சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 29, 2009

விமர்சனங்கள்


        விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு கண்டிப்பாக அவசியம்.ஒரு படைப்பாளியை ஊக்கப்படுத்துவதில் விமர்சனங்களுக்கு முக்கிய இடம் உண்டு.ஆனால் விமர்சனம் எல்லை கடந்தால் எங்கு பற்றி எரிகிறது என்பது புரியாது எரியும். மூலம் அறியாது,புரியாது எரியும் நெருப்பில் படைப்பாளியை விட விமர்சகர்,எதிர் விமர்சகர் காயம்பட பரபரப்பு வேண்டுபவர்கள் ஆனந்தமாய்க் குளிர் காய்வார்கள்.ஒரு விமர்சனம் என்பது படைப்பாளியின் சிந்தனையை சிடுக்கெடுத்து நீவி விடும் மென் விரல்களாக இருக்கும் வரை விமர்சனத்தின் எண்ணம் ஈடேறிவிட்டதாகக் கூறலாம். மனித உணர்வுகள் மலரை விட மெல்லியவை.மனித உணர்வுகளைக் கையில் எடுத்து பதிவிடும் படைப்பாளியும் மிக கவனமாக தன் படைப்பைக் கையாளவேண்டும்.

            ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் அவரவர் நிலைப்பாடு வெவ்வேறானவை.நமது எண்ணங்களைப் பதிவு செய்யும் ஆவலில் வலைப்பூவைத் தேர்ந்தெடுத்தோம்.நமது அறிவு சேமிப்புகளைப் பதிவு செய்யும்போது அந்தப் படைப்புகளின் தரம் நமது அந்தரங்கத்தைச்சொல்லிவிடுகிறது.நமக்குள் இப்படி மனிதன் தான் இருக்கிறான் என்பதை வாசிப்பவருக்கு உணர்த்திவிடுகிறது.இவன் தரம் இது தான் என்று யாரும் இன்று ஒதுங்கிவிடுவதில்லை.ஆகவே படைப்பாளிகள் மதம்,சாதி,குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு உண்டான பழக்கங்களைக் கேலி செய்வது,அந்தப் பழக்கங்களைக் கடைப்பிடிக்காதவர்கள் இழிந்தவர்கள் என்ற ரீதியில் எழுதுவது ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.என்று எழுத்து என்கிற அழகான கருவியைக் கையில் எடுத்தோமோ அன்றே முற்போக்குச்சிந்தனைகளுடன் சாதி,மதம் ஆகியவற்றைக்கடந்து வரவேண்டாமா? யாருடைய உணர்வுகளையும் கையில் எடுத்து ஏளனம் செய்வது எந்த விதத்திலும் மனிதத்தன்மையற்ற செயல். 

              தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தால் மற்ற மக்களிடம் தமிழரைப்பற்றிய எண்ணம் என்ன தெரியுமா? தமிழர்கள் போராட்ட குணமுடையவர்கள்.அதாவது நாம் சண்டைக்காரர்கள் என்பதை நாகரீகமாகச்சொல்கிறார்கள்.கொஞ்சம் சீண்டிவிட்டால் போதும்.ஆயுதங்களுடன் கிளம்பிவிடும் போராளிகள். விளைவுகளைப் பற்றி கவலையில்லை.வலைஞர்களிடையே ஆரோக்கியமான விவாதங்கள்,சமூக பிரக்ஞையுள்ள விமர்சனங்கள் நல்ல படைப்புகளைக் கொண்டுவரும்.சமூகப்பிரச்சினைகளை உருவாக்கும் பதிவுகளை வலைஞர்கள்,விமர்சகர்கள் அலட்சியப்படுத்துங்கள்.தணிக்கையில்லாத படைப்புகள்,வலைப்பதிவுகள்.தங்கள் கோபத்தை,காழ்ப்புகளை அப்படியே அச்சேற்றிவிடும் அவசரக்காரர்களை அலட்சியப்படுத்தினாலே போதும். வார்த்தைகளில் கூட அறவழியைத் தேர்வு செய்யுங்கள்.நாம் உயர்ந்த நாகரீக தமிழினத்தில் வந்தவர்கள்.நமது எண்ணங்களும் சிந்தனைகளும் அதை வழிமொழிய வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

0 கருத்துகள்: