சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 04, 2010

அந்தமானில் அரட்டை அரங்கம்


        ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் என்றால்,யார் வந்திருந்தாலும் சரி,எந்த வேலை எப்படிக்கிடந்தாலும் சரி,மிக முக்கியமான வேலையாக இருந்தால் அந்த வேலையை அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வேன். என்ன ஒரு அருமையான,அறிவுப்பூர்வமான,சிந்தனையைத் தூண்டும்,விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி என்று இலவச விளம்பரம் செய்வேன்.ஒவ்வொரு அரட்டை அரங்கத்திலும் விவாதிக்கப்படும் தலைப்புகளை எங்களுக்குள் விவாதிப்போம்.என் விவாதத்திறமை (!) கண்டு தோழியர்,"இங்க அரட்டை அரங்கம் வந்தா நீங்க கண்டிப்பாக் கலந்துக்கனும்" என்பர். ஒவ்வொரு அரட்டை அரங்கிலும் விசு அவர்கள் உணர்ச்சி வயப்பட்டு கண்கலங்கும் போது நான் கண்ணீர் வழிய அழுது கொண்டிருப்பேன்.நகைச்சுவை பேச்சுகளை மிகவும் ரசிப்பேன்.

          அந்தமானுக்கு என் அபிமான அரட்டை அரங்கம் வந்தது.ஆனால் விசு அவர்கள் இல்லை.இருந்தாலும் என் ஆசைக்கு கலந்து கொண்டேன்.முதல் சுற்றிலேயே நான் தேர்வாகவில்லை.உங்கள் சொந்த விவகாரங்களை சொல்லுங்கள் என்றார்கள்.அது எனக்குப் பிடிக்கவில்லை.நமது அந்தரங்கங்களை அரங்கேற்றி அவர்கள் காசு பண்ணிவிட்டுப்போக நாம் குற்ற உணர்வில் மருக வேண்டிய அவசியம் என்ன? அதோடு இவர்கள் எதிர்பார்க்கும் உணர்ச்சிகரமான கதைகளும் நம் கைவசமில்லை.சீச்சீ..இந்தப்பழம் புளிக்கும் என்கிற கதையாய் அரட்டை அரங்கம் மோகம் அதோடு போனது.அந்தமானில் பதிவு செய்த அரட்டை அரங்கம் முழுதாக ஒளிபரப்பப் படவுமில்லை.

        அதன் பிறகு திரு விசு அவர்களின் மக்கள் அரங்கம் அந்தமானுக்கு வந்தது.ஒரே அரட்டை அரங்கத்திற்கு நான்கு தலைப்புகள்,ஒவ்வொன்றிலும் ஒட்டியும் வெட்டியும் பேசவேண்டும். என் கணவர், குழந்தைகள், நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் நான் போகவில்லை.எங்கள் வீட்டு உரிமையாளர் சகோதரரின் மகள் நல்ல அறிவாளி,திறமைசாலி,இரு மாமியாருடன் நல்ல இணக்கமாகக் குடும்பம் நடத்தி,தொழிலையும் நிர்வகிக்கும் பொறுமையான நல்ல பெண்.இளம் வயது."அக்கா! நான் கலந்துக்கப்போறேன்.ஒரு பெண்ணின் உயர்விற்குக் காரணம் பிறந்த்வீடா? இல்லை புகுந்த வீடா? ங்கற தலைப்புல புகுந்தவீடு தான்னு பேசப்போறேன்.இந்தந்தப் பாயிண்ட் வச்சிருக்கேன்.நீங்க கொஞ்சம் மெருகேத்திகுடுங்க" என்றார்.அருமையாகப் பேசி கடைசி சுற்றுவரை தேர்வாகி நாளை ஒளிப்பதிவு.முதல் நாள் மாலை எல்லோரையும் வரச்சொல்லி ஒளிப்பதிவுக்கருவியின் கோணங்கள் பற்றிச்சொல்லிக்கொடுக்கும் போது,இந்தப்பெண்ணிடம் நீங்க தலைப்ப மாத்திக்குங்க.அந்தத் தலைப்புல பேச ஆளில்ல,என்றார்களாம்.அந்தப்பெண் மறுத்துவிட்டு வந்தவர் ஒரு அனுமதிச்சீட்டோடு வந்தார்.ரூ.500/க்கான அனுமதிச்சீட்டு.நீங்க போய் பாத்துட்டு சொல்லுங்க.என்னைய விட நல்லா யாரு பேசறாங்கன்னு! என்றார்.அவரின் முகம் இருந்த வாட்டம் கண்டு எனக்குக் கோபம் ஒரு பக்கம் அந்தப் பெண் மீதான பரிதாபமும் அனுதாபமும் ஒருபக்கம்.அனுமதிச்சீட்டு வீணாகிவிடுமே என்று போனோம்.இந்தப் பெண்ணுக்கு நான் சொல்லிய வசனங்களை எல்லாம் இன்னொரு பெண் சொல்லி கைதட்டு வாங்குகிறார்.யாராவது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி பேசவில்லை என்றால் வாங்க! வாங்க என்று திரைக்குப்பின் கூட்டிச்சென்று அரைமணி நேரம் பார்வையாளர்களை உட்கார வைத்துப் பின் தொடர்கிறார்கள்.அறுத்த அறுப்பில் கழுத்து தொங்கிவிட்டது.படத்தில் தான் அரிதாரம் பூசி வேடம் தரிக்கிறார்கள் என்றால் பேச்சரங்க மேடைகளும் அப்படித்தான் என்பது அப்புறம் தான் புரிந்தது. பாதியிலேயே எழுந்து வந்து விட்டோம். இந்த ஒளிப்பதிவும் முழுதாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வில்லை.சொந்தக் கதைகளை யார் சோகம் கொப்பளிக்கச்சொல்கிறார்களோ? யார் நகைச்சுவை ததும்ப அந்தரங்கங்களைப் புட்டுவைக்கிறார்களோ அவர்களை வரவேற்கும் ஒரு வியாபார மேடை இது.

             அறிவுப்பூர்வமான விசயங்களை விவாதிக்கும் ஒரு விவாத மேடையாக இருந்த இந்த நிகழ்ச்சி,தனது பேச்சாற்றலை,சமூக அக்கறையைப்பதிவு செய்யும் ஒரு களமான அரட்டை அரங்கம் அடுத்தவர் அந்தரங்களைப் பதிவு செய்யும் அநாகரீக மேடையானது ஊடக ரசிகர்களின் துரதிர்ஷ்டம் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?

2 கருத்துகள்:

புதுப்பாலம் சொன்னது…

நல்லதொரு அலசல்.

இது தான் அரட்டை அரங்கத்தின் அந்தரங்கமோ.

அன்புடன்
இஸ்மாயில் கனி

Suman சொன்னது…

அரட்டை அரங்கம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு குமுறல் படித்த ஞாபகம்

அவர்கள் (விசு குழுவினர்) ஒரு தலைப்பில் தாங்கள் கொடுக்கும் விடயங்களைத் தொட்டுச்செல்லுமாறு ஒளிப்பதிவு நடைபெறமுன்னர் சூகூறினார்களாம். பின்பு மேடையில் விசுவே தனது வாயால் “நீ ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படிப்பேசுகிறாயே” என்றவாறாக பேசியுள்ளார்.

ஆக கண்ணால் காண் பதும் பொய்