சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 09, 2010

புத்தகங்கள்


            காலச்சரிதலில் காணாது போனதில், மாறிப்போனதில் புத்தகம் படிக்கும் பழக்கமும் ஒன்று.எழுத்தாளார்கள் இறைவனாகவும், அவர்களின் எழுத்துக்களை வரங்களாகவும் போற்றப்பட்ட,கொண்டாடப்பட்ட காலம் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது.நல்ல எழுத்துக்கள் நமது வாழ்க்கையை சீராக்கி முன்னேற்றப்படிகளில் ஏற்றிவிடும்.எங்களின் பள்ளிக்காலத்தில் எங்கள் வீட்டில் வாங்கப்பட்டது தினத்தந்தி,ராணி,ராணிமுத்து.தினத்தந்தி என் அப்பா கடை அடைத்து விட்டு இரவு வரும்போது கொண்டுவர காலைச்செய்தியை இரவில் தான் படிப்போம்..ராணியும்,ராணிமுத்தும் என் அம்மா படிக்க.நாங்கள் என் அம்மாவின் முன்னால் அட்டைப்படத்தின் நாயகிகளை மட்டும் தான் ரசிக்கமுடியும்."இதெல்லாம் படிச்சா புள்ளைக கெட்டுப்போய்டுவாக" என்ற எண்ணம் என் அம்மாவிற்கு.(கெட்டுப்போறவுக புத்தகம் படிச்சுதான் கெட்டுப்போகணுமா?) அதனால் என் அம்மாவிற்குத் தெரியாமல் படிப்பேன்.தெரிந்தால் உச்சந்தலை எரியும் படி குட்டு விழும்.என் தங்கைகள் திரும்பிக்கூடப்பார்க்கமாட்டார்கள். என் அம்மா சொல்வது வேதம் அவர்களுக்கு.கடையில் பொருட்கள் கட்டிவரும் பேப்பர்களை பத்திரமாக மடித்து வைத்து நேரம் கிடைக்கும் போது படிப்போம். சிறிது நாள் கழித்து ராணி முத்து நிறுத்தப்பட்டது.அது ஒன்றும் பெரிய இழப்பில்லை. அமுதா கணேசன்,லக்ஷ்மி இவர்களின் எழுத்துக்கள் எல்லாம் பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை.இவர்களின் கதைகள் தான் ராணிமுத்துவில் அப்போது அதிகம் வந்தது.அதன்பிறகு பள்ளித்தோழிகள் எனக்கு குமுதம்,ஆனந்த விகடன்,சினிமா எக்ஸ்ப்ரஸ், மாலைமதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த, அதன் மூலம் தான் திரைக்கு வரும் படங்கள் திரைநட்சத்திரங்கள்அறிமுகம்,சிவசங்கரி,இந்துமதி,அனுராதாரமணன்,பாலகுமாரன்,சுஜாதா,வாசந்தி ஆகியோரின் எழுத்துக்கள் ,புதுக்கவிதைகள் எல்லாம் படிக்க வாய்த்தன.எனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் அதிகம் என்பதால் படிக்கும் கதைகளின் பெயர்கள்,கதைக்கரு,வசனங்கள்,துணுக்குச்செய்திகள் மனதில் பதிந்து விடுவதோடு,கொஞ்சம் விவாதிக்கவும் செய்வேன் என்பதால், தோழியர் கொஞ்சம் அசர ஒரு மேதாவித்தனம் வந்தது.

 அந்த மேதாவித்தனம் கல்லூரியில் வேலை செய்யவில்லை.கிணற்றுத்தவளையாயிருந்த காலம் போய்,குளம் தேடி வந்ததும் இருந்த இருப்பு போதாது போக கல்லூரி நூலகம் கைகொடுத்தது.கல்லூரிப்படிப்பிற்கு எங்கள் ஆயா வீட்டிற்கு வந்துவிட்டதால் கொஞ்சம் தைரியமாக அக்கம் பக்கம் புத்தகம் வாங்கி பாடப்புத்தக்த்துக்குள் வைத்து படிப்பேன்.ஒருநாள் என் ஆயா அருகில் வந்து பார்த்துவிட்டு 'என்னடி படிக்கிற?' என்றார். 'ம்.. இது பாடபுக். தெரியல' பதில் சொன்னேன்.'இல்ல படம் போட்டிருக்கே அதுதான் கேட்டேன்' என்றவர்,'அது ஒண்ணுமில்ல.அதெல்லாம் விளக்கப்படம்,உங்களுக்குப்புரியாது'என்றதும் 'சரி படி' என்று சொல்லிவிட்டு அவர் வேலையைத்தொடர்ந்தார்.ஆனால் சரியாக நான் அந்தப்பக்கம் போனதும் அந்த நாவலை எடுத்துக்கொண்டு போய் நான் யாரிடம் புத்தகம் வாங்கிவந்தேனோ அவரிடமே கொண்டு போய் 'என் பேத்தி இந்தப்புக்குப்படிக்கிறா ஆச்சி,படிக்கிற புக்கா?' என்று கேட்க அவர்,'இது நல்ல கத அக்கா.நாந்தான் அவளுக்கு குடுத்தேன்' என்றதும் சத்தமில்லாது வந்துவிட,இதை அறியாத நான் மறுபடி கேட்ட போதும் அதே பொய்யைத் திரும்பச்சொல்ல மொத்து விழுந்தது.'இந்த திருட்டு வேல எதுக்கு செய்யற! உன்ன எதுல நம்புறது?' என்று சொல்லிவிட்டு,'தொல படி' என்று சொல்ல அன்று முதல் எனக்கு அடைத்துவைத்திருந்த ஒரு கதவு திறந்தது போல் இருந்தது.எங்காவது கோவிலுக்குப்போனால் 'பூவாங்குற காசுக்கு புக் வாங்கிக்குடுங்க.பூ சத்த நேரத்துல வாடிப்போயிடும்.புக்குன்னா அப்புடியே இருக்கும்' என்று கதைப்புத்தகம் வாங்குவேன்.திருமணம் ஆனதும் எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஒரு வானமே எனக்குத்தரப்பட்டது போல் உணர்ந்தேன்.இன்றும் என் வருமானத்தில் ஒரு பகுதி புத்தகம் வாங்க.

      திரு.ரவி தமிழ்வாணன் அவர்கள் அந்தமானில் தமிழர் சங்கப்பொன்விழாவில் புத்தகக்கண்காட்சி நடத்தினார்.முதன்முதலில் என் அபிமான எழுத்தாளர்களின் நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள்,கம்பராமாயணம் முழுத்தொகுப்பு என்று எதைவிடுவது,எதைவாங்குவது என்ற குழப்பமில்லாமல் விரும்பியது அனைத்தும் வாங்கினேன்.படிக்கப்படிக்க என் மனதில் பல சன்னல்கள் திறந்தன. வீடு வரும் உறவுக்கூட்டம் புத்தகங்களைப் பார்த்து திகைத்தது."காசச்சேரு.புத்தகம் எப்ப வேணா வாங்கலாம்." அறிவுரை சொன்னது.என் கணவர்,'அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், நீ விடு' என்றார்.சுனாமி வந்தபோது 'ஐயோ! இந்தப்புத்தகமெல்லாம் தண்ணில போயிருமே' நான் பதறியதைப்பார்த்து படித்த புத்தகங்களை, புத்தக அலமாரியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார் என் கணவர்.இன்றும் புத்தகம் சேமிப்பதுதான் வேலை. நாம் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் என்று என் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக்கொடுத்தால் ," ஆமா! சுத்த போர்" என்கிறார்கள்.

  சிலர் காலைக்காபியுடன் செய்தித்தாள் படிப்பது,சிலர் பேருந்துப்பயணங்களில் புத்தகம் படிப்பது,பெண்கள் ஓய்வு நேரங்களில் புத்தகம் ஒன்றையே பொழுதுபோக்கவும்,ஆக்கவும் படித்த காலமெல்லாம் போய், ஓய்வு நேரங்களை தொலைக்காட்சியும்,குறுந்தொலைபேசி அரட்டைகளும் ஆக்கிரமிக்க, ஒரு சிந்தனையற்ற காலத்தை நோக்கி பெண்குலம் பயணப்படுகிறதோ என்ற பயம் எழுகிறது.நல்ல எழுத்துக்கள் நம் அறிவுக்கண்களைத் திறந்துவிடுகிறது.புத்தகங்கள் நமது கற்பனைகளுக்கு வண்ணம் தரும்.சிந்தனைகளுக்கு சிறகு தரும்.எழுத்துக்கள் நமக்குள் விதைக்கும் விளைவுகளைக் காட்சிகளால் விதைக்கமுடியாது.நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களைப்போல. நண்பர்களே! வீடு கட்டுகிறீர்களா? தொலைக்காட்சிக்கு இடம் ஒதுக்குவது போல நூல்களுக்கும்ஒரு  இடம் ஒதுக்குங்கள்.படிக்கும் பழக்கம் உன்னதமான பழக்கம்.உலகில் விளைந்த புரட்சிகள் அனைத்திற்கும் விதைகள் புத்தகங்கள்.திருக்குறள்,சங்க இலக்கியம்,கம்பராமாயணம்,பெரியார்,தாகூர்,லெனின்,கார்ல்மார்க்ஸ்,ஷெல்லி,வோர்ட்ச் வொர்த்,ஷேக்ஸ்பியர் இன்னும்,இன்னும் எத்தனையோ பெரியவர்களின் எழுத்துக்கள் விதைத்த விதைகளின் வீரியங்களை,அதில் விளைந்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.படைப்பாளிகள் அத்துணை பேருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது புத்தகங்கள்.நமது அறியாமை நீக்கி ஒரு மனமுதிர்வை அளிப்பது புத்தகங்கள் என்பதை புத்தகம் படித்து வளர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்கள்.அந்தமானில் ஒரே ஒரு கடைதான் தமிழ் பத்திரிக்கைகள்,வார,மாத இதழ்கள்,நாவல்கள் பல பதிப்பக நூல்களை விற்கும் கடை.அந்தக்கடையின் உரிமையாளர் கூறுகிறார்."அம்மா சி.டி வாங்குற அளவு நம்ம மக்க புக் வாங்க மாட்டேங்குறாங்க.ஸ்டாக்கப் பாருங்க! நாங்க எப்புடி பிசினஸ் பண்ண முடியும்" என்று.புத்தகம் படிப்பதும் இன்று காலம் கடந்த பழமையாகிப்போனதோ?

0 கருத்துகள்: