சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், ஜனவரி 05, 2010

அந்தமானில் மனநோய்


            அந்தமான் முரசு பத்திரிக்கையில் ஒரு செய்தி, "தீவில் நூற்றுக்குப் பத்துப்பேருக்கு மனநோய் உள்ளது". இதை படித்ததும் அதிர்ச்சி.உடனே அந்தப்பத்திரிக்கை ஆசிரியர் திரு.சு.ப.கரிகால் வளவன் அவர்களிடம்,' சார்! இதுக்கு என்ன காரணங்க சார்! நா கூட இப்ப நெறைய பேர இந்தமாதிரி பாக்குறேன்' என்ற போது அவர் ," ஆமாம்மா! நான் அந்த மருத்துவர் ஆலோசனைக்கூட்டத்துக்குப் போயிருந்தேன்.மனநல மருத்துவர் என்ன சொல்றார்னா மக்கள் தங்கள் பிரச்சினைகள மனசுக்குள்ளேயே வச்சுப் புழுங்குறது,தாழ்வு மனப்பான்மை,கடுஞ்சொற்களைத் தாங்கிக்கொள்ளமுடியாமை,சரியான பொழுதுபோக்கு இல்லாமை,மன அழுத்தம்,குடி,போதைப்பழக்கம் இதெல்லாம் தான் காரணம்னு சொல்றாரு,"என்றார்.எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.ஈழப்பிரச்சினையைவிடவா ஒரு பிரச்சினை நமக்கு வந்துவிடப் போகிறது.அதோடு 'அமைதியான கடல் நல்ல மாலுமிகளை உருவாக்குவதில்லை'.பிரச்சினைகள் நம்மை நிரூபிக்கக் கடவுள் தரும் வாய்ப்புகள்."இன்பம் என்பது கடவுள் நமக்குதரும் பிரசாதம்.துன்பம் என்பதும் கடவுள் நமக்குத்தரும் மகாப்பிரசாதம்" ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிய இந்த வார்த்தைகள் எனக்கு மந்திரம்.மக்கள் சிரிக்க மறந்த போதே மனச்சிக்கல் உருவாகிவிட்டது என்று அர்த்தம்.மனம் எண்ணங்களால் ஆனது.தன்னம்பிக்கைச்சிந்தனையாளர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,"எண்ணங்கள் தான் வாழ்க்கை. சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால்,சரியானபடி சிந்திக்கத் துவங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும்.வெற்றியால் நிறையும்.சாதனைகளால் சிறக்கும்".அப்படியானால் நல்ல எண்ணங்கள் மட்டும் நம் வாழ்க்கையை நலமாக்குமா?.ஆசைகளை சீரமைக்கத் தெரியாமல் தான் இன்று நிறைய மனக்கோளாறுகள் நம் சமுதாயத்தில்.இன்று முயலுக்கு சிங்கத்தின் குகை தேவைப்படுகிறது.ஆனால் முயல் சிங்கமாக மாறமுடியாது. மனிதர்கள் வாய்ப்புகள் நிறைந்த இன்றைய உலகில் தனக்கான வசதிகளைப் பெருக்கி அரண்மனையே பெறமுடியும்.அதற்கு உழைப்பும்,தன்னம்பிக்கையும் வேண்டும்.

