அந்தமான் வானொலியில் தற்காலிக
அறிவிப்பாளரானதே நாங்களோ எங்கள் குடும்பதினரோ எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ?
ஒரு தேவதையின் வரம் மாதிரி கிடைத்த வேலை.பெரிய தமிழறிவு (தமிழ்ப் பண்டிதர்கள்
மன்னிக்கவும்) ஏதாவது இருக்கிறதா? அதுவும் இல்லை (தன்னடக்கமில்லைங்க.உண்மை!)
வணிகவியல் நான் படித்த போது தமிழ் ஒரு பாடமாக இல்லை (1988) ஆனால் தமிழ் மீது பற்று
இருந்தது. (இது உண்மைங்க!) நான்காவது படிக்கும் போது ஒரு தமிழாசிரியை செய்யுளை
பாட்டு மாதிரி அழகாகப் பாடியே பாடம் நடத்துவார்கள். அந்த பாடலின் இசையைப்
பிடித்துக் கொண்டால் செய்யுள் சுலபம்.அவர் செய்யுள் அடி பிறழாமல் எழுதிவரப்
பணித்தார்.நான் எழுந்து அடி பெரலாமன்னா...என்று கேட்க அவர் எனக்கு 'ழ்'கரம்
வரவைத்துத் தோற்றுப் போனார்.அதன் பிறகு தமிழ் அம்மாக்கள்,ஐயாக்கள் வகுப்பறைக்குக்
கோனார் உரையுடன் வந்து கோணல் தமிழ் கற்பித்தார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசினர் மகளீர் உயர்
நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சரஸ்வதி தமிழம்மா வந்தார்கள்.நிஜமாக தமிழ்
சரஸ்வதி.அவர்கள் இனிமையாக அதே சமயத்தில் அழுத்தமாக தமிழ் சொல்லிக்கொடுத்தார்.அவர்
ஒரு குறள் அல்லது ஒரு செய்யுளை சொல்லிக் கொடுத்து சிறிது நேரத்தில் திரும்ப
நம்மைச்சொல்லவைத்து அப்படியே மனனம் ஆகிவிடும். பிற உரைகளில் இருந்து பதில்
எழுதினால் கண்டுபிடித்து அவர்களுக்கு மதிப்பெண்
தரமாட்டார்.பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டிகளுக்கு எழுதிக் கொண்டு போனால்
திருத்தி அவரது கருத்துக்களையும் சொல்லி மெருகேற்றித்தருவார்.பத்தாம் வகுப்பு வரை
சரஸ்வதி அம்மாவிடம் கற்ற தமிழ் ஆயுள் முழுதும் துணை வருகிறது.நன்றியோடு நினைத்துப்
பார்க்கிறேன்.அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11,12ம்
வகுப்புகள் மட்டும் இருபாலரும் படிக்கும் படி இருந்தது.(1985).அப்போது
தமிழாசிரியராக வந்தவர் ஒரு செய்யுள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.தலைவனைப்
பிரிந்த தலைவியின் கைகளில் இருந்த வளைகள் தானே கழன்று விழுந்துவிட்டது.ஏன் விழுந்து
விட்டது என்று கேட்க வகுப்பறையில் 3 நிமிடம் மௌனம். நான் வேகமாக,'அவ அவ்ளவுக்கு
கெறங்கிப்போயிட்டா!'என கையை நீட்டி என்னைக்காட்டி 'ம்..மெலிந்து போய்விட்டாள்'
என்று சொல்ல வகுப்பறையில் ஒரே கூச்சல்.நான் என்னவோ
அனுபவித்துச்சொன்னமாதிரி.அதற்குப் பிறகு தமிழ் இலக்கியம் இதுவரை நான் படிப்பது
திருக்குறள்,எப்போதாவது கம்ப ராமாயணத்தில் ஒரிரு பாடல்கள்.கல்லூரியில்
தமிழ்ப்பாடமில்லாததாலோ என்னவோ தமிழ் மீது ஒரு காதல். அதை விட
கவிதை,கட்டுரை,பேச்சு இப்படி இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்வதால் கல்லூரியில்
ஒரு புகழ். அந்த போதைக்கு அடிமையாகி நிறையப் படித்தேன்.நான் படித்த கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியர்.திருமதி சரஸ்வதி ராமனாதன் அவர்கள் (புகழ் பெற்ற
பேச்சாளர்,சொற்பொழிவு,நேரடி வர்ணனை புகழ்) என்னை தனிப்பட்ட முறையில்
ஊக்கமளிப்பார்.(சரஸ்வதீன்ற பேருக்கும் எனக்கும் தொடர்பு தொடருது
பாத்தீங்களா?) ஏதோ பத்தாம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகப் படித்திருந்த ஒரே
காரணத்தால் இந்தப் பணி கிடைத்தது.அதன் பிறகு ஒவ்வொரு நிக்ழ்ச்சித்தயாரிப்பாளரும்
பட்டை தீட்டி நானே கொஞ்சம் சுயமாகத் தீட்டிக் கொண்டு மின்ன
முயற்சிக்கிறேன்.அவ்வப்போது சில நல்லவர்கள் எனது தவறுகளைச்சுட்டிக்காட்டி என்னை
மேம்படுத்த,போதாக்குறைக்கு அந்தமான் தமிழர் சங்கத்தின் நல்ல உள்ளங்கள்
வாய்ப்புத்தந்து கொண்டிருக்கின்றன.
அந்தமான் முரசு பத்திரிக்கை ஆசிரியர்
திரு.கரிகால் வளவன் அவர்கள் அவர்களது பத்திரிக்கையின் நாற்பதாண்டு நிறைவு விழாவை
தொகுத்து வழங்கச்சொல்லி என்னையும், தோழி,அறிவிப்பாளர் முத்து கலைச்செல்வியையும்
கேட்டுக்கொண்டார்.எனக்கு ஆச்சர்யம்.'கலை நம்மக் கூப்புடுறாரே சார்?நாம மேடைக்கு
எடுபடுவோமா?' என்று கேட்க 'நீங்க சும்மா இருங்க! நாம பண்றோம்' என்றார்.மறு நாள்
மாலை அவர் வீட்டுக்குப் போய் நிகழ்ச்சி நிரல் பெற்று எழுதி,தொகுப்புரை
வழங்கினோம்.அந்த விழாவிற்குத் தலைமை தாங்க திருமிகு.பழ.நெடு மாறன் ஐயா அவர்கள்
வந்திருந்தார்கள்.அவர்கள் பேசும் போது,"தமிழ்நாட்டில் தமிழர்கள் எப்படி
வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். உங்களைப்போல் தாயகத்தை விட்டு
வெளியில் வசிக்கும் தமிழர்கள் ஒற்றுமையாய் இருங்கள்.ஒற்றுமைதான் நம் பலம்"என்றார்கள். உண்மையான, மேன்மையான கருத்து. மறுநாள் திரு.கரிகால் வளவன் அவர்கள் அலுவலகத்திற்கு
வந்து பணமுடிப்பும்,ஆண்டு மலரும் கொடுத்துவிட்டு நன்றாகச் செய்தீர்கள் என்று
பாராட்டி விட்டு அவருடைய நண்பர்கள் அந்தமான் மீடியா சார்பில் பின்னணிப் பாடகி
பி.சுசீலா அம்மா,நடிகர் பாண்டிய ராஜன் அவர்கள்,அவரது புதல்வன்,பாடகர்
டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புதல்வர் ஆகியோரை வைத்து ஏற்பாடு செய்திருந்த ஒரு
இசை நிகழ்ச்சிக்கு எங்களைத் தொகுத்து வழங்க ஏற்பாடும் செய்தார்."சார்! சென்னை
மாதிரி இடத்துல நல்ல நிறமா,அழகா இருக்கிறவங்க காம்பியர் பண்றாங்க. நல்லா
இருக்கு.எங்கள இந்த மாதிரி நிகழ்ச்சிக்குப் பண்ணசொல்றீங்களே?" என "அம்மா உங்க
தொகுப்புரை தான் அங்க முக்கியமே ஒழிய நிறமோ அழகோ இல்ல.சும்மா பண்ணுங்க"
என்றார்.
தொகுப்புரை தயாரானது கவிதை வடிவில்.நிகழ்ச்சியாளர்கள்,மூத்த
தமிழாசிரியை கமலா அம்மா ஆகியோரிடம் தொகுப்புரை காட்டி ஒப்புதல் வாங்கி வைத்து
விட்டோம்.தோழி முத்து கலைச்செல்வி,'இது டி.வி. யில குடுக்கற நிகழ்ச்சியாம்.நாம
பார்லர் போய் மேக்கப் போட்டுக்குவோமா?' என்று கேட்க 'இல்ல கலை! நான் என்
கல்யாணத்துக்குக் கூட மேக்கப் போடல,என் கருப்புக்கு ஒவர் மேக்கப்பாத்தெரியும்.
நீங்க போட்டுக்கங்க' என்றாலும் கேட்காமல் என்னையும் ஒப்பனை செய்ய வைத்து மேடைக்கு
வந்தாகிவிட்டது.பூ வாங்கிக் கொண்டு வந்த என் கணவர் என்னைப் பார்த்துவிட்டு
'சீச்சீ, ரோஸ் பவுடரத் தொடைச்சுடு.நல்லாவேயில்ல.' என்று சொல்ல மற்ற தோழியரும்
இல்லல்ல.ஸ்டெஜ்க்கு இதுதான் சரி, என, என் கணவர் 'எல்லாரும் உன்ன பபூன்
ஆக்கிட்டாங்க,கடவுள் விட்ட வழி.ஆனா ஒன்னு.போகும் போது நீ இந்த மேக்கப்போட வந்த
நா கூட்டிட்டுப் போக மாட்டேன். நடந்து தான் வரணும்' என்று மிரட்ட தோழி கலை
'அண்ணே! நீங்க இப்பப் போங்க. நான் தொடச்சி விட்டுடறேன்' என்று சொல்ல என் கணவர்
என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டுப் போனார்.நிகழ்ச்சி நன்றாக இருந்ததாக எல்லோரும்
சொன்னார்கள்.புகைப்படக்காரர் புகைப்படத்தைத் தந்தபோது எவ்வளவு? என்றேன்.சும்மா
வச்சுக்கங்க என்று காசு வாங்க மறுத்துவிட்டார்.'ஏன்னா அவ்ள அழகு அந்த போட்டோ.நீயே
வேண்டான்னு சொல்லிடுவியோன்னு பயந்திருப்பார்' என்றார் என் கணவர்.அதன் பிறகு ஒரு
முறை ஒரு கடையின் உரிமையாளர் (இசை நிக்ழ்ச்சியின் விளம்பரதாரர்) நீங்க! தமிழ் எம்.ஏ
வா? என இல்லையே! நான் எம்.காம்.என்றேன். அதற்கு அவர் 'அப்புறம் எப்புடி இப்புடி
எழுதுறீங்க? தமிழ்ல அவ்ள ஆர்வம்,ம்ம்.' என்றார். வீடு வந்ததும் 'எப்புடி இப்புடி
எழுதுறீங்க, யாரப்பாத்தாலும் இதத்தான் கேக்குறாங்க.இதென்ன பிரமாதம்.நாட்டுல
கவிஞர்களுக்கா பஞ்சம். வைரமுத்துல ரெண்டு வரி,மேத்தாவுல ரெண்டு வரி அதை எடுத்து
எடுத்தது தெரியாம இடை இடையில போட்டு நம்ம பேரப் போட்டுக்கிட்டா நம்மளையும் நாலு
பேர் கேப்பாங்க! என்று என் கணவர் சிரிக்க ஆமா உங்கள வரச்சொல்றாங்க! போங்க! எனக்கு
எதிரி வெளியில இல்ல' என்றாலும் கூட அதுதான் உண்மை.நாம் யாருடைய எழுத்துக்களை
அதிகம் நேசிக்கிறோமோ அவர்களுடைய ஆளுமை,பாணி,தாக்கம் நாம் விரும்பியோ,விரும்பாமலோ வந்து
விடுகிறது.
தீவின் இளம் கவிஞர் அ.கார்த்திகேயன் தனது வரம் பெற்ற
மூக்குத்திகள் இரண்டாவது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மதிப்புரை வழங்க
வேண்டுமென்று கேட்டார்.அவர் ஆசிரியர்.அதனால் கல்வித்துறையின் அதிகாரிகளை தலைமை
விருந்தினராக அழைத்திருந்தார்.'தம்பி! இவ்ள பெரிய ஆளுங்க வர்ற நிக்ழ்ச்சிக்கு நான்
வந்து மதிப்புர வழங்குனா நல்லா இருக்காது.உங்க வேலைக்கு ஏதாவது இடஞ்ச வரலாம்.அதுனால
நான் நிகழ்ச்சி தொகுப்பாளரா வர்றேன்' என்று சொல்ல நிறைவில்லாமல் சரி
என்றார்.ஆனால் எல்லோரும் 'நல்லா இருந்துச்சுங்க' என்றதும் அவர்,அவரது மூத்த
சகோதரர் இருவரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
நவம்பர் மாதம் 7ம் தேதி
வி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்திய 9 வது
திருக்குறள் மாநாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு நடுவண் அமைச்சர்
மாண்புமிகு D.நெப்போலியன் அவர்கள் வந்திருந்தார்கள்.தீவுகளின் தொண்டு நிறுவனம்
'யுவ சக்தி' அமைச்சரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கக் கேட்க ஒப்புக்கொண்டு, தொக்குப்புரை எழுத அங்கு நிகழ்ச்சிக்கு
வருகை தந்திருந்த சுய உதவிக்குழுப் பெண்கள் 'ஃபேமிலிப் பிராப்ளமா எழுதுங்க! பாவம்!' என, நான் மறுத்தும் கேட்கவில்லை. யுவசக்தி குடும்ப ஆலோசனையும் தருகிறார்கள்.நிகழ்ச்சி
முடிந்ததும் கேட்ட பெண்கள் அசடு வழிந்தார்கள்.நிகழ்ச்சி முடிந்து வெளியில் நின்று
கொண்டிருக்க அமைச்சர் வாகனத்தை நிறுத்திவிட்டு 'அம்மா! இங்க வாங்க.இவங்க உங்கள
அறிமுகப் படுத்தவே இல்ல.இங்க நீங்க என்ன பண்றீங்க. வெரி குட்.' என்றார். மாலை
அந்தமான் தமிழர் சங்க வளாகத்தில் ஒலிப்பதிவிற்கு வந்து ஒலிப்பதிவு முடித்ததும்
வானொலிக்கென பிரத்யேக நேர்முகம் செய்த போது இலக்கியச்செல்வர் திரு.குமரி ஆனந்தன்
அவர்கள் 'இங்க வாங்க! காலையில் என்னவோ நல்ல நல்ல குறிப்பெல்லாம் சொன்னீங்களாமே?
அமைச்சர் சொன்னாரு' என்று கேட்க நான் புன்னகையோடு மௌனமாக
இருந்தேன்.இலக்கியச்செல்வரிடம் சொல்லுமளவிற்கு நம்மிடம் என்ன சரக்கு
இருக்கிறது.
தமிழன்பர்களே! உங்க ஊர்லயும் ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து
வழங்கணுமா? எங்களக்கூப்பிடுங்க.காசெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க.
2 கருத்துகள்:
//தமிழன்பர்களே! உங்க ஊர்லயும் ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்கணுமா? எங்களக்கூப்பிடுங்க.காசெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க.///
கண்டிப்பா சொல்லி அனுப்புறோம்...! ;;)
nalla Ezhuththu nadai.
கருத்துரையிடுக