சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, டிசம்பர் 06, 2009

அந்தமான் கூண்டுச்சிறை உருவான வரலாறு.


      உலகத்தின் காலப்பதிவுகளை பொதிந்து வைத்திருக்கும் இந்த வரலாறு அந்தந்த காலகட்டங்களை நம் கண் முன்னே உயிரோட்டத்துடன் உலவவிடுகிறது. சில வரலாற்றுப்பதிவுகள் நமக்குப் பாடங்களாக, சில வெறும் அறிதல்,புரிதலாக, சில கண்ணீர் ஊற்றுக்களை திறந்து விடும் காரணிகளாக, நினைக்க நினைக்க நெஞ்சை உருக்கும் பதிவுகளாக நம் மனதில் ஆணி அடித்து பதிந்து விடும். அப்படி நம் கண்களின் கண்ணீர் ஊற்றுக்களைத் திறந்து விடும் ஒரு வரலாறு தான்,சோகத்தின் சிகரம் தான், இந்திய வரலாற்றின் கரை படிந்த பக்கங்கள் அதுவும் நமது சுதந்திரப் போராட்ட வீரப்பெருமக்களின் குருதிக் கறை படிந்த கருப்பு பக்கங்கள் தான் இந்த கூண்டுச்சிறை உருவான வரலாறு.


   1796ம் ஆண்டு முதன் முதலில் சிங்கப்பூரிலிருந்த குற்றக்குடியிருப்பு அந்தமான் தீவுகளுக்கு மாற்றப்பட்டது.போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதால் இக்குடியேற்றம் கைவிடப்பட்டது.பிறகு,1857ம் ஆண்டில் இந்தியாவில் விடுதலைப்புரட்சித் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை அடுத்து அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.விடுதலைப் போராட்டக் கைதிகளை நாடு கடத்துவதால் மட்டுமே புரட்சிக் கனலை அணைக்க முடியும் என ஆங்கிலேயர் கருதினர்.1858ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் நாள் சுமார் 200 விடுதலைப்போராட்ட வீரர்கள், ஒரு கண்காணிப்பாளர், ஒரு இந்திய மருத்துவர், 50 கடற்படைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை,டாக்டர்.ஜே.பி.வாக்கர் என்பவர் தலைமையில் 'செமிரமிஸ்' என்ற கப்பலில் ஏற்றி அந்தமான் அனுப்பியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். சாத்தம் தீவு வந்திறங்கிய இந்தக்குழு சாத்தம் தீவில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையினால் தனது குடியிருப்பை இராஸ் தீவுக்கு மாற்றிகொண்டது.(இப்போது சாத்தம் தீவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலையும்,இராஸ் தீவு பழைய தலைநகர் என்ற அடையாளங்களுடன் சுற்றுலாத்தளமாகவும் உள்ளது).

    இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கில அரசு அவ்வப்போது அந்தமான் குற்றக்குடியிருப்பை ஆய்வு செய்யவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் பல குழுக்களை அனுப்பியது. அப்படி வந்த ஒரு குழு தான் 'இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவுடன் கைதிகளை ஆறு மாத காலம் தனிமைச்சிறையில் போட்டுப் பூட்டி வைக்க வேண்டும்,அதுவும் கண்ணனூரில் உள்ளது போல' என்று பரிந்துரைத்தது. அதன் படி கர்னல் தாமஸ் கேடல் என்பவர் 600 குற்றவாளிகளை அடைப்பதற்குத் தகுந்த தனித்தனி அறைகள் கொண்ட சிறைச்சாலைகட்டுவதற்கான திட்டம் ஒன்றை தயாரித்தளித்தார். அதன்படி, 1890ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ம் நாள், சிறைச்சாலை அமைக்க இடம் தெரிவு செய்ய பொறியாளர் ஒருவரை ஆங்கில அரசு அனுப்பியது.1892ம் ஆண்டு அட்லாண்டா முனையில் உள்ள இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைச்சாலை கட்டும் பணி தொடங்கியது.சிறைச்சாலை கட்டும்பணி 1892லிருந்து 1894 ற்குள் தொடங்கி 1907ம் ஆண்டிற்குள் முடிந்திருக்கலாம் என்று கருத்து கூறுகிறார்கள்.

சிறைக்கூடத்தைக் கட்டுவதற்கு வைப்பர் தீவு, நேவி குடா, ஃபீனிக்ஸ் குடா, பிரிஜ்கஞ், தண்டூஸ் முனை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 600 கைதிகள் கொண்டு வரப்பட்டு கைதிகளின் கரங்களாலேயே வரலாற்று சிறப்புமிக்க(!) இந்த கூண்டுச்சிறை உருவானது.மினிபே மற்றும் தண்டூஸ் முனை ஆகிய பகுதிகளில் செங்கல் காளவாய் அமைக்கப்பட்டு கோடிக்கணக்கான செங்கற்கள் செய்யப்பட்டு,கடல் சிப்பிகளை எரித்து சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.செல்லுலர் சிறை என்ற கூண்டுச்சிறை மையக்கோபுரத்துடன் கூடிய ஏழு சிறைப்பிரிவுகளுடன் கட்டப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்றடுக்குகளுடன் உருவாக்கப்பட்டது.696 கூண்டுகளுடன் கம்பீரமாக உருவாக்கப்பட்ட இந்தச்சிறையின் ஒவ்வொரு கூண்டும் 131/2 அடி நீளமும், 71/2 அடி அகலமும் கொண்டது.இக்கூண்டிற்குள் 9 அடி உயரத்தில் 3 அடிக்கு 1 அடி அகலம் கொண்ட சிறு சாளரம் அமைக்கப்பட்டுள்ளது.கூண்டுகளுக்கு முன்புறம் 4 அடி அகலம் உள்ள நீண்ட தாழ்வாரம் அமைக்கப்பட்டு அதன் இருமுனைகளிலும் பலமான இரும்புக் கதவுகளால் மூடப்பட்டுள்ளது.சிறையின் ஏழு பிரிவுகளின் தாழ்வாரங்களும் மையக்கோபுரத்தில் ஒன்று கூடுமாறு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கூண்டிலும் வலுவான இரும்புக்கதவு பொருத்தப்பட்டு அதன் ஒருமுனையில் கைதிகளின் கைக்கு எட்டாத தொலைவில் சுவர்களைக்குடைந்து வைக்கப்பட்ட நாதாங்கியும், பெரும் பூட்டும் பொருத்தப்பட்டுள்ளது. சிறையின் ஏழு பிரிவுகளையும் இரவு, பகல் கண்காணிக்க காவலர்கள் அமர்த்தப்பட்டனர்.சிறைச்சாலையில் மருத்துவமனை,ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிட வசதியான தூக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தன. இந்து, முஸ்லீம் கைதிகளுக்கு உணவு சமைக்க தனித்தனி சமையலறை அமைக்கப்பட்டிருந்தன.   


"இந்த விபரங்கள் நல்லாசிரியர்.உயர்திரு.சி.சக்திவேல் ஐயா அவர்களின் வரலாற்றில் அந்தமான் என்ற புத்தகத்தில் காணப்படுகிறது.நன்றி!"

                தாய் நாட்டின் தலைவிதியை மாற்றி எழுத நினைத்த இந்தியப்புரட்சி வீரர்களை இந்த மண்ணில் கொண்டுவந்து அவர்களை வைத்து இந்தசிறைச்சாலையின் கிரகப்பிரவேசத்தை கோலாகலமாய்க் கொண்டாடிக் கொக்கரித்தது ஆங்கில ஏகாதிபத்தியம்.இந்த சிறையில் நடந்த கொடுமைகள் கொடூரத்தின் உச்சங்கள்.இந்தச்சிறையில் உள்ள ஆலமரத்தின் விழுதுகளுக்குக்கூட தெரியாது,அவை பின்னால் வந்தது.அங்கு அரங்கேறிய கொடூரங்கள் அந்த ஆலமரத்தின் வேர்களுக்கும், அந்தச்சிறைக்கருகில் தவழும் அந்தக் கடலலைகளுக்கும் தான் தெரியும் அந்தக்கொடுமைகளின் வலிகளும்,தாக்கமும்.சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்ட போது இறந்த பணியாளர்களின் சடலங்களையும் சுவர்க்கட்டுமானங்களுக்குள் போட்டு புதைத்ததாக வரலாறு சொல்கிறதே! அதே கொடுமைகள் தான் இங்கும் அரங்கேறியது.

            இப்போது இந்தக் கூண்டுச்சிறையின் ஏழு பிரிவுகளில் மூன்று பிரிவுகள் தான் உள்ளது. 1979ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 11ம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் கூண்டுச்சிறையை தேசியச்சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று இந்த கம்பீரமான கூண்டுச்சிறையைக் காண உலகின் பல நாடுகளின் சுற்றுலாப்பயணிகள்வருகின்றனர்.இங்கு ஒலியும்,ஓளியும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்படுகிறது ஆலமரம் கதை சொல்வதைப்போல. நம்மை அறியாமல் நம் கண்களில் நீர் வழியும்.

                இப்போது இங்குள்ளோரின் வேண்டுதல் ஒன்று தான். வேண்டாம் இனி ஒரு முறை, இப்படி ஒரு சிறை உலகத்தின் எந்த மூலையிலும்.இந்தியர்கள் அனைவரும் நம் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதைவிட்டு இந்த பூமியின் புத்திரர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லுங்கள்.வர்த்தகத்தை உலகமயமாக்கும் மானுடமே! அன்பை,சகோதரத்துவத்தை, மனித நேயத்தை உலகமயமாக்குங்கள்.அப்புறம் பாருங்கள்,சுனாமியாவது!உலகம் வெப்பமயமாதலாவது! இயற்கை தன் சீற்றங்களைக்காட்டி இந்தச்செய்தியைத்தான் கூற நினைக்கிறதோ?

1 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அந்தமான் சிறையை நேரில் பார்த்தோம்.அதன் இன்னொரு புறத்தைத் தங்கள் கட்டுரையில் கண்டோம். அங்குள்ள மற்ற தகவல்களையும் எழுதி ஆவணப்படுத்துங்கள்.கூடுதல் படங்களையும் இணைக்கலாம்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி