்து மாறி வில்லிவாக்கம் சென்று இறங்கி, தோழி வீடும் கண்டுபிடித்து அளவளாவி திரும்பி வந்து கிண்டி பேருந்தில் அமர்ந்த போது, பிற்பகல் இரண்டு மணி.குறுந்தொலைபேசியை நெடுநாள் தவிர்த்து, நிர்ப்பந்தம் காரணமாகக் கையாளும் எனக்கு இப்போது தான் அதன் அருமை புரிந்தது.அலைபேசி கையில் இருந்தால் உலகமும் உறவுகளும் நம் அருகில்.சிங்காரச்சென்னையில் தட்டுத்தடுமாறாது கொண்டு சேர்த்தது அது.

            பேருந்து முழுதும் சென்னைத்தமிழ் இரைச்சலாய் வழிகிறது.கோயம் பேடு அங்காடியில் பூ வாங்கி அதைப்பேருந்திலேயே கட்டிக்கொண்டு வரும் ஆண்களும்,பெண்களும்.ஒவ்வொரு இருக்கைக்கும் ஒவ்வொருவராய் அமர்ந்து கொண்டு சப்தமாய்ப்பேசும், அவர்கள் பேச்சில் ஊர் வம்பு இருந்தது.கையில் விரைவாகப்பூக்கட்டும் லாவகம் இருந்தது.இரண்டையும் ரசித்தபடி வரும்போது அருகில் இருந்த பூக்காரப்பெண்மணி "யம்மா எந்த வூரு?" என்று கேட்க நான் ஊரைச்சொல்ல வியந்தார். என் வியப்பெல்லாம் இந்தச்சென்னை மக்கள் அத்தனை பேரும் தமிழர்களான நம்மையே "ஊருக்குப்புதுசு" என்று எப்படி இனம் காண்கிறார்கள் என்பது தான்!.ஒரு வேளை முகத்தில் வழிகிறதோ அசட்டுத்தனமும்,அச்சமும்.

நெடும்பயணம்

சிந்தனைகளற்ற பெருவெளியில்
நெடும்பயணம்.
நட்சத்திரங்கள் கடந்த
கோள்கள் கடந்த
நெடும்பயணம்

நான்,நீ என்ற அடர்த்திகளற்ற
காலங்களற்ற,பருவங்கள் கடந்த
உடலற்ற,வெற்று சுவாசத்தின்
நெடும்பயணம்

துக்கங்கள்,தோல்விகளற்ற
வெற்றிகள்,உவப்புகளற்ற
இறப்புகளும்,பிறப்புகளுமற்ற
நெடும்பயணம்

கனவுகளும்,இலக்குகளுமற்ற
வரவுகளும்,இழப்புகளுமற்ற
பாசங்களும், நேசங்களுமற்ற
தானங்களும்,பெறுதலுமற்ற
நெடும்பயணம்

நிசப்தப்பெருவெளியில்
பிரகாச ஒளியும்,அடர் இருளுமற்ற
சுடர் விரிந்த,இயக்கங்களற்ற
பிரபஞ்சப்பயணம்.

பொருள்களின் அடர்த்தியில்
இருப்பின் உறுதியற்ற இவ்வுலகம் துறந்து
பெருவெளிப்பயணம் வேண்டும்
பிரார்த்தனை பட்டியல் இது.

(எல்லாரும் பெருவெளி,பிரபஞ்சம்,இன்னும் என்னென்னவோ பெரிசு பெரிசா எழுதுறாங்களா?.அட..நம்மளும் இப்புடி ஏதாச்சும் எழுதுனாத்தான் பதிவுலகத்துல நம்மளையும் ஏத்துக்குவாக பதிவர் மக்கானு முயற்சி பண்ணுனேங்க.! மூச்சு வாங்குது)

மீண்டெழும் காலம்

ஒரே கூட்டில் அன்றில்களாய்
உறவாடிக்களித்து
உப்பில்லாத உணவையும்
பொய்யாய் ருசித்து
எனக்காக எதுவும் செய்வதாய் உறுதி தந்து
பாதிச்சம்பளத்தில்
பரிசுகள் தந்து
மாலை மல்லிகைக்கு மயங்கவைத்து
உருகி,உருகி என்னை வழியவைத்து
என்
பலவீனங்கள் அத்தனையும்
உனக்கான பலங்களாய் மாற்றி
உன்னை மட்டும் என் உலகமாக்கி
உன்னில் என்னை ஒளித்து வைத்தாய்
என்னில் உன்னை வார்த்துவைத்தாய்.

காலத்தின் மாறுதலில் வேடம் கலைத்து
விவாகரத்து பெற்று
வெவ்வேறு கதவுகள் வழி
விடைபெற்றுப்பிரிந்த காலம் கடந்தும்
மனதில் மீண்டெழுகிறது
திரும்பக்கிடைக்காத உன்னோடான தனிமைப்பொழுதுகள்.

ஞாயிறு, ஜனவரி 10, 2010

தனிமை

பெண் பிறவியின்
ஆகக்கடைசி முற்றுப்புள்ளி
ஆண்மகன் உறவென்ற சமூகச்சடங்கை
சுதந்திரம் வேண்டி
சுயத்தை நிலைப்படுத்த
சராசரிக்கும் மேலாய் என்னை உணர்த்த
சுயம்வரம் தவிர்த்த என் சிந்தனை
கர்வம் தந்தது பருவத்தில்...

துணையுடன்
தோள் உரசி நடக்கும் பெண்களைக் கடக்கையில்,
புன்னகைப்பூக்களை
எச்சிலோடு ஒழுகவிடும்
மழலைப்பூக்களை அள்ள
மனம் துடித்து கரங்கள் நீள்கையில்
வெளிகள் கடந்து வீடு மீள்கையில்
சுவற்றில் மோதி முகத்தில் அடிக்கும் ஏகாந்தமதில்
மனம் வெறுமையில் நிறைகையில்
விரிந்த வானமதில்
ஒற்றை நட்சத்திரமாய் நான்
ஒளிர்கையில்....

மனம்
மறுத்த அபத்தங்களை
மறுபரிசீலனை செய்ய முயல்கிறது.
'இவள் இப்படித்தான்' உறவுகளின் மனங்களில்
படிமக்குறியீடாய் படிந்து போன நான்
எப்படிச்சொல்வது
"எனக்கும் துணை வேண்டும்" என்பதை.

நிலாக்காதல்.

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
வானுக்கும் பூமிக்குமானது.
இடைவெளி குறைக்கும் காரணங்கள்
நம்மிடையே இல்லாத போதிலும்
புரியாத மனது உன்னிலேயே மையம் கொண்டு.

வானவில்லும்,நிலவும்
வசமாகாது தெரிந்தும் கை நீட்டும் மனக்குழந்தை.

சிதறும் எண்ணங்கள்
மறக்கும் உணவு நேரங்கள்

புரிதலும்,அறிதலும் அற்று
புன்னகை சிந்தும் உன்முகம் மட்டும்
பல்கிப்பரவி என்னில்.

முடியும்,முடியும் என்று உசுப்பிவிடும்
மனதுக்குப்புரியவில்லை
உன்னுடைய கனவுகளின் உயரங்கள்.

ஒவ்வொரு மரணத்திற்கும்
அஞ்சலியாய் சிந்தப்படும் ஒரு துளி கண்ணீர்
உன்மீதான காதலுக்கும் சிந்தி கைகழுவியது அறிவு.

மற என்று புத்தி சொல்ல
மறுக்கும் மனது துடிக்கிறது
அன்பு இணையாக முடியாவிட்டால்
அடிமையாய் இருக்கவேனும்..

ஆண் - பெண் நட்பு

          உலகம் தோன்றிய நாள் முதல் ஆணும்,பெண்ணும் ஒன்றாய் வசித்தாலும்,ஆணுக்குப்பிறப்பை பெண் கொடுத்தாலும் இருவரின் பயணப்பாதைகளும் வெவ்வேறு திசைகளில்.இருவரின் உணர்வுகள்,விருப்பங்கள்,வாழ்க்கை பற்றிய வரையறைகள் அத்தனையும் வெவ்வேறு.சங்க காலத்தில் ஆண்,பெண் நட்பை இலக்கியங்களில் காண்கிறோம்.அது கடந்து என்று பெண் போகப்பொருளாகவும்,போரின் வெற்றியின் மமதையில் நாடு கடத்தப்படும் வென்ற சொத்துகளாகவும் கருதப்பட்டாளோ, நாடு அடிமைப் பட்டபோது பிறரிடம் தங்கள் பெண்களைக் காப்பாற்ற பூட்டப்பட்டாளோ அன்றே பெண்ணடிமை கருவாகி,உருவாகி,விஸ்வரூபமாகி, அவளை உடன் கட்டையேற நிர்ப்பந்திக்கும் கொடுமைகளும் நடந்தேறிய புண்ணியபூமி இது.சமூக அக்கறை கொண்டோர்,தமது வாழ்நாளை பெண்ணடிமை தீருமட்டும் போராடிச்சென்றதும் நாம் அறிவோம்.அடிமைப் பட்ட பெண்குலம் தன் அடிமைத்தளை அறுக்க போராடிப்போராடி இன்று ஒரளவு வென்றும் காட்டிவிட்டது. என்று உலகமயமாக்கலின் தாக்கத்தில் உலகமெங்கும் பயணப்பட இந்தியப் பெண்கள் தலைப்பட்டார்களோ அன்றே ஆண்,பெண் நட்பு தவிர்க்கமுடியாததாகி விட்டது.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,ஒரு ஆணுக்கும்,ஆணுக்கும் உள்ள நட்பைப்போல,ஒரு பெண்ணுக்கும்,பெண்ணுக்கும் உள்ள நட்பைப்போல இயல்பான நட்பாக மலர்ந்திருக்கிறதா என்பதற்கு நட்புக்கொண்டோர் தான் பதில் சொல்ல வேண்டும்.இனக்கவர்ச்சி தாண்டி, அப்படி ஒரு இயல்பான நட்பு இருந்தால் தான் நம் சமுதாயம் உயர்வு என்கிற அடுத்த தளத்தை நோக்கி பயணப்படுகிறது என்று அர்த்தம்.


       சில ஆண்களின் கற்கால வேட்டை புத்தி கண்களில் தெரியும்.ஆனால் கண்ணிய வேடமிடும்.ஒவ்வொரு ஆணுடன் பழகும் போதும் இயல்பற்று ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும்.வேற்று கோள்களுக்குப்பயணம் செய்யும் இந்த புது யுகத்திலும் பெண்ணை அவளது உடல் தாண்டிச்சிந்திக்க நாம் கற்றுக்கொடுக்கவில்லை.ஒரு பெண்ணை அவளது உணர்வுகளோடு,பின்புலத்தோடு பார்த்து,உண்மையான தோழமை கொண்டாட நம் சமுதாயம் கற்றுக்கொடுக்கவில்லை.உண்மையான தோழமையோடு பழகும் சிலரையும்,வேட்டை புத்திகொண்ட பலர் 'நபும்சகர்கள்' என்று விமர்சிக்கப்படும் நிலை தான் இன்றுள்ளது.ஆண்மை எனப்படுவது பிறன் மனை விழையாமை.ஆண்மை எனப்படுவது உரிமை உள்ள பெண்ணிடம்,விருப்பமுள்ள பெண்ணிடம் மட்டுமே உறவுக்கு மனுப்போடுவது. தோழமை என்று நெருங்கிப்பழகும் ஒவ்வொருவரிடமும் ஒரு பயத்துடன் பழகும் நிலை தான் இன்று.திருமணமே வேண்டாம் என்றிருந்த ஒரு பெண் இந்தக்கொடுமைகளைப் பொறுக்கமுடியாது திருமணம் புரிந்தார்.ஒரு நேர்முகத்திற்குச்சென்ற ஒரு பெண்ணிடம் அறுபதுகளில் இருந்த தமிழ்நாட்டில் இருந்து மாற்றல் வாங்கிவந்த அந்தத்தமிழ் அதிகாரி ,"நீ வேலைக்கு வரவேண்டாம்.சம்பளம் வீடு தேடிவரும்.ஆனால்..." என்று இழுக்க அந்தப்பெண் ஓடிவந்தவர் அழுத அழுகை இன்றும் கண்களிலேயே இருக்கிறது.ஒரு பெண்ணை மடக்குவதா, ஒரு ஆணின் ஆண்மைக்கு அழகு? எத்தனை நிர்ப்பந்தம் ஒவ்வொரு பெண்ணுக்கும்?பரஸ்பரம் மதித்தல்,பரஸ்பரம் தோள்கொடுத்தல்,பரஸ்பரம் நம்பிக்கை கொடுத்தல் இதுதானே நல்ல தோழமையை,நட்பை உருவாக்கும்.

          அந்தமானில் சமூகச்சீரழிவுகள் நிறைந்து கிடக்கின்றன தான்.ஆனால் விருப்பமற்ற பெண்களை விரட்டி வேட்டையாடுவது,பேருந்துகளில் சீண்டுவது (பேருந்துகளில் ஆண்,பெண் பேதமின்றி அருகருகே அமர்ந்து செல்வோம்.அநாகரீகமாக நடந்து கொள்ளும் பயணிகளைக்கணக்கெடுத்தால் அது உயர்ந்த நாகாரீகத்தமிழினத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கும் என்பது தான் வேதனை)விரசமான குறுஞ்ச்செய்திகள் ,மின்னஞ்சல் அனுப்புவது,இதெல்லாம் கிடையாது.

 இன்றைய சூழ்நிலையில் ஆண்,பெண் தோழமை தவிர்க்கமுடியாதது.பெண்ணை மதிக்காத சமூகம் உயரமுடியாது.ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஆபரணங்கள் பார்த்து ஒதுங்கிச்செல்லச்சொல்லிக்கொடுத்தது நம் சமூகம்.குடும்ப உறவுகளைச்சீரழிக்கும் நட்புகள்,பிறன்மனை விழையும் நட்புகள்,உள்ளொன்று வைத்து புறமொன்று பழகும் எதிர்ப்பாலின நட்புகள் தவிர்க்கப்பட்டால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கும் நம் வாரிசுகளுக்கும் திரும்பக்கிடைக்கும் என்பது உலக நியதி.அடுத்த பெண்களை மதிக்கத் தெரியாத ஆண்களின் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் இல்லையா? அந்தப் பெண்களும் மதிக்கப்பட வேண்டுமெனில் ஒட்டுமொத்தப் பெண்களையும் மதிக்கப்பழகவேண்டும்.பெற்றோர் ஒவ்வொரு ஆண்குழந்தைக்கும் அதைச்சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு உரிமையற்ற பெண்ணைக்கண்டதும் இழிவான எண்ணங்கள் ஒரு ஆணுக்குத் தோன்றினால் அவர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவரேயன்றி ஆண்மைமிகுந்தவர் என்று கொண்டாடமுடியாது.அழகை ரசியுங்கள்.பூங்காவனங்களின் பூக்களை ரசிப்பதில்லை அப்படி! ரசனை உள்ள மனதில் ஈரம் இருக்கும்.ஈரமுள்ள மனது தான் ரசிக்கும் எந்த அழகையும் காயப்படுத்த விரும்பாது.நமது பாவங்களுக்கு பாரம் சுமக்கும் முதுமையில் உறுத்தலின்றி வாழவேண்டுமெனில் பருவகாலத் தவறுகளைத்தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.


  அந்தமானைப்பொறுத்தவரையில் பள்ளிக்குழந்தைகள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இடையில் நல்ல,விகல்பமில்லாத நட்பு முறை இருக்கிறது.ஆண்,பெண் பேதமின்றி இயல்பான நட்பு,சகோதர உறவாக மலர்கிறது.பல்வேறு கலப்புக்கலாச்சாரம்,ஊடகங்களின் தாக்கம்,கலப்புமணம் மலிந்த பகுதி என்பதால் அறியாமை காரணமாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற போக்கு இருந்தாலும் கூட தாயகத்தை விட சுதந்திரமான,சுயம் உணர்ந்த நட்புமுறை நிலவுகிறது.

சனி, ஜனவரி 09, 2010

புத்தகங்கள்


            காலச்சரிதலில் காணாது போனதில், மாறிப்போனதில் புத்தகம் படிக்கும் பழக்கமும் ஒன்று.எழுத்தாளார்கள் இறைவனாகவும், அவர்களின் எழுத்துக்களை வரங்களாகவும் போற்றப்பட்ட,கொண்டாடப்பட்ட காலம் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது.நல்ல எழுத்துக்கள் நமது வாழ்க்கையை சீராக்கி முன்னேற்றப்படிகளில் ஏற்றிவிடும்.எங்களின் பள்ளிக்காலத்தில் எங்கள் வீட்டில் வாங்கப்பட்டது தினத்தந்தி,ராணி,ராணிமுத்து.தினத்தந்தி என் அப்பா கடை அடைத்து விட்டு இரவு வரும்போது கொண்டுவர காலைச்செய்தியை இரவில் தான் படிப்போம்..ராணியும்,ராணிமுத்தும் என் அம்மா படிக்க.நாங்கள் என் அம்மாவின் முன்னால் அட்டைப்படத்தின் நாயகிகளை மட்டும் தான் ரசிக்கமுடியும்."இதெல்லாம் படிச்சா புள்ளைக கெட்டுப்போய்டுவாக" என்ற எண்ணம் என் அம்மாவிற்கு.(கெட்டுப்போறவுக புத்தகம் படிச்சுதான் கெட்டுப்போகணுமா?) அதனால் என் அம்மாவிற்குத் தெரியாமல் படிப்பேன்.தெரிந்தால் உச்சந்தலை எரியும் படி குட்டு விழும்.என் தங்கைகள் திரும்பிக்கூடப்பார்க்கமாட்டார்கள். என் அம்மா சொல்வது வேதம் அவர்களுக்கு.கடையில் பொருட்கள் கட்டிவரும் பேப்பர்களை பத்திரமாக மடித்து வைத்து நேரம் கிடைக்கும் போது படிப்போம். சிறிது நாள் கழித்து ராணி முத்து நிறுத்தப்பட்டது.அது ஒன்றும் பெரிய இழப்பில்லை. அமுதா கணேசன்,லக்ஷ்மி இவர்களின் எழுத்துக்கள் எல்லாம் பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை.இவர்களின் கதைகள் தான் ராணிமுத்துவில் அப்போது அதிகம் வந்தது.அதன்பிறகு பள்ளித்தோழிகள் எனக்கு குமுதம்,ஆனந்த விகடன்,சினிமா எக்ஸ்ப்ரஸ், மாலைமதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த, அதன் மூலம் தான் திரைக்கு வரும் படங்கள் திரைநட்சத்திரங்கள்அறிமுகம்,சிவசங்கரி,இந்துமதி,அனுராதாரமணன்,பாலகுமாரன்,சுஜாதா,வாசந்தி ஆகியோரின் எழுத்துக்கள் ,புதுக்கவிதைகள் எல்லாம் படிக்க வாய்த்தன.எனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் அதிகம் என்பதால் படிக்கும் கதைகளின் பெயர்கள்,கதைக்கரு,வசனங்கள்,துணுக்குச்செய்திகள் மனதில் பதிந்து விடுவதோடு,கொஞ்சம் விவாதிக்கவும் செய்வேன் என்பதால், தோழியர் கொஞ்சம் அசர ஒரு மேதாவித்தனம் வந்தது.

 அந்த மேதாவித்தனம் கல்லூரியில் வேலை செய்யவில்லை.கிணற்றுத்தவளையாயிருந்த காலம் போய்,குளம் தேடி வந்ததும் இருந்த இருப்பு போதாது போக கல்லூரி நூலகம் கைகொடுத்தது.கல்லூரிப்படிப்பிற்கு எங்கள் ஆயா வீட்டிற்கு வந்துவிட்டதால் கொஞ்சம் தைரியமாக அக்கம் பக்கம் புத்தகம் வாங்கி பாடப்புத்தக்த்துக்குள் வைத்து படிப்பேன்.ஒருநாள் என் ஆயா அருகில் வந்து பார்த்துவிட்டு 'என்னடி படிக்கிற?' என்றார். 'ம்.. இது பாடபுக். தெரியல' பதில் சொன்னேன்.'இல்ல படம் போட்டிருக்கே அதுதான் கேட்டேன்' என்றவர்,'அது ஒண்ணுமில்ல.அதெல்லாம் விளக்கப்படம்,உங்களுக்குப்புரியாது'என்றதும் 'சரி படி' என்று சொல்லிவிட்டு அவர் வேலையைத்தொடர்ந்தார்.ஆனால் சரியாக நான் அந்தப்பக்கம் போனதும் அந்த நாவலை எடுத்துக்கொண்டு போய் நான் யாரிடம் புத்தகம் வாங்கிவந்தேனோ அவரிடமே கொண்டு போய் 'என் பேத்தி இந்தப்புக்குப்படிக்கிறா ஆச்சி,படிக்கிற புக்கா?' என்று கேட்க அவர்,'இது நல்ல கத அக்கா.நாந்தான் அவளுக்கு குடுத்தேன்' என்றதும் சத்தமில்லாது வந்துவிட,இதை அறியாத நான் மறுபடி கேட்ட போதும் அதே பொய்யைத் திரும்பச்சொல்ல மொத்து விழுந்தது.'இந்த திருட்டு வேல எதுக்கு செய்யற! உன்ன எதுல நம்புறது?' என்று சொல்லிவிட்டு,'தொல படி' என்று சொல்ல அன்று முதல் எனக்கு அடைத்துவைத்திருந்த ஒரு கதவு திறந்தது போல் இருந்தது.எங்காவது கோவிலுக்குப்போனால் 'பூவாங்குற காசுக்கு புக் வாங்கிக்குடுங்க.பூ சத்த நேரத்துல வாடிப்போயிடும்.புக்குன்னா அப்புடியே இருக்கும்' என்று கதைப்புத்தகம் வாங்குவேன்.திருமணம் ஆனதும் எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஒரு வானமே எனக்குத்தரப்பட்டது போல் உணர்ந்தேன்.இன்றும் என் வருமானத்தில் ஒரு பகுதி புத்தகம் வாங்க.

      திரு.ரவி தமிழ்வாணன் அவர்கள் அந்தமானில் தமிழர் சங்கப்பொன்விழாவில் புத்தகக்கண்காட்சி நடத்தினார்.முதன்முதலில் என் அபிமான எழுத்தாளர்களின் நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள்,கம்பராமாயணம் முழுத்தொகுப்பு என்று எதைவிடுவது,எதைவாங்குவது என்ற குழப்பமில்லாமல் விரும்பியது அனைத்தும் வாங்கினேன்.படிக்கப்படிக்க என் மனதில் பல சன்னல்கள் திறந்தன. வீடு வரும் உறவுக்கூட்டம் புத்தகங்களைப் பார்த்து திகைத்தது."காசச்சேரு.புத்தகம் எப்ப வேணா வாங்கலாம்." அறிவுரை சொன்னது.என் கணவர்,'அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், நீ விடு' என்றார்.சுனாமி வந்தபோது 'ஐயோ! இந்தப்புத்தகமெல்லாம் தண்ணில போயிருமே' நான் பதறியதைப்பார்த்து படித்த புத்தகங்களை, புத்தக அலமாரியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார் என் கணவர்.இன்றும் புத்தகம் சேமிப்பதுதான் வேலை. நாம் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் என்று என் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக்கொடுத்தால் ," ஆமா! சுத்த போர்" என்கிறார்கள்.

  சிலர் காலைக்காபியுடன் செய்தித்தாள் படிப்பது,சிலர் பேருந்துப்பயணங்களில் புத்தகம் படிப்பது,பெண்கள் ஓய்வு நேரங்களில் புத்தகம் ஒன்றையே பொழுதுபோக்கவும்,ஆக்கவும் படித்த காலமெல்லாம் போய், ஓய்வு நேரங்களை தொலைக்காட்சியும்,குறுந்தொலைபேசி அரட்டைகளும் ஆக்கிரமிக்க, ஒரு சிந்தனையற்ற காலத்தை நோக்கி பெண்குலம் பயணப்படுகிறதோ என்ற பயம் எழுகிறது.நல்ல எழுத்துக்கள் நம் அறிவுக்கண்களைத் திறந்துவிடுகிறது.புத்தகங்கள் நமது கற்பனைகளுக்கு வண்ணம் தரும்.சிந்தனைகளுக்கு சிறகு தரும்.எழுத்துக்கள் நமக்குள் விதைக்கும் விளைவுகளைக் காட்சிகளால் விதைக்கமுடியாது.நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களைப்போல. நண்பர்களே! வீடு கட்டுகிறீர்களா? தொலைக்காட்சிக்கு இடம் ஒதுக்குவது போல நூல்களுக்கும்ஒரு  இடம் ஒதுக்குங்கள்.படிக்கும் பழக்கம் உன்னதமான பழக்கம்.உலகில் விளைந்த புரட்சிகள் அனைத்திற்கும் விதைகள் புத்தகங்கள்.திருக்குறள்,சங்க இலக்கியம்,கம்பராமாயணம்,பெரியார்,தாகூர்,லெனின்,கார்ல்மார்க்ஸ்,ஷெல்லி,வோர்ட்ச் வொர்த்,ஷேக்ஸ்பியர் இன்னும்,இன்னும் எத்தனையோ பெரியவர்களின் எழுத்துக்கள் விதைத்த விதைகளின் வீரியங்களை,அதில் விளைந்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.படைப்பாளிகள் அத்துணை பேருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது புத்தகங்கள்.நமது அறியாமை நீக்கி ஒரு மனமுதிர்வை அளிப்பது புத்தகங்கள் என்பதை புத்தகம் படித்து வளர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்கள்.அந்தமானில் ஒரே ஒரு கடைதான் தமிழ் பத்திரிக்கைகள்,வார,மாத இதழ்கள்,நாவல்கள் பல பதிப்பக நூல்களை விற்கும் கடை.அந்தக்கடையின் உரிமையாளர் கூறுகிறார்."அம்மா சி.டி வாங்குற அளவு நம்ம மக்க புக் வாங்க மாட்டேங்குறாங்க.ஸ்டாக்கப் பாருங்க! நாங்க எப்புடி பிசினஸ் பண்ண முடியும்" என்று.புத்தகம் படிப்பதும் இன்று காலம் கடந்த பழமையாகிப்போனதோ?

வெள்ளி, ஜனவரி 08, 2010

யசோதராவும்,ராகுலனும்

காலங்கள் சரிந்தும்
யுகங்கள் கடந்தும்
போதிமரத்தடியில் ஞானம் பெற்றவன்
புகழ்பாடுகிறது பூமி.

ஒற்றை இரவில்
முகாந்திரம் ஏதுமற்று
வாழாவெட்டியான
யசோதராவிடம்
மிச்சமில்லையோ
மேனகைத் தந்திரங்கள்.

அப்பனின் அண்மை இழந்து
அன்பு,ஆதரவு இழந்த
ராகுலனின் நினைவு வந்தால்
கூப்ப மறுக்கும் கரங்கள்
புத்தனின் திருவுருமுன்...

பூமியின் புத்திரர்களே!
ஒற்றை இரவில்
ஒரே வாரிசைத் திசைதிருப்பும்
மந்திரமனைவியரின் பூமியில்
சித்தார்த்தனை புத்தனாய்த்தந்தவர்களை
சிந்தியுங்கள்
புத்தனின் முன் கைகூப்பும் கணங்களில்,
ஒற்றை மணித்துளியேனும்....

எண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012


பற்றி எரிகிறது பூமி
வெடித்து சிதறுகிறது மலைகள்
கொந்தளித்து ஊரழிக்கும் கடல்கள்
வானம் உடைந்து பூமியில் விழும் இடிகள்.
மேகம் நீலம் இழந்து செந்நிறம் பரப்பி...
என்ன நடக்கிறது?
எவருக்கும் புரியவில்லை.
ஆருடம் சொல்லும் ஜோசியரும்
அமைதி தரும் ஞானிகளும்
எங்கே போயினர்?
மக்களின் வாய்கள் அழுகையில் கோண
கண்களில் பிரதிபலிக்கிறது
கேள்விகள்,கனவுகளை மீறி...

காலணி கழற்றி
இல்லம் நுழைகையில்
செவிப்பறைகிழிக்கும் ஓலங்கள்
"2012ல உலகம் அழியப்போகுதாம்.
அதுதான் இந்தப்படம்"
என்கிறான் பிஞ்சுமகன்,
கண்கள் விரிய
மனத்தின் திகில்
முகத்தில் இருள்
மொழியில் நடுக்கம்
அழிவைக்கூட கற்பனை செய்து
காசு பண்ணும் கூட்டம் ஒன்று
எண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்
எண்ணியது நடக்கும் என்பதை மறந்து...

என் கேள்விக்கு யாரிடம் பதில்

தேவதைகளும்,ரதிகளும் நீராடிய
நதியோரங்கள்
பூக்கள்,நாணல்களின் படுகைகளுடன்
அலையாடிய மணல்விரிப்புகள்
பல்லக்கு,பரிவாரங்களுடன்
தெய்வத்திருவுருக்கள் நீராடிய
நாகரீகத்தொட்டில்கள்
நமது நதிக்கரைகள்

நாகரீகங்கள் தோன்றியது
நதியோரம் என்றது போய்
கழிவுநீர்க் கால்வாயானது
கங்கைகள்.
பூக்களின் இடத்தில் குப்பைகள் குவிய
புண்ணிய நதிகள் பல
புனலோடிய அடையாளங்களுடன்.
பசுமை மறந்த தாழைமடல்களில்
பறந்தனைந்த பிளாஸ்டிக் கழிவுகள்

பகீரதனின் வரம்
பூமியில் கங்கை எனில்
கங்கையின்
கழிவுகள் அகற்ற
எந்த தேவனிடம் வரம் கேட்கலாம்?
எப்படி தவம் இருக்கலாம்?
யாரிடம் இருக்கிறது பதில்கள்!

வியாழன், ஜனவரி 07, 2010

குடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்




கரூர் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜே. உமாமஹேஸ்வரி அவர்கள் பேச்சு - கரூர், ஜன.1 – 2010. தினத்தந்தி
" பெண்கள் வீட்டின் சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டும்.


அதே போன்று நமக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று வருமானத்தை பெருக்கி கொள்ளவும் வேண்டும். அதிக அளவில் வருமானம் இல்லாத கணவனிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கி கொடுக் கும்படி வற்புறுத்தக்கூடாது.கணவன்களிடம் எப்போதும் சண்டை போடக் கூடாது. சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.கற்றுக்கொள்ள வேண்டும்
ஒரு குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது. இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்."


  இந்தக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.நம்மவர்கள் சொல்வார்கள்."அவன் ஆம்பிளைடீ ஆயிரம் குட்டிச்சுவர் தாண்டுவான்.நீ பொம்பள. நீ ஒழுங்கா,பொறுமையா இல்லையின்னா குடும்பம் குட்டிச்சுவராப்போயிடும்" என்று.இந்த மொழியை மேலோட்டமாகப் பார்த்தால் ஆணாதிக்கத்தை இவர்கள் வழிமொழிகிறார்களோ என்று தோன்றும்.ஆனால் கொஞ்சம் சிந்தித்தால் இது சரி என்பது புலப்படும்.ஒரு ஆண் கெட்ட வழி போனால் அது அவனது அழிவோடு முடியும்.ஒரு பெண்ணின் தவறு அவளின் வம்சாவளியை,அவளது பரம்பரையை தடம் மாற்றிவிடுகிறது.அதனால் தான் நம் முன்னோர் பெண்ணுக்கு பொறுமையும், அன்பும் அணிகலன்கள் என்றார்கள்.இன்று விட்டுக்கொடுப்பதற்கும்,அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் விவாகரத்துகள் பெருகிவிட்டன என்கிறார் ஒரு வழக்கறிஞர்.குடும்ப வன்முறைகள் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. என்று மதுவும்,சாராயமும் தெருக்களில் ஓட ஆரம்பித்ததோ அன்றே குடும்ப வன்முறைகள் தலைவிரித்து ஆடத்தொடங்கின.பெண்களும் பெண்ணீயம் பேசி வீடுகளை சதா போர்க்களம் ஆக்கினால் குழந்தைகளின் குழந்தைப்பருவம் சிக்கலாகிவிடுகிறது.வீடுகளில் பெண்ணீயமும்,சமத்துவம் பேசுவதை விட அடுத்த தலைமுறை ஆண்களை நல்லமுறையில் உருவாக்கலாமே!.ஆண்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தார்களா? நமக்குள்,நம்மில்,நமது ரத்தத்தில் இருந்து உருவானவர்களே! ஒவ்வொரு தாயும் தன் கணவனிடம் தான் எதிர்பார்த்ததை தன் மருமகளுக்குக் கொடுக்கச்சொல்லிக் கொடுத்தால் அடுத்த தலைமுறை நல்ல வழி நடக்க ராஜபாட்டை உருவாகிவிட்டது.

          நம் பெண்கள் "நம்ம பட்ட பாடெல்லாம் அவளுக படுறாளுகளா?" என்று மல்லுக்கட்டினால் சமுதாய மறுமலர்ச்சி எப்படி முடியும்? நீயா? நானா? என்பது பட்டிமன்றங்களுக்கு சுவையானது.குடும்பத்தில் எழுந்தால் தினம் போர்க்களம் தான். எப்படித்தான் திருத்துவது? அன்பால் முயலுங்கள்.முயற்சி செய்யுங்கள்.முயற்சியைத்தொடருங்கள்.எது ஒன்றை மாற்ற முடியாதோ? அதற்கு மெனக்கெடுவது விழலுக்கு இறைத்த நீரில்லையா? திருத்த முடியவில்லையா? அடுத்து நடக்க வேண்டியதை யோசித்து,குழந்தைகள் மேன்மையடையும் வழிகளைத்தேடுவதுதான் அறிவுடைமை.எப்போதுமே பிரச்சினைக்கு வெளியில் இருந்து விமர்சிப்பது எளிது.உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் வலியும் தாக்கமும் புரியும்.உண்மைதான்.ஆனால் ஒரு நாள் வெளிவந்துதானே ஆகவேண்டும்.வலியைச்சொல்லி பரிதாபம் தேடுவதை விட எழுந்து நிற்பது தன்னம்பிக்கையின் அடையாளம். அந்தமானில் நிறைய ஆண்கள் சிறந்த குடிமகன்கள்.நல்ல சம்பளம் வாங்கும் நிறைய வீடுகளில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.ஒரு முறை என் கணவரின் அலுவலகதில் லேபர் கமிஷனர் திருமதி.விஜயலெக்ஷ்மி அம்மா அவர்கள், அவர்களது பணியாளர் குடியிருப்பில் எங்கள் பெண்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கடை திறக்கும் வாய்ப்பு நல்கும் விசயம் குறித்துப் பேச வரச்சொல்ல நான் போயிருந்தேன். என்னைப்பார்த்ததும், நான் வணக்கம் சொன்னதற்கு பதில் வணக்கம் சொல்லக்கூட மறந்து உங்கள் மனைவியா? வாவ்.. என்றார் இந்தியில்.வீடு வந்ததும் என்ன? என்னப்போய் உங்க மேடம் வாவ்ங்கறாங்க! என்றேன். என் கணவர்,"ஆமா! 3500/ ரூபா சம்பளம் வாங்குறவன் மனைவி இவ்ள நீட்டா இருக்கியேன்னுதான்.(அப்போது என் கணவருக்கு பணி நிரந்தரம் ஆகாததால் குறைவான சம்பளம்) 18,000/, 20,000/ சம்பளம் வாங்குறவன் மனைவிகள்லாம் குடும்பத்தோட அரைப்பட்டினி,கொறைப்பட்டினியா வந்து பட்ட தலையும்,கிழிஞ்ச உடையுமா வந்து புருஷன் சம்பளத்துள பாதிய எழுதிக்குடுத்து வாங்கிட்டுப்போவாங்க.அப்புடிப்பாத்துப்பாத்து பழகினதுனாலதான்" என்றார்.இங்கு குடி மட்டுமல்ல,எஞ்சிய பணத்தை சீட்டாடுவர்.இப்படி இவர்களுடன் பெண்கள்   போராடி குழந்தை வளர்த்து,குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு வந்த குடும்பங்கள் அதிகம்.அழிந்த குடும்பங்களும் உண்டு. இந்த விதிகளை யார் மாற்றுவது? இன்னும் சில ஆண்கள் சம்பளம் வாங்கியதும் மதுக்கடைகளில் முன்பணமாகத்தந்துவிட்டு எஞ்சியதை வீட்டில் கொடுக்கிறார்கள்.கல்வி இல்லாத பெண்கள் தங்கள் அறியாமையினால் சம்பளத்தில் அரசு விதிகளின் படி உரிமை நிலை நாட்டத்தெரியாது துன்பத்தில் உழலுகிறார்கள்.


          இந்தக் கொடுமைகளுக்குத்தீர்வு பெண்களை நன்றாகப்படிக்க வைப்பது.  

படிப்பு வராத பெண்களுக்கு கைவேலைகள் கற்றுக்கொடுத்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கவைப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது ஆகியன.படித்த பெண்கள் ஒளிவிளக்குகள்.இந்த விளக்குகள் எந்த இருளையும் ஓட்டி விடும். முடியாத பட்சத்தில் தன் உரிமைகளைக்கோரி வெளியில் வருவதுதான் புத்திசாலித்தனம்.சில மிருகங்களிடம் குடியிருக்க முடியாது.இங்கு நிலை இப்படி இருக்க, தாயகத்தில் சட்டங்களை தவறாகப் பயன் படுத்தும் பெண்கள் அதிகமாவது நல்ல சமுதாயத்திற்கு அழகல்ல.கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஒத்துப்போனால் தானே ஒளிபெறும் குடும்பம்.மன ஆரோக்கியம் பெற அமைதியான குடும்பங்கள் தானே ஆதாரம்.பொய் என்னும் ஒற்றைக்காலில் எத்தனை நாள் நிற்க முடியும்? வழக்குகள் தொடுப்பது வாழ்க்கைக்கு உதவுமா? மனிதன் கண்டுபிடிப்பில் உங்களுக்குப்பிடித்தது எது என்று விகடன் மதன் அவர்களை ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கு அவர் சொன்ன பதில் "கணவன்,மனைவி".நம் வீடு வரும் உறவுகள் எல்லோரும் ஒன்றுதான். நாம் புகுந்தவீட்டு உறவுகளை மதித்தால் தானே நம் துணையும் பிறந்த வீட்டு உறவுகளை மதிப்பார். மதித்தல் இல்லாத உறவுகளை எப்படிப் பேணமுடியும்.அறிவார்ந்த இனத்தின் பிரதிபலிப்புகள் நாம்.விருந்தோம்பல்,பொறுமை,புத்திசாலித்தனம் கை கொண்டு குடும்பம் என்ற கோவிலைக்கட்டிக்காப்போம்.குடும்பக்கோவில்கள் நமது அடையாளம்.அமைதி தரும் பிருந்தாவனம்.அதைக்காப்பதுதான் சிறந்த யோகம். தியானம்.