சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், நவம்பர் 23, 2009

ஆணாய்ப் பிறப்பதில்......

பெண்ணாய்ப் பிறப்பதற்கே

பெரும் தவம் செய்திடல் வேண்டும்.

உண்மைதான்...

ஆணாய்ப் பிறப்பதில்

சில நேரங்களில்

பல அசௌகரியங்கள்



வீட்டுக்கு வருகை தரும்

விருந்தாளிகளின் இடப்பற்றாக்குறையினால்

மொட்டை மாடிக்கு வீசப்படும்

தலையணைகள்.

நம்

சீற்றப் பார்வை உணர்ந்தும்

சிரித்துக்கொண்டே சொல்வாள் அம்மா

நிலா பார்த்துகிட்டே தூங்கு கண்ணா!



நகை முதல் அப்பாவின் புன்னகை வரை

மகளுக்குத்தான்.

எங்கள் வீட்டில்

தங்கையின் பிம்பம் பிரதிபலித்தே

ரசம் போன கண்ணாடிகள் நிறைய

வீடெல்லாம்

விதைத்துகிடக்கும் அவளின் அலங்காரப்பொருட்கள்.

அம்மாவின் நட்பு வட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படும்,

அவளின்

ஆடை அணி மணிகள்

அழகு நிலைய விஜயங்கள்



என்

அலங்கார நேரங்களில்

அபஸ்வரமாய் செவிப்பறை மோதும்

அப்பாவின் குரல்

வயசுக்கோளாறு ம்..ம்..

வார்த்தைகளை ரகசியமாய்

வம்புகளாய் எய்யும்

வாசல் திண்ணையில் வம்பளக்கும் கூட்டம்

ஆண் பிள்ளைக்கு அப்பனையே எதிரியாக்கும்



வீட்டுக்கு வரும்

அத்தை பெண், மாமா பெண்ணால்

அபகரிக்கப்படும் என் அறைத்தனிமைகள்

என்னை

எங்கள் வீட்டில் அன்னியப்படுத்தும்

கொலுசு சத்தங்கள்

அடுத்தவரிடம் பகிர முடியாத

ஆண் உலக நிர்ப்பந்தங்கள்

அந்தரங்கக் கனவுகள்

சொல்லாத நேசங்கள்

சொல்லமுடியாத விருப்பங்கள்



அதனால் தான் சொல்கிறேன்

பெண்ணாய்ப் பிறப்பது

பெரிய சுகம்

நண்பர்களாய் அம்மாவும் அப்பாவும்..

0 கருத்துகள்: