சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 18, 2009

அந்தமான் தீவுகளில் தமிழ்க் கல்வி

           தமிழன் தான் செல்லுமிடமெல்லாம் சிறப்புடன் வாழும் தன்மை கொண்டவன்.தொன்மையான பண்பாடும்,வளமையான இலக்கியப்பின்னணி கொண்ட தமிழ்மொழியின் மீதான பற்றும்,அவனது கலாரசனை கொண்ட மனப்போக்கும், மரபணுக்களில் ஊறிக்கிடக்கும் வீரமும்,இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற குறிக்கோளும் கொண்டவன் தமிழன்.வறுமையிலும்செம்மையாக, கெட்டாலும் மேன்மக்கள்,மேன்மக்களே என்று எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மேன்மையானதொரு நல்வாழ்க்கை வாழக் கற்றவன் தமிழன்.எந்தச்சூழ்நிலையிலும் தன்னைப் பொருத்திகொண்டு வாழக்கற்றவன் தமிழன்.ஒருஅறிவு உள்ள ஜீவன் கூடத் தன் வாழ்க்கையைப் பூமியில் நிலைப்படுத்திக்கொள்ளப் போராடுகிறது.போராட்டங்கள் உயிர்களின் இயல்பு. ஆனால் தமிழனின் போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தொடரும் போராட்டம்.அடிப்படைத் தேவை முதல் அதிகார,உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.கால மாறுதல்களுக்கேற்ப களங்கள் மாறுபடுகிறதே தவிர போராட்டங்கள் தொடர்கிறது.தமிழனுக்கு அந்தமான் விதி விலக்கல்ல.

          நாடு விடுதலை அடைந்தபின் அந்தமான் தீவுகளில் குடியேற்றங்களை விரிவாக்கிடவும், காட்டுப்பகுதிகளை அழித்துச்சீராக்கிடவும் தமிழகத்தின் ராமநாதபுரம்,புதுக்கோட்டை,மதுரை மாவட்டப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களாகதமிழர்  மிகுதியான எண்ணிக்கையில் குடியேறினர்.இவர்களுடைய குழந்தைகள் தமது தாய் மொழியில் கல்வி பயில வசதியில்லாத நிலை இருந்தது.1953ம் ஆண்டு போர்ட் பிளேயரில் அச்சுக்கூடம் நடத்திவந்த கிறித்துவப் பாதிரியார் திரு.தங்கராசு அவர்கள் இந்த அவல நிலை போக்க ஹேடோ பகுதியில் தமது சொந்த முயற்சியில் ஒரு பள்ளி அமைத்து தாமே ஆசிரியராக இருந்து தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்தார்.பிறகு 1954ல் எமிலி சுந்தரி என்பவரை ரூ.20/ மாதச்சம்பளத்தில் வேலைக்கமர்த்தி தமிழ்ப் பயிற்றுவிக்கச்செய்தார். இப்பள்ளி 1957ல் அரசு நிர்வாகத்தின் கீழ் வந்தது. என்றாலும் இந்த ஒரு பள்ளியில் வனத்துறையில் பணிபுரிந்த பணியாளர்களின் குழந்தைகள் மட்டுமே பயனுற முடிந்தது.மற்ற துறைப் பணியாளர்களின் குழந்தைகள்,வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் குழந்தைகள் தமிழ்க்கல்வி பெற வாய்ப்பற்ற சூழ்நிலை. 1965ம் ஆண்டில் தமிழினத் தலைவர்கள் ஒன்றுபட்டு அந்தமான் தமிழர் சங்க வளாகத்திலேயே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட்டது.                    இப்பள்ளியில் முத்தாளம்மாள்,உமா,விஜயா கண்ணையா,
விஜயலக்ஷ்மி,லீலாவதி,பாஸ்கரன்,பத்மாவதி,சௌந்தரராஜன்,சரோஜா மருதவாணன் ஆகியோர் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இவர்களில் சரோஜா மருதவாணன், உமா, விஜயா கண்ணையா ஆகியோர் சம்பளம் ஏதும் பெறாமல் தமிழ் உணர்வுடன் பணியாற்றினர்.

        தமிழ்க்கல்வி தீவுத்தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வையும், மிகுந்த உற்சாகத்தையும்,ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியது.மறைந்த தமிழினத்தலைவர்.திரு மிகு க.கந்தசாமி ஐயா அவர்கள்,திருமிகு இரா.மருதவாணன் ஐயா அவர்கள் மற்றும் ஏனையோரும் சேர்ந்து தீவின் அப்போதையக் கல்வித்துறை இயக்குனர்.S.S.கல்லா என்பவரிடம் கோரிக்கை மனு ஒன்றினை சமர்ப்பிக்க,அவர் 20 தமிழ்க்குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் திறக்கத்தயார் என்று கூற நம்மவர்களோ 200 தமிழ்க்குழந்தைகளை இயக்குனரே வியக்கும் வண்ணம் அவர் முன் கொண்டு போய் நிறுத்தினர்.இதன் விளைவாக அபர்தீன் பள்ளியில் ஒன்றாம்,இரண்டாம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.தமிழர்களின் அயராத முயற்சியினாலும் தளராத வேண்டுகோள்களினாலும் தீவின் பல பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.ஆனால் உயர்நிலைக்கல்வி தமிழில் பயில வழியில்லாத நிலை.தமிழினத்தலைவர்களான தெய்வத்திரு.க.கந்தசாமி ஐயா அவர்கள்(முன்னாள் தமிழர் சங்கத்தலைவர்),திரு.இரா.மருதவாணன் ஐயா அவர்கள், அந்தமான் முரசு                        ஆசிரியர் தெய்வத்திரு.சுப.சுப்ரமணியன் ஐயா அவர்கள்,
திரு.து.க.கோபால் அவர்கள் மற்றும் பலர் அறவழிப்போராட்டத்தின் மூலம் தமிழ்க்கல்வி பெற்றிட முயன்றனர்.

          1971ல் தீவிற்கு வருகை தந்திருந்த அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்கள் தமிழ்க்கல்விக்காக பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.இந்தியப் பாராளுமன்றத்தில் முரசொலி மாறன்,கே.கண்ணப்பன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் அந்தமான் தமிழ்க்கல்விக்காகக் குரல் எழுப்பினர்.தமிழகத்தில் தி.மு.க. பொதுக்குழுவில் அந்தமானில் 6ம் வகுப்பு முதல் தமிழ்க்கல்வி தொடங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்து,மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படிதொடர் போராட்டங்களின் பயனால் 1972ம் ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை தமிழ்க்கல்வி பயில தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

          ஒன்பதாம் வகுப்பு முதல் தமிழ்க் கல்வி பயில மறுபடி அரசு அனுமதி பெற வேண்டும். இதற்கென தமிழினத்தலைவர்கள் ஒன்று கூடி தமிழ்க்க்லவிப் பாதுகாப்புக்குழு ஒன்றை நிறுவினர். இக்குழுவில் மொத்தம் 21 பேர் இடம் பெற்றிருந்தனர்.இவர்களின் வேண்டுகோள் அரசின் காதுகளுக்குக் கொண்டு சென்றும் செவித்திறனற்றவர் காதுச்சங்காக ஆனது.1977ல் தமிழ்க்கல்விக்காக மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தி தமிழர்களின் ஒட்டு மொத்தக் கருத்தை எடுத்துரைத்தனர்.பயனில்லை.1977ல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக ரங்கத் என்னுமிடத்தில் தமிழினத்தலைவர் க.கந்தசாமி ஐயா அவர்கள் தீக்குளிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்தச்செய்தியறிந்த தீவின் அனைத்துத் தமிழர்களும் பரபரப்படைந்ததைக் கண்டு இறுதி நேரத்தில் அரசின் அறிவிப்பு தந்தி வடிவில் வந்தது. தீக்குளிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

           பிறகு 1980 ஆண்டு அரசு தானே முன்வந்து தமிழில் மேல்நிலை வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பித்தது.இப்போது தீவுகளில் தமிழ்த்தொடக்கப்பள்ளிகள் - 22தமிழ் இடைநிலைப்பள்ளிகள் - 12 தமிழ் உயர்நிலைப்பள்ளிகள் - 11 தமிழ் மேல்நிலைப்பள்ளிகள் - 5ம் இயங்கி வருகின்றன.தமிழ்ப்பள்ளிகள் தீவில் தொடங்கப்பட்டதால் தமிழர் பலர் ஆசிரியர்களாகப் பணியாறும் வாய்ப்புப்பெற்றனர். இதனால் தீவில் தமிழர் எண்ணிக்கை கூடியது.போராட்டமே இல்லாமல் வங்காளப் பள்ளிகள் வங்காளர்களுக்குக் கிடைத்தது. அந்த அடிப்படையில் தான் தமிழர் தமக்கும் தமிழ்ப் பள்ளிக்குப் போராடினர்.தமிழ்ப் பள்ளிகளைக் காட்டி மலையாளர்கள் மற்றும் தெலுங்கர்கள் ஒரு வேண்டுகோள் கடிதத்தின் மூலமே தமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தமிழர் தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை போராட்டத்திலேயே கழித்ததை என்ன சொல்வது? தமிழனின் தலை எழுத்து.

               இப்படிப் போராடி பெற்ற தமிழ்ப்பள்ளிகளில் இன்று தமிழரின் குழந்தைகள் சேர்க்கை மறுக்கின்றனர்.சில தமிழ்ப்பள்ளிகள் போதுமான குழந்தைகளின்றி மூடும் நிலை வந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆசிரியர் பணிக்கென தமிழர்களை அமர்த்துவதும் குறையும். வேலை வாய்ப்புகளை தமிழர் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.சில தனியார் பள்ளிகள் - காமராஜ் ஆங்கிலப் பள்ளி,உம்மத் பொதுப்பள்ளி போன்றவை தமிழை மூன்றாவது பாடமாகப் பயிற்றுவிக்கிறது.இப்போது கூட தமிழ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அந்தமான் தமிழர் சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் ஒரு அங்கமான அந்தமான் தீவுகளில் தமிழர் தமது உரிமைகளுக்குப் போராடும் நிலை என்றால் இதை எவரிடம் முறையிடுவது?




0 கருத்துகள்: