இயற்கையோடு எதிர் வினைகள் புரிந்த மனித குலம் இப்போது கடுமையானதொரு நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மனித குலத்தின் செயல்பாடுகளால் மற்ற உயிரினங்களும் அழிவைச்சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உலகம் வெப்பமயமாதலால் இயற்கை சீற்றங்கள்,அழிவுகள்,அச்சுறுத்தல்களை சந்திக்கும் நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது.சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உபாயம்,"தொழிற்சாலைகள்,கழிவுகள்,குப்பைகளை தகுந்த முறையில் அகற்றி,கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் சுமார் 50 வருடங்களுக்குள் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்" என்பது. இயற்கையின் மடி ஒன்று தான் நமக்கு நிரந்தரப்பாதுகாப்பு தர இயலும். இது தான் கசப்பான உண்மை.ஆனால் உண்மையில் மனித குலம் அறிவியலில் வளர்ந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது சாத்தியமா? நாம் கடந்து வந்த பல மைல் தூரத்தைத் திரும்பிப் பயணிப்பது இயலுமா? ஆனால் மேற்பட்டு இன்னும் பூமியைக் காயப்படுத்தாமல் இருக்க என்ன செய்ய இயலும்? இதை விஞ்ஞானிகள் தீர்மானிக்கட்டும்.பொதுமக்களாகிய நாம் என்ன செய்யலாம்?முதலில் நமது வாகனங்களைப் புகை அதிகம் வராது பராமரிக்கலாம்.பிளாஸ்டிக்கின் உபயோகத்தைத் தவிர்க்கலாம்.
அந்தமானில் அனைத்து வாகனங்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் புகை சோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பைகள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத் தளங்களில் எப்போதுமே பிளாஸ்டிக் பைகள்,தண்ணீர் கொள்கலன் களுக்கு அனுமதி கிடையாது. காரணம் அவை கடலில் பவளப் பாறைகளில் படிந்தால் பவளப்பாறையை காண இயலாததோடு கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும்.நீங்கள் எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் பைகளை காவலர்கள் வாங்கி வைத்துகொண்டு திரும்பும் போது தான் தருவார்கள்.அந்தமானில் பெரும்பாலும் பணியாளர்கள் விதிகளை மீறுவதில்லை.ஒருமுறை விடுமுறைக்கு வண்டூர் என்னும் பகுதிக்குச்சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது தமிழ்நாட்டிலிருந்து அரசியல் முறை சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து விதிகளை மீறி பணியாளர்களிடம் நாங்கள் யார் தெரியுமா? உன்னை வேலையை விட்டே தூக்கி விடுவோம் என்று மிரட்டி பொருட்களைத் தங்களுடன் கொண்டு சென்றனர்.பார்த்தீர்களா? உங்கள் தமிழ்க்காரர்கள் செய்வதை என்று அவர்கள் எங்களிடம் கசப்பை உமிழ நாங்களும் எங்கள் தோழியரும் வெட்கித் தலை குனிந்தோம். தற்போது கடைகளில் பொருட்களைப் போட்டுத்தர பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை விதிப்பது இது எத்தனையாவது முறையோ? ஆம்! தடை விதிக்கும் போது இருக்கும் வேகம் நாளாக ஆக தேய்ந்து பின் பழைய குருடி,கதவைத் திறடி தான்! வியாபாரிகளுக்கு தான் மட்டும் பைகள் தராவிட்டால் வாடிக்கையாளர் வேறு இடம் தேடி விடுவார் என்ற பயமும் காகிதப்பைகள் கட்டுபடியாகாத நடப்பும் அவர்களை தடைகளை மீறத்தூண்டுகிறது.
ஒரு முறை மங்கையர்மலரில் வாசகி ஒருவரின் கட்டுரையில் பிளாஸ்டிக் வேண்டாம் என்பதை ஒரு இயக்கமாக பெண்கள் ஆரம்பித்தால் என்ன? என்று முடித்திருந்தார்.அதுமுதல் நாங்கள்,எங்கள் தோழியர் அனைவரும் கைப்பையில் ஒரு துணிப்பை வைத்துக்கொள்வது பழக்கமானது.பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் நிறுத்தப்பட்டால் முதலில் குப்பை குறைகிறது.மண்ணின் மகத்துவத்தைக் குறைக்கும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் நினைத்தால் கண்டிப்பாகத் தவிர்க்க முடியும்.எங்கள் ஊரில் பிளாஸ்டிக் பைகள் உப்யோகத்தில் இல்லாத காலத்தில் கல்யாணத்திற்கு மளிகைப்பொருட்கள் வாங்கப்போனால் முழு சேலைகளைக் கொண்டு சென்று அதில் ஒவ்வொரு பொட்டலத்தையும் தனித்தனியே வைத்து சணல் கொண்டு கட்டி கலந்துவிடாது கொண்டு வருவார்கள்.இப்போது ஜவுளிக்கடைகளில் கொடுக்கப்படும் சிறிய துணிப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள்.அது போல உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள்,தட்டுகள் இவற்றையும் தடுப்பது நமக்கும் ஆரோக்கியம்.பூமிக்கும் ஆரோக்கியம். குடும்பத்தின் ஆரோக்கியம் மட்டுமல்ல,இன்று பூமியின் பாதுகாப்பும் பெண்கள் கையில்.வளர்ச்சி.முன்னேற்றம்,புதுமை என்று நம் ஆரோக்கியத்தை அடகு வைப்பதை விட ஆரோக்கியம் காக்கும் பழைய வழிகளைக்கடைப்பிடிப்பது புத்திசாலித்தனமில்லையா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக