சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, நவம்பர் 20, 2009

நகரத்து நண்பர்காள்!

ஓ! என் இனிய நகரத்து நண்பர்களே!
நாற்று முடி சுமந்து
நடவு நட்டு சேறாடி
களையெடுத்துக் களைத்ததுண்டா?
வயல் வரப்புகளில் வாய்க்கால் ஓரங்களில்
உணவு கொண்டதுண்டா?
கண்மாய்க்கரை மரங்களின் நிழலில்
துண்டு விரித்து தூங்கியதுண்டா?
வைக்கோல் பிடுங்கி கொட்டிலில் போட்டு
மாடுகட்டி
சோறு வடித்த கஞ்சி உறையவைத்து
தவிடு கலந்து தட்டில் போட்டு
கோழி அடைத்து
மண் அடுப்பில் மரத்தூள் அடைத்து
மண் பானை சோறாக்கி
அம்மி அரைத்து குழம்பு கூட்டி
ஆவி பரக்க உண்டு களித்து
அம்மா சேலை அரைகுறையாய் போர்த்தி
தரை விரித்த கோரை பாயில்
தலை சாய்த்ததுண்டா?
ஓட்டு இணைப்பில்
ஒழுகும் மழைத்தண்ணீரை
வீடு கழுவி பாத்திரம் நிரப்பி
ஆடை நனைய
ஆட்டம் போட்டு
பொழுது விழுந்ததும் தும்மித்துவள
உடைந்த ஓடும் சின்ன வெங்காயம்
உரசி
ஆயா கையால் நெற்றிப்பற்றுப்போட
வெறும் சட்டி காய வைத்து
அம்மா கையால் ஒத்தடம் கொடுக்க உறங்கியதுண்டா?
அடை மழை நேரங்களில்
பழைய சாக்கு கொங்காணியில் உடல் போர்த்தி
பள்ளி சென்றதுண்டா?
நாற்றுப் பறித்து நடவு நட
கதிர் அறுத்து களம் சேர்க்க
வீட்டுப்பசு ஈன்ற போது
வேப்பிலைக் குளியல் செய்ய
இப்படி
பல காரணம் சொல்லி
பாதி நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து
பட்டாம்பூச்சியாய் திரிந்ததுண்டா?
தேரு, திருவிழா, சவ்வுமிட்டாய், ராட்டினம்
தெருக்கூத்து, நாடகங்கள், முளைப்பாரி
கும்மி கொட்டி பார்த்ததுண்டா?
உங்களைப்போல்
நகரத்து நாகரீகம், நடை,உடை பாவனைகள்
கணிணி அறிவும், கனத்ததோர் ஆங்கிலமும்
கற்றுக்கொள்ள முடியும்
கணப்பொழுது முயற்சியினால்....
இப்படி இருக்க
அதெப்படி
ஒற்றைவரியில் சொல்லி விடுகிறீர்கள் சுலபமாக?
"கிராமத்தானுக்கு என்ன தெரியும் என்று!