சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 02, 2009

அந்தமான் தீவுகளில் தமிழர் குடியேற்றம்



          அந்தமான், நிகோபார் தீவுகள் நமது தாய் தமிழ் நாடில் இருந்து 1200 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமான உறவு 11ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 2ம் ராஜேந்திர சோழ மன்னர் அந்தமான், நிகோபார் தீவுகளைக் கைப்பற்றி அங்கு தமது படைகளை விட்டு சென்றார் என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டின் தொடர் கல்வெட்டு ஒன்று இங்குள்ள பிலோ பாபித்தீவில் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.அந்தகாலக்கட்டத்தில் அந்தமானில் மானைப்பார்த்து தமிழன் 'அந்தா மான்' என்றது அந்தமான்.என்றாலும் மலாயர்கள் இத்தீவுகளை 'ஹண்டுமான்' தீவுகள் என்று அழைத்தனர்.எனினும் இராமாயணக்காலத்தில் 'அனுமான்' என்ற சொல்லடியாக 'அந்தமான்' என்ற சொல் பிறந்துள்ளது என்றும் நிர்வாணமான பழங்குடியின மக்கள் வசிக்கும் இடம் என்பதால் நிகோபாரை 'நக்காவரம்' என்றும் அழைத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

       புதின எழுத்தாளர் தெய்வத்திரு.சாண்டில்யன் அவர்கள் தமது கடல் புறா நாவலில் தீவுகளின் வரைபடம்,அதற்கான வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்கள், விளக்கங்களுடன் தமது முன்னுரையில் அழகாகச் சொல்லியிருப்பார்.ஷோம்பென் இனப்பழங்குடி மக்கள் தான் 2ம் ராஜேந்திர சோழ மன்னர் விட்டுச்சென்ற தமிழர்கள் எனவும் அவர்களின் மொழியில் தமிழ் சொற்கள் உண்டு என்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் திராவிட பழக்க வழக்கங்களை ஒத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

     அதன் பிறகு இயற்கை தந்த இந்த எழில்மிகு தீவுகளை, அழகின் சிகரமான உல்லாசபுரியை குற்றபுரியாய், வரலாற்றில் இருண்ட தீவுகளாய் ஆக்கிய பெருமை ஆங்கில ஏகாதிபத்தியத்தையே சாரும். ஆங்கிலேயர் காலத்தில் குற்றபுரிக்கு சிறைக்கைதிகளாக தமிழர் பலர் வந்திருக்கிறார்கள் எனவும், அவர்கள் நாளடைவில் தங்கள் இனம் மறந்து, மொழி மறந்து, அடையாளங்கள் இழந்து தீவெங்கும் காணப்படுகிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தீரமுடன் போராடிய செக்கிழுத்த தியாகச்செம்மல் தெய்வத்திரு வ.உ.சிதம்பரனார் அவர்களின் சுதேசிக்கப்பல் நிறுவனத்தின் கப்பல் முதன் முதலாக அந்தமான் தீவுகளுக்குத்தான் பயணம் செய்தது என்கிறது வரலாறு.அவரின் கப்பல் சென்று வந்த அந்தமான் தீவுக்கே அவரைக் கைதியாய் கொண்டு வர ஆங்கில ஏகாதிபத்தியம் திட்டமிட்டது. ஆனால் மேல் நீதி மன்றம் அவரது தண்டனையைக்குறைத்ததின் காரணமாக தெய்வத்திரு வ.உ.சி அவர்கள் தப்பிவிட வேறு இரு தமிழ் தேசப்பக்தர்கள் பிரதிவாதி பயங்கரம் தெய்வத்திரு வெங்கடாச்சாரி அவர்கள் மற்றும் தெய்வத்திரு டி.சச்சிதானந்தசிவா ஆகியோர் அந்தமான் கொடுஞ்சிறையில் வாடினர் என்கிறது தமிழறிஞர்.பழ நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதிய தமிழன் இழந்த மண் என்ற நூல்.


           நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பல தமிழர்கள் தீவுகளை விட்டு தமது சொந்த ஊருக்கு சென்று விட்டதாகத்தெரிகிறது.அந்த நேரத்தில் தீவில் தொழிலாளர் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாகவும், அந்த தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, விளைநிலம் ஒதுக்கீடு செய்வதாகவும் தீவு நிர்வாகம் விளம்பரம் வெளியிட அந்த நேரத்தில் இங்கு தங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த வணிகப்பெருங்குடி மக்கள் பல தமிழர்களை தமிழகத்திலிருந்து தீவிற்கு அழைத்துவந்து அரசு வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் கொடுத்து பராமரித்து வந்துள்ளனர்.

  போக்குவரத்துவசதிகளோ,அடிக்கடி கப்பல், விமானப்பயண வசதிகளோ, தொலைத்தொடர்பு வசதிகளோ, தகவல் தொடர்பு சாதனங்களோ, கடிதப்போக்குவரத்து வசதிகளோ இல்லாத நேரத்தில் மாதத்தில் ஒரு முறை வரும் சில தமிழ் நூல்களும், சில தமிழ் செய்தித்தாள்களும்,கடிதங்களும் தான் அப்போதையத் தமிழர்களுக்கு ஆறுதல்  தந்துள்ளதுடன் தமிழகச்செய்திகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்துள்ளது. தமிழ் மொழிப்பற்றும், தொண்டுள்ளமும் கொண்ட தமிழர் சிலர் தத்தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டி இங்கு ஸ்ரீ ராமவிலாஸ் உணவகம் நடத்திவந்த திரு.வெள்ளைச்சாமி ஐயா அவர்களின் இல்லத்தின் மேல்தளத்தில் ஒன்று கூடி உரையாடினார்கள்.
      
         அப்போதெல்லாம் தீவுகள் எங்கும் மரவீடுகள் தான். மழையோ வருடத்தில் எட்டு முதல் பத்து மாதங்கள் விடாது பொழியுமாம்.வெங்காயம், தக்காளி மற்றும் ஆங்கிலப் பெயர் கொண்ட காய்கறிகள் தீவுகளில் விளைவதில்லை.மாதம் ஒருமுறை வரும் கப்பலில் தான் உண்வுப்பொருட்கள் வரும்.அதை வாங்கிப்பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும் அடுத்த முறை கப்பல் வரும் வரை.பூச்சியும் புழுவும் பிடித்த அரிசி, கோதுமையைத் தான் மக்கள் உண்டு வந்துள்ளனர். 1950ம் ஆண்டு திரு.ஆர்.அரங்கராஜன் ஐயா அவர்களின் நன்முயற்சியினால் தமிழர் வாசகசாலை தொடங்கப்பட்டது.இனரீதியில் தோன்றிய முதல் அமைப்பு இது தான். இந்த வாசக சாலை தான் 1951ம் ஆண்டில் அந்தமான் தமிழர் சங்கமாக மாறியது.எல்லா இடங்களிலும் தமிழ்ச்சங்கம் என்று இருக்க அந்தமான் தீவில் மட்டும் தான் தமிழர் சங்கம்.இது தமிழர் மேம்பாட்டிற்காக, தமிழை மட்டுமே அடையாளமாகக்கொண்ட ஒரு ஒற்றுமையான    இனமாகத் தமிழர்களைத் தீவில் அடையாளப்படுத்த உருவாகிய ஒரு சங்கம்.அது முதல் இலக்கியக் கூட்டங்கள்,சொற்பொழிவுக்கூட்டங்கள்,கருத்தரங்கங்கள் யாவும் நடத்தப்பட்டு வந்துள்ளது.1951ல் முதல் முதலாக                     அந்தமான் தமிழர்
சங்கத்தில் பாரதி விழா நடை பெற்றுள்ளது. அதன் பின் அந்தமான் தமிழர் சங்கத்தை தலைமை இடமாகக் கொண்டு பிற உள்தீவுகளிலும் தமிழர் இருந்த இடமெல்லாம் தமிழர் அமைப்புகள் தோன்றியுள்ளன. இந்தத் தமிழர் அமைப்புகளில் பாரதி விழா (இப்போது பாரதி, பாரதி தாசன் விழா), பொங்கல் விழா, சித்திரை விழா எனப் பல விழாக்களும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்துள்ளன. 1957ம் ஆண்டில் தான் முதல் முதலாக அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் கவிதைகள், கட்டுரைகள்,சிறுகதைகள் என அந்தமான் தமிழர் படைப்புகளை ஒன்று திரட்டி சித்திரை விழா மலர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

         தீவில் தமிழ் வழிக்கல்விக்கு வழியில்லாத காரணங்களினால் தமிழர் குடும்பமாக வாழ இயலாத ஒரு சூழல் இருந்திருக்கிறது. அதற்கும் ஒரு தீர்வாக அந்தமான் தமிழர் சங்க வளாகத்திலேயே தமிழ் குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்துள்ளனர்.அதன் பிறகு போராட்டங்கள் பல நடத்தி, உண்ணாவிரதங்கள் பல இருந்து, தீக்குளிப்பு போராட்டங்கள் நடத்தி1969-70ம் கல்வி ஆண்டில் தீவுகளில் தமிழ் வழிக்கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன் பிறகு தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் குடியேறியிருக்கின்றனர்.இன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் தமிழ் இலக்கிய மன்றம், இலவச தமிழ் கற்ற்ல் மையம் இயங்கி வருகிறது.

        இன்று தீவுகளின் பெரும் வணிகர்களாக, அரசுத்துறைகளில் இயக்குனர்களாக, அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பதவி வகிப்பவர்களாக, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக,அரசியலில் பிரமுகர்களாக தமிழர்கள் பெருமையுடன் தங்கள் பண்பாடு காத்து ஒளிர்கிறார்கள்.இந்தத் தீவு இன்று ஒரு வளமிக்க சுற்றுலாத் தளமாக, இயற்கை வனப்புடன் மனித வாழ்க்கைக்கு தகுதி உடையதாக இருக்கிறதென்றால் அதற்கு தமிழனின் உழைப்பும், ஒற்றுமையுமே காரணம். காடழித்து நாடாக்கிய கரங்கள் தமிழனுடையது.இன்று உணவுப்பொருட்கள் முதலாய் போக்குவரத்து வரை புரட்சி நடந்திருக்கிறதென்றால் அது தமிழனின் சாதனை.

              இன்று தீவுகளின் மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழர்கள் ஒற்றுமையிலும் உழைப்பிலும் முதலிடத்தில் இருக்கிறோம் என்றும் இன்னும் பல உயர்வுகளைக் கண்டு தீவின் உன்னதமான ஒரு வரலாற்றை தமிழர்கள் படைப்போம் என்றும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்த வலைப்பூவின் மூலம் ஒரு உறுதிமொழியாக இந்தத் தீவு வாழ் தமிழர்களின் சார்பில் பதிவு செய்கிறேன்


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழென்று சங்கே முழங்கு.!

3 கருத்துகள்:

novelist olerzor சொன்னது…

very happy 2 read ur article.
which is the official language of andaman, nichobar islands.

Kattuvasi சொன்னது…

A nice historical overview of the Islands. One thing that is missing (excuse me if you written about it elsewhere), is the negative effects Tamil people and also the others from the mainland India have had on the Islands indigenous populations. I am talking about the ancient communities (Jarawa, Shompens, Onge).It's right time mainland communities including the Tamil people realize that they are on the verge of making few more ancient communities go extinct and think about undoing the damage : such an action will go a long way in boasting our own culture!

HK Arun சொன்னது…

உங்கள் தளம் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்தமான் தமிழர் அவர் தம் வாழ்வியல் கூறுகளை தொடர்ந்து பதியுங்கள்.

உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

நன்றி