சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், நவம்பர் 18, 2009

படியெடுத்த படிவம்

பாட்டி கொஞ்சும் போதெல்லாம் சொல்வாள்
தாத்தா மாதிரி நீ
அம்மாவுக்குப் பிடித்தமான நேரங்களில்
அன்பு பொங்க முகம் வழித்து மொழிவாள்
அம்மா போல நீ
மதிப்பெண் கூட வாங்கிவிட்டால்
அப்பா உச்சி முகர்வார்
என்னைப்போலவே நீ
தாத்தா கொஞ்சம்
அம்மா கொஞ்சம்
அப்பா கொஞ்சம்
குழப்பி, குழப்பி படியெடுத்த வடிவத்தில்
சுயம் கொன்டவனா நான்?
கடவுள் தன்
படைப்புக்கற்பனை
வெறுமையாகும் போதெல்லாம்
தாத்தா தலை
பாட்டி முகம்
அம்மாவின் கண்கள்
அப்பாவின் சிரிப்பை
ஒன்றாக்கி ஒன்றைப் படைத்தாரோ?
தாத்தாவின் அதிகாரம்
பாட்டியின் கனிவு
அம்மாவின் அன்பு
அப்பாவின் கம்பீரமும் பின் தொடருமோ?
பிறகென்ன சுயம் வேண்டிகிடக்கிறது
மனிதர் அத்தனை பேரும்
குழப்பி குழப்பி படியெடுத்த படிவங்கள் தானே!