சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 15, 2009

அந்தமான் தமிழர் சங்கப்பொன்விழா- ஒரு மலரும் நினைவு



இயற்கை அன்னையின் வஞ்சனை அற்ற கொடையால் வளம் கொழிக்கும், அழகு சிரிக்கும் வண்ணத்தீவுகள் இந்த அந்தமான், நிகோபார் தீவுகள். கருநீல கடற்பரப்பில், முத்து நிற மணல் பரப்பில்,மரகதக்கற்களாய் மின்னும் இந்த அழகுத் தீவுகள், கமுகும் தென்னையும் கலந்த நிலப்பரப்பு.வானுயர்ந்த மரங்கள் வானத்து மேகங்களைத் தடவி விளையாடும். கடலலைகள் தாலாட்ட,கப்பல்களின் சங்கொலிகள் குலவையிட,வேண்டுமளவு பூமியை நனைக்கும் மழைச்சரங்கள்,அமைதியான மனித வாழ்க்கைக்கு இயைந்த அற்புதத்தீவுகள். இந்த இயற்கை அழகை வர்ணிக்க வார்த்தைகளுக்கு வலிமை கிடையாது. ஒவ்வொரு உயிரும் உணர வேண்டிய அழகு.நான், நீ,எனது, உனது என்ற எல்லை உடைத்து நம்மை உணர வைக்கும் அமைதி.மனித சக்தியின் எல்லை முடிந்து,பிரபஞ்ச சக்தியின் ஆளுமை விரிந்த அடர்ந்த காடுகள்.இந்தத் தீவிலும் தமிழச்சாதி தன் மரபு,பண்பாடு,கலை,கலாச்சாரம் பின்பற்றி தமிழன் என்ற தனித்த அடையாளத்துடனும், நட்புக்கரம் கொண்டு பிறமக்களுடன் கலந்து வாழும் போது இந்தியன் என்ற உணர்வுடனும் வாழ்கிறது.

"தெய்வம் மறவார்,செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும், ஏதுதான் வருத்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்" - மகாகவி பாரதியாரின் வரிகளுக்கேற்ப, அந்தமான் தீவுகளில் தமிழச்சாதியின் போராட்டங்களும்,மெய் வருத்தம் பாராத,கண் துஞ்சாத கடும் உழைப்பும் தான் இன்று இத்தீவுகளில் ஒரு அங்கீகாரத்தையும், பிற மொழிக்காரர்கள் மத்தியில் ஒரு மரியாதையையும் நமக்குப் பெற்றுத்தந்திருக்கிறது.இங்குள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களின் ஒரே கூரை,பெரிய வீடு,'அந்தமான் தமிழர் சங்கம்'.

               அந்தமான் தமிழர் சங்கம் 1952ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2002ம் ஆண்டில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பொன்விழா எடுக்க விழைந்தனர் அந்தமான் தமிழர்கள்.இந்த விழா பிரம்மாண்டமாக எடுப்பார்கள் என்று ஊரெல்லாம் ஆரூடம்.இவர் வருவார், அவர் வருவார் எதிர்பார்ப்புகள்.அப்போது இங்கு அகில இந்திய வானொலி நிலையத் தமிழ்ப்பிரிவில் எங்களுடன் தற்காலிக அறிவிப்பாளர் பணியில் தமிழர் சங்கத்தின் முன்னாள் செயலர்,பொன்விழா மலர்குழுவின் பொறுப்பாசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.சி.சக்திவேல் ஐயா அவர்களும்இருந்தார்கள். எங்களிடம் ஐயா அவர்கள், 'பொன்விழா மலருக்கு ஒவ்வொருவரும் கவிதை,கட்டுரை,சிறுகதை எது எழுத முடியுமோ, எழுதிக் கொடுங்க',என்றார்கள்.அப்போது தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தெய்வத்திரு.இலஞ்சி.நடராஜன் ஐயா அவர்கள் இருந்தார்கள். நடராஜன் ஐயா அவர்கள் ஆசிரியரிடம்,'அதுக்கென்ன சார்! அதெல்லாம் எல்லாரும் நல்லாஎழுதுவாங்க. என்னம்மா! குடுத்துடலாமில்ல' என்று கேட்டு எல்லோரையும் எழுதி வரும்படி பணித்தார்கள். நாங்கள் அனைவரும் ஆளுக்கொன்று எழுதி வந்தோம். நான்'பொய்யாய்..பழங்கதையாய்..' என்று ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அந்தக்கவிதை,

"இன்று
காந்திய கிராமங்களின் மீது
கவனம் அற்றுப்போனதால்
இட நெருக்கடியில் இன்னலுறும் நகரங்கள்
ஏர் பிடிக்க மறந்ததால்
சீர் கெட்டுப்போன கிராமமக்கள்

சொந்த ஊரின் ராஜாக்கள்
சொத்து சேர்க்க வெளி நாட்டு வீதிகளில்..
இயந்திரமாய் வேலை செய்து
வியர்வைத்துளிகளை விலை பேசும்
இவர்கள்
சொந்த மண்ணில் சுகமாயிருப்பதால்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறார்கள்
மனித இயந்திரங்களாய்...

எங்கள்
கிராமத்து பிரம்மாண்ட வீடுகளில்
தட்டுத் தடுமாறும் வயோதிகர்கள்
நகரத்தின் தீப்பெட்டி வீடுகளில்
காற்றுக்கும் திண்டாடி
குடிநீருக்கும் அலைந்து
களைத்து நிற்கிறது இந்தத்தலைமுறை

ஆலமரமும் அரசமரக் காற்றும் உடல் தழுவ
கோவில் பிரகாரம் சுற்றி
ஊரணிப்படிக்கட்டில் ஊர்க்கதை பேசிய சுகம்
மழைச்சாரலில் உடல் நனைய
ஓடும்
மழை நீரில் காகிதக்கப்பல் விட்டு
களித்த சுகம்
நட்ட நாற்று வேர்ப்பிடித்து
நல்ல பச்சை நிறம் திரும்பி
காற்றில் சரசரத்து வரப்பில் வழிந்து விழ
நடக்கும் கால்களில் குறுகுறுக்கும் சுகம்
கண்மாய் மடை திறந்து
வாய்க்கால் வழி பாயும் நீரில்
கெண்டையும், கெழுத்தியும் கொஞ்சி விளையாட
விரல்களால் அளைந்து விளையாடும் சுகம்
தூரத்து தொடுவானம் வரை
மேயும் ஆடு மாடுகள்
கண்மாய்க்கரை முழுதும்
நாரையும் கொக்கும்
நடந்து விளையாட
சகதியும் சந்தனமாய்
உடம்பெங்கும் தெளித்திருக்க
கண்மாயில் குளித்து வீடு திரும்பும் சுகம்
வாடகைக் கவலையின்றி
சொந்தவீட்டில் புரண்ட சுகம்
இப்படி
எதுவுமே இல்லை
இந்தத்தலைமுறைக்கு
பாவம்!
முதுகில் சுமக்கும் புத்தகப்பையும்
தினமும் அழுத்தும் பாடச்சுமையுமாய்
பொழுது கழிவதே போதும் என்றாகிவிடுகிறது
மாலை விளையாட்டு மறந்தே போனது
இன்று
வாழ்க்கைப் பயணம்
வரைமுறையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது
குதிரைப்பந்தயமாய்...
பந்தயக்குதிரைகளாய்
பணயம் வைத்தது யார்?
வாழ்க்கையின் இனிமை தெரியாமல்
அந்தந்தப்பருவத்தின் அருமை புரியாமல்
உறவுகளின் நெருக்கம் அறியாமல்
தாயின் மரணத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பும்
இந்த
வேக வாழ்க்கையின் மீது தான்
எல்லோருக்கும் மோகம்.
வேண்டும் ஒரு புது உலகம்
அதில்
பாரதி கேட்ட
காணி நிலமும் கண் மயக்கும் மரங்களும்
சோலைக்குயிலோசையும்
சொக்கும் தென்றல் காற்றும்..."

             அதன் பிறகு சில நாள் கழித்து திரு.சி.சக்திவேல் ஐயா அவர்கள் வானொலி நிலையத்தில் வந்து என்னிடம்,'அம்மா,உங்க கவிதை எல்லாருக்கும் புடிச்சுப்போச்சு.சின்னசின்ன ஆச மாதிரி.அதுனால இவங்களுக்கு பொன்விழா கவியரங்கத்துல வாய்ப்பு குடுக்கலாம்னு சொன்னாங்க' என்றவுடன்,'நானா?' என்று அவநம்பிக்கையில் நான் தயங்க நடராஜன் ஐயா அவர்கள் 'ஏம்மா? ஏன்? சரின்னு சொல்லிடுங்க சார். அதெல்லாம் அந்த அம்மா வருவாங்க. இந்தா இன்னும் இவங்கள்லாம் இருக்காங்க.நல்லா எழுதுவாங்க.வாய்ப்பு கொடுங்க' என்றார்கள். உடனே சக்திவேல் ஐயா அவர்கள் என்னை கவியரங்கத்திற்கும்,தோழி முத்து கலைச்செல்வி அவர்களை தொகுப்புரை வழங்கவும் ஏற்பாடு செய்தார்கள்.அழைப்பிதழில் என் பெயரைப் பார்த்ததும் எனக்குசந்தோசம். பொன்விழா நிகழ்ச்சிக்கு கவிப்பேரரசு தாமரைத்திரு.வைர முத்து அவர்களை அழைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களையே கவியரங்கக்கவிகளுக்குத் தலைப்புகளாகத் தந்திருந்தார்கள்.எனக்குத் தரப்பட்ட தலைப்பு"சிகரத்தை நோக்கி".எனக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.அவநம்பிக்கை.என் கணவர் 'அதெல்லாம் எழுதிடுவ தூங்கு' என்றாலும் தூக்கம் வரவில்லை.எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்து 5 பக்கம் எழுதி, மறுபடி அதை அடித்தல், திருத்தல் இன்றி படியெடுத்து மறுநாள் நிகழ்ச்சி
அமைப்பாளர் தெய்வத்திரு.நடராஜன் ஐயா அவர்களிடம் கொண்டு போய்க்காட்ட ஆச்சர்யத்துடன் வாங்கிப் பார்த்துவிட்டு, 'நல்லாருக்கு.இன்னுமொரு3,4 பக்கம் எழுதுங்கம்மா! படிக்கிறப்போ 5 நிமிடம் வர்ற மாதிரி பாத்துக்கங்க' என்றார்கள்.மறுநாளும் அதே கதை. ஆக,நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னால் கவிதை தயாராகிவிட்டது.தினம் எடுத்து தேர்வுக்கு படிப்பது போல் படித்து மனனமாகிவிட்டது.

         பொன்விழாக்கொண்டாட்டமும் வந்தது.தீவுப்பத்திரிக்கைகள் அந்தமானில் ஒரு அற்புத விழா என்று வர்ணித்தன.இரண்டு நாள் விழா. 09.02.2003 அன்று முதல் நாள் விழா காலை 7.00 மணியிலிருந்து ஆரம்பம்.மாலை 5 மணிக்கு கவிப்பேரரசு அவர்கள் உரையாற்ற அம்பேத்கார் கலையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பீரமாக வந்த கவிஞர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அழகுத்தமிழில் அருமையான உரையாற்றினார்.வானொலிக்காக ஒலிப்பதிவு செய்தோம்.மறுநாள் மாலை வீட்டில் பிரார்த்தனை செய்துவிட்டு தமிழர் சங்கம் போனோம்.வானொலித்தோழர்களும் நடராஜன் ஐயா அவர்களும் வாழ்த்துச்சொன்னார்கள்.என் கணவர்,குழந்தைகள்,கணவரின் அலுவலகத்தோழர்கள் மற்றும் உறவினர்கள்(எல்லார்கிட்டையும் சொல்லி வச்சிட்டம்ல) வந்திருந்தார்கள்.'அம்மா! ஒண்ணும் பயப்படாதீங்க!.கல்லு வந்தா பொறக்கி வச்சுக்கத்தான் நாங்க' என்றார்கள்.கவியரங்க மேடை ஏறியாகிவிட்டது. கவிஞருக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன். மேடை வெளிச்சம் சங்கடப்படுத்தியது.கவிஞரின் திருக்கரங்களால் பொன்னாடை வழங்கப்பட்டது.கவிஞர் என்னிடம் 'நீங்க என்ன செய்றீங்க?' என்றார்கள். பதில் வருவதற்குள் அடுத்த நபர் வந்து விட்டார்.இதயம் இடம் பெயர்ந்து தொண்டைக்கு வந்து விட்டது.முதன் முதலாக என் பெயர் தான்.எழுந்து வந்து பேப்பரைப்பிரிக்க கைநடுங்குகிறது. நிமிர்ந்து பார்த்தால் சங்க வளாகம் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம்.பேப்பரில் கண்களைப் பதித்து படிக்க ஆரம்பிக்க அரங்கத்தில் படு நிசப்தம்.வாசித்து வந்து அமர்ந்ததும் அருகில் அமர்ந்திருந்த மற்ற பெருமக்கள் கவிதை நன்றாக இருந்ததாகக்(!) கூறினார்கள்.பிறகு தான் என் இதயம் அதன் சொந்த இடம் திரும்பியது.இவ்வாறே கவிஞர் பெருமக்கள் அனைவரும் 5 பக்கம் 6 பக்கம் கவிமழை பொழிகிறார்கள்.கவியரங்கத்தலைவர் கவிப்பேரரசர் எழுந்து வந்தார்.தனது உரையை அழகுத்தமிழில் ஆரம்பித்தார்.தெய்வம் கூடத் தன்னை போற்றுவோருக்குத் துணை நிற்கும் என்பார்களே, அப்படி.இவரைப்போன்ற வரகவிகளின் நாவில் ஒலிப்பதற்கென தமிழன்னையும் காத்திருப்பாள் போலும். நயமான உரை. கூட்டம் மெய் மறந்தது.'அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கிறதா? இல்லை தமிழால் சூழப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு. அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது பூகோளம்.தமிழால் சூழப்பட்டிருக்கிறது என்பது சரித்திரம்,' என்றார் கவிஞர். ஆஹா! உச்சி குளிர்ந்தது எனக்கு. இப்படியே தொடர்ந்த கவிஞரின் பேச்சு,'இந்ததீவில் தமிழ்க்கொடி எங்கெங்கும் பறக்கும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அந்த உணர்வோடு இந்தக் கவியரங்கத்தை வாழ்த்துகிறேன்.கவிதை என்பது என்ன? கவிதை என்பது நீட்டி முழக்காதது.(நீங்க நீ....ட்டி முழக்கிட்டிங்க)பத்துப்பக்கத்தில் சொல்ல வேண்டியதை பத்துவரிகளில் சொல்வது கவிதை.அண்ணன் தம்பிகள் எப்படி இருக்கக்கூடாது என்பது பாரதம்.அண்ணன் தம்பிகள் எப்படி இருக்கக்கூடாது என்பது ராமாயணம்.சுருக்கமாச்சொல்லணும்.அது இறுக்கமா இருக்கணும்.நெஞ்சில் தைக்கணும்.அவன் கஞ்சன். எப்படிச்சொல்வீங்க. ஒரு கவிஞன் சொன்னான்.அவன் கஞ்சன்தேனிலவுக்குக் கூட தனியாய்த் தான் போய் வந்தான்.சுருக்கமாக இருக்க வேண்டும்.'இன்னும் நிறைய மேற்கோள்கள் காட்டி அழகாகச்சொன்னார் கவிஞர்.அதனால் தான் நீங்க கவிப்பேரரசு என்று நான் நினைத்துக்கொண்டேன். மறுநாள் அலுவலகத்தில் நடராஜன் ஐயா அவர்களிடம்,'சார்! நீங்க சென்னையில இருந்து வந்தவங்க.உங்களுக்குத் தெரியாதா?கொஞ்சம் சொல்லியிருந்தா கவித அளவக் கொறச்சிருக்கலாமில்ல.நீங்க மேக்கொண்டு எழுதிகிட்டு வான்னீங்க!' என்ற போது 'இல்லம்மா! கவியரங்கத்துல கவிஞர்களுக்கு 5 முதல் 6 நிமிடம் நேர்ம் குடுக்குறது வழக்கந்தான்' என்றார்கள்.எது எப்படியோ? இப்போதெல்லாம் கவிதை என்றால் 2 பக்கம் தான்.(பாவமில்லையா? செவிமடுப்பவர்கள்.)

1 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பொன்விழாவில் நானும் கலந்துகொண்ட உணர்வு பெற்றேன்.
நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி