காலத்தின் சிதறும் துளிகளைச்சேமிக்க மனிதன் கண்டறிந்த வசதியான கலன் கள் கவிதைகள் என்பார் கவிப்பேரரசு. வைரமுத்து.கவிதை என்பது கவிஞனின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி.எண்ணங்களை வடிக்க உதவும் ஒரு இலக்கியப் படிமம், இலக்கியக்குறியீடு புதுக்கவிதை.யாப்பு,வெண்பா,தளை,சீர் என்ற வரம்புகளில் உட்பட்டுக்கிடந்த மரபுக்கவிதை வடிவம்,சமஸ் கிருத மந்திரங்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் உரித்தானதாய் இருந்தது போல்,தமிழறிஞர்களுக்கு மட்டுமேயான தளமாக இருந்தது.புதுமையில் நாட்டம் கொள்வது மனித மரபு.புதுமையை வரவேற்கும் ஆர்வமிக்க தமிழர்களால், தமிழ்க்கவிதை தனது மரபுக்கட்டுகளை உடைத்து சுதந்திரமாக புதுக்கவிதையாய் உருவெடுத்து உலவுகிறது.இலக்கணக் கூண்டிலிருந்து வெளியேறி,இளைஞர்கள் இலக்கிய உலகை அளந்து பார்க்கும் ஒரு கருவியாக, இன்று புதுக்கவிதை இருக்கிறது.சங்க இலக்கியத்தில் அகம்,புறம்,இயற்கை,ஆன்மீகம் பாடுபொருட்களாய் இருந்த காலம் போய்,பூமியின் வானத்திற்குக்கீழேயும்,பூமி தாண்டி பிரபஞ்சம் முழுமையும் பாடுபொருளாகிவிட்டன.மழைநீரை மட்டும் பருகும் சக்கரவாகம் போல், நாங்கள் புதுக்கவிதைப் பூக்கள் எங்கு பூத்திருந்தாலும் அதன் மகரந்தத்தில் அமர்ந்து தேன் பருகி,தேனின் சுவை உணர்ந்து,மகரந்தத்தைப்பரப்பும் வண்ணத்துப்பூச்சிகள்.புதுக்கவிதை வடிவம் அமெரிக்காவின் கவிஞர் வால்ட் விட்மன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு,1930ம் ஆண்டுவாக்கில் பாரதி,ந.பிச்சமூர்த்தி,புதுமைப்பித்தன்,சி.சு.செல்லப்பா,நா.சு.வல்லிக்கண்ணன் ஆகியோர் தமிழில் புதுக்கவிதைப் பயணத்தை தொடங்கிவைத்தனர்.புதுக்கவிதை என்பது என்ன?
"யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி
முகிலுடைத்த மாமழை
முரட்டுத்தோல் உரித்த பலாச்சுளை".
மின்னலுணர்வுடன்,சொல் ஆளுமை,உள்ளடக்கத்தைக் கூறுவதில் சிறந்த மதிநலன்,ஆழ்ந்த நோக்கு,இவை தான் புதுக்கவிதைக்கு இலக்கணம் என் கின்றனர்.புதுக்கவிதைகள் மரபுக்கவிதைக்காதலர்களால் பலவாறு விமர்சிக்கப்பட்டது.ஒரு நீண்ட வரியை மனதிற்குத் தோன்றியபடி எழுதி,அதை மடக்கி,மடக்கி எழுதிவிட்டால் அது புதுக்கவிதை என்றார்கள்.இன்று எல்லோரும் கவிதை எழுதத்தொடங்கிவிட்டனர் என்றார்கள்.காதலில் தோற்றவரெல்லாம் கவிஞனாகிவிட்டனர் என்றார்கள்.அவர்களின் விமர்சனங்களைத் தாண்டி தினமொரு புதுக்கவிதை புத்தகம் சந்தைக்கு வந்து கொண்டுதானிருக்கிறது.புதுக்கவிதை அத்தனை பேரையும் வசீகரித்தற்குக் காரணம் அதன் எளிமை,படிப்பவருக்குப் புரிதல்,படைப்பவருக்கு சுலபமாகிப்போன அதன் உரு,இப்படித்தான் புதுக்கவிஞர்களும் மலிந்து போனோம்.அங்கீகாரம் தேடி படைக்கும் கவிஞர்களை விட தன் ஆத்மதிருப்திக்குக் கவி படைப்பவர்களே அதிகம்.கூடவே அங்கீகாரம் கிடைப்பின் மகிழ்ச்சி.தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசும் உயிர்ச்சித்திரங்களாய்க் கவிதை உருமாறியிருக்கிறது.படைப்பவன்,தன் கவி படிப்பவனின் உள்ளத்தை நேசபாவத்துடன் தொட்டுப்பேச வைத்துவிட்டால் அது படைப்பவனின் வெற்றி.
அந்தமானில் இலக்கியப்படைப்பாளிகள் கையிலெடுக்கும் ஆயுதம் புதுக்கவிதை தான்.தீவுப்படைப்பாளிகளின் பாடுபொருள் பெரும்பாலும் தமிழ்ப்பற்று,இயற்கை,சித்திரை விழா,தைப்பொங்கல்,காதல் ஆகியன.
"தேசத்தில்
சிறைச்சாலை
சிருஷ்டிக்கப்படுவதுண்டு.
ஆனால்
சிறைச்சாலைக்காக
எங்காவது ஒரு தேசம் சிருஷ்டிக்கப்பட்டதுண்டா?
எங்கள் அந்தமானில்
அதிசயம் பாருங்கள்
சிறைச்சாலை பெரிதாகி
சிரமங்கள் அதிகமான போதுதான்
தீவுக்குடியேற்றத்திற்கே
திறப்புவிழாதொடங்கியது"
இந்தக்கவிதை ஒரு உதாரணம் தான். தரமான கவிதைகள் தரும் கவிஞர்கள் பலர் தீவில் இருக்கின்றனர்.தீவின் இலக்கியப்படைப்புகளில் எழுபது சதம் கவிதை நூல்கள் தாம்.
வலையுலகத்தில் கவிதைகளுக்கென தனித்தமிழ் பயன் படுத்தப்படுகிறதோ என்று அச்சம் கொள்ளுமளவு வலையின் நல்ல கவிதைகள் பல புரியவில்லை.தமிழகத்தை விட்டு தள்ளி வந்ததும் தமிழ் அர்த்தம் மாறிவிட்டதா? அடிக்கடி ஊருக்குச்சென்று உறவுகளைப் புதுப்பிப்பது போல் தமிழைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டோமோ?.நம்மை வழியனுப்பிய தமிழ்நாடு,நமக்குப்பின்னால் தமிழ் அகராதியை மாற்றிவிட்டதோ? இப்படியெல்லாம் புலம்புகிறோம் நாங்கள்.ஏன் தெரியுமா? புரியாத அழகுச்சொற்கொவைக் கவிதையின் கீழ் பின்னூட்டம் நூற்றுக்கும் மேல்.பின்னூட்டம் அத்தனையும் புகழும் அந்தக்கவிதையின் வரிகளை."புரியாத கவிதையா? அப்படியென்றால் அது அறிவாளிகளுக்கான கவிதைகளாக இருக்கும்.அல்லது ஆண்களுக்கான கவிதைகளாக இருக்கும்.அந்த வலைப்பக்கம் எதற்காகப்போகவேண்டும்,அப்புறம் எதற்காகப் புலம்புவது?" என்றார் ஒரு நண்பர்.பாடு பொருள்,அப்பப்பா! பிரபஞ்ச எல்லைகள் தாண்டி எங்கோ பயணிக்கிறது தமிழ்.மரபுக்கவிதை பரவாயில்லையோ! யாராவது தமிழாசிரியரிடம் பொருள் கேட்டுக்கொள்ளலாம்.வலைக்கவிஞர்களே! அற்புதமான உங்கள் கவிதைகளுக்குக்கீழ், என் போன்ற சிறுமதிக்கும் விளங்குவது போல் பொருளுரையும் தந்தால் புண்ணியம்.புரியாத கவிதைகளுக்குப் பின்னூட்டம் பார்த்து பெருமூச்சுடன் ஓட்டுப்போட்டு ஒதுங்கிக்கொள்ளும் கொடுமை இனிமேலாவது ஓழியுமா? நண்பர்களே!
2 கருத்துகள்:
ரொம்ப கலக்கிய அந்த கவிதையில் என்னுடையது ஏதேனும்..???
//ஆத்மதிருப்திக்குக் கவி படைப்பவர்களே அதிகம்.கூடவே அங்கீகாரம் கிடைப்பின் மகிழ்ச்சி.//
சத்தியமான வார்த்தை..:))
குறைவான பின்னூட்டங்கள் என்னையும் கவலையடையச் செய்துள்ளன. அதனால் என்ன. சிறப்பாக எழுதுவதோடு நம் வேலை முடிந்து விடுகிறது. பின்னூட்டத்திற்காக எழுத துவங்கினால் உங்கள் சுயத்தை இழந்து விடுவீர்கள்
கருத்துரையிடுக