              ரோஜாக்கள் நமது குறிக்கோள் என்றால் முட்களை அலட்சியப்படுத்த வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.இங்கு இந்த மனநோயால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.அந்தமானில் சிலர் தமது உழைப்பாலும்,சிக்கனத்தாலும்,புத்திக்கூர்மையாலும் விரைந்து முன்னேற இயலும்.அதே வேகம் சரிவதிலும் உண்டு.சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு,நகைகள் மற்றும் சொத்துக்கள் கைவிட்டுப்போகும் போது மன அழுத்தத்திற்கு பெண்கள் ஆளாகிறார்கள். உறவுகளை விட்டு தொலைவில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு விட்டு விடுதலை ஆகும் வாய்ப்புகள் குறைவு. குடும்ப விசயங்களை கௌரவம் காரணமாகப் பகிர்ந்து கொள்ளாமை,அடுத்தவரோடு தன்னை ஒப்பீடு செய்வது,பொறாமை,குடும்பத்தலைவர்களின் போதைப்பழக்கம்,அவர்களின் அத்துமீறிய வன்முறைகள் இவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் இங்கு அதிகம்.இவர்கள் தான் பெரும்பாலும் மனநோய்க்கு ஆட்படுகிறார்கள்.அதோடு இங்கு பெண்களுக்கு தொலைக்காட்சி ஒன்றை விட்டால் சமையலறை தான் தஞ்சம். நல்ல பொழுது போக்குகள் குறைவு.வெளி நிகழ்ச்சிகளுக்கு நாம் எதற்குப் போவது? அதற்கு படித்தவர்கள் தான் போக வேண்டும் என்று வீட்டில் முடங்குவது.கடற்கரை,உல்லாசப்பயணங்களா? எத்தனை தரம் பாத்த கடலையே பாக்குறது? தேவை இல்லாம எதுக்கு செலவு பண்றது. இப்படியான சிந்தனைகளால் அவற்றைத் தவிர்ப்பது.இதெல்லாமும் பெண்கள் தங்கள் மனச்சோர்விலிருந்து விட்டு விலகமுடியாத சூழல் உருவாகிறது.சமுத்திரம் சலிக்குமா?

                   மன ஆரோக்கியம் தான் பெரும் செல்வம் என்று உணராதவர்கள் தங்கள் எண்ணத்துடன் முரண்பட்டு நோயை வலிய அழைத்துக்கொள்கிறார்கள்.இங்கு தியான, யோகம் குறித்த விழிப்புணர்வு குறைவு.உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு குறைவு.மன அமைதி தரும் உணவு வகைகளைப் பற்றிய அறியாமை இங்கு உணடு.இங்கு தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரு நோய் உண்டு. அது,"கை கால் நல்லா இருக்கிற வரை நல்லா ஓடியாடி உழச்சி,சம்பாதிச்சுகிட்டு ஊர் பக்கம் ஓடிப்போயிரனும்". அவர்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை ஓட்டம் அமையாத போது இந்த நிலைக்கு ஆளாகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக இங்கு தற்கொலைகள் பெருகுவதற்கும் இதுவே காரணமாகிறது. ஆசிரியர்கள் கடிந்து கொண்டாலோ,பெற்றோர்கள் திட்டினாலோ பொறுக்காத பள்ளிக்குழந்தைகள் கையில் எடுக்கும் ஆயுதமும் தற்கொலை தான். சில அவமானங்கள்,தோல்விகள் வாழ்க்கையில் சகஜம் என்ற எண்ணங்களை பிஞ்சுகள் மனதில் விதைக்க நேரமில்லாத பெற்றொரும் மற்றொரும் தான் காரணம்.வாழ்க்கையின் போராட்டப்பக்கங்களை நிறையப் பெற்றோர் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதே இல்லை.போராட்டம் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து எந்தச்சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டாலே போதும், மன அழுத்தம் விலகி ஓடும்.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்.உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதரை இன்னும் இறைவன் படைக்கவே இல்லை. இதை உணரந்தால் போதுமே. ஒவ்வொரு துன்பம் வரும்போதும் இதை சமாளிப்பதில் தான் நமது வெற்றி என்றும்,இதுவும் கடந்து போகும் என்றும் எண்ணிக்கொண்டால் மன நோயாவது? மன உளைச்சலாவது?

1 கருத்துகள்:

ஓசை செல்லா சொன்னது…

நல்ல கருத்துக்கள்! எனது ஓசை ஒலிப்பதிவுக்கு அந்தமானிலிருந்து ஒரு நேயர் கூட இருந்தார்! தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!

ஓசை செல்லா
ஓசை ஒலிஒளி வலைப்பூ