சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், நவம்பர் 19, 2009

ஒரு மனைவியின் குமுறல்

என்னவனே!
நீ
என் தளிர் விரல் பற்றி
தங்க மோதிரம் அணிவிக்க வேண்டி
தவிக்கவில்லை என் மனது.
என் விரல் பற்றி நீ நடக்க
உன்
தோள் உரசி துணை வரத்தான்
துடிக்கிறது என் மனது.
நீ என்
கூந்தல் வருடி கொள்ளை மலர் சூட்டி
கொஞ்சி அருகிருக்க வேன்டுகிறது என் மனது
என் கன்னம் வருடி
கண்ணீர் துடைத்து
நீ
உதிர்க்கும் ஒற்றை சொல்லுக்காய்
உருகி தவிக்கிறது என் மனது
என் ஊடல் உடைக்க
என் நெற்றியில் உன் இதழ் பதித்து
நீ தரும் ஒற்றை முத்தம்
என் உயிர் வருடும்
நீ
தரும் அகலக்கரை காஞ்சிப் பட்டும்
அடுப்படி எந்திரங்களும்
மின்னும் பொன் நகையும்
உன் வளத்தின் வளர்ச்சி அடையாள்ம்
என் மனத்தின் தேவை தெரியுமா உனக்கு!
என் விருப்பங்கள் அறிவாயா நீ!
ரயிலின் பயணத்திற்காய்
இணைந்து கிடப்பது தண்டவாளத்தின் கட்டாயம் போல்
வாழ்க்கை பயணிப்பதற்காய்
உன்னோடு நான்

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாய்

கரன்சியின் பின்னால் ஓடும் நீ
நானோ
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உன்னை விட்டு விலக முடியா பாரத மங்கை.





கணவனின் பதில்

ஒப்பந்தங்களை ஒத்துக்கொள்வதை விட
ஒத்திப் போடுவது நல்லதாய்ப் படுகிறது.
அதுவும்
உன்னோடான ஒப்பந்தங்கள்
கிழக்கிந்திய கம்பெனியின்
வாணிப ஒப்பந்தமாய் ஆரம்பித்து, பின்
கழுத்தை நெறிக்கும் அடிமைத்தனமாய் ஆகிப் போகிறது.
என் இனியவளே!
உலக உருண்டை உருள்வதன் அச்சே பணம் தான் இன்று
உன்னோடான இனிமையான நாட்களின்
இனிய நினைவுகள் பத்திரமாய் இருக்கிறது
என்
இதயத்தின் ஈரமான பக்கங்களில்.
சாதனை இலக்குகள் மாறும் போது
சாதிக்கும் நெருப்பு ஓங்கி எரிகிறது.
கார்ல் மார்க்சின் ஜென்னியின்
வ்ற்றிப்போன மார்க்காம்புகளில் பால் காணாது
பசியால் துடித்த குழந்தை பார்த்தும்
கார்ல் மார்க்சின் கண்ணியம் காத்த
ஜென்னியைக் கொள் என்றேனா?
லண்டன் பாரிஸ்டர் அண்ணல் காந்தி
கந்தல் உடுத்தி கதர் நெய்த போதும்
உவகையாய் கை கொடுத்த கஸ்துரிபா அன்னையை
உவமையாய் சொன்னேனா உனக்கு?
இக்கரைக்கு அக்கரை பச்சை
இருந்து பார்த்தால் நிலைமை புரியும்
காசில்லாதவன் கடவுளே ஆனாலும்
கதவைச் சாத்து என்றவன் சித்தன்
தானியங்கி மாளிகையில்
தனிமைப் பித்தில் உளரும் என்னவளே!
வா! உனக்கும் எனக்குமாய்
ஒரு கூடு தேடுவோம்
பஞ்சம் பழகுவோம்
பட்டினி கிடப்போம்
ஓடை சென்று ஓருடை துவைத்து
ஒரு பக்கம் உடுத்தி
மறுபக்கம் உலர்த்தி
பட்டமுள் பொறுக்கி
உழக்கரிசி உருக்கி குடித்து
உனக்காய் நான், எனக்காய் நீ
உருகி கிடப்போம்
அப்போதும் நீ இந்த கவிதை சொன்னால்
அதிர்ஷ்டசாலி நான்
அர்த்தமுள்ளது உன் கவிதை.