அந்நியமாய்ப் போகாமல்
அண்ணன் மகளே மருமகளாய் வேண்டும்
அன்னையின் ஆசையில் நீ என்னவளாய் ஆனாலும்
அக்கரையில் நீ
அந்நியமாய் நான்
ஆளுக்கொரு தேசத்தில் உத்தியோகம்
பொருளாதார சுதந்திரம் வேண்டி.
பிரிந்து நடந்தோம் வெவ்வேறு திசைகளில்
பொருளாதார சுதந்திரம் தேடி
மிச்சமானதும் பொருள் ஆதாரம் மட்டுமே
வீடுகள், மனைகள் , ஆபரணங்கள் வெளிச்சமாய்...
பரிமாறப்படாத காதலும்துய்க்காத இன்பங்களும்
தூங்காத இரவுகளும் ரகசியமாய்...
உன்னை
நினைத்த மாத்திரத்தில் என் அறைஎங்கும்
நிரம்பி வழியுது உன் கொலுசின் ஓசை.
உன் அண்மையை
நினைத்த பொழுதில்
நிரம்பி வழியுது விழி இரண்டும்.
பூக்கள், காதலர்கள்,குழந்தைகள்
பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்.
உன் ஞாபகம் தந்த சிவராத்திரிகள் எத்தனையோ
கணக்கில்லை எனக்கு
வார்த்தைகளை மட்டுமே பரிமாறும் மின்னஞ்சலும் தொலைபேசியும்
நம்மிடையே வழியும்
அன்பைப் பரிமாறத் தெரியாது தவிக்கும்.
அழகான ஆடை, மின்னும் ஆபரணம்
இன்னும் என்னன்னவோ
உனக்குப் பிடித்தது எல்லாம் இறைந்து கிடக்கிறது என் அருகாமையில்.
அந்நியமானது நீ தான் , நீ மட்டும் தான் அன்பே.