மாதங்களில் நான் மார்கழி
என்றான் மாதவன் கீதையில்.மார்கழி மாதம் தேவ லோகத்தில் விடியல் நேரம். அதனால் தான்
கோவில்களில் தெய்வங்களுக்குத் திருப்பள்ளி எழுச்சி நடை பெறுகிறது என்கிறது நம்
புராணம்.தாயகத்தில் மார்கழியில் மண்ணும் குளிரும். பனி படர்ந்த அதி காலை நேரம்
ஆலயங்களில் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் பாசுரம் பாடிக்கொடுத்த பைங்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் திருவாய் மலர்ந்து அருளிய திருப்பாவை,மாதொரு பாகனின் புகழ்பாடிய ஸ்ரீ
மாணிக்க வாசகப்பெருமான் அருளிச்செய்த திருவெம்பாவாய் பாடல்கள் காற்றலைகளில் வந்து
காதுகளில் தேன் பாய்ச்சும்.வாசல் நிறைத்து வண்ணக் கோலமிட்டு,குளிரில் பற்கள்
தாளமிட,ஆலயம் சென்று வழிபட்டு,பிரசாதத்துடன் வீடுகளுக்குத் திரும்பும் அந்த காலம்
என் வரையில் கனவாய்... பழங்கதையாய்...
இங்கும் வாசல் பெரிதாக உள்ள மகராசிகள்
பெரிய, வண்ணக்கோலமிடுகிறார்கள்.சாணப்பிள்ளையார் பிடித்து பூசணிப்பூ வைக்க
முடிவதில்லை.அதிகாலையில் எழுந்து கோவில் செல்ல முடிந்த பாவையர் பாவை பாடி
திருக்கோவில் விஜயம் செய்கிறார்கள்.இங்குள்ள எல்லாக்கோவில்களிலும் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி நடை பெறுகிறது. தாயகத்தின் வெண்பனி இங்கு கிடையாது.ஆம்
அந்தமானில் பனி இல்லாத மார்கழி. குளிரில்லாத வைகறை.ஆனாலும் என் சோம்பேறித்தனத்தின்
வெற்றியினால் திருப்பள்ளி எழுச்சிக்குப் பூஜைக்கு கொடுக்கும் அன்று போய்
வருவதோடு சரி.அந்தமான் ஸ்ரீ வெற்றிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கடைசி
ஞாயிற்றுக்கிழமை திருப்படி பூஜை நடைபெறும். ஒவ்வொரு படிக்கும் திருப்புகழ்,கந்தர்
அலங்காரப்பாடல்களை கர்னாடக சங்கீத ராகத்தின் படி மகளீர் பாட கோவில் குருக்கள்
ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபடுகிறார்கள்.இப்படி 51 பாடல்கள் பாடி திருப்படி பூஜையை நிறைவு செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் திருப்புகழ் பாட திருமதி.சுப்புலக்ஷ்மி சேகர் அவர்கள் தலைமையில்
மகளீர் நிறையப்பேர் கூடப்பாடுவார்கள். சுப்புலக்ஷ்மி அம்மா அவர்கள் சங்கீதத்தில்
முதுகலைப் பட்டம் பயின்று தீவுகளில் சங்கீத ஆசிரியையாக இருக்கிறார்கள். இவர்கள்
சங்கீதம் கற்க ஆசைப்படுபவர்களை ஊக்கமளித்து,கட்டணமில்லாது சங்கீதப்பயிற்சியளிக்கும்
பேராளர். சுப்புலக்ஷ்மி அம்மா கூப்பிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை அல்லது
சோம்பேறித்தனம் காரணமாகத் தடைப்பட்டது.
இந்த வருடம் கடைசி
ஞாயிற்றுக்கிழமையான இன்று (27.12.09) சுப்புலக்ஷ்மி அம்மா அவர்கள் தாயகம்
சென்றிருந்ததால் திருமதி.உஷா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையேற்று இந்தத் திருப்படி
பூஜையை சிறப்புற நடத்தினார்கள். என்னுடன் பணிபுரியும் தோழி காயத்திரி அவர்கள்
நீங்களும் வர்றீங்களா? என்றார்.சரியென்று சொல்லித் திருப்படி பூஜையில் திருப்புகழ்
பாட மனதில் அந்த நேரம் ஒரு பரவசம்.முருகா! இப்படி ஒரு வாய்ப்பைத்தான் இத்தனை வருடம்
நான் இழந்ததா? என்று எனக்குள் நொந்து கொண்டேன்.திருப்படிபூஜை
முடிந்து,திருமுருகன் புகழ்பாடி, தீபாராதனை முடிந்து வெளிவருகையில் முருகா! என்ன
தவம் செய்தேன் என்று மனம் உருகிவிட்டது.ஏராளமான பெண்டிரும்,ஆண்களும் கலந்து
கொள்ளும் இந்த பூஜை எல்லோருக்கும் மனநிம்மதியையும், சந்தோசத்தையும் தந்திருந்ததை
அவர்கள் முகத்தில் விகசித்த வெளிச்சத்தைப் பார்த்தே
ஊகிக்கமுடிந்தது.மனிதர்கள்,அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும்
சரி,அவர்களுக்கு ஆன்மீகம் தரும் நிம்மதி, அமைதியை வேறெதுவும், வேறெவரும் வழங்க முடியாது என்பது
என் கருத்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக