சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 15, 2009

அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி



    மனிதன் இறைவன் படைப்பின் மணிமகுடம்.மனிதனுக்கு தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு கருவியாக இருந்த மொழி,நுண்கலையாய் -கவிதையாகி, இலக்கியமாகி,நாடகமாகி,காலத்தைப்பதிவு செய்யும் கருவியாகி,ஆக்கிய ஆசிரியனது கருத்துக்களின் கண்ணாடியாகி பிறகு அம்மொழி வழங்கிவரும் மக்களின் அடையாளமாகி,படிப்பவர் களிப்புறும் அறிவுக்கருவூலமாகி, காலத்தைக் கடந்து வாழும் இறையாகி விட்டது.இன்று தமிழ் நமது தாய். தெய்வத்தாய்.

         அந்தமான் தீவுகளில் தமிழ், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே வழங்கி வந்திருக்கிறது.1905ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பேட்டில் அந்தமான் வழக்கு மொழிகளில் தமிழ் மொழியும் காணப்படுகிறது.1950ம் ஆண்டு தமிழர் வாசக சாலை அமைக்கப்பட்ட பின் தமிழ் வாசிப்பு தமிழ் மக்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டியது.

                1951ல் அந்தமான் தமிழர்கள் ஒன்று கூடி முதன் முதலில் பாரதியார் விழாக் கொண்டாடினார்கள்.அது முதல் சித்திரை விழா,பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாக்களில் தமிழ்ப்பேராளர்களின் உரைக்கோவைகள், சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் இடம் பெற்றன.தமிழர்கள் தமது விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க எண்ணி தாய்த்தமிழ் நாட்டில் இருந்து நூல்கள்,பத்திரிக்கைகளை வரவழைத்து தமிழர் படிப்பதற்காக வாசக சாலையில் வைக்கப்பட்டது.இடையிடையே இலக்கியக்கூட்டம்,சொற்பொழிவுகள்,கருத்தரங்கம் நடத்தப்பெற்றன.1957ம் ஆண்டில் நடை பெற்ற சித்திரை விழாவில் அந்தமான் தமிழர்களின் கவிதை,கட்டுரைகள் அடங்கிய சித்திரை விழா மலர் வெளியிடப்பட்டது.1962ம் ஆண்டில் அந்தமான் தமிழர் சங்கச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. புத்தக வடிவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் இது தான். அதன் பிறகு அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் 1964ம் ஆண்டில் இலக்கியமன்ற சிறப்பு மலர்,1980ல் கவிதை மலர்,1992ல் சங்கச்சிறப்பு மலர்,1996ல் சின்னச்சின்ன பாட்டு (மழலையர் பாடல் தொகுப்பு) 2003ம் ஆண்டு அந்தமான் தமிழர் சங்கப் பொன் விழா சிறப்பு மலர் ஆகியன் வெளியிடப்பட்டன.தமிழர் சங்க நூல்களில் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்கும்.

          பிற அமைப்புகள் தமிழ் இலக்கியப் பட்டறையின் தீவுச்சுடர்1,2,தமிழ் இளைஞர் பண்பாட்டு அமைப்பின் பொங்கல் மலர்,ஸ்ரீ வெற்றிமலை முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேக மலர்-1,2,கத்தோலிக்கதிருச்சபையின் பொங்கல் மலர் ஆகியனவும் பொதுவாக அந்தமான் தமிழர்களின் படைப்புகளைத் தாங்கி வந்த நூல்களாகும்.அந்தமானில் நல்ல தமிழ்க்கவிஞர்களுக்குக்குறைவில்லை.சிப்பி செல்வம் அவர்களின் தாகம், அரங்க.சம்பத் குமார் அவர்களின் வைகறை மேகங்கள்,சுப.சுப்பிரமணியன் அவர்களின் மாசில் வீணையும் மாலைமதியமும்,சீனுவாசன் பொன்னையன் அவர்களின் காற்றில் மலர்ந்த கவிதைப்பூக்கள்,பழ.முருகு அவர்களின் எனது சட்டை,கவிஞர் த.அருணச்சலம் அவர்களின் அந்தமான் அருண் கவிதைகள் ,தமிழ்ச்சத்யன் அவர்களின் கல்லூரிக்காதல் இன்னும் பல, கார்த்திகை நாதன் அவர்களின் நந்தவனப்பூக்கள், வரம் பெற்ற மூக்குத்திகள் இன்னும் பல ஆகியன சிறந்த கவிதை நூல்கள்.

    அந்தமான் தீவுகளில் சிறந்த தமிழ் ஆய்வுக் கட்டுரை நூல்களும் வெளி வந்துள்ளன. தீவின் சிறந்த எழுத்தாளர், மரபுக்கவிஞர், நாடக ஆசிரியர் என்று போற்றப்படும்தெய்வத்திரு தி.மு.சீனிவாசன் அவர்களின் தலையாய தமிழுக்கு நிலையாய மகுடங்கள்,தெய்வத்திரு சுப.சுப்பிரமணியன் அவர்களின் பாரெல்லாம் பரந்த தமிழர் கவிஞர் த.அருணச்சலம் அவர்களின் அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி,மா.அய்யாராஜு அவர்களின் அந்தமானில் தமிழ் இலக்கியம்,தமிழ் மொழி வளர்ச்சி ஓர் ஆய்வு, சி.சக்திவேல் அவர்களின் அந்தமான் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,இதழாளர்களின் பங்கு,என்ற ஆய்வுக் கட்டுரையோடு அழகிய அந்தமான்,வரலாற்றில் அந்தமான்,அந்தமான் ஆதிக்குடிகளின் அற்புதக்கதைகள் ஆகிய நூல்களும் பி.செண்பகராஜா அவர்களின் தத்துவமசி என்ற ஆன்மீக நூல் ஆகியனவும் தீவுகளில் வெளிவந்துள்ளன.அந்தமானின் தமிழ் இதழ்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தமது பங்கை சிறப்புற நல்குகிறது.மூத்த தமிழாசிரியை கமலா தோத்தாத்ரி அவர்களின் மனமுகம் சிறுகதைத் தொகுப்பு நூல் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் விருது பெற்றது. அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் வாராவாரம் சனிக்கிழமை மாலை சங்க வளாகத்தில் நல்லமுறையில்,சிறப்பான செயல் பாடுகளுடன் நடை பெற்று வருகிறது.

   2001ம் ஆண்டு தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் (வானொலியின் தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சி பொறுப்பாளர்) அவர்களது முயற்சியினாலும் பல பெருமக்களின் ஆதரவாலும் தீவுகளில் 'கம்பன் கழகம்' தொடங்கப்பட்டு,தமிழ் நாட்டின் கம்பன் கழகங்களில் இருந்து கம்ப ராமாயணம் சம்பந்தப்பட்ட ஏராளமான புத்தங்களைத் தன் சொந்த செலவில் வரவழைத்து ஆர்வமுள்ளதமிழன்பர்களுக்குத் தந்து வாராவாரம் சனிக்கிழமை கம்பன் கழகக் கூட்டங்களை நடத்தினார்.கம்பராமாயணக் காப்பியம் குறித்த உரைக்கோவைகள் இடம் பெற்றன.இந்த கம்பன்கழகத்தின் நிகழ்வுகளை பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவோம்.தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள் தீவுகளை விட்டு மாற்றலாகிப் போன சில காலம் கழித்து கம்பன் கழகம் காணாமல் போய்விட்டது வருந்தற்குரியது.அவ்வப்போது தீவுகளுக்கு வருகை தரும் தமிழ்ப் பேராளர்கள் இந்தத் தீவின் தமிழ்ப்பற்று உடையவர்களுக்கு தமிழார்வத்தை தூண்டி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எத்திசையும் புகழ் மணக்க இருந்து வரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அந்தமான் தமிழர்களின் பங்கு கணிசமானது. அதோடு இங்கு எவருமே முழு நேர எழுத்தாளர்கள் இல்லை. அனைவருமே தன்னார்வத்தால்,தன்முனைப்பால் எந்த எதிர்பார்ப்புமின்றி எழுதும் எழுத்தாளர்கள்.இங்கு புத்தகங்கள் வெளியிடுபவர்கள் பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதுவதில்லை. ஆன்ம திருப்திக்காக எழுதுபவர்களே! புத்தகம் வெளியிடும் தமிழ்ப் பெருமக்களுக்கு அந்தமான் தமிழர் சங்கமும்,தமிழ்ப் பெருமக்களும் தங்களால் இயன்ற ஆதரவு நல்குவது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துகிறது.இந்தத் தீவுகளும்,தீவுகளின் தென்றலும் வங்கக்கடலலைகளும் உள்ளமட்டும் இங்கு தமிழ் நின்று வாழும்.

1 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

உலகின் எந்தப் பகுதியில் இருந்து இணையத்தில் அந்தமான் என்ற சொல்லைத் தட்டினாலும் தங்கள் வலைப்பூ அந்தமான் பெருமையைச்சொல்லிக்கொண்டே இருக்கும்.
தங்கள் தமிழ்ப்பணி தொடர்க.
மு.இளங்கோவன்
புதுச்சேரி