சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

பெண் குழந்தை

மகப்பேறு மருத்துவனையில்
தவிப்பாய் விரல் பின்னிக்கிடக்கும் தந்தை
கவலையாய் காத்துக்கிடக்கும் உறவுகள்
ஜீவ மரணப்போராட்டமாய்
தாயின் வயிற்று சுவர்களில் முட்டி மோதி
பூமியில் அவதரித்தேன்
தொப்பூழ்க் கொடி அறுத்து
தொட்டிலில் கிடத்தினர்
உறவுகள் ஓடிவந்து
ஒட்டு துணி விலக்கிப்பார்த்தது
உதடு பிதுக்கியது 'பெண்'
துக்கமொன்று அரங்கேறியதாய்
எங்கும் சத்தமில்லாத வெறுமை
முப்பிறவி தீவினையை கரைக்கவந்த
மனிதப்பிறவியில் ஆணென்ன? பெண்னென்ன?
அம்மா! அழைக்கிறேன்
என் குரல் தாய்க்கு சிலிர்க்கவில்லை
அப்பா!
என் குரல் தந்தையை கலைக்கவில்லை
புரிகிறது
பிறப்பு உரிமைகளே மறுக்கப்பட்ட
பெண் பிறவி
அம்மா நீ பெண்
பெண்ணை வெறுக்க
வெம்பிப்போன உன் கனவுகள் காரணமோ?
உன் கனவுகளுக்கு நான் வண்ணம் தருகிறேன்
திரேதாயுகத்தில் சீதை
வனத்தில் குடியிருந்தும்
அனலில் குளித்து எழுந்தாள்
துவாபரயுகத்தில் திரௌபதி
பங்காளி துகில் களைய
பனையபொருள் ஆனாள்
பெண்
போகப் பொருளாய்
அடுப்படி அடிமையாய் கிடந்த காலம் போனது
சிறையெடுக்க நான் சீதையும் இல்லை
துகிலுரிய நான் திரௌபதியும் இல்லை
பெண்ணை
பணயப் பொருளாக்க இது என்ன
பங்காளி ராஜாங்கமா?
பெண்ணடிமை பேசும் இடங்களில்
ஆண் அடிமைக்காலம் அரங்கேறும் தெரியுமா?
பெண்ணாய்ப் பிறந்தும்
பெண்ணை வெறுக்கும் தாய்க்குலமே!
இந்த பூமி பெண்ணுக்காய் தவமிருக்கும் காலம் வரும்.
இன்றும் பெண் தீபமாயிருக்கிறாள்
அவளை
தீப்பந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டால்
உலகமே சாம்பலாய் சரிந்து போகும்
அவளை தீபமாகவே இருக்கவிடுங்கள்