சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 17, 2010

ஒரு ஒலி மொழியானது.

வரலாற்று ஏடுகளைப்புரட்டினால் அந்தமான் தீவுகளில் ஆதியில் எண்ணற்ற பழங்குடியினர் வசித்துவந்து காலப்போக்கில் அழிந்து இப்போது ஆறு இனத்தவர் மட்டுமே வாழ்கின்றனர்.அழிந்த பழங்குடி மக்களில் ஓரிரு இனங்கள் மிகச்சிறுபான்மையினராக இருந்துவந்திருக்கிறது.6,800 உலக மொழிகளில் பத்து மற்றும் இருபது பேர் மட்டுமே பேசும் மொழிகள் 184.மொழியியல் வல்லுனர்களின் கருத்துப்படி அந்தமானில் பழங்குடி மக்களில் ஒரு குடும்பம் மட்டுமே பேசும் மொழிகள் - ஐந்து அல்லது ஆறு பேர் மட்டுமே பேசும் மொழிகள் இருக்கிறது.அந்தக்குடும்பம் அழிந்து போகும் போது அந்த மொழியும் அழிந்துவிடுகிறது என்கின்றனர்.இதை செய்தியாகக் குறிப்பிட்ட பொங்கல் விழா சிறப்பு விருந்தினர் சொல்லின் செல்வர்.திரு.கம்பம்.P.செல்வேந்திரன் அவர்கள் அமெரிக்க எழுத்தாளர் பிராட்மன் அவர்களின் ஒரு சிறுகதையைப் பகிர்ந்து கொண்டார்.


"இரண்டாம் உலகப்போரில் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது. அந்த நாகசாகியில் இருந்து அந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.அணுகுண்டு வீசப்பட்ட அந்த நாகசாகியில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது.அந்தக்குழந்தை எடையே இல்லாமல் பிறக்கிறது.ஒரு அலுமினியத்தகட்டில் பென்சிலால் படம் வரைந்தால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது அந்தக்குழந்தை.அது உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு நம்பிக்கை அதன் இதயம் மெதுவாக,மிக மெதுவாகத்துடிக்கிறது.மருத்துவர் வந்து பார்த்து,குழந்தையை சோதித்து உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.உங்கள் குழந்தையை வளர்த்து வாருங்கள், என்கிறார்.பெற்ற தாய் அந்தக்குழந்தையை பொத்திப்பொத்தி வளர்ப்பதில் ஒரு தவமே இருக்கிறாள்.முழுக்கவனத்தையும் குழந்தையின் மீதே வைக்கிறாள்.குழந்தை ஒரு நாள் திடீரென்று ஒரு விசில் சத்தத்தோடு ஒரு ஓசை எழுப்புகிறது.பயந்து போன அந்தத்தாய் மருத்துவரை அழைக்க அவர் வந்து சோதித்துப்பார்த்து விட்டு பயப்படாதீர்கள்.அந்தக்குழந்தை எழுப்பிய விசில் சத்தம் ஒன்றுமில்லை.உங்கள் குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது, என்கிறார்.ஒரு விசில் சத்தத்தை வைத்து மருத்துவர் சொல்கிறார்,உங்கள் குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது என்று.  அந்தத்தாய்க்கு பெரிய ஆச்சர்யம்.ஒரு விசில் சத்தம் என்றைக்கு மொழியானது? ஆனால் மருத்துவர் பேசுகிறது உங்கள் குழந்தை என்கிறாரே என்று எண்ணி அந்த விசில் சத்தத்தை மிகக்கவனமாகக் கேட்டாள்.அந்த விசில் சத்தத்தை வைத்தே அனுபவத்தில் அந்தக்குழந்தை பாலுக்கு அழுகிறதா?நோய்க்கு அழுகிறதா? என்று உணர ஆரம்பித்தாள்.அந்தக்குழந்தை விசில் சத்தம் எழுப்புகிற போது தாயும் ஒரு விசில் சத்தம் போட்டுப்பார்த்தாள்.இந்த விசில் சத்தத்தை அந்தக்குழந்தை புரிந்து கொள்கிறது. தாயும் குழந்தையும் அந்த விசில் சப்தத்தாலேயே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.தாயும் குழந்தையும் பேசிக்கொள்கிற அந்த விசில் சப்தத்தை வீட்டிலேயே வாழ்கிற அந்தக்குழந்தையின் தந்தையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.அந்த வீடு விசில் சப்தத்தாலேயே ஒரு புதிய மொழியை உருவாக்கிக்கொண்டு வாழ ஆரம்பித்தது. ஒரு நாள் அந்தக்குழந்தை திடீரென்று மரணத்தைத் தழுவியது.குழந்தையின் மரணத்தோடு அந்தக்கதை முடிந்து போகிறது.கதையின் முடிவை கதாசிரியன் எழுதுகிறான் இப்படி ,’இப்போதெல்லாம் அந்த வீட்டில் யாரும் யாரோடும் பேசிக்கொள்வதில்லை.ஆனால் அந்த வீட்டில் இருந்து எப்போதாவது விசில் சப்தம் கேட்கிறது’"என்ன அற்புதமான சிறுகதை.ஒரு மூன்று பேர் ஒரு விசில் சப்தத்தை வைத்து வாழ்ந்துவந்த அந்தக்கதையில் இன்னும் படைப்பாளி வாழ்கிறான்.எண்ணங்களை,உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ளும் ஒரு மொழி, ஒரு ஓசையினால் மட்டும் நிரப்பமுடியும்,ஒரு ஓசையைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு கதையை நெய்ய முடியும் என்று சொல்கிற நெகிழ்ச்சியான இந்தக் கதையைக் கேட்ட போது தான் கேள்வி இன்பம் புரிகிறது. ஒவ்வொரு இலக்கிய வாதியும் தங்கள் வாசிப்பின் வழி கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்ளும் போது ஒவ்வொரு பாதிப்புகளைத் தன்னையும் அறியாமல் கேட்பவர் மனதில் விட்டுச்செல்கிறார்கள்.வரலாற்றுப் பக்கங்களில் புதைக்கப்பட்ட சோகங்களின் மிச்சங்கள் இன்னும் ஹிரோஷிமாவிலும்,நாகசாகியிலும் இருக்கிறது என்றாலும் கூட அந்த சோகங்களுக்குப்பழகிப்போன அந்த மக்களைவிட அதைக்கற்பனையாய் உணரும் நமக்கு இன்னும் மனம் கனத்துத்தான் போகிறது!

0 கருத்துகள்: