சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 15, 2009

அந்தமானில் வானொலி வளர்த்த தமிழ்
                சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்களுள் வானொலிக்கென்று ஒரு தனி இடம் உண்டு.பாமரர்களுக்கும், எளியவர்களுக்கும் இதமானதொரு பொழுது போக்கும் என்று சொல்வதை விட பொழுதை ஆக்கும் ஒரு சாதனமாக வானொலி இருந்து வந்திருக்கிறது.இன்றும் அகில இந்திய வானொலி நிலையங்களின் தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ் வளர்க்கும் செவ்விய பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே அந்தமான் நிகோபார் ஒன்றியப்பகுதியில் தான் ஏழு மொழிகளில் ஒலிபரப்பும் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது.1963,ஜூன் 2ம் நாள் தனது முதல் ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த நிலையத்தில் ஆங்கிலம்,இந்தி,தமிழ்,தெலுங்கு,நிகோபாரி,மலையாளம்,வங்காளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அந்தமான் வானொலி நிலையத்தில் பண்பலை ஒலிபரப்பு செய்யப்படுவதில்லை.புதுமையான நிகழ்ச்சிகளை நேயர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுப்பதாகச்சொல்லி தனித் தமிழ் நடையிலிருந்து தடம் மாற்றி வழங்கப்படும் பண்பலை நிகழ்ச்சிகள் தமிழ் கூர் நல்லுலகிற்கு நன்மையைச்செய்யவில்லை என்பதே உண்மை.

        அந்தமான் வானொலியில் முதன் முதலில் 1965ம் ஆண்டிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இந்நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் திரு.S.D.ராஜன் அவர்கள்.அப்போதெல்லாம் காலை 7மணி முதல் 7.15 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.அதன் பிறகு வட்டார மொழிகள் நிகழ்ச்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.அந்தமானில் எங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புவது வழக்கம். அந்தமான் கிராமப்பகுதிகளில் நேரடியாகச்சென்று தமிழ் மக்களைச்சந்தித்து ஒலிப்பதிவு செய்து வந்து ஒலிபரப்பும் பழக்கமும் உண்டு.1993ம் ஆண்டு பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள் தீவுகளுக்கு வருகை தந்திருந்த போது, வானொலி நிலைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திரு மா.அய்யா ராஜு அவர்கள் (தற்போது அந்தமான் கல்விதுறையின் துணை இயக்குனர்) ,'போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று' என்ற ஈற்றடியை நல்க கவனகர் திரு கனக சுப்புரத்தினம் அவர்கள்,

அக்கரைநம் இந்தியத்தின் ஆன்ற மொழிகளில்
மக்கள் வியக்கும் நிகழ்ச்சிகளை - அக்கறையாய்
வார்த்தே வழங்கி வளங்கள் குவித்திடும்
போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று'

என்ற அழகான வெண்பாவினை இயற்றிப்பாடினார்.அந்தமானில் ஒவ்வொரு வருடமும் 'தீவுக் கண்காட்சி' நடைபெறும்.இக்கண்காட்சியில் பங்கு பெற நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தீவுகளின் நிர்வாகத்தினர் நாட்டுப்புறக்கலைஞர்களை வரவழைப்பர்.அவர்களிடமும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கென ஒலிப்பதிவு செய்வதுண்டு.

   இன்று செவ்வாய்க்கிழமைகளில் மகளீர் மட்டும் - பெண்களுக்கான நிகழ்ச்சி,வியாழக்கிழமை தோறும் வேளாண் உலகம், வெள்ளிக்கிழமைகளில் இலக்கியச்சோலை,சனிக்கிழமைகளில் சிறுவர் பூங்கா,இளைய பாரதம் ஆகியன ஒலிபரப்பபடுகிறது.பிற மொழிக்கலப்பின்றி நல்ல தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.இங்குள்ள கவிஞர்கள்,எழுத்தாளர்கள் அனைவரையும் பட்டை தீட்டியது அந்தமான் வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவு என்று சொன்னால் அது மிகையாகாது.        இதோடு வாரத்தில் இரண்டு நாள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை மணி 6.15 முதல் 6.30 வரை தமிழில்,'பக்தி மாலை' நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.முன்னாட்களில் இசைத்தட்டுகளை எடுத்து வைத்துவிட்டு வந்துவிட்டால் இந்தி அறிவிப்பாளர்கள் ஒலிபரப்புவார்கள்.ஆனால் நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள்பொறுப்பேற்ற பின், ' அதென்ன,மொழி தெரியாத ஒரு ஆளு தமிழ்ல பக்தி பாட்ட போடுறது. அப்டிப் போகக் கூடாது' என்று கூறிய  நாள்முதல் தமிழில் அழகுற தொகுப்புரை வழங்கி பாடல்களை ஒலிபரப்பினார். அவரது கவனிப்பில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று மூன்று தென்னிந்திய மொழிகள் பிரிவும் இருந்தன.இன்றும் மூன்று பிரிவுகளிலும் பக்தி மாலை நிகழ்ச்சி இப்படித்தான் போகிறது.மார்கழி மாதத்தில் திருப்பாவை,திரு வெம்பாவை விளக்க உரையுடன்,நவராத்திரி தினங்களில் நவராத்திரி பாடல்கள்,இஸ்லாமிய,கிறித்துவ பன்டிகைகளின் போது உரிய விளக்க உரைகளுடன் பக்திமாலை நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.எங்கள் ஒவ்வொருவரிடமும் கீதை,குரான்,பைபிள் புத்தகங்கள் இருக்கும்.

         1993ல் முசிறி டி.வீராச்சாமி அவர்கள், சிதம்பரம்.ஏ.சுவாமிநாதன் அவர்கள் இருந்தார்கள்.அவர்கள் இருந்த காலம் அந்தமான் வானொலித் தமிழ்ப் பிரிவின் பொற்காலம்.அதன் பிறகு அந்தப்பொற்காலம் 2001 ம் ஆண்டு தான் திரும்பியது.நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள் வந்த பிறகு யார் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் வானொலி நிகழ்ச்சி வழங்க வாருங்கள் என்று அழைக்கவில்லை.யார் யாருக்கெல்லாம் ஆசை இருக்கிறதோ வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து புத்தங்கள் வரவழைத்து அவரவர் ஆர்வத்திற்கு ஏற்றபடி புத்தகங்களைக் கொடுத்தனுப்பி பிறகு எழுதிவரச்சொல்லி வாசித்துக்காட்டச்சொல்லி உச்சரிப்பைச்சரிசெய்து ஒலிப்பதிவு செய்ய எங்களைப் பணிப்பார்.உச்சரிப்பு சரியில்லாது நாங்கள் ஒலிப்பதிவு செய்து விட்டால் யார் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்தார்களோ அவர் தான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை வரச்சொல்லி ஒலிப்பதிவு செய்யவேண்டும்.அவர் வந்த பிறகு தான் தீவின் தமிழ்ப் பெரியவர்களை அழைத்து 'இவர்களைச்சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தீவுத் தமிழர்களுக்கு ஆற்றிய பணிகளை வெளியுலகம் அறியும்படி செய்தார்.'ரசிகர் தேன் கிண்ணம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் படிக்காதவர்களையும் பங்கு கொள்ள வைத்தார். தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் சில திரைப்பட பாடல்களை நினைவூட்டுமில்லையா? அப்படிபட்ட பாடல்களைப் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இல்லத்தரசிகள் பலரைப் பங்கு பெறச்செய்தார்.இவரது பணிக்காலத்தில் நிறைய கவிதைகள்,கவியரங்கங்கள்,வரலாற்று,சமூக,நகைச்சுவை நாடகங்கள்,குழந்தைகள், மகளீர் மற்றும் மருத்துவ நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு காற்றலைகளில் கலந்தன.தமிழர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.இன்றொரு தகவல் புகழ் அமரர். தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள்,நடிகர்.எஸ்.வீ.சேகர் அவர்கள்,இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் மற்றும் பல பிரமுகர்கள் தீவுக்கு வருகை தந்த போது வானொலிக்கென நிக்ழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்தார். 2001ம் ஆண்டில் தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் தனது பெரு முயற்சியாலும் மற்றும் பல தமிழ்ப்பெருமக்களின் ஆதரவோடும்,'கம்பன் கழகத்தை'த் தொடங்கினார்.தமிழ்நாட்டின் கம்பன் கழக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட புத்தங்களை வரவழைத்து கம்பன் கழக உறுப்பினர்களுக்கு வழங்கி,ஒவ்வொரு சனிக்கிழமை மாலை கம்பன் கழகக்கூட்டங்களை ஏற்பாடு செய்து,உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தலைப்பு கொடுத்து அவர்களை உரையாற்ற வைத்து ஒலிப்பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்பினார்.இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் மாற்றலாகிப் போன சில காலத்தில் கம்பன் கழகம் காணாமல் போய்விட்டது வருத்தத்திற்குரியது.

          அவருக்குப்பிறகு நிகழ்ச்சி பொறுப்பாளராக உயர்திரு.ராமஸ்வாமி சுதர்சன் அவர்கள் வந்து நேரடித்தொலை பேசி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். நாடகங்கள் பலவற்றில் நடித்து, ஒலிப்பதிவு செய்து,அழகுற வடிவாக்கம் செய்தார்.அவர் நாடகங்கள் ஒத்திகை செய்யும் போது எங்களை சரியாக நிமிர்த்திவிடுவார். அவர் வசனம் வரும் போது வாசித்துக்காட்டுவார். என்ன நம்மை இப்படி வேலை வாங்கிவிட்டு இவர் வாசிக்கிறார் என்று நினைத்தோம்.முதல் நாடகம் இந்திர விழா என்ற வரலாற்று நாடகம்.ஓ.கேம்மா!.டேக்! என்பார்.ஒலிப்பதிவு செய்யும் போது ஒலிவாங்கியைக் கையில் பிடித்து ஆடாமல் அசையாமல் ஒலியிலும் உச்சரிப்பிலும் வர்ண ஜாலம் காட்டுவதைப்பார்த்து எங்கள் வசனம் மறந்துவிட்டது.ஒரு நாடகத்தில் இவர் எதிர்பார்த்த தரம் கிடைக்காது போக இவரே நான்கு வேடம் ஏற்று நடித்ததும் உண்டு.

      அடுத்து வந்த உயர்திரு.ராமச்சந்திரன் அவர்களால் இவர்கள் அளவு பிரகாசிக்க முடியாது போனது எங்களது துரதிர்ஷ்டம்.அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவிற்கு விடியல் எப்போது? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.பல ஜாம்பவான்கள் அலங்கரித்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நிரப்பப்படாது இருப்பதால் தமிழ்ப்பிரிவு வேற்று மொழி மேலதிகாரிகளின் கீழ் தற்காலிக அறிவிப்பளர்களான எங்கள் பொறுப்பில் தான் இருக்கிறது. எங்களின் திறமையின் எல்லை எவ்வளவோ அதுவரை தான் தமிழ்ப்பிரிவின் செயல் பாடுகளும் உள்ளது.நிரந்தரமற்ற பணியில் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதற்குள் தான் சுற்றிச்சுழல வேண்டியுள்ளது.நாங்கள் எல்லோருமே வெவ்வேறு துறைகளில் இருக்கிறோம்.அது வயிற்றுக்கு. இது உயிருக்கு.இருந்தாலும் வேற்று மொழி மேலதிகாரிகள் அலுவலகச்சட்டதிட்டங்களுக்குட்பட்டு என்ன உதவி செய்யமுடியுமோ அதை வட்டார மொழிப்பிரிவுகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

     கடந்த மாதம் அந்தமான் தமிழர் சங்கத்தில் நடை பெற்ற வி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்கமும்,அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்தியபிரம்மாண்ட 9வது திருக்குறள் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை இரண்டு நாட்கள் ஒலிப்பதிவு செய்தோம். தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த பெருமக்கள் அனைவரின் உரைக்கோவைகள், கவிதைகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து பிறகு கணிப்பொறிக்கு அதை மாற்றி,வெட்டி,ஒட்டி வானொலிக்கேற்ற வடிவமாக்கி, இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒரு நாள் வானொலித்தொகுப்பாக, மற்ற நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிக்கேற்றவாறு ஒலிபரப்பு செய்கிறோம்.தூரத்தீவுகளில் இருக்கும் நேயர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் தலை நகர் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி. ஆகவே எந்த ஊதியமும் எதிர்பாராது,இது போன்ற தருணங்களை எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளாகக் கருதி ஆர்வமுடன் செய்து வருகிறோம்.

அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவு ஒரு விடியலை நோக்கிக் காத்திருக்கிறது.

2 கருத்துகள்:

olerzor சொன்னது…

madam,
myself also working as casual compere and production assistant in air - nagercoil and air - chennai,

Justin

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அந்தமான் வானொலி வரலாறு வளர்ந்த கதை படித்தேன்.தொடர்ந்து எழுதுங்கள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி