சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, நவம்பர் 28, 2009

தமிழ் இளைஞர்களே! பன்மொழித்தேர்ச்சி பெறுங்கள்.



 விகடனுக்கு நன்றிகள் கோடி!
எனது இந்தக்கட்டுரையை யூத்ஃபுல் விகடன் மின்னிதழில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள் கோடி

  டாலர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள் இளைய சமுதாயத்தின் பெரும்பான்மையானோர். உலகளாவிய வர்த்தகம், உலகமயமாக்கப்படுதல், அன்னியநாட்டில் வேலைவாய்ப்பு இவை இன்று அதிகம் பேசப்படும், இலக்காக நிர்னயிக்கப்படும் விசயங்கள் ஆகிவிட்டன.இளையோரின் ஆசையும் குறிக்கோளும் இதுதான். ஆனால் அவற்றை நிறைவேற்றிகொள்ள எல்லோருக்கும் சமவாய்ப்புக்கள் உள்ளதா? என்றால் இல்லை.ஆசைகள் நிறைவேற தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

   இன்று எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்று சொல்லி தமிழைத்தவிர மற்ற மொழிகளைத் தமிழர்கள் கற்க வழியில்லாத ஒரு சூழலை நம் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர். அந்த அரசியல்வாதிகளின் வாரிசுகள் சரளமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்காணல் தருகிறார்களே! எப்படி?  நகரவாசிகளுக்கு தனிவகுப்புகள் மூலம் பிறமொழி கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழைத்தவிர வேற்றுமொழி கற்கும் வாய்ப்புகள் இல்லவே இல்லை. கல்லூரிப்பாடங்களைத் தமிழ் படுத்தியதில் தமிழ் இளைஞர்களை பெரிய வணிக நிறுவனங்களில் எழுத்தர் வேலைக்குக் கூட தகுதியற்றவர்களாய் ஆக்கியிருக்கும் தமிழக அரசை என்ன சொல்வது?

   தமிழ் நம் தாய் மொழி. தமிழ் மிகப்பழமையான உயர் தனிச்செம்மொழி. உயர்ந்த இலக்கியப்பிண்ணனி கொண்ட மொழி. இதில் இரு வேறு கருத்து கிடையாது.ஆனால் தமிழை மட்டுமே கற்றால் தான் தாய் மொழிப்பற்று என்றோ, அப்போதுதான் தமிழ் வளரும் என்பதோ ஏற்றுக்கொள்ளக்கூடியதா? தனியார் பள்ளிகளில் இந்தி,ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் எழுதவும், படிக்கவும் மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களுக்கே பேசத் தெரியாது.தமிழை மட்டுமே கற்பதால் எங்கு சென்றாலும் நாம் தனித்து விடப்படுவோம். அந்தமானுக்கு வருகை தரும் மற்ற மாநில மக்கள் அனைவரும் அரசு வேலை பெற்று விட நம்மவர்கள் கடைகளிலும், கடைநிலைத் தொழிலாளர்களாகவும் தான் ஆக வேண்டியுள்ளது.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணேன் என்று பாடிய சூரியக்கவிஞனுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? மத்திய அரசின் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றும் இந்தி மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணதிற்காகவே அரசு வேலை இழந்தவர்களில் ஒருத்தி என்ற தகுதி ஒன்றே என்னை இப்படி ஒரு கட்டுரை எழுதத் தூண்டியது. தமிழ் இளைஞர்களே! இந்தியாவை ஆள இந்தி மொழியையும், உலகை ஆள ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெறுங்கள். ஓட்டு வாங்க அரசியல்வாதிகள் வரும் போது உங்களின் கோரிக்கைகளுள் ஒன்றாக இதையும் முன் வையுங்கள். அப்புறமென்ன? உலகின் எந்த மூலைக்கும் உங்களின் கரங்கள் ஓங்கும்

விகடனுக்கு நன்றிகள் கோடி!
எனது இந்தக்கட்டுரையை யூத்ஃபுல் விகடன் மின்னிதழில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள் கோடி


தாத்தாவின் மரணம்

ஐயா!
அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும்
அத்தைகளுக்கும் அம்மாக்களுக்குமிடையில்
அன்புப்பாலமாய் நீ இருந்தாய்!
உன்
முதுமையை சீரணிக்கமுடியாத
அவர்களின் கண்களில்
நீ போட்ட உறவுப்பாலம் தெரியவில்லை
அவர்களுக்குள்
முரண்பட்டு முகம் திருப்பும் போதெல்லாம்
நேர்மறையாய் சேர்ந்து செல்ல சொல்லிக்கொடுத்த
முதிய வழிகாட்டி நீ
பிழைப்பிற்காக பிரிந்த உறவுகள்
திரும்பவும் ஒன்று சேரும்
மையப்புள்ளி நீ
நீ
முதுமையில் முடங்கிக்கிடக்கும் போது
யாருமற்றதாய் உணர்ந்தாய்
நானோ இளமையில் நீ இல்லாது
தனிமை உணர்கிறேன்
ஐயா!
உன் நினைவுகள் எனக்குள்
நீ சொல்லும் அன்புக்கதைகளாய்...
என் விரல் பிடித்து அழைத்துச்செல்லும் அன்புறவாய்...
'ராஜாப்பையா' என்றழைக்கும் அன்பொலியாய்...
என் அந்திமக்காலம்வரை
பாகப்பிரிவினையில்
சொத்துகளோடு
உறவுகளையும் பிரித்துகொண்டு
பாதைகள் வேறு
பயணங்கள் வேறாகிப்போன
அப்பா,பெரியப்பா
அத்தைகளின் மனதில் நீ என்னவாக இருப்பாய்.

வெள்ளி, நவம்பர் 27, 2009

தமிழ் பயிற்றுவிப்போம்


       வெளிநாடு வாழ் தமிழ் நண்பர்களே! குழந்தை வளர்ப்பு பற்றி பேசும் போது பெரும்பாலும் தாய்ப்பாலின் மகத்துவம், சத்துணவு, வளர் இளம் பருவக்குழந்தைகள் கவனிப்பு, என்று நிறையப் பேசுவோம். ஆனால் தாய் மொழியின் அவசியத்தை உணர்த்துவதில்லை. குழந்தைகளை அவர்களின் எதிர்கால நலன் கருதி ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்கிறோம். வெளியில் நாம் எந்தப்பகுதியை சார்ந்து இருக்கிறோமோ அந்த மொழியில் பேசுகிறார்கள். குறைந்த பட்சம் வீட்டில் தமிழில் பேசுங்கள். தமிழ் படிக்க கற்றுக் கொடுங்கள். தமிழ் தாய்மொழி,தாய் மொழிபற்று, தமிழ் உயர் தனிச்செம்மொழி இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

   பெரும்பாலும் நம் குழந்தைகள் மேல் படிப்பு (அந்தமான் தமிழர்களைப் பொறுத்தவரை) திருமணம், உறவினர் சந்திப்பு என்று தமிழகம் செல்ல வேண்டி உள்ளது.அந்தமான் தமிழ்க்குழந்தைகளின் இந்தி கலந்த தமிழ், வெளி நாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் வேற்று மொழி கலந்த தமிழ் நம் குழந்தைகளை கேலிக்கு உள்ளாக்குகிறது. அத்தோடு நம் உறவுகள் பெரும்பாலும் தாத்தா, பாட்டியர் தன் பேரன்,பேத்தியர்களின் மொழி புரியாது தவிப்பிற்குள்ளாகிறார்கள்.

   அழகாக உடுத்தத்தெரிந்த நம் குழந்தைகளுக்கு பேருந்தில் எழுதி உள்ள ஊர்ப் பெயர்களைப் படிப்பதற்கு அடுத்தவர் உதவி தேவைப் படுகிறது. எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பேச, படிக்க, கொஞ்சம் எழுதவும் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அதோடு இங்கு அந்தமான் தமிழர் சங்கத்தில் தமிழ் கற்பித்தல் மையம் இயங்கி வருகிறது. இங்கே தமிழ் கற்க விரும்பும் அனைவருக்கும் தமிழ் இலவசமாக சொல்லிக்கோடுக்கப்படுகிறது.ரோமனில் ரோமனாக இரு என்பது பொன் மொழி. அதன்படி தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டுக் குடிமக்களாகவே மாறி விடுகின்றனர்.ஆனால் ரோமனில் ரோமனாக இருக்கத் தெரிந்த நமக்கு தமிழ் நாட்டில் தமிழனாகவும் இருக்கத் தெரிய வேண்டாமா? யோசிப்போமா தமிழ் நண்பகளே!

வியாழன், நவம்பர் 26, 2009

நான் ஒரு பெண்

அடுத்த வீட்டுப்பையனின்
பாட்டுச்சத்தம் கேட்டுவிட்டால்
அவசரமாய் என்னைத்தேடுவார் அப்பா
அவரின் மான அவமானம் நான்

அம்மா எனைப் பார்க்கும் போதெல்லாம்
அடி வயிற்று நெருப்பென
அடிவயிறு தொட்டு கடவுளைக் காட்டுவாள்
அவளின் நல் வளர்ப்பின் அடையாளம் நான்

தலை குனிந்து நட
சாலையில் சிரிக்காதே
உடையில் கவனம் கொள்
வாசல் கதவடை
அண்ணனின் புது ஆத்திச்சூடி
அவனின் கௌரவம் நான்

இப்படி பிறந்த வீட்டின்
மானமாய்,கௌரவமாய்
பெருமையாய் மட்டுமே இருந்து
பழக்கப்பட்ட எனக்கு
என் சுயம் மறந்து போனது
என் இயல்பு மறந்து போனது

சுயம்வரத்தில் கூட
வரமாலை மட்டுமே என் கைகளில்
வரனுக்கு மாலையிடக்கட்டளை
புகுந்த வீட்டிலும் என் நிலைப்பாடு ஒன்று தான்
களமும், காலமும், கோலமும் தான் வெவ்வேறு

வங்கக் கடலில் வசந்தத்தீவுகள்




             அந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமான இயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள்.2004ம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் தீவுகளும் ஒன்று.அழிவை மறந்து ஆக்கத்திற்கு வழி தேடி, அந்த துர் நிகழ்வுகளில் இருந்து இந்தத் தீவு மக்கள் வெளி வந்து தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


 அந்தமான் தீவுகள் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம். அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவை. அழகானவை. அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ள மக்களில் த்மிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். தீவுத்தலைநகர் போர்ட் ப்ளேயரில் இருந்து மற்ற தீவுகளுக்கு படகு, கப்பல் மற்றும் பேருந்து மூலம் பயணிக்க முடியும்.

   தலை நகரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச்சிறப்பு பெற்ற கூண்டுச்சிறை மற்ற பார்க்கும் இடங்களுக்கு நிலவழிப் பயணம் செய்ய முடியும். மற்ற தீவுகளுக்கு நீர் வழிப்பயணம் தான்.எங்களைப் போல இந்தத் தீவுகளில் குடியிருப்பவர்கள் முக்கிய பூமியில் இருந்து உறவினர்கள் வரும்போது தான் சுற்றுலா செல்வதற்குக் கிளம்புவோம். ஏனெனில் அந்தமான் கடற்கரைகள் தனிமையானவை. கூடிச்சென்றால் கோடி இன்பம்.அப்படி எங்கள் அம்மா, என் தம்பி, தம்பி மனைவி ஆகியோர் தீவுச்சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

  முதல் நாள் போர்ட் ப்ளேயரில் உள்ள கூண்டுச்சிறைக்கு அழைத்துச்சென்றோம். அன்று ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தினம்.சுதந்திர தினத்தன்று முப்படை அணிவகுப்பு நிகழும்.அதைப் பார்ப்பதற்க்குப் பிற தீவுகளில் இருந்து மக்கள் அலை அலையாக தலைநகருக்கு வருவார்கள். நுழைவு வாயிலில் அடி எடுத்து வைக்கும் போது என் தம்பி தனது காலணிகளை கழட்டி விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழ பின் தொடர்ந்த மற்றவர்களும் வெளி நாட்டினர் உட்பட வணங்கி எழுந்தனர். எனக்கோ இத்தனை முறை வந்திருக்கும் நமக்கு ஏன் வணங்கத்தோன்றவில்லை என்று யோசனை எழ என் தம்பியோ உங்களுக்கு கோவில்கள் எதற்கு? இந்த சிறை தான் கோவில் என்று கூறி கண் கலங்க நாங்கள் பேச முடியாது நின்றோம்.

அந்தமானில் எந்தப்பக்கம் திரும்பினாலும் கடலைத்தரிசிக்க முடியும். அலைகளற்ற அமைதியான கடல். இந்தக் கடலா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அப்படி தெளிந்த நீரோடையாக இருக்கும்.குழந்தைகளும் கடலாட இயலும்.இங்கு கடலுக்குள் பவளப்பாறைகளைக் கண்டு களிக்கலாம்
   அமைதியான கண்ணைக்கவுரும் இயற்கைப் பேரழகு கொண்ட இந்தத் தீவுகளுக்கு உலகின் எல்லா இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.பெரும் நகரங்களில் சந்தடிகள் நிறைந்த நகரவாசிகள் அந்தமான் போன்ற ஊர்களில் சுற்றுப்பயணம் செய்வது மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியதிற்கும் நல்லது. சுத்தமான காற்று,கண்ணுக்கு இதமான பசுமை, சுத்தமான சுற்றுப்புறங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்து. என்னங்க நீங்களும் அந்தமானுக்கு சுற்றுலா கிளம்பிட்டீங்களா? ஏதும் விவரம் தேவைங்களா? இந்த வளைத்தளத்துல உலவுங்க.
www.and.nic.in.

திங்கள், நவம்பர் 23, 2009

ஆணாய்ப் பிறப்பதில்......

பெண்ணாய்ப் பிறப்பதற்கே

பெரும் தவம் செய்திடல் வேண்டும்.

உண்மைதான்...

ஆணாய்ப் பிறப்பதில்

சில நேரங்களில்

பல அசௌகரியங்கள்



வீட்டுக்கு வருகை தரும்

விருந்தாளிகளின் இடப்பற்றாக்குறையினால்

மொட்டை மாடிக்கு வீசப்படும்

தலையணைகள்.

நம்

சீற்றப் பார்வை உணர்ந்தும்

சிரித்துக்கொண்டே சொல்வாள் அம்மா

நிலா பார்த்துகிட்டே தூங்கு கண்ணா!



நகை முதல் அப்பாவின் புன்னகை வரை

மகளுக்குத்தான்.

எங்கள் வீட்டில்

தங்கையின் பிம்பம் பிரதிபலித்தே

ரசம் போன கண்ணாடிகள் நிறைய

வீடெல்லாம்

விதைத்துகிடக்கும் அவளின் அலங்காரப்பொருட்கள்.

அம்மாவின் நட்பு வட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படும்,

அவளின்

ஆடை அணி மணிகள்

அழகு நிலைய விஜயங்கள்



என்

அலங்கார நேரங்களில்

அபஸ்வரமாய் செவிப்பறை மோதும்

அப்பாவின் குரல்

வயசுக்கோளாறு ம்..ம்..

வார்த்தைகளை ரகசியமாய்

வம்புகளாய் எய்யும்

வாசல் திண்ணையில் வம்பளக்கும் கூட்டம்

ஆண் பிள்ளைக்கு அப்பனையே எதிரியாக்கும்



வீட்டுக்கு வரும்

அத்தை பெண், மாமா பெண்ணால்

அபகரிக்கப்படும் என் அறைத்தனிமைகள்

என்னை

எங்கள் வீட்டில் அன்னியப்படுத்தும்

கொலுசு சத்தங்கள்

அடுத்தவரிடம் பகிர முடியாத

ஆண் உலக நிர்ப்பந்தங்கள்

அந்தரங்கக் கனவுகள்

சொல்லாத நேசங்கள்

சொல்லமுடியாத விருப்பங்கள்



அதனால் தான் சொல்கிறேன்

பெண்ணாய்ப் பிறப்பது

பெரிய சுகம்

நண்பர்களாய் அம்மாவும் அப்பாவும்..

சனி, நவம்பர் 21, 2009

கவிதைகள்

கவிதை- மொழியின் நாகரீகம்

அப்படியானால்

புதுக்கவிதை தமிழின் நாகரீகமா?



சிலருக்கு

கவிதை

வாழ்வின் அழகியலைப் பதிவு செய்யும்

ஆபரணங்களாய்...

சிலருக்கு

கவிதை

வாழ்க்கை அவலங்களைச்சொல்லும்

கருவிகளாய்...

சிலருக்கோ

கவிதை

சமுதாயச்சீர்கேடுகளின்

முகமூடி கிழிக்கும் முட்களாய்...



எனக்கோ

கவிதைகளை

மழைச்சாரலாய்,

நிலா கிரணங்களய்

நீரருவியாய்

பூக்களாய்ப் பார்த்துத்தான் பழக்கம்



உயிரின் ஆழத்தைத் தொடும்

அதன் வாசம்,

கோணல் சிந்தனைகளை

நேர்மையாய் தடம் மாற்றும்



மனக்காயங்களை வருடிக் கொடுக்கும்

அதன் ஈரமான மென்மை,

என் வல்லமையை

நிலைப்படுத்த போராடும்



கவிதைகள்

எனக்கு

என் வாழ்க்கையின்

நேர மாறுதல்களுக்கேற்ப

நிறம் மாற்றும் சிந்தனைகளை

பதிவு செய்யும் கருவி

என்

உயிரின் வேர்களுக்கு

உரமிடக்கவிதைகள் தேவை எனக்கு.



அழகான கவிதைகள்

என் குழந்தைகளின் ஈரமுத்தம் தந்த சிலிர்ப்பாய்..

இரவு நேரத்தின் பெரு மழையாய்..

விடிகாலைப் பனிப்பொழிவாய்

என்னுள் இறங்கும்



கவிதைகள்

காலத்தின் உயிர்ப்பதிவு

கவிப்பேரரசு சொன்னது

கவிதைகள் காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல

ஒரு கவிஞனின் உயிர்ப்பதிவும் கூட



எல்லாவற்றிற்கும் மேலாக,

உலகம் என்னை

எனக்குப் பிடித்த முகமான

கவிஞனாய் அறியப்படுவத ற்காக

கவிதைகள் எனக்கு அவசியப்படுகிறது.

கவிஞர்களே! உங்களுக்கு?

ஈரம்

இதோ

என் வாழ்க்கை முடியப்போகிறது.

இந்த

பூமிக்கும் எனக்குமான பந்தம்

முற்றுபெற இருக்கிறது

எனக்கான இன்னொரு உலகம் எப்படி இருக்கும்.



கண்களின்

கடைக்கோடியில் நீர் வழிகிறது

பேரக்குழந்தைகளின் மழலை மொழிகள்

செவிகளில் தேனிறைக்க

தாகத்திற்கு

தண்ணீர் தராத கரங்கள் தந்த பால்

கடை வாயில் வழிகிறது.

வீடு என்னவோ நிறைந்து கிடக்கிறது

வெறுமையாய்க் கிடக்கிறது என் மனம்



எல்லோர் மனதிலும் மோதும்

சொத்துக் கணக்குகள்

வங்கி இருப்புகள்

என் விரல் பற்றி

திருநீறு தொட்டு

இட்டுக்கொள்ளும் ஆண்பிள்ளைகள்,

தனிமையில் என்னைவிட்ட பாவம் போக்க

அழுத கண்ணீர் அனைவரும் பார்க்க

வடித்தபடி அமர்ந்திருக்கும் பெண்கள்



ஊறி, உளுத்துப்போன சம்பிரதாயங்கள்

உலர்ந்து, இறுகிப் போன மனித ஈரம்

எதையோ தேடி எப்படியோ ஓடி

அர்த்தமற்று அபத்தமாகிப்போன மனித வாழ்க்கை

ஈரமற்று இருகிப்போன மனித இதயங்களை நனைக்க

உருகி வருகிறது

இரு துருவங்கள்

நகர வாழ்க்கை

நகரத்திற்குச்சென்றால்

வசதியான

வாழ்க்கை வசப்படும் என்றார்கள்



சாதிக்கத்துடிப்பவர்களுக்கோ

சந்தேகமே இல்லை

வானமே எல்லை என்றார்கள்



என்

மூளையைச்சுரண்டி

பழையனக் கழித்து

புதியனப்புகுத்தி விட்டர்கள்



வந்த பின் தான் தெரிந்தது

வசதிகள் வசப்பட்டது

வாழ்க்கை தொலைந்து போனது.

வெள்ளி, நவம்பர் 20, 2009

நகரத்து நண்பர்காள்!

ஓ! என் இனிய நகரத்து நண்பர்களே!
நாற்று முடி சுமந்து
நடவு நட்டு சேறாடி
களையெடுத்துக் களைத்ததுண்டா?
வயல் வரப்புகளில் வாய்க்கால் ஓரங்களில்
உணவு கொண்டதுண்டா?
கண்மாய்க்கரை மரங்களின் நிழலில்
துண்டு விரித்து தூங்கியதுண்டா?
வைக்கோல் பிடுங்கி கொட்டிலில் போட்டு
மாடுகட்டி
சோறு வடித்த கஞ்சி உறையவைத்து
தவிடு கலந்து தட்டில் போட்டு
கோழி அடைத்து
மண் அடுப்பில் மரத்தூள் அடைத்து
மண் பானை சோறாக்கி
அம்மி அரைத்து குழம்பு கூட்டி
ஆவி பரக்க உண்டு களித்து
அம்மா சேலை அரைகுறையாய் போர்த்தி
தரை விரித்த கோரை பாயில்
தலை சாய்த்ததுண்டா?
ஓட்டு இணைப்பில்
ஒழுகும் மழைத்தண்ணீரை
வீடு கழுவி பாத்திரம் நிரப்பி
ஆடை நனைய
ஆட்டம் போட்டு
பொழுது விழுந்ததும் தும்மித்துவள
உடைந்த ஓடும் சின்ன வெங்காயம்
உரசி
ஆயா கையால் நெற்றிப்பற்றுப்போட
வெறும் சட்டி காய வைத்து
அம்மா கையால் ஒத்தடம் கொடுக்க உறங்கியதுண்டா?
அடை மழை நேரங்களில்
பழைய சாக்கு கொங்காணியில் உடல் போர்த்தி
பள்ளி சென்றதுண்டா?
நாற்றுப் பறித்து நடவு நட
கதிர் அறுத்து களம் சேர்க்க
வீட்டுப்பசு ஈன்ற போது
வேப்பிலைக் குளியல் செய்ய
இப்படி
பல காரணம் சொல்லி
பாதி நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து
பட்டாம்பூச்சியாய் திரிந்ததுண்டா?
தேரு, திருவிழா, சவ்வுமிட்டாய், ராட்டினம்
தெருக்கூத்து, நாடகங்கள், முளைப்பாரி
கும்மி கொட்டி பார்த்ததுண்டா?
உங்களைப்போல்
நகரத்து நாகரீகம், நடை,உடை பாவனைகள்
கணிணி அறிவும், கனத்ததோர் ஆங்கிலமும்
கற்றுக்கொள்ள முடியும்
கணப்பொழுது முயற்சியினால்....
இப்படி இருக்க
அதெப்படி
ஒற்றைவரியில் சொல்லி விடுகிறீர்கள் சுலபமாக?
"கிராமத்தானுக்கு என்ன தெரியும் என்று!

முகமூடிகள்

முகமூடிகள்

முகமூடிகள் தயாராய் இருக்கிறது விதம்விதமாய்...
முன்னால் சிரித்து
பின்னால் வெறிக்கும் தோழிகளுக்கென
சகோதரி என்று சொல்லி
தவறாய்ப் பார்க்கும் அன்பர்களுக்கென
நெருக்கமானவர்களுக்கு மட்டும்  சகாயம் செய்யும்
நெறி தவறும் மேலதிகாரிகளுக்கென
நம் உதவி பெற்ற காலம் போய்
நமக்குதவி பெரும் நெருக்கடி நேரங்களில்
நாசுக்காய் கடந்து போகும் உறவுகளுக்கென
நாலு பேருக்கு மத்தியில்
நம் இல்லாமை, இயலாமைகளை
சாடையாய் விமர்சிக்கும்
அக்கம்,பக்கத்தார்க்கென
அனைவருக்கும் தயாராய் இருக்கிறது
அழகான புன்னகை முகமூடிகள்
ஊரெல்லாம் சிரித்துவிட்டு
இல்லம் வந்ததும் எரிந்து விழுகிறாய்!
குற்றம் சொல்லும் குடும்பதாரிடம் எப்படிச்சொல்வது?
உங்களிடம் மட்டும் தான்
உண்மையாய் இருக்கிறேன் என்று.

வியாழன், நவம்பர் 19, 2009

ஒரு மனைவியின் குமுறல்

என்னவனே!
நீ
என் தளிர் விரல் பற்றி
தங்க மோதிரம் அணிவிக்க வேண்டி
தவிக்கவில்லை என் மனது.
என் விரல் பற்றி நீ நடக்க
உன்
தோள் உரசி துணை வரத்தான்
துடிக்கிறது என் மனது.
நீ என்
கூந்தல் வருடி கொள்ளை மலர் சூட்டி
கொஞ்சி அருகிருக்க வேன்டுகிறது என் மனது
என் கன்னம் வருடி
கண்ணீர் துடைத்து
நீ
உதிர்க்கும் ஒற்றை சொல்லுக்காய்
உருகி தவிக்கிறது என் மனது
என் ஊடல் உடைக்க
என் நெற்றியில் உன் இதழ் பதித்து
நீ தரும் ஒற்றை முத்தம்
என் உயிர் வருடும்
நீ
தரும் அகலக்கரை காஞ்சிப் பட்டும்
அடுப்படி எந்திரங்களும்
மின்னும் பொன் நகையும்
உன் வளத்தின் வளர்ச்சி அடையாள்ம்
என் மனத்தின் தேவை தெரியுமா உனக்கு!
என் விருப்பங்கள் அறிவாயா நீ!
ரயிலின் பயணத்திற்காய்
இணைந்து கிடப்பது தண்டவாளத்தின் கட்டாயம் போல்
வாழ்க்கை பயணிப்பதற்காய்
உன்னோடு நான்

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாய்

கரன்சியின் பின்னால் ஓடும் நீ
நானோ
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உன்னை விட்டு விலக முடியா பாரத மங்கை.





கணவனின் பதில்

ஒப்பந்தங்களை ஒத்துக்கொள்வதை விட
ஒத்திப் போடுவது நல்லதாய்ப் படுகிறது.
அதுவும்
உன்னோடான ஒப்பந்தங்கள்
கிழக்கிந்திய கம்பெனியின்
வாணிப ஒப்பந்தமாய் ஆரம்பித்து, பின்
கழுத்தை நெறிக்கும் அடிமைத்தனமாய் ஆகிப் போகிறது.
என் இனியவளே!
உலக உருண்டை உருள்வதன் அச்சே பணம் தான் இன்று
உன்னோடான இனிமையான நாட்களின்
இனிய நினைவுகள் பத்திரமாய் இருக்கிறது
என்
இதயத்தின் ஈரமான பக்கங்களில்.
சாதனை இலக்குகள் மாறும் போது
சாதிக்கும் நெருப்பு ஓங்கி எரிகிறது.
கார்ல் மார்க்சின் ஜென்னியின்
வ்ற்றிப்போன மார்க்காம்புகளில் பால் காணாது
பசியால் துடித்த குழந்தை பார்த்தும்
கார்ல் மார்க்சின் கண்ணியம் காத்த
ஜென்னியைக் கொள் என்றேனா?
லண்டன் பாரிஸ்டர் அண்ணல் காந்தி
கந்தல் உடுத்தி கதர் நெய்த போதும்
உவகையாய் கை கொடுத்த கஸ்துரிபா அன்னையை
உவமையாய் சொன்னேனா உனக்கு?
இக்கரைக்கு அக்கரை பச்சை
இருந்து பார்த்தால் நிலைமை புரியும்
காசில்லாதவன் கடவுளே ஆனாலும்
கதவைச் சாத்து என்றவன் சித்தன்
தானியங்கி மாளிகையில்
தனிமைப் பித்தில் உளரும் என்னவளே!
வா! உனக்கும் எனக்குமாய்
ஒரு கூடு தேடுவோம்
பஞ்சம் பழகுவோம்
பட்டினி கிடப்போம்
ஓடை சென்று ஓருடை துவைத்து
ஒரு பக்கம் உடுத்தி
மறுபக்கம் உலர்த்தி
பட்டமுள் பொறுக்கி
உழக்கரிசி உருக்கி குடித்து
உனக்காய் நான், எனக்காய் நீ
உருகி கிடப்போம்
அப்போதும் நீ இந்த கவிதை சொன்னால்
அதிர்ஷ்டசாலி நான்
அர்த்தமுள்ளது உன் கவிதை.



புதன், நவம்பர் 18, 2009

படியெடுத்த படிவம்

பாட்டி கொஞ்சும் போதெல்லாம் சொல்வாள்
தாத்தா மாதிரி நீ
அம்மாவுக்குப் பிடித்தமான நேரங்களில்
அன்பு பொங்க முகம் வழித்து மொழிவாள்
அம்மா போல நீ
மதிப்பெண் கூட வாங்கிவிட்டால்
அப்பா உச்சி முகர்வார்
என்னைப்போலவே நீ
தாத்தா கொஞ்சம்
அம்மா கொஞ்சம்
அப்பா கொஞ்சம்
குழப்பி, குழப்பி படியெடுத்த வடிவத்தில்
சுயம் கொன்டவனா நான்?
கடவுள் தன்
படைப்புக்கற்பனை
வெறுமையாகும் போதெல்லாம்
தாத்தா தலை
பாட்டி முகம்
அம்மாவின் கண்கள்
அப்பாவின் சிரிப்பை
ஒன்றாக்கி ஒன்றைப் படைத்தாரோ?
தாத்தாவின் அதிகாரம்
பாட்டியின் கனிவு
அம்மாவின் அன்பு
அப்பாவின் கம்பீரமும் பின் தொடருமோ?
பிறகென்ன சுயம் வேண்டிகிடக்கிறது
மனிதர் அத்தனை பேரும்
குழப்பி குழப்பி படியெடுத்த படிவங்கள் தானே!

இயலாமை

எல்லா விருந்துக்கும்
எங்கு போனாலும்
ஒற்றைப் பட்டுப்புடவையையே
சுற்றி அணிந்து
பற்றாக்குறை நேரங்களில்
பற்று வரவைச்சரிசெய்ய
ஒற்றைச்சங்கிலியும் அடகுக்குப்போக
உதட்டில் புன்னகை
உள்ளுக்குள் உதறல்
பித்தளைச்சங்கிலி காட்டிக் கொடுக்குமோ?
உறவுகள், நட்புகளின் உரையாடல், கேளிக்கை
உடனிருக்க முடியாது
வீடு திரும்பும் என் இயலாமை
மூர்க்க கோபமாய் முகம் மாற்றும்
அன்பைக் பொழியும் என் கணவன் மீது.

அமைதியைத்தேடி....

உண்மை உரைப்பதாய்
மனத்தின் மலங்களை
நடுவீட்டில் கொட்டும் நண்பர்களால்
நாற்றமடிக்கிறது என் மனதும்
வாழ்வின் அழகியல் புரியாது
அவலங்களையே புலம்பும் மனங்களின்
தீய்ந்த மணத்தால் புரையேறுகிறது எனக்கு
புடைவைகள், நகைகள்
உடமைகளின் பெருமைகள்
உறவுக்கூட்டங்களின் வருகைகள்
ஊர் வம்புகள், குறைகள் குறித்த உரையாடல்கள்
மூச்சுத்திணறுகிறது எனக்கு
வனாந்திரம் தேடிப் போனாலும்
வனங்களின் மரங்களில் முனகுகிறது
ஆணி கொண்டு அழுந்த வரைந்த
காதலர் இதயங்கள்

வெற்றிக்கு வழி...

ஜோசியம் பார்த்து
ஹோமங்கள் செய்து
கோவில் கோவிலாய் யாத்திரை சென்று
சாமி சிலைகள் முன்னே உத்தரவு கேட்டு
நாணயம் சுண்டி
நம்பிக்கை வளர்த்து.....
பின்னும்
தோற்றுப் போகும் துக்கத்தில் அழும்
மனதிற்குப் புரியவில்லை
வெற்றிக்கு வழி தகுதிகளை உயர்த்த வேண்டும் என்று.

கேள்விகள் ஆயிரம்

உலகம் அழிந்து
உயிர்கள் எனும் சொல்லே அர்த்தமற்றுப் போகும் காலத்தில்
நமது
எண்ணங்களின் வடிவம் என்னவாக இருக்கும்
நிழல்கள் பதிய நிலம் அற்றுப்போன பூமியில்
அந்த அலைகள் காற்றில் கரையுமா?
கடலில் மிதக்குமா?
இயற்கையின் மாயை வாழ்க்கையென்றால்
நிஜம் எது?
உயர்வெது? தாழ்வெது?
உடமைகளே அளவுகோலா?
நரியை பரியாக்கி, பின்
பரி நரியாகி
பரிகளை பலி கொண்டது
இறைவனின் திருவிளையாடல்.
இங்கே
நரிகளும் பரிகளும்
நாகரீகச்சட்டைக்குள்
இனம் காணுவது எப்படி?
நித்தம்
வெவ்வேறு போர்க்களங்களில்
விதம் விதமான போர்கள்
வெற்றி எது? தோல்வி எது?
நான் யார்?
தேடலற்றுப்போன இயந்திரக்கோலம்
உள்முகத்தேடலுக்கு உதவாத உணர்வுகளின் பரிமாணம்.
இப்படி
விடை தெரியாக்கேள்விகள் ஆயிரம்
இந்த
விளங்காத ரகசியங்களுக்கு
விடைகாணும் நோக்கில்
வினாத்தொடுத்தேன் எதிர்ப்பட்டவர்களிடம்
அவர்களின் பதில்
"நேத்து வர நல்லாத்தானே இருந்தே?
ஐயோ பாவம்"