திருச்சுதனுக்கு யூதர்கள்
தந்த சிலுவையை விடவும்
சிலுவைகள் காத்துக்கிடக்கின்றன பெரியனவாய்
இந்த பூமியின் புத்திரர்களுக்கு.
ஆசைகள் ஒழி என்றவனையும்
ஆசைகள் துற என்றவனையும்
அலட்சியப்படுத்தி எக்காளமிடுகிறது இளைய தலைமுறை.
என் காதலியின் அழகைப்பார்த்து ஆசை ஒழி
என் உடமைகளின் வசதியறிந்து ஆசை ஒழி
துறந்தவனை வம்பிக்கிழுத்து
சாபம் கொள்கிறது.
இளமையின் ஆர்ப்பரிப்புகளில்
அமைதியின் விலை புரியாது
அரைக்காசுக்கு அடகு வைத்து
ஈசலின் ஒரு நாள் வாழ்க்கையாய்
இளமை விடை பெற்றதும்
மூளைக்குள் புதைத்து வைத்த
ஆர்ப்பரிப்புகளின் ரீங்காரம் வண்டாய்க்குடைய
அமைதியின் ஞாபகம்
தியானம்,யோகா,அளவான உணவு
வட்டியாய்க்கொடுத்தாலும்
காதலியின் ஊடலாய் கூட மறுக்கிறது
அமைதி மட்டும்...
மும்மூர்த்திகளின் அலட்சியத்தால்
ஊடிச்சென்ற ஆதியின் அம்சமாய்
கைகூடவில்லை அமைதிமட்டும்
அமைதியை மீட்டுத்தர யாரை அழைக்கலாம்?
ஆதியை,சோதியை,அம்பலவாணனை,
பாவங்களின் சம்பளம் மரணம் என்றவனை, அன்றி
வல்லோன் ஒருவனே என்ற நபியின் நாயகனை
யாரை அழைக்கலாம்?
தவங்கள் புரிவோம்.
தினமொரு சிலுவை சுமப்பதைக்காட்டிலும்
வரங்களைப் பெற்று விடலாம்.
ஆனால்
அவை அசுரனின் வரங்கள் போல்
சாபங்களாகி விடாமல்..
கவனம் இனியேனும் !
சனி, ஜனவரி 23, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
தவங்கள் புரிவோம்.
தினமொரு சிலுவை சுமப்பதைக்காட்டிலும்
வரங்களைப் பெற்று விடலாம்.
ஆனால்
அவை அசுரனின் வரங்கள் போல்
சாபங்களாகி விடாமல்..
கவனம் இனியேனும் !//
அடேங்கப்பா..ஆனால் எனக்கென்னமோ நாம்தான் இந்த பூமி அழிக்க வந்த அசுரர்களோ என்று தோன்றுகிறது..:)
கருத்துரையிடுக