சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 17, 2009

அந்தமானில் தமிழ்ப் பத்திரிக்கைகள்

              நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக பத்திரிக்கைகள்,வார,மாத இதழ்கள் இருந்தது ஒரு காலம்.சிலர் காலையில் காபியுடன் பத்திரிக்கை இல்லாவிட்டால் சகுனமே சரியில்லை என்று சலித்து கொள்வார்கள்.நமது இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்தமான் தீவுகள் வெளியுலகத் தொடர்பற்ற ஒரு தனி உலகம்.1929ல் பிரஸ் டெலிகிராம் என்ற பெயரில் ஆங்கில ஆட்சியின் அறிவிப்புகளைத் தாங்கி பத்திரிக்கை வெளிவரத்தொடங்கியது.1942ம் ஆண்டு முதல் 1945 வரை இத்தீவுகள் ஜப்பானியர் ஆட்சியின் கீழ் இருந்தபோது இச்செய்தி இதழ் 'அந்தமான் சிம்பொன்' என்ற பெயர் மாற்றத்துடன் ஜப்பானிய செய்திகளைத் தாங்கி வந்தது.இதன் ஆசிரியராக ராமகிருஷ்ணன் என்னும் தமிழர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.1945க்குப் பிறகு இத்தீவுகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்ததும் இந்தச்செய்தித்தாள் 'டெய்லி டெலிகிராம்' என்ற பெயரில் வெளிவந்தது.இன்றுவரை இந்தச்செய்தித்தாள் அரசு தினசரி செய்தித்தாளாக வெளிவருகிறது.1963ம் ஆண்டு வரை தீவுகளில் வெளிவந்த ஒரே இதழும் இதுதான். 1980 வரை இந்தப் பத்திரிக்கை அரசு அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டது.1980 முதல் தீவுச்செவிதிகளை வெளியிடும் நாளேடாகமாற்றம் பெற்றது.
          தீவு வரலாற்றில் சுமார் 50 ஆண்டு காலம் பின்னோக்கிப் பார்த்தால் தீவிலிருந்து முக்கிய பூமிக்கு தகவல் தொடர்புக்கு எந்த வசதியுமில்லை.ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்த மக்களிடையே பத்திரிக்கைகள் ஒரு ஆர்வத்தை,தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததன் விளைவு முக்கிய பூமியிலிருந்து பத்திரிக்கைகளை கப்பலில் வரவழைத்துப் படித்தனர்.ஆறிப்போன செய்திகள்.பிறகு தான் தமிழர்கள் தங்களுக்கென்று பத்திரிக்கைகள் தமிழில் வரவேண்டும் என்று விரும்பியதன் விளைவு 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் தெய்வத்திரு. சுப. சுப்ரமண்யம் அவர்கள் ஆசிரியராக,திரு.வீ.வீரையா அவர்கள் வெளியீட்டாளராக இருந்து 'அந்தமான் முரசு' என்ற தீவுகளின் முதல் தமிழ் வாரப்பத்திரிக்கை என்ற பெருமையுடன் பத்திரிக்கையை வெளியிட்டனர்."புதுமை முரசு, லண்டன் முரசு என்னும் பெயர்களே அந்தமான் முரசு எனும் பெயர் சூட்டலுக்குக் காரணமாக இருந்தது" என்று இப்பத்திரிக்கையின் வெளியீட்டாளர் வீ.வீரையா அவர்கள் கூறினார்.இந்த இதழ் மக்கள் குறைகளை அரசுக்கு எடுத்துரைக்கும் இதழாக வெளியிடப்பட்டது.இதன் வெளியீட்டாளர் விலகிக்கொண்டபின் தெய்வத்திரு. சுப.சுப்ரமண்யம் அவர்களே வெளியிட்டுவந்தார்கள்.அந்தமான் அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்பிற்கு வித்திட்டதே தனது தந்தையின் போராட்டதினாலும் அவரது எழுச்சி மிகுந்த எழுத்தினாலும் தான் என்கிறார் அவரது புதல்வர்.தற்போது அவரது புதல்வர் திரு.சுப.கரிகால் வளவன் அவர்கள் தந்தையின் பணியைத் தொடர்கிறார்கள்.40 வருடத்தைக்கடந்து இந்த இதழ் தனியொரு மனிதனால் வெளியிடப்படுகிறது.40வது ஆண்டு நிறைவு விழாவிற்கு திருமிகு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வந்திருந்து விழாவைச்சிறப்பித்தார்கள்.

       அடுத்து 1972 ம் ஆண்டு தி.மு.கழகத்தின் சார்பில் வார இதழ் ஒன்று வெளிவர வேண்டும் என்கிற ஆர்வத்தின் அடிப்படையில் திரு.இரா.மருதவாணன் அவர்கள் 'தீ பரவட்டும்' எனும் வார இதழைத்தொடங்கி திரு முகவை முத்து என்பவர் ஆசிரியராக இருந்து,'தமிழுண்டு,தமிழ் மக்களுண்டு-இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' எனும் பாவேந்தரின் முழக்கத்தோடு இத்தீவில் உலா வந்தது.தீவுத் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தந்த ஒரு பத்திரிக்கையாக இருந்து வந்தது.இந்த இதழின் மூலம் நிறுவனரும் மற்றும் தீவின் தி.மு.க.வின் தலைவருமான திரு.இரா.மருதவாணன் அவர்கள் கனல் கக்கும் தலையங்கம் எழுதி இலக்கியப் பணியும் செய்து வந்ததால் தீவு மக்கள் இவரை 'அந்தமான் அலக்சாண்டர்' என்று புகழ்கின்றனர்.

        அடுத்து 1986ம் ஆண்டு திரு.பெர்னார்ட் ஆண்ட் ரூஸ் என்கிற திருநாவுக்கரசு அவர்களால் வெளியிடப்பட்ட அந்தமான் இளைஞர் முழக்கம் என்னும் வார இதழ் தீவெங்கும் தமிழ் முழக்கம் செய்தது.தமிழ் இனத்திற்காக, தமிழ் இனத்தால், தமிழ் இனமே முழங்கும் முழக்கம் அந்தமான் இளைஞர் முழக்கம்.கனவில் கூட கட்டளையிடும் அதிகாரம் இங்கே அடுத்தவனுக்கு இருக்கக்கூடாது. அந்த அதிகாரம் தமிழ் இளைஞருக்கு மட்டுமே உண்டு என்ற உறுதியான நோக்கம் கொண்டவர் இந்த இதழின் ஆசிரியர் என் கின்றனர்.இந்த இதழில் காணப்பட்ட இலக்கிய உத்தியும்,பதிப்பியல் உத்தியும் அதிகமான வாசகர் பெருக்கத்தைப் பெற்றுத்தந்தது.1981ம் ஆண்டு அந்தமான் அலை என்ற பத்திரிக்கையும்,1986ம் ஆண்டு அந்தமான் செய்தி என்ற பத்திரிக்கையும்,1993ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தமிழ் முரசு என்ற பத்திரிக்கையும்,1997ம் ஆண்டு ஜெய பாரதம் என்ற பத்திரிக்கையும் வெளிவந்தது.அந்தமான் குரல்,அந்தமான் தீவு,அந்தமான் நம் நாடு ஆகியன போன்ற 25க்கும் மேற்பட்ட தமிழ்ப் பத்திரிக்கைகள் தீவுகளில் வெளிவந்துள்ளன.

   தீவுகளில் தமிழ்ப்பற்றையும்,இலக்கிய உணர்வையும், இன உனர்வையும்,இன ஒற்றுமையையும் வளர்க்க இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் பாடுபட்டன.தீவுகளின் மக்கள் தொகையில் தமிழர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இருப்பினும் வாணிகம்,கல்வி,அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தமிழினத்திற்கு ஒரு விழிப்புணர்வை இந்தப்பத்திரிக்கைகள் ஊட்டி வந்தன.தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் படைப்புகளை வெளியிட்டு தமிழில் எழுதும் ஆர்வத்தை இந்தப்பத்திரிக்கைகள் வளர்த்தன.தீவு அரசாங்கத்தின் முறைகேடுகளை அஞ்சாது எடுத்துரைக்கும் ஏடுகளாக இந்த இதழ்கள் திகழ்ந்தன.ஆனால் இன்று அந்தமான் முரசு தவிர வேறு எந்த இதழும் வெளிவருவதில்லை. அந்தமான் குரல் பத்திரிக்கை மட்டும் கால நிர்ணயமற்று ஆசிரியரின் வசதிக்கேற்ப வெளிவருகிறது.அந்தமான் முரசு மட்டும் தீவெங்கும் முரசு கொட்டி முழங்கி வருகிறது.எல்லாப்பத்திரிக்கைகளும் நின்று போனதற்கு முக்கியக்காரணம் பொருளாதாரப் பற்றாக்குறை.அடுத்து தமிழ் மக்களின் ஆதரவு இன்மை.நவீன பதிப்பு வசதிகள் இல்லாத காலத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு இருந்த வரவேற்பு இந்த மின்னணு காலத்தில் இல்லை என்று வருந்தும் அந்தமான் முரசு இதழ் ஆசிரியர் தனக்கும் பொருளாதாரச்சிக்கல் உண்டு.எனினும் தந்தையின் ஆசை,அவர் இந்தப் பத்திரிக்கையின் மூலம் சாதித்த சாதனைகள் இவற்றைக்கருத்தில் கொண்டு எந்த இடர் வரினும் தொடர்ந்து நடத்தும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்தார்.

     ஒருகாலத்தில் அந்தமானில் வெளிவந்த இதழ்கள் தமிழ் இலக்கிய வளமையைப் பிற மக்களுக்கு எடுத்துரைக்கும் முழக்கங்க்களாக,தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு விளை நிலங்களாகத் திகழ்ந்தன.இந்த இதழ்களின் வழியே தீவில் தமிழ் உணர்வு ஊட்டப்பட்டது.எல்லா இதழ்களுமே தமிழர் முன்னேற்றம்,தமிழருக்கெதிரான நிர்வாக வஞ்சனைகளை தமது எழுத்துக்களால் முறியடிப்பதே நோக்கமாக இருந்தது.ஒரு லட்சம் தமிழர் வசிக்கும் இந்தத் தீவுகளில் ஒரே ஒரு வாரப்பத்திரிக்கை வெளிவருவது வருந்தற்குரியது.

    1984ம் ஆண்டில் அந்தமானுக்கு வருகை தந்திருந்த உயர் திரு.க.ப.அறவாணன் அவர்கள் அலை கடலுக்கு அப்பால் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அப்போது "தமிழர்கள் இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,மொரீஷியஸ், இன்னும் பல தேசங்களில் பரவி வாழ்கின்றனர். அவர்களைப்போலவே இந்தியத்துணைக்கண்டத்தின் பிற இனத்தவர்களும் அங்கு வாழ்கின்றனர்.பிற இனத்தவர் எல்லாம் நந்நிலையில் வாழத் தமிழர் மட்டும் அந்நிலை பெறாது அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு முக்கிய காரணம், தமிழரோ வந்தோம்,உழைத்தோம்,பொருளீட்டினோம்,சொந்த ஊர் திரும்புவோம் என்கிற நிலையில் தான் வாழ்கிறார்களே ஒழிய வந்த இடத்தை சொந்த இடமாக நினைத்து நிரந்தரக்குடியமர்விற்கு முனைவதில்லை" என்று குறிப்பிட்டார்.அந்த அறிஞரின் கூற்று அந்தமானில் வாழும் தமிழருக்கு முற்றிலும் பொருந்தும்.ஆண்கள் பொருளீட்டுவதிலும்,பெண்கள் குடும்ப நிர்வாகத்திலும், தனியார் தொலைக்காட்சிகளில் மூழ்கிக்கிடப்பதிலும் காலம் கழிகிறது.இதில் பத்திரிக்கை பற்றியோ,இலக்கியம் பற்றியோ நினைத்துப்பார்க்க ஏது நேரம்?

0 கருத்துகள்: