இனியவளே !
நான் கடந்து வந்த பாதையில்
உன்னோடான பயண நாட்களை நினைத்து பார்க்கிறேன்.
வியர்வையோடு பாரம் சுமக்கும் போது
தென்றலின் ஸ்பரிசமாய் .......
கொளுத்தும் கோடையில்
குற்றாலகுளிர் சாரலாய்........
உயிரை தாலாட்டும் உன் நினைவுகள்
உருவாக்கும் ஏக்க பெரு மூச்சுகள்
அந்த நாட்கள் நினைவில் மீண்டு வருகையில்
நிகழ் காலம் நழுவி விடுகிறது...
என் கவிதைகளுக்கு முதல் ரசிகை நீ
வார்த்தைகளை தேடித்தேடி
வண்ணமாய் கோர்த்து வந்தேன்.
உன் ஒற்றை தலை அசைப்பு அங்கீகாரம் தேடி
நீயோ ஒரு புன்னகை வெகுமதியுடன் சொன்னாய் சூப்பர்
அன்று
எனக்கு சிறகுகள் முளைத்தது
உள்ளே மத்தாப்பு சிதறி சிரித்தது
அன்றைக்கு பின் இது வரை
சிறகுகள் முளைக்கவும் இல்லை
மத்தாப்பு சிரிக்கவும் இல்லை
ஆனாலும்
என் கவிதை பக்கங்களை காற்றில் பறக்க விட்டேன்.
உன் காது ஜிமிக்கிகள் நடனமிட
தலை அசைத்து நீ பேசுவது கவிதை
இமைகள் படபடக்க நீ
பட்டு உடுத்திய பட்டாம்பூச்சியாய் சிரிப்பது கவிதை
தாவணி பறக்க நீ நடக்கும் நடை ஒரு கவிதை
கவிதைக்கே கவிதை தந்த
அறியாமைக்கு வெட்கினேன்
நீ புகழ்வதற்காய்
நீ பாராட்டுவதற்காய்
நீ அங்கீகரிப்பதற்காய்
நீ மகிழ்வதற்காய் என் ஒவ்வொரு செயலும்
ஓன்று தெரியுமா ?
உனக்காய் நான் செய்த செயல்கள் ஒவ்வொன்றும் தான்
எனது இன்றைய சிம்மாசனத்தை தேடி தந்தது
இனியவளே !
காதலின் வெற்றி எது?
திருமணம் என்று சமூகம் சொல்லலாம்.
ஆனால் என் வரை
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
காதல் என்பது தோள் கொடுத்தல்
காதல் என்பது எதிர்பார்ப்பில்லாதது.
காதல் என்பது பிரியாத நேசம்
காதல் என்பது பிரியாத தோழமை
ஒரு வேளை நாம்
வாழ்க்கை பந்தத்தின் வசப்பட்டிருந்தால்
வசவுகளும் சண்டைகளுமே வாடிக்கையாய் இருந்திருக்குமோ?
அலுப்பும் சலிப்புமே எஞ்சியிருக்குமோ?
நம் உறவு மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்குமோ?
தெரியாது.
ஆனால்
இன்றும் உன் நினைவு
எத்தனை பேர்களுக்கு இடையிலும்
தனிமை உணர வைக்கிறது.
பெண்ணே! எனக்கு
துக்க நினைவுகள் திரும்ப வருகையில்
மீண்டு வந்த நிம்மதி.
சந்தோஷ நினைவுகள் மீண்டும் மலர்கையில்
இதயத்தின் ஏக்கம் விழிகளில் வழிகிறது.
உன்னோடு நடப்பதற்கு
என்
வாழ்க்கைப்பாதையின் கதவுகள் திறந்தே கிடந்தன.
என் பாதங்கள் தவம் கிடந்தன.
எந்தத்தடைக்கல்லும் வழிமறிக்கவில்லை.
ஆனாலும்
சொல்லப்படாத என் நேசம்.....
சிறகு கொண்ட தேவதையே!
உன்னை சுற்றி நின்ற
ஒளிவட்டத்தில் பிரமித்து கிடந்தேன்.
இன்றும்
நான் சோர்ந்த போதுகளில்
உன் ஒற்றை புன்னகை நினைத்து பார்க்கிறேன்.
நிலவுக்கு கிடைக்கும் சூரிய ஒளியாய்....
உன்னோடான
இந்த உறவு காதலா? பக்தியா?
இன்று வரை அர்த்தம் தேடுகிறேன்.
புதன், செப்டம்பர் 16, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக