சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

இன்றையக்காதல்

அண்ணலும் நோக்கினாள்

அவளும் நோக்கினாள்

அது த்ரேதாயுகக்காதல்

கண்ணனை நினைத்து

கனவுகளை வளர்த்து உயிர் தந்த ராதை

அது துவாபர யுகக்காதல்

கண்ணோடு கண் நோக்கின்

அது சங்க காலக்காதல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

இல்லையில்லை

விழியில் விழுந்ததும் இதயம் நுழையும்

இன்றையக்காதல்

அல்லது

கண் பார்த்து கணக்கு போட்டு

கூட்டி கழித்து - முடிவு

கூடுதல் ஆனால் கண்ணசைவு காட்டும்

இன்றையக்காதல்

அண்ணலிடம் நோக்கியா இருந்தால் வரும்

அவசரக்காதல்

அரசு வேலை பெண்ணாய் இருந்தால்

அவருக்கு வரும் ஆயிரம் காதல்

கைநெடிக் ஹோண்டா கைவசம் இருந்தால் இங்கே

எட்டாக்காதலும் வசப்படும்

இயல்பு என்பது மறந்து போய்

பொய் முகங்களில் போலியான வாழ்க்கை

காலையில் கண் பார்த்து

மாலையில் கடற்க்கரை சென்று

மறுநாள் மணவறையில்

அவசரக்கோலம் அள்ளித்தெளித்து

ஆண்டவனின் தீர்ப்பை அழித்து எழுத முயன்று

தன்னையே அழித்துக்கொள்ளும்

இன்றையக்காதல்

காதல் கொண்ட இதயங்களே

பொய் முகங்களை கிழித்து எறியுங்கள்

உண்மை மறைக்கும் போர்வைகளை உதறுங்கள்

அன்புச்சகோதரியே!

பருவத்தில் நீ நடக்கும் பாதையெல்லாம் உன்னை

பருகும் விழிகள் மொய்த்துக்கிடக்கும் தான்

அந்த கண்களோடு கண்கள் மோதிக்கொண்டால் தீப்பற்றும் தான்

பீனிக்ஸ் பறவை வேண்டுமானால் சாம்பலில் உயிர்த்தெழலாம்.

பெருமை கொண்ட பெண் பிறவி?

யோசியுங்கள்

உண்மைக்காதலை மட்டும் யாசியுங்கள்

கண்கள் மோதிக்கொண்டதும் மனதில் பூ பூக்குமே!

காதலியின் கொலுசு சத்தம் காதலனுக்கும்

காதலனின் காலடி ஓசை காதலிக்கும் உயிரைத்தாலாட்டுமே

ஒருவரை ஒருவர் நினைத்த பொழுதில்

உள்ளே ஏதோ ஒன்று உடைந்து உருகுமே! அது காதல்

அவளுக்காய் அவனும் அவனுக்காய் அவளும்

உருகி உருகி உள்ளத்தோடு உள்ளத்தை

ஒட்டி வைத்து தைத்து கொள்வார்களே! அது காதல்

உடலால் பிரிந்த போதும் உள்ளங்களால் உறவாடுவதும்

எங்கோ இருந்த போதும்

எண்ணங்கள் மட்டும் பின்னி பிணைவதும்

மனதின் ஒவ்வொரு புள்ளியிலும் ஒன்றிக்கிடப்பார்களே! அது காதல்

காதலில் மட்டும் தாம் காத்திருத்தல் சுகம்

காதலில் மட்டும் தான் அழியாத நம்பிக்கை சாத்தியம்

ஒருவருக்காய் ஒருவர் விட்டுக்கொடுப்பதும்

ஒருவர் உயர்விற்காய் ஒருவர் தோள் கொடுப்பதும்

ஆளுமையும் அடிமைத்தனமும் இனிமையாவதும் காதலில் மட்டும் தான்

சோகம் சுகம் ஆவதும்

சுமையும் பெருமை ஆவதும் காதலில் மட்டும் தான்

காதல் பொய்யில்லை

காதலில் மயக்க்மில்லை

காதலால் உயர்ந்தவர் கோடியுண்டு

ஆனால்

வெறும் பருவ மயக்கங்கள் காதலில்லை

உடமைகளால் வரும் நேசம் உண்மையில்லை

உங்களை, உங்களை, உங்களுக்காய் விரும்பும்

உயிரை நேசியுங்கள்

உண்மையாய் வாழுங்கள்

வரலாறுகளில் உண்மைகள் மட்டுமே பொறிக்கப்படுகின்றன.