தமிழன் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெற்றவன்.தமிழனின் பண்பாடும்,கலாச்சாரமும்,மரபு வழிப்பிணைப்புகளும்,மொழியுணர்வும் பாராட்டுதலுக்குரியது.இன்று தமிழனின் இருப்புணர்த்தும் திருநாட்கள் அவனிருக்கும் இடங்களில் எல்லாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவது நாமெல்லாம் அறிந்ததே!.நாகரீகத்தொட்டிலான அமெரிக்காவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து நான் செய்தி ஏடுகளில் அறிந்தது தவிர வேறில்லை. இன்று அன்பு நிறை நண்பர் திருவாளர் சோம.இளங்கோவன் அவர்கள் அமெரிக்காவில் தமிழர் திருநாளை நேரடி வர்ணனை போல் நமக்கு அறியப்படுத்தும் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.இப்படி ஒரு அழகான கட்டுரை கிடைக்கப்பெற்றது, அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தக்கட்டுரை அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.நான் அறிந்ததை வலை நண்பர்களுக்கும் அறியத்தரும் ஆவலில் தான் இந்தக்கட்டுரை என் வலைப்பூவில் இடம் பெறுகிறது. நன்றி அன்பு நண்பரே!
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களைத் தமிழ்மணத்தில் படிக்கின்றேன். அந்தமான் தமிழ்ச் சங்கப் பொங்கல் பற்றி எழுதியிருந்தீர்கள்.படித்து மகிழ்ந்தோம். அமெரிக்காவில் பொங்கல் பற்றி நான் எழுதியதை அனுப்புகிறேன் ,பாருங்கள்.
அன்புநிறை,
சோம.இளங்கோவன்.
அமெரிக்காவிலே பொங்கலோ பொங்கல்.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆண்டுதோரும் பொங்கல் கொண்டாடுவோம் !
அது தமிழ்நாட்டுப் பொங்கலிலிருந்து பல விதங்களில் மாறு பட்டு இருக்கும்.
அமெரிக்க வாழ்க்கையே சனி,ஞாயிறு களில் தான் .வேலை நாட்களில் அவரவர் வேலைக்குச் சென்று வந்து சேருவதே பெரிய சாதனை ஆகி விடுவதால் கொண்டாட்டங்கள் பலவும் சனி,ஞாயிறுகளில் தான்.
பொங்கலன்று பெரும் பாலும் அவரவர் வீடுகளிலே பொங்கல் செய்து கொண்டாடி, தொலை பேசியிலே,இப்போதெல்லாம் மின்னஞ்சலில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடி விடுவார்கள். முழுப் பொங்கல் கொண்டாட்டமே ஆங்காங்கே தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாக்களில் தான்! அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெரு நகரங்களே இல்லை என்ற அளவிற்குப் பல மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. முதன் முதலில் நியூ யார்க் நகரத்திலே அறுபதுகளிலே ஆரம்பிக்கப் பட்டது.தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. பல தமிழ்ச் சங்கங்கள் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கி ஆண்டு தோறும் சூலை 4ந்தேதி வரும் மூன்று நாட்கள் விடுமுறையில் பெருஞ்சிறப்பாகத் தமிழ் மாநாடு நடக்கும்.
ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு பெரும்பான்மைத் தமிழ்ச் சங்கங்கள் சனவரி 23 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். குடும்பங்களாக வந்து பங்கேற்பார்கள். பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.ஆங்காங்கே உள்ள திறமைகள் பல விதங்களில் வெளிப்படுத்தப் படும்.மகளிர்,குழந்தைகள் பங்கேற்கும் பல ஆட்ட பாட்டங்கள்,கோலாட்டங்கள்,கும்மி கள்,நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள்
நடக்கும். திருக்குறள் போட்டிகள் நடக்கும்.தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே இருப்பதால் போட்டிகள் நிறைய இருக்கும்.பங்கேற்பும் பல நிகழ்ச்சிகளில் இருக்கும்.இப்போதெல்லாம் குழந்தைகள் அவர்களாகவே நிகழ்ச்சிகள் ,நாடகங்கள் என்று தமிழிலேயே வியக்கத் தக்கும் படி செய்வது மனமகிழ்ச்சியைத் தரும்.
பட்டி மன்றங்கள் பல இனிய நகைச்சுவை கலந்து நடக்கும்.இந்த ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கப் பட்டி மன்றத்தின் தலைப்பு " இன்பம் பொங்குவது இருபதுகளிலா ,அறுபதுகளிலா?". கவியரங்களில் ஆண்களும் பெண்களும்
வெளுத்து வாங்கு வார்கள். ஒரு முறை நாரதர் பிரம்மாவிடம் சென்னையிலே தமிழ் சினிமா நடிகர்கள் கடவுளை விடச் சிறப்பாகப் பல இளம் நடிகைகளுடன் நடனமாடி வாழும் அருமையைச் சொல்கிறார்.அதை அனுபவிக்க வந்த பிரம்மா கோடம்பாக்கத்தில் படும் இன்னல்களை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
பொங்கலும், உணவும் சிறப்பாக இருக்கும். பல இடங்களில் புதுச் செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் நடத்தும் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.ஆகவே திறமைகளின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் சில பொருள்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். இப்போது அம்மா,அப்பா தவிர இங்கு எங்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறதால் நாங்கள் வெளி நாட்டில் இருக்கும் உணர்வே இல்லாமல் அமெரிக்கத் தமிழ்நாட்டில் தமிழர்களாக இருந்து மகிழும் நாளாகப் பொங்கல் விழாக்கள் மனது நிறைந்து வீடு திரும்புவோம். பல நகரங்களில் கடுங்குளிராக இருக்கும்,கொட்டும் பனியும் இருக்கும்.
இருந்தாலும் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கி பொங்கலோ பொங்கல் அமெரிக்காவில் தமிழரின் இனிய விழாவாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக