சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, நவம்பர் 21, 2009

கவிதைகள்

கவிதை- மொழியின் நாகரீகம்

அப்படியானால்

புதுக்கவிதை தமிழின் நாகரீகமா?



சிலருக்கு

கவிதை

வாழ்வின் அழகியலைப் பதிவு செய்யும்

ஆபரணங்களாய்...

சிலருக்கு

கவிதை

வாழ்க்கை அவலங்களைச்சொல்லும்

கருவிகளாய்...

சிலருக்கோ

கவிதை

சமுதாயச்சீர்கேடுகளின்

முகமூடி கிழிக்கும் முட்களாய்...



எனக்கோ

கவிதைகளை

மழைச்சாரலாய்,

நிலா கிரணங்களய்

நீரருவியாய்

பூக்களாய்ப் பார்த்துத்தான் பழக்கம்



உயிரின் ஆழத்தைத் தொடும்

அதன் வாசம்,

கோணல் சிந்தனைகளை

நேர்மையாய் தடம் மாற்றும்



மனக்காயங்களை வருடிக் கொடுக்கும்

அதன் ஈரமான மென்மை,

என் வல்லமையை

நிலைப்படுத்த போராடும்



கவிதைகள்

எனக்கு

என் வாழ்க்கையின்

நேர மாறுதல்களுக்கேற்ப

நிறம் மாற்றும் சிந்தனைகளை

பதிவு செய்யும் கருவி

என்

உயிரின் வேர்களுக்கு

உரமிடக்கவிதைகள் தேவை எனக்கு.



அழகான கவிதைகள்

என் குழந்தைகளின் ஈரமுத்தம் தந்த சிலிர்ப்பாய்..

இரவு நேரத்தின் பெரு மழையாய்..

விடிகாலைப் பனிப்பொழிவாய்

என்னுள் இறங்கும்



கவிதைகள்

காலத்தின் உயிர்ப்பதிவு

கவிப்பேரரசு சொன்னது

கவிதைகள் காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல

ஒரு கவிஞனின் உயிர்ப்பதிவும் கூட



எல்லாவற்றிற்கும் மேலாக,

உலகம் என்னை

எனக்குப் பிடித்த முகமான

கவிஞனாய் அறியப்படுவத ற்காக

கவிதைகள் எனக்கு அவசியப்படுகிறது.

கவிஞர்களே! உங்களுக்கு?

0 கருத்துகள்: