சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, டிசம்பர் 27, 2009

குழந்தை வளர்ப்பு அனுபவம் - 2


              ஒவ்வொரு முறை தமிழ்நாடு போகும் போதும் திருத்தல தரிசனங்களுக்கு சென்று வருவதுண்டு.எங்கள் ஊரில் ஒரு சகோதரர் இருக்கிறார். எந்தெந்த ஊர் போகவேண்டும், எத்தனை பேர் போகவேண்டுமோ அதைச்சொல்லிவிட்டால் மீதப்பயணச்சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்து அழைத்துப் போய்விடுவார்.குடும்பத்துடன் போகும் போது மனதுக்கு நிம்மதியாக இருப்பதுடன் கோவிலுக்குச்செலவு செய்தால் மருத்துவச்செலவே இல்லாது போய்விடுவதுபோல் எனக்கு ஒரு நம்பிக்கை.மனதுக்குத் தேவையான சக்தி ஊட்டப்படுவது போல் ஒரு எண்ணம்.அப்படி ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச்சென்றபோது என் மகளுக்கும் மகனுக்கும் பெரிய நந்தியின் மீதும், பிரம்மாண்ட லிங்க ரூபத்தின் மீதும் அளவிடமுடியாத ஈர்ப்பு.அப்போது என் அம்மா சோழ வம்சம் வீழ்ச்சிக்குக் காரணம் பிரம்மாண்ட லிங்கஸ்வரூபம் தான் என்று சொல்கிறார்கள்,என்றார் இப்படி வரலாற்றுச்சம்பவங்களைக் கூறிக்கொண்டு வர பிரகாரம் சுற்றிவந்தோம்.பெரிய பிரகாரச்சுற்றுச்சுவர் முழுதும் காதலர் பெயர்கள் கல்வெட்டுகளை மறைத்தபடி.ஆங்காங்கே கல்லூரி மாணவ-மாணவியர் ஜோடி ஜோடியாக.எங்களுடன் சுற்றுலா வந்தவர்கள் அவர்களைத் திட்டித்தீர்க்க சங்கடத்துடன் எழுந்து சென்றார்கள். என் அம்மா,' இப்பல்லாம்.'.. என்று ஆரம்பிக்க, 'அம்மா! ஓம் நமசிவாய!' என்றதும் பேசாது இறைநாமம் சொல்லியபடி பிரகாரம் வந்தார்.எனக்கு, நாம் குழந்தைகளே உலகமாக,அவர்களை உயிரைவிட மேலாக நேசிக்கிறோம். அவர்களை பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். நாளை அவர்களும் இப்படி எங்கிருந்தோ வருபவர்கள் வாயில் விழும்படி இருந்தால்...இதே சிந்தனை.எங்களுடன் வந்தவர்கள் இப்பக்காலேஜ் போறதெல்லாம் இப்படித்தான்,அப்படித்தான் என்று இவர்கள் எல்லோரும் இளவயதில் பட்டினத்தார்,காரைக்கால் அம்மை போல் இருந்த மாதிரிப்பேச இந்த மாதிரிப் பேச்சுகள் தானே எத்தனையோ பெண்களின் உயர்கல்விக்கு உலை வைத்தது என்ற கோபத்தில், "இவ்ள செலவு பண்ணி கோவிலுக்கு வர்றது நம்ம மனஅமைதிக்காக" என்றதும் தான் பேச்சை மாற்றினார்கள். காதலிக்கத் திறமை அற்றவர்கள் காதலர்களை வம்பு பேசுகிறார்கள். அதேசமயத்தில் இடம்,பொருள் தெரியாமல் காதலைக் கடைவிரிப்பவர்களால் சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் அவப்பெயர். குழந்தைகளுடன் நல்ல நட்புறவை,எதையும் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தைத் தந்து இனக்கவர்ச்சிக்கும்,காதலுக்குமுள்ள வேறுபாட்டை,காதல் குறித்த ஒரு அறிதல்,புரிதலை உருவாக்கிவிட்டால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைக்கடந்து வரமுடியுமோ?அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்களில் வளர் இளம் பருவம் குறித்த கட்டுரை எது வந்தாலும் அதைப் படித்து அலசி என் கருத்துகளையும் சேர்த்து எண்ணிக்கொண்டே இருப்பேன்.என் கருத்துகளை என் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதுண்டு

         குழந்தைகள் தூக்கத்தில் கூட நம்மைப் பற்றியபடி இருப்பவர்கள், வயது ஏற ஏற சுய சிந்தனை அதிகரிக்க ஆரம்பிக்கும் போது நம்மை விட்டு விலகி நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவார்கள். அப்போது அவர்களின் கற்பனைகள்,கனவுகள் அதிகரிக்கும். அவர்களது கனவுலகில் நாமும் நண்பர்களோடு நண்பராக நுழைந்து விட்டால் நமக்கும் தனிமை இல்லை.குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு அதிகரிப்பதை நான் உணர்கிறேன்.இப்போதும் என் குழந்தைகளுடன் அவர்களது ஆண்,பெண் நண்பர்கள் குறித்து பேசுவது,அவர்களின் பேச்சைக்கவனமாகக் கேட்பது,எல்லாவற்றிற்கும் அவர்களின் கருத்துக்களைக் கேட்பது என்று இருக்கிறேன்.அவர்களின் உடைகளை அவர்களே தேர்வு செய்வது, அவர்கள் விருப்பத்திற்கு அலங்காரம் செய்து கொள்வது இப்படிப் போகிறது.அந்தமானில் எல்லா மாநில மொழிமக்களும் வசிப்பதால் இங்கு ஒரு கலப்புக் கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால் சுதந்திரம் கொடுக்கும் போது குழந்தைகள் நம் கலாச்சாரம் உணர்ந்து விருப்பங்களைத் தெரிவு செய்கிறார்கள்.

         என் மகளிடம்,காதல் கத்தரிக்காய்னு உன்ன பூட்டிக்காத. சுதந்திரமா இரு.சுதந்திரம் எவ்ள இனிமைங்கிறது அடிமையா இருக்கும் போது தான் புரியும். நீ அடுத்தவரோட கசப்பான அனுபவங்கள்ல இருந்து பாடம் படிச்சுக்க! என்று அவள் விகடனில் ஒரு கல்லூரிப் பேராசிரியை சொல்லியிருந்த கருத்துக்களைப் படிக்கச்சொல்லிக்கொடுத்தேன். அவங்க சொல்றது சென்ட் பெர்சென்ட் கரக்ட் என்பாள்.இப்படி பல கருத்துக்களை என் மகளிடம் படிக்கச்சொல்லிக்கொடுப்பதுண்டு ஆனால் என் மகன் அப்பப்பா! அவன் படுத்தும் பாடு.அவனுக்கு ஒரு நண்பர் குழாம்.அவர்களுக்கு ஊடகங்களும், கணிப்பொறியும் தான் உலகம்.நடிகர்கள் தான் முன்மாதிரி.அவர்கள் சிந்தனை,செயல் எல்லாம் உலகமே தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் முதல் பெற்றோர் வரை தினம் பாராட்டுகளை அள்ளி வழங்க வேண்டும்.எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது.கடிந்து பேசக்கூடாது. குழந்தைகளை நினைத்தால் பயம் ஒரு பக்கம்.நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை ஒரு பக்கமாக, எங்களைப்போன்ற கலப்பு கலாச்சாரத்திலும்,கலாச்சார சீரழிவிலும் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு தவிக்கும் தாய்கள் இங்கு அதிகம். ஆட்டம்,பாட்டு என்று எந்நேரமும் கொண்டாட்டமாக இருக்கவே விரும்பும் இவர்களின் வயதை நினைத்து தான் பயம்.அந்தமானில் இவர்களின் வயதிற்கேற்ற பொழுதுபோக்குகளுக்கோ,திறமை வளர்ப்பதற்கோ வசதிகளும் வாய்ப்புகளும் குறைவு. இந்த கால கட்டத்திற்கு பெண்குழந்தைகளை வளர்ப்பது சுலபமோ?அந்தக்காலத்தில் பெண்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் தான் அடிமடியில் நெருப்பக்கட்டிக்கிட்டு இருக்கேன்! என்பார்கள். எனக்கு ஆண் குழந்தை தான் அடிவயிற்று நெருப்புப்போல்.

         என் மகன் என்ன பயமுறுத்தறத கொஞ்சம் சொல்றேன்! கேளுங்கப்பா! அவனோட சின்ன வயசு புகைப்படத்த பாத்துகிட்டே இருந்தான். என்னடான்னு கேட்டா எம்புள்ளகிட்டே இந்த போட்டோவக் காட்டி இது யாருடான்னு கேட்பேன்.தெரியலையேன்னு சொல்லுவானா, அப்ப, சீ! களுத உங்கப்பா தான்டான்னு சொல்லுவேன்.அதுனால இந்த போட்டோ பத்ரம்.சுனாமி,கினாமில போய்டாம ஊர்ல கொண்டு போய் வச்சிடுவோம்.அவன் நிஜமாகவே சொல்ல நான் சிரித்தேன்.என் மகள் 'நல்ல அம்மா நல்ல புள்ள சீ'

            ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது என் தம்பி கட்டுமானப் பொறியாளர் அவர்,"அம்மா சீக்கிரம் சாப்பாட்டக் கொண்டு வாங்க! நா சைட்டப் பாத்துட்டு வெளியூர் போகணும் என்று சொல்ல என் மகன் வாயில் அடித்துக் கொண்டு என்ன ஆயா? எங்க அம்மாவ மட்டும் ஆண அடிச்சு வள, பொண்ண பொசுக்கி வளங்கிறீங்க! உங்க மகன் உங்ககிட்டேயே சைட்டப் பாக்கப் போகணுங்கறாங்க,என என் தம்பி சங்கடத்தோடு டேய் நான் சொல்றது கட்டிட வேலை நடந்துகிட்டு இருக்கில்ல அத என்றார்.அப்போதே என் தம்பி உன் புள்ளைக்கு அறிவு வேல செய்ய ஆரம்பிச்சிடுச்சு கவனம் என்றார் சிரிப்புடன்.

             ஒரு நாள் ஒரு இந்தி மொழிப்படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.அதில் நாயகி ஐஸ்வர்யா ராய். எனக்கு ஐஸ்வர்யாவைப் பிடிக்கும்.அப்பா! அந்தக்கண்ணு மகா ஜில்,கொடி மாதிரிப்பொண்ணு இப்படி வர்ணித்துக்கொண்டு இருக்க என் மகனும் ஐஸ் ரசிகனாகிவிட்டன்.எந்த அளவிற்கு? அம்மா எனக்குப் பொண்ணு ஐஸ்வர்யா மாதிரிப் பாருங்கம்மா! நீங்க சொல்றமாதிரி நான் படிக்கிறேன்.அடப்பாவி! அவங்க வயசானவுங்கடா! ஐஸ் மாதிரின்னு தான் சொன்னேன்.நல்லா கேட்டுப்பேசுங்க!இப்ப இங்க பாருங்க! முருகனுக்கு ஆறுமுகம். விஷ்ணுவுக்கு பத்து அவதாரம்.அப்புடி ஐஸும் பல அவதாரம் எடுத்தா?அந்தமாதிரி.. டேய் நீ தூங்க நான் கதை சொன்னா அதை இப்புடி திருப்புறியா நீ? இப்ப என் மகள் அதே பழைய வசனம் கூட என் கணவரும்.

                        இந்த வருடம் ரக்ஷா பந்தன் அன்று என் மகன் அம்மா இந்த வருஷம் அக்கா ஊருக்குப் போயிட்டா! அதுனால நீங்க நிறைய ராக்கி வாங்கிக் குடுங்க. என் க்ளாஸ் கேர்ள்ஸ கட்டச்சொல்றேன் என்று நிறைய ராக்கி வாங்கிக்கொண்டு போனான். மதியம் அவன் திரும்பி வரும்போது கை வெறுமையாக இருக்கவே என்னடா? என்றேன். விடுவிடுவென கண்ணாடி முன் நின்று நிஜமா நா ஸ்மார்ட்டா இருக்கேனா? என்றான். ஒன்றும் புரியாது, உனக்கென்னடா? கம்பீரமா இருக்க! என்றேன். இல்லமா! ஒரு கேர்ள் கூட ராக்கி கட்ட மாட்டேன்னுடுச்சு.ஏப்பாங்கிறேன். நீதாண்டா கொஞ்சம் சுமாரா இருக்க.உனக்கும் ராக்கி கட்ட நாங்க என்ன முட்டாளாங்குதுக. என்கிறான்.

           இன்னிமே ஒரு பொண்ணுக்கும் நோட், புக் எதுவும் குடுக்க மாட்டேன் என்றான் ஒரு நாள்.ஏன்? என்றேன்.லெட்டர் கல்ச்சர் அதிகமாயிடுச்சு ஸ்கூல்ல,என்றான். அடப்பரவாயில்லையே! என்றேன். நீங்க வேற எங்க க்ளாஸ் கேர்ள்ஸ் ஒருத்தரயும் எனக்குப் பிடிக்கல. அதுனால நான் யாரையும் பேர் சொல்லி கூப்பிடறதில்ல.பெஹன்னுதான்(சகோதரி) கூப்பிடுறேன் என்றான்.

             பள்ளிப்பாடம் படிக்கிறதில் பெரிய விருப்பம் ஒன்றுமில்லை.ஆனால் தனி வகுப்பு பாடங்களை விழுந்து,விழுந்து படிப்பான்.சரி! ஆசிரியர் அடிப்பாரோ? என்று கேட்டால் அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா! வேற வேற ஸ்கூல்ல இருந்து நிறைய பொண்ணுங்க வருது.அதுங்க முன்னாடி இன்சல்ட் ஆயிடுமில்ல.அதான்.அது சரி! அதுக்காவது படி! என்று பெருமூச்சு விட்டேன்.

               ஒருமுறை ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று திருமணங்களுக்கு சென்று வந்தோம். வீடு திரும்பியதும் அம்மா! இந்த வாரத்துல நாம மூனு கல்யாணம் அட்டென்ட் பண்ணினோமில்ல. அந்த மூனு கல்யாணத்துலயும் ஒரு ஒற்றும இருக்கு. என்னனு சொல்லுங்க என்று கேட்க என்ன ஒரே புலாவ்,ஒரே கீர்.அது தானே? என, கேர்ள்ஸ் ஆர் கேர்ள்ஸ் (ஒரு திரை வசனம்) என்று விட்டு மூனு கல்யாணத்துலயும் மாப்பிள்ள கருப்பு,அக்கால்லாம் நல்ல ஃபேர் கவனிச்சீங்களா? வலது கையை இடது மார்பில் வைத்து இப்பதான் மனசுக்கு நல்லா இருக்கு. நானும் கருப்பு. ஆனா பொண்ணு சிவப்பா கெடைக்கும். இல்லம்மா! என்றான். என் கணவர் டேய் அதெல்லாம் நடக்குறப்ப நடக்கும். இப்ப படிக்கிறத பாத்துப் படி.நல்ல பழக்க வழக்கத்தோட இரு, என்று கூற, "க்கும்..நீங்க தான் எதிர்காலத்தக் கனவு காணுங்குறீங்க! கனவுகண்டா தப்பு சொல்லுங்க". என் கணவர் தலையில் அடித்துக்கொண்டு போக , 'ஆமாம்மா எல்லாரையும் மாதிரி நானும் நல்ல புள்ள மாதிரி நடிக்கனும். என்னைய இயல்பா இருக்க விடாதீங்க' என்கிறான். என் மகள் பேசும் போதெல்லாம், 'தம்பி திருந்திட்டானா?' என்கிறாள்.அவன், 'அடிப்பாவி! என்னவோ பொழுது போகட்டும்னு ஏதாச்சும் பேசுனா முடிவே பண்ணிட்டியா? தூரத்துல இருக்கற தைரியம். பாத்துக்குறேன்." என் கணவரும் 'குலைக்கிற நாய் கடிக்காது' என 'எல்லாம் என் நேரம்' என்கிறான்.

            அது சரி நாம் வளர் இளம் பருவத்தில் இப்படி இருந்தோமா? அடுத்தவர் பழிக்காது ஆண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா! கோடி புண்ணியம்.



0 கருத்துகள்: