சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 03, 2010

புத்தாண்டு சபதங்கள்


            ஆங்கிலப்புத்தாண்டுக்குத் தமிழர்கள் வாழ்த்துப் பரிமாறிக்கொள்ளலாமா? தமிழாசிரியர் ஆங்கிலத்தில் வாழ்த்துக்கூறலாமா? ஆங்கிலப்புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடுவதால் தங்களது தனித்த அடையாளங்களை தமிழர்கள் இழக்கிறார்களா?இல்லையா? ஆங்கிலப்புத்தாண்டை இளைஞர்கள் 'தண்ணி' அடித்துக்கொண்டாடுகிறார்கள். இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி 2010ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று ஜோசியர்கள் சொல்லும் ஆருடங்கள்.அந்தமானில் ஆங்கிலப்புத்தாண்டை தண்ணீரோ தண்ணீராக அடித்து,வெடியோ வெடி வெடித்து, சிலர் கேக் வெட்டிக் கொண்டாடி, (கிட்டத்தட்ட 200 வருசம் ஆங்கில ஏகாதிபத்தியத்துல அடிமைகளா இருந்ததுக்கு இது கூட இல்லாட்டி எப்புடீங்க!) தமிழ்ப் புத்தாண்டை தேங்காய் உடைத்துக் கொண்டாடுகிறார்கள் (கோவில்லதாங்க).தமிழ்ப்புத்தாண்டு அன்று கோவில்கள் நிரம்பி வழியும்.எல்லோர் முகத்திலும் தெய்வீகம் ஒளிரும்.வீடுகளில் விருந்து சாப்பாடு தயாராகும்.அந்தமான் தமிழர் சங்கத்தில் சித்திரை விழா விமரிசையாக நடக்கும்.தமிழ் நாட்டில் கலைஞர் அவர்கள் தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்ததில் இருந்து சித்திரை ஒன்று சித்திரை விழாவாகக் கொண்டாடுகிறோம். தைத்திரு நாளை பொங்கல் விழா மற்றும் புத்தாண்டு விழா என்று இருபெரும் விழாவாகக் கொண்டாடுகிறோம்.(தமிழ் ஆர்வலர்களே! சந்தோசமா?) ஆங்கிலப்புத்தாண்டை புதுமையாகவும் தமிழ்ப் புத்தாண்டை மரபுப்படியும் கொண்டாடுகிறோம். (நாங்க ரெண்டு வருசப்பிறப்புக்குமே கோவிலுக்குத்தான் போவோமுங்க!)

                இந்தப்புத்தாண்டு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை முடிகிறது என்றும்,இந்த மாதிரி ஒரு வருடம், சுமார் 612 வருடங்களுக்குப் பிறகு வருகிறது என்றும் அப்படி சிறப்பு வாய்ந்த ஒரு வருடத்தில் நாம் இருக்கிறோம் என்பது நமக்குப் பெருமை என்று அந்தமான் முரசு பத்திரிக்கையாளர் திரு.சுப.கரிகால் வளவன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.மற்றவர்கள் இந்த ஆண்டு மங்களமான ஆண்டு என்றார்கள்.எப்படியோ? எல்லா மக்களுக்கும் வளமும் நலமும் தந்தால் சரி.அதுதான் நமது பிரார்த்தனையும்.சிலர் புத்தாண்டு தினத்தில் வியாபார இலக்கு, சிலர் லாப இலக்கு,மாணவர் சிலர் பாடம் படிப்பதில் இலக்கு,சிலர் புகை,குடிப்பழக்கத்தை விட்டு விடுவது என்கிற சபதம்,சில பெண்கள் நகை,புடவைகள்,சிலர் கடன் திருப்பி அடைப்பதில் இலக்கு இப்படி இலக்கு குறிப்பார்கள்.சபதம் எடுப்பார்கள்.ஆனால் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் போகப்போக குறைந்து மறைந்தே விடும்.எனக்கும் கூட அப்படித்தான்.ஆரம்பத்தில் எல்லாம் நம் உழைப்பில் இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டு,பின் இறைவன் விட்ட வழி என்றும்,இவ்வளவு தான் இறைவன் நமக்குத் தரும் வரம் என்றும்,எனக்கு எதற்கு யோக்கியதை இருக்கிறதோ,எதற்கு தகுதி இருக்கிறதோ அது தான் கிடைக்கும் என்று மனதை சமாதானப் படுத்திக்கொள்வேன்.இது ஓரளவு என் மன உளைச்சலை நீக்கிவிடும் என்றாலும்,சில நேரங்களில் இன்னும் கொஞ்சம் விடாமுயற்சி இருந்திருந்தால் கண்டிப்பாக நான் தோல்வி அடைந்திருக்க மாட்டேன் என்று தோன்றும்.இயலாமை என்பது வேறு.முயலாமை என்பது வேறு.முயலாமையால் தோற்கும் போது நிச்சயம் வருத்தம் வரும்.அது போல இலக்கு நிர்ணயிக்கும் போதும் சின்னச்சின்ன இலக்குகளாக நிர்ணயித்து வெற்றியடைந்ததும் மனதில் ஒரு தன்னம்பிக்கை மலரும் பாருங்கள் அது அடுத்த வெற்றிக்கு ஊக்கம் தரும்.இது நான் அனுபவித்தது.

       தட்டுங்கள் திறக்கப்படும் என்பது தேவன் மாளிகையின் மணிக்கதவுகளுக்கு மட்டுமல்ல.நம் மனக்கதவுகளுக்கும் சொல்லப்பட்டதுதான்.கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது இறைவனிடம் இறைஞ்சுவதற்காக சொல்லப்பட்டது மட்டுமல்ல.நம் மனதிடம் கேட்பதற்காகவும் தான்.மனம் அத்தனை சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.நண்பர்களே! இப்படிச்சொல்கிறீர்களே! அப்படி நீங்கள் எதைச்சாதித்தீர்கள்? என்று கேட்கிறீர்களா?ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு.கோடீஸ்வரனின் லாப இலக்கு கோடிகள் என்றால் நூறுகளில் புழங்குபவர்களுக்கு இலக்கு நூறுகளில் தானே இருக்க முடியும்.அப்படி ஒரு நூறுகளில் இலக்கு குறிக்கும் வளரும் தலைமுறை நான்.இந்தப் புத்தாண்டில் எல்லா தோழர்,தோழிகளும் குறித்த இலக்கை எட்ட,சபதத்தை முடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்து வெற்றி பெறுங்கள்! தோல்விகளை எல்லாம் படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிக்கனியை பறித்தே தீருவது என்ற விடாமுயற்சியும்,உழைப்பும்,தன்னம்பிக்கையும் நம்மைப் புதுயுகம் காண வழிகாட்டட்டும்.

0 கருத்துகள்: