சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 25, 2009

குழந்தை வளர்ப்பு அனுபவம் - 1


   அந்தமான் நில அமைப்பு மேடும்,சமதளமும்,பள்ளமும் ஆன அமைப்பு.அந்தமான்,நிகோபார் தீவுகள் கடலுக்குள் இருக்கும் குன்றின் உச்சிகள் என்று தான் நிலவியலாளர்கள் கூறுகிறார்கள்.அந்தமானில் நடந்து செல்வது என்பது 'ஜிம்' போவதற்கு சமம். வேறு எந்த உடற்பயிற்சியும் அனாவசியம்.வீடுகள் கீழிருந்து மேலாக இருக்கும்.சாலைகளில் இருந்து வீடுகளை அடைவதற்கு சரிவான சிமிண்ட் பாதை அல்லது படிகள் அமைத்திருப்பார்கள்.நடக்கப் பழகும் குழந்தைகளை வெளியில் விட்டு விட்டால் படி தவறினால் பந்து போல் உருள நாமும் பின்னாலேயே ஓடிக் கீழே போய் தான் தூக்கி வர வேண்டும். எல்லா இடங்களும் அப்படி இல்லை. சில இடங்கள். அப்படி ஒரு இடத்தில் வாடகை குறைவு என்று நாங்கள் குடியிருந்தோம்.12 அடிக்கு 12 அடி அறையில் வரவேற்பு அறை,படுக்கை அறை,அடுப்படி,குளியல் மற்றும் கழிவறை.அந்த வீடு அமைந்திருந்த இடமும் 30 அடி உயரம்.எதிர்த்த வீடு 30 அடி கீழே.இப்படி இருந்த அந்த வீட்டில் 12 வருடங்கள் குடி இருந்தோம். அதாவது எங்கள் குழந்தைகளின் குழந்தைப்பருவம் முடியும் வரை.

                 என் மகன் ஒன்றரை வயது வரை சாதுவாக இருந்தான். "அட உங்க புள்ள ரொம்ப அமைதியா இருக்கானே?அது தான் நீங்களும் இந்த வீட்ட மாத்த நினக்காம இருக்கீங்க!" என்பார்கள் நண்பர்கள்.இரண்டு வயது நன்றாக நடக்கக் கற்றதும் எதிர் வீட்டுக்குழந்தைகளுடன் விளையாடக் கிட்டத்தட்ட 30 படிகளை முழங்காலில் கைகளை ஊன்றி நிலையை சரி செய்து இறங்கி விடுவான். என் கணவர் ,"வெளையாட்டு இல்ல.ஒரு நாளு போல ஒரு நா இருக்காது. நீ சமையல் செய்யாட்டாலும் பரவால்ல.புள்ள பத்தரம்" என்பார்.எவ்வளவு கவனமாக இருந்தாலும் கொஞ்சம் அசந்தாலும் படிகளில் இறங்கிக்கொண்டிருப்பான்.அப்படி ஒரு முறை கீழே கடற்கரையில் மீன் வாங்குவதற்கு மகனையும் தூக்கிக்கொண்டு போய் இருந்த போது சாலை மட்டத்திற்கு கடற்கரை சுற்றுச்சுவர்.(இப்போது சுற்றுச்சுவர் எழுப்பி இரும்பில் இருக்கைகள் அமைத்து மக்கள் காற்று வாங்க வசதி செய்திருக்கிறார்கள்) காலையில் தண்ணீர் சுவற்றில் அடிக்கும்.(High Tide) பிறகு மாலை தண்ணீர் இறங்கி நிலம் தெரியும் (Low Tide) தூரத்து பசும் தீவுகள்,மீன்பிடி இயந்திரப்படகுகள்,நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருக்கும் சரக்குக் கப்பல்கள் இப்படி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நடக்கும் வரை கண்கள் அகலப் பார்த்துவிட்டு வருபவன் நடக்க ஆரம்பித்ததும் அன்று அவனது பார்வை இன்னும் ஒரு துறு துறுப்புடன் அலையவே சிறுபிள்ளை ஆர்வம் என்று இருந்துவிட்டேன்.வீடு வந்து மகனை இறக்கி விட்டு விட்டு மீன் சுத்தம் செய்ய அவனை மறந்து விட்டேன்.முழுதாய் பத்து நிமிடம். பிறகு மகன் ஞாபகம் வந்து தேட அக்கம் பக்கம் தோழியர் ஆளுக்கு ஒரு பக்கம் போயும் கண்டு பிடிக்கவில்லை. அழுது சோர்ந்து போன சமயம், ஒரு அக்கா கீழ்படியில் இருந்து சுமந்து வந்து கொண்டிருக்கிறார் என் மகனை.ஓடிப் போய் ஆனந்தக்கண்ணீருடன் குழந்தையை வாங்க அம்மா என்று இருகப் பற்றிக்கொள்கிறான்.அந்த அக்கா கூறுகிறார்,"ஒம் மகன் அங்குன கடக்கரையில போயி சுவத்துல உக்காந்துகிட்டு அடிக்கிற கடத்தண்ணியில கால நனச்சு வெளையான்டுகிட்டு இருந்திருக்கான்.மீன் வாங்கப்போன பொண்ணு ஒண்ணு ஐயோ! அழகுவத்த ஆம்பளப்புள்ளன்னு கூட்டிக்கிட்டு வந்துச்சு.இது நம்ம சாந்தி மகனுல்லன்னு தூக்கியாந்தேன். நீயுந்தான் இப்புடி விடலாமா?" என்று நீட்டி முழக்க அக்கா! உங்களுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லி குழந்தையை வாங