சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 18, 2009

தமிழ்ப்பெண்களே! பாடிக்கிட்டே சமையல் பண்ணுங்க!

            நான் நன்றாக சமையல் செய்வேன்.(நெஜமாத்தாங்க).செட்டிநாட்டு சமையல், செட்டிநாட்டு பலகார வகைகள்,சில பல குறிப்புகளைப் படித்துசோதனை முயற்சிகள் செய்வது, சரியாக வந்தால் அந்தப்பெயர்,அல்லாவிடில் நாமே ஒரு நாமகரணம் சூட்டுவது இதில் நான் கை தேர்ந்தவள்.தீபாவளி சமையங்களில் பலகாரம் செய்யத் தெரியாத, செய்ய இயலாத தோழியர்க்கு செய்து கொடுப்பதுண்டு.அந்த நேரங்களில் தொலைபேசி அழைப்பு வந்தாலே பலகாரப் பக்குவம் கேட்பதற்காகத்தான் இருக்கும்.எனக்கு பாட்டு மிகவும் பிடித்தது.நாட்டுப்புறப்பாட்டு,பழைய திரை இசை,புதிய பாடல்களில்,மென்மையான இசையுடன் கூடிய பாடல்கள்,எம்.எஸ்.அம்மா,சுதா ரகுநாதன் அவர்களின் பாடல்கள் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.(சமையலச்சொல்லிட்டு பாட்டுக்கு வந்துட்டீங்க என்கிறீர்களா? இருங்க வர்றேன்) நான் சமையல் செய்யும் போது பாட்டுப் பாடிக்கொண்டே தான் சமையல் செய்வேன்.இஸ்க் பராரரா என்று ஆரம்பித்தால் என் மகன்,'அம்மா இது என் பாட்டு.உங்களுக்கு வேற பாட்டுக்கெடைக்கலியா.நீங்க இந்தப்பாட்ட கொல பண்றீங்க.அப்றம் எனக்கு புடிக்காம போய்டுது' என்று கூற,' பார்த்த முதல் நாளே!' என்று ஆரம்பித்தால் என் மகள்,'ம்.ம்.. நாந்தான் கிடச்சன் உங்களுக்கு.' என்பாள்.இந்தி மொழிப் பாடல் பாடினால் என் கணவர்,' எப்பவும் நீ ஹிந்திப்பாட்டு பாடுறப்ப கொஞ்சம் அடக்கியே வாசி.தமிழத் தப்புதப்பா பேசுனா நமக்கு எவ்ள கோவம் வருது.அப்டித்தான் அவுங்களுக்கும்' என்பார்.இது எதுக்கு வம்பு.நான் டி.எம்.சௌந்தர்ராஜன்,பி.சுசீலா பாடிய பாடல்கள்,நாட்டுப்புறப்பாடல்களை சுழலவிட்டு நானும் கூடவே பாடியபடி சமையல் செய்வேன்.இது நான் என் அம்மா வீட்டில் வேலை செய்யவென்று ஆரம்பித்த சிறு வயது முதலே உள்ள பழக்கம்.யாராவது நண்பர்கள்,தோழிகள் வீட்டுக்கு வந்தால், 'என்ன பாட்டுச்சத்தம்? அமர்க்களப்படுது' என்பார்கள். என் கணவரும், குழந்தைகளும், ஆமா! அவுங்க சமைக்குறப்ப பாடிக்கிட்டே சமைப்பாங்க.நாங்க(ருசி தெரியாதிருக்க)  சாப்பிடுறப்ப பாடிக்கிட்டே சாப்புடுவோம்' என்பார்கள்.

             இதைவிட என் மகனின் பள்ளித்தோழர்கள் அவனின் மதிய உணவைப்பகிர்ந்து கொண்டுவிட்டு 'நீ குடுத்து வச்சவண்டா. ஆன்டி,இவ்ள அருமையா சமைக்கிறாங்க' என்பார்களாம்.வீட்டுக்கு வரும் அவனின் தோழர்கள்,'ஆன்டி,நீங்க கேட்டரிங் படிச்சீங்களா? நீங்க வைக்கிற இட்லி சாம்பார் சூப்பர்' என்றால் என் மகன் உடனே 'உளறாத.ஒரு நாள்ல இப்டிலாம் முடிவு பண்ணிராத' என்பான்.'ஆமாண்டா! அப்புடி கிடந்துதான் 15 வயசுலய ஆறடி உயரம் இருக்க' என்பேன் நான்.அதற்கு அவன்  'பதினெட்டு வருஷம் ஒரு நாளுல்ல ரெண்டு நாளுல்ல பதினெட்டு வருஷம் அப்பா உங்க சமையல சாப்டுட்டு அப்டியே தான் இருக்காங்க' என்பான்.அவரோட இளமையின் ரகசியமே என்னோட சமையல் தான்டா! என்பேன்.  ஒரு நாள் எதேச்சையாக ஒரு பெண்கள் பத்திரிக்கையில் ஒரு சகோதரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்."அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். சுத்தம்,சுகாதாரம் ஒரு காரணம்.அதோடு சமைப்பவர்களின் மனநிலை அந்த உணவில் படிவதால்(கோபம்,அவசரம்,பரபரப்பு) அந்த உணவை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண்,  அதே கோபம், கடுகடுப்பு,அஜீரணக்கோளாறு இன்னபிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. ஒரு அரண்மனையில் விருந்துக்கு வந்த துறவி திருட்டு சமையற்காரன் சமைத்த உணவை உண்டதும் அரசரின் செங்கோலைத் திருடிக்கொண்டு போய்விட்டாராம். பிறகு துறவி விசயத்தை உணர்ந்து அரசரிடம் சொல்லி செங்கோலைத் திருப்பிக்கொடுத்தாராம்.அதனால் நாம் சமைக்கும் போது ஸ்லோகங்கள்,பஜனைப்பாடல்கள்,பிடித்த திரை இசையை பாடிக் கொண்டே சமைத்தால் நம் மனம் இலகுவாகி உணவை உண்பவர்களுக்கு உற்சாகமான மன நிலையும் நோயற்ற வாழ்வும் அமையும்" என்று.

          இந்தக்கட்டுரையின் சாரத்தை நான் வானொலியில் பெண்கள் நிகழ்ச்சியில் கூறுவதுண்டு.ஏனென்றால் இங்கு சிலர் குழாயில் தண்ணீர் வரவில்லையா, சமையல் வாயு தீர்ந்து விட்டதா? உடல் சுகமில்லையா? குழந்தைகளுக்கு உடல் நலமில்லையா? வெளியில் எங்காவது போக வேண்டுமா? எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு உணவகங்களில் வாங்கி உண்பது.இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம்.ருசிக்காக அவர்கள் செய்யும் கலப்படங்கள்,அஜினோ மோட்டோ,சோடா போன்ற பொருட்களும் உடல் நலத்திற்குக் கெடுதல் தான்.என்னம்மா? தோழியரே! இனிமேல் நீங்களும் பாடிக்கொண்டே சமையல் செய்வீர்களா? எங்கள் சகோதரர்கள் உங்கள் சமையலில் ஏதாவது குறை சொன்னால் அவர்களைப் பாடிக் கொண்டே சாப்பிடச்சொல்லுங்கள். நாளைக்கு நன்றாக சமைக்கிறேன் என்று உறுதி கொடுங்கள்.நாளைக்கும் அப்படியே ஆகிவிட்டால் என்கிறீர்களா? நாளை தினமும் தான் வந்து கொண்டே இருக்கிறதே..

0 கருத்துகள்: