சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 31, 2009

தொலைக்காட்சி - நம்மை பலிகேட்கும் அசுரன் உஷார்! பெண்களே!

       இன்று தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி பெண்களின் நேரத்தைத் தின்னும் அசுரனாக அவதாரம் எடுத்துவிட்டது.சில காலத்திற்கு முன் விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். தொலைக்காட்சி குறித்தது.அதன் சாரம் இது தான்.உங்கள் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன் ஒரு விருந்தாளி வந்தார்.நடுவீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசினார்.சிரித்தார்.நீங்களும் ரசித்தீர்கள்.இன்று அதிக உரிமை எடுத்துக்கொண்டு எதைப்பேச வேண்டும்,எதைப் பேசக்கூடாது என்கிற விவஸ்தையில்லாது பேச செய்வதறியாது தவிக்கிறீர்கள் என்பது போல இருந்தது அந்தக்கட்டுரை.நமக்குத்தான் எதை எங்கு வைப்பது என்று தெரியாமல் இடம் கொடுத்து அதற்கு அடிமையாகி விட்டோம்.இன்று பெண்கள் தமது உறவுகளை விட அதிகம் தொலைக்காட்சி தொடர்களுடன் தான் உறவாடுகிறார்கள்.தொடர்களின் கதாபாத்திரங்களைத்தான் ஆதர்ச வழிகாட்டிகளாகவும் கொள்கிறார்கள்.அந்தமானில் இருந்து ஆசைஆசையாய் உறவுகளைப்பார்க்கவென்று தாய்த்தமிழ்நாடு வந்தால் அங்கு பேசுவதற்குக் கூட யாருக்கும் நேரமில்லை. என் அம்மாவிடம் "ஏம்மா? இப்பத்தான் நாங்கள்லாம் வந்திருக்கம்ல.இப்ப டி.விய அமத்திப்போடுங்களேன்னு" சொன்னால் என் அம்மா,"ம்ம்ம்.நீங்க நாளக்கழிச்சு நாளன்னிக்கு ஓடிருவீங்க! எனக்கு இது தான் தொண. அதொடயில்ல.அப்பரம் எனக்கு கதையும் புரியாது போங்கடி" என்பார்கள்.அது சரி என்று எங்கள் அம்மா தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டால் விளம்பர இடை வேளையின் போது மட்டும் தான் பேசுவோம்.பேச முடியும்.எல்லா வீடுகளிலும் இதே நிலைதான்.இதற்கு அந்தமானும் விதிவிலக்கல்ல.

         இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு சேலை எடுக்க இரு தோழியர் வந்தனர். எல்லாச் சேலையையும் புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் ஏதோ விவாதம்.சொந்த விவகாரம் போலும் என நினைத்துத் தேநீர் தயாரிக்க அடுப்படி போனதும் விவாதம் தீவிரமடையவே ஒன்றும் புரியவில்லை.நான் வந்ததும் ஒரு தோழி,"சரி விடுங்க.நமக்குள்ள எதுக்கு சச்சரவு?இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியப்போகுது!"என்றபடி,"அண்ணி! டிவியப் போடுங்க" என நான்,"எங்க வீட்டுல டி.டி (Doordarshan) மட்டுந்தான்ப்பா இருக்கு" என்றதுதான் தாமதம் அவர்கள் இருவரும் தேநீரையும் பருகாது தேர்ந்தெடுத்த புடவைகளை தனியே வைக்கச்சொல்லிப் பறந்துவிட்டார்கள்.வீடெல்லாம் புடவைகள் மயம்.இது ஒரு உதாரணம் தான். 80% பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.சமூக அக்கறையற்ற தொடர்களால் இளம் தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவது,உறவுகளுக்குள் நஞ்சு கலப்பது,ஆரோக்கியக்கேடு,மன அழுத்தம்,உடல் பருமன்,வெளியுலகம் பற்றிய அவதானிப்பற்ற நிலை போன்றவைகளை சத்தமில்லாது அரங்கேற்றி வருகிறது தனியார் தொலைக்காட்சிகள்.இதைவிட ஒரு படி மேல் சில தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை இந்தத் தொடர் ஆரம்பிக்கிறதுக்குள்ள படிங்க என்றும்,அந்த ரூம்ல நீங்க படிங்க,நா சத்தம் கொறச்சுவச்சு இந்த ரூம்ல டிவி பாக்குறேன் என்பதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.அதே போல அந்தமான் தமிழ்ப்பெண்களில் பொது நிகழ்ச்சிகள்,இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தருபவர்கள்,இலக்கிய நிக்ழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மிக சொற்பமானவர்களே!

                சில பெண்கள் அவன் அப்புடி செஞ்சிருக்கக்கூடாது.இவ செஞ்சது சரியில்ல இப்படிப் பேசுவார்கள்.நாம் தலையிடக்கூடாது. தலையிட்டால் முழுக்கதையும் நாம் கேட்க வேண்டி வரும்.யாரும் அந்தமானில் சொந்த பந்தங்களைப்பார்க்க வருகிறீர்களா? முக்கியமாக சகோதரிகளை,மகள்களை..... உஷார்! உஷார்!.வந்ததும் இந்தத் தொடர் பாத்தியா அது பாத்தியா என்று பெண்கள் கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவது உத்தமம். தவறினால் அந்தத் தொடர் நாயகியின் அணிமணிகளை நீங்கள் அன்பளிப்பு தரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள்.ம்ம் இப்புடிக்கிண்டல் பண்றீகளே? உலகத்துல இல்லாத்ததையா சொல்றாக? என்பார்கள்.ஏன் ஒரு குடும்பத்திலும் சுமுகமான உறவுகள் இல்லையா?.மாமியாருக்கு விஷம் வைக்கும் மருமகளும்,கர்ப்பிணி மருமகளை மாடிப்படிகளில் உருட்டிவிடும் மாமியார்களும் தமிழ்நாட்டில் மலிந்து போய்விட்டார்களா என்ன? இதைவிட ஒன்று! தொலைக்காட்சி தொகுப்புரையாளர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் உடையை தன் மக்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ வாங்கித்தரும் தாய்கள்.அவர்கள் மூடிய வாகனங்களில் பயணிப்பவர்கள். நம் குழந்தைகள் தினம் சாலைகளில் நடந்து செல்பவர்கள்.

         நம் சமூகத்தில் கிட்டத்தட்ட கடந்த பத்து,பதினைந்து வருடங்களில் தான் பெண்கள் முன்னேற்றமும்,வெளியுலகத் தொடர்பும் அதிகமாகியிருக்கிறது. ஆண்கள் அதைப் பார்த்து,அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு சில காலம் எடுக்கும்.அதுவரை படிப்படியாக மாற்றங்களை வசப்படுத்திக்கொள்வது தான் விவேகம்.நமது பழமையும்,கலாச்சாரமும் மாறாது புதுமைகளைக் கைகொண்டால் நமக்கு பாதுகாப்பும் மன நிம்மதியும் கிட்டும்.சமூக அக்கறையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள். நாம் என்னவோ வேலையற்ற வெட்டிகள் என்பது போலவும்,இவர்கள் எது கொடுத்தாலும் நாம் பார்ப்போம் என்ற நமது அறிவுத்திறனை சோதிக்கும் இவர்களுக்கு நாம் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்காட்ட வேண்டாம்.அப்படி நான்கு தொடர் எடுத்து நஷ்டப்பட்டு மண்ணைக்கவ்வினால் அவர்களது சிந்தனையும் சீர்பெறுமல்லவா? உங்கள் ஆதரவை சமூக அக்கறையுள்ள தொடர்களுக்குத் தாருங்கள்.நல்ல புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.அது நமக்குள் ஆக்கும் திறனையும்,கற்பனை வளத்தையும் அதிகரிக்கும்.நாம் பொருளாதார ரீதியாக வளர்வது உண்மையான வளர்ச்சியல்ல. ஆன்ம பலம் பெருக்கி,அறிவுச்சேமிப்பை உயர்த்தும் வளர்ச்சிதான் நம்மை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் உண்மையான வளர்ச்சி.

1 கருத்துகள்:

ramalingam சொன்னது…

திருச்செல்வம் போன்ற ஆணவக்காரர்கள் "இஷ்டமிருந்தால் பாருங்கள், இல்லாவிட்டால் சேனலைத் திருப்புங்கள்" என்று திமிராகச் சொல்லும் அளவுக்கு ஆகி விட்டது.