சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 02, 2010

நம்மவர்களின் விதேசிப்பெருமைகள்.


        இன்று அந்தமானில் இருந்து வெளிநாடுகளுக்கு படிக்க,பணி நிமித்தம் பல இளைஞர்கள்,இளைஞிகள் செல்கின்றனர்.மிகவும் மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருக்கிறது.ஒரு காலத்தில் தீவுகள் விட்டு எப்படி வெளியுலகத்தில் நம்மை நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்று தவித்து,வெளியுலகைப் புறக்கணித்த தீவு வாசிகள் வங்கிகளின் கடனுதவியின் மூலம் வெளிநாடுகளுக்குக் கூட பயமின்றி பயணிக்கும் இன்றைய நிலை கண்டு,இவர்களின்தன்னம்பிக்கை கண்டு  வியப்பளிக்கிறது.ஆனால் அப்படிச்செல்பவர்கள் தாய் பூமி திரும்ப விரும்புவதில்லை. தாய் பூமி திரும்ப விரும்பாததற்கு அவர்கள் கூறும் காரணங்களைக் கேட்டால் வியப்பு வெறுப்பாக மாறும்.அவர்களின் பெற்றோர் அடிக்கும் தம்பட்டங்கள் எழுதத் தனி வலைப்பூ வேண்டும்.ஒரு பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.அவர்களது குழந்தை லண்டனில் படிக்கச்சென்றிருக்கிறார்.அந்தத்தாய் ஒரு நவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட போது   எல்லோரும் அவரது மகனைப்பற்றி விசாரிக்க அவர் பெருமையாக," அவன் எங்களையும் லண்டனுக்கே வரச்சொல்றான்.அம்மா இதெல்லாம் ஒரு ஊரா? இந்தியாவுக்கே நா வரமாட்டேங்கறான்.நாங்க இப்பதான் பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்."என்றார்.எனக்கு இவர் தனது மாணாக்கர்களுக்கு நாட்டுப்பற்றை எப்படி சொல்லிக்கொடுக்க முடியும்,பாவம் இவரது மாணவர்கள் என்ற சிந்தனை ஓடியது.அப்போது அந்த பூஜை நடத்திய அந்த இல்லத்தின் பெண்மணி அவரும் மூத்த தமிழ் ஆசிரியை.அவரது மகள் ஆஸ்திரேலியாவில் படித்துப் பணிபுரிகிறார்.அவரிடம்," உங்களுக்கு ஏன் மேடம் இப்டி எண்ணம் வரலியா?" என்றதும் அவர்,"இங்க பாரு.அந்த ஊரெல்லாம் பாக்க தான் அழகு.வாழ்றதுக்கு நம்ம ஊரு தான் நமக்கு அழகு.அவங்க வேலைக்குப் போய்ட்டா நமக்கு பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாம கிறுக்கு புடிச்சிடும். அவங்க அத அனுபவிக்காததால பேசுறாங்க.பாவம்." என்றார்.சரியான பதில்.(நாம பேச ஆள் கெடைக்காட்டி செத்துப்போய்டுவோம்ல.நம்மல்லாம் வீட்டுல கூட அக்கம் பக்கம் கூடி பேசுறதுக்கு திண்ணை கட்டிவச்ச ஆளுகள்ல)

          ஒரு தோழியின் தம்பி அமெரிக்காவில் பணிபுரியச்சென்ற போது தன் அம்மாவிடம் பேசும் போதெல்லாம் அமெரிக்காவை விட்டு ஒரு நாளும் வரமாட்டேன். இந்த ஊரில் இருந்தவன் இந்தியா திரும்புவானா? என்று கேட்டதை முதன்முதலில் குழந்தை அம்மா என்றழைத்த போது இருந்த அதே மன நிலையில் விவரித்தார்.இரண்டு வருடம் பணிக்காலம் முடிந்ததும் அதே நிறுவனத்தின் சென்னைக்கிளையில் பணிநியமனம் செய்யப்பட்டார்.அவர்களின் கவலைகளை பிரதிபலிக்கும் சரியான வார்த்தைகள் நம் தமிழிலேயே இல்லை.அமெரிக்காவில் இருந்து திரும்பிய எங்கள் உறவுக்குடும்பம் ஒன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனத்தை விட்டு இறங்கவே இல்லை.அதோடு அவர்களின் நெருங்கிய உறவுகள் அடித்த பெருமையில் பொறுக்க முடியாது நான், "இங்கேருந்து போனவுக தானே" என்றதும் அவர்கள் பார்வை சூட்டில் தகித்தது எனக்கு (நாங்க எதாருந்தாலும் நேருக்கு நேர் கேட்டுப்புடுவோம்ல).நான் கண்ட காட்சிகளில்   உதாரணங்களில் சில இவை.பல நீங்களும் அறிந்திருக்கலாம்.

        எங்கள் ஊர்களில் நிறையப் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள்.இந்தப் பணியின் உபயமாக வறுமை நீங்கி சுபிட்சமாக இருக்கிறார்கள்.சந்தோசம்.பெருமை. நம் மக்களின் வளர்ச்சி கண்டு,உயர்வு கண்டு, வாழ்க்கை குறித்த நம்பிக்கை கண்டு ,நம் மக்களும் பரிணாம விதிகளின் படி எல்லாச்சூழலுக்கும் பழகிக்கொள்கிறார்கள் , உலகமயமாக்கலின் பாதிப்புகளில் இருந்து வெளிவந்துவிட்டார்கள் என்ற ஒரு நிறைவு எனக்கு உண்டு.ஆனால் இந்தப் பெருமைகள் அந்த நிறைவை அடித்துச்சிதைத்து விடும்போது தான் கோபம் பொங்குகிறது.நமது தாய் அழகாயில்லை என்று அடுத்தவர்களை அம்மா என்று அணைத்துக்கொள்வது போல் இல்லையா இது?

             நான் சில நேரம் நினைத்துப் பார்ப்பதுண்டு. வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் செல்பவர்கள் தாய் நாட்டுடன் தொடர்பை விடாது வைத்துக் கொண்டிருந்தால் நாம் இருக்கும் வெளியிடங்களில் நமது உரிமைகள் மறுக்கப்படும் போது தாயகம் திரும்ப முடியுமே? ஏன் அகதி என்ற பட்டத்தோடு வருவது? ஏன் அடுத்தவர் உதவிக்குக் காத்திருப்பது? இது என் நீண்ட காலக்கவலை.அந்தமான் பொன்விழாக்கவியரங்கக் கவிதையில் (09.02.2003),

தாய் தேசத்தின் பூமிதனைப் பூட்டி வைத்து
தூர தேசங்களில்
உழைக்கத்துடிக்கும் இளைய தலைமுறையே!
குடும்பத்தை நிமிர்த்த நீ
கூலியாகக் குனிந்தாய்
வறுமை விரட்டி வரவு கண்டதும் சிலருக்கு
வம்சாவளியே மறந்து விடும்.
விழுதுகளே! நீங்கள்
வேர்களைத் தாய் மண்ணில் விட்டு எங்கும்
கிளைகளை விரித்துக் கொள்ளுங்கள்.

என்று கவிதை படித்தேன்.அந்தமானில் சுனாமி வந்த போது முக்கியபூமியில் தொடர்பற்றுப் போனவர்கள் நாங்கள் எங்கே போவது? என்று கலங்கியதை மறக்கமுடியாது.அரசு ஏதாவது வழி செய்யும்.அந்த வழி பிடிக்கிறதோ இல்லையோ நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்,நிர்ப்பந்தம் உருவாகும்.இப்போது ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்த போது இங்குள்ள பெற்றொர்களின் துயரம் எல்லோரும் அறிந்ததே! அங்கிருக்கும் ஒரு மாணவனிடம் நாங்கள் கேட்டபோது அவர்,"அக்கா! நாம என்ன வேலைக்கு வந்திருக்கோம்கறது சில பேருக்கு மறந்து போய்டுது.இங்க எல்லாரும் பொது இடங்கள்ல அமைதியா அவங்கவங்க வேலையப் பாத்துகிட்டு போய்கிட்டே இருப்பாங்க. நம்ம ஆளுங்க எங்க போனாலும் பல்லே! பல்லே! தான். அதுதான் பிரச்சினை" என்றார்.டெல்லித் தொலைக்காட்சியில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சர்தார்ஜி குறிப்பிடுகையில்," ஆஸ்திரேலியா உயரத்துடிக்கும் அறிவாளிகளைப் பயன்படுத்த விரும்பும் நாடு.உலகின் எல்லா மக்களும் கலந்து வாழும் ஒரு நாடு.எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பு குறைவு,பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காமை இவை காரணமாக சலசலப்புகள் சகஜமாகி வருகிறது.அப்படி ஒரு இயல்பான நிகழ்வுதான் இதுவும்.ஆஸ்திரேலியக்குருவிகள் கூவுமிடத்தில் ஒரு இந்திய மைனா வித்தியாசமாகக் கூவும் போது நீ என்ன கூவுற என்று பாய்வது இயற்கை.என் மக்கள் குடும்பத்துடன் அங்குதான் இருக்கிறார்கள்.அப்படி நிறைய இந்தியர்கள் அங்கு குடும்பத்துடன் அமைதியாக,சுபிட்சமாக வாழ்கிறார்கள்.கவலைப்படுமளவு ஒன்றுமில்லை" என்றார்.

        நமது முன்னோர் தெரியாமலா சொன்னார்கள்.ரோமனில் ரோமனாக இரு என்று.வெளிநாட்டில் இருந்து தமிழ் நாடு திரும்பினால் தமிழ்நாட்டில் தமிழனாக இருக்கத்தெரியவில்லையே நம்மவர்களுக்கு.நமது சொந்த பூமியில் தனது சொந்த அடையாளங்களுடன் வாழத்தெரியாதவர்கள் வெளிநாட்டில் தனித்த அடையாளங்களுடன் வாழ்கிறேன் பேர்வழி என்று மொத்த இந்தியர்களின் நிம்மதியைக்குலைப்பது நடந்து வருகிறது.முற்றுப்புள்ளி எப்போது? பொறுத்திருந்து பார்ப்போம்.

1 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

அருமையான கட்டுரை....

நான் துபாய் வந்து கிட்டதட்ட 20 ஆண்டுகள் கடந்து விட்டன. தாய் நாட்டில் வாழ்ந்ததைவிட அரபுநாட்டில் தான் அதிகமாக வாழ்ந்திருக்கிறேன்.

ஆனால் என்தாய் நாட்டுக்கு விடுமுறையில் வரும்போது எனக்கிடைக்கும் சந்தோசத்தைப்போல் ஒரு நாள் கூட சம்பாதிக்கும் நாட்டில் கிடைத்ததில்லை.

ஆயிரம்தான் சம்பாதித்தாலும் நம்நாட்டு சுந்திரம் எந்தநாட்டிலும் இல்லை என்பது அன்னிய நாட்டில் வாழ்பவர்களுக்கு தெரியும்.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்துடன் வாழ்வதுதான் அன்னிய நாடு...

கையில் காசு இல்லை என்றாலும் மனநிறைவுடன் மரத்தடி நிழலில் நிம்மதியாய் உறங்குவது நம்நாடு.

நம்நாட்டுக்கு இணை வேறு எந்த நாட்டிலும் இல்லை இல்லை...வாழ்க பாரதம்.