சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 29, 2009

சூழ்நிலை கைதிகள்

நீயும் நானும்
நாமாகி
எனதும் உனதும்
நமதாகி
நாட்கள் என்னவோ நகர்கின்றன.

நீயும்
என்னை சிந்திக்க விடாது
திணித்துக் கொண்டேதான் இருக்கிறாய்
பெண்ணின் இலக்கணங்களை,
பல அவதாரங்களை.
எப்படியோ எஞ்சிவிடுகிறது சில நிமிடங்கள்
என் அவலத்தை எண்ணிப் பார்க்க...

உன்னுடன் உலாவரும் போதெல்லாம்
உன்
அலுவலகத் தோழியரை அறிமுகப்படுத்துவாய்
அமர்க்களமாய்..
நானோ
என் தோழர்கள் அறியாது
முகம் மறைக்கிறேன்.

உன் நண்பர் குழாம்
நம் இல்லம் வரும்போதெல்லாம்
கதவு பார்த்துப் பேசும் அவர்களுக்கு
கதவுக்குப் பின்னால்
அடக்கம் காட்டுகிறேன் பொய்யாய்....

அவர்கள் அறியாத உனது
ஆணாதிக்க முகத்தின்
கோறைப்பற்கள் பிராண்டலை நினைத்து
என் இயல்பு மறைக்கிறேன்.
உனக்கென்ன?
பிராண்டிச்சிதைத்த பின்னும்
புன்னகை செய்வாய்.
உன்
அழகு முகத்தின் அந்தப்புன்னகையின்
அர்த்தம் புரிந்தும் அமைதியாய் நான்.

உன் விலங்குகளை
உடைத்தெறிந்து
பெண்ணீய அணிகளைப்
பூட்டிகொள்ளத்தான் துடிக்கிறது மனம்
சமூகத்தின் பார்வையில் கண்ணியம் காக்க வேண்டி
சூழ்நிலைக் கைதியாய் நான்.

0 கருத்துகள்: