சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், நவம்பர் 18, 2009

கேள்விகள் ஆயிரம்

உலகம் அழிந்து
உயிர்கள் எனும் சொல்லே அர்த்தமற்றுப் போகும் காலத்தில்
நமது
எண்ணங்களின் வடிவம் என்னவாக இருக்கும்
நிழல்கள் பதிய நிலம் அற்றுப்போன பூமியில்
அந்த அலைகள் காற்றில் கரையுமா?
கடலில் மிதக்குமா?
இயற்கையின் மாயை வாழ்க்கையென்றால்
நிஜம் எது?
உயர்வெது? தாழ்வெது?
உடமைகளே அளவுகோலா?
நரியை பரியாக்கி, பின்
பரி நரியாகி
பரிகளை பலி கொண்டது
இறைவனின் திருவிளையாடல்.
இங்கே
நரிகளும் பரிகளும்
நாகரீகச்சட்டைக்குள்
இனம் காணுவது எப்படி?
நித்தம்
வெவ்வேறு போர்க்களங்களில்
விதம் விதமான போர்கள்
வெற்றி எது? தோல்வி எது?
நான் யார்?
தேடலற்றுப்போன இயந்திரக்கோலம்
உள்முகத்தேடலுக்கு உதவாத உணர்வுகளின் பரிமாணம்.
இப்படி
விடை தெரியாக்கேள்விகள் ஆயிரம்
இந்த
விளங்காத ரகசியங்களுக்கு
விடைகாணும் நோக்கில்
வினாத்தொடுத்தேன் எதிர்ப்பட்டவர்களிடம்
அவர்களின் பதில்
"நேத்து வர நல்லாத்தானே இருந்தே?
ஐயோ பாவம்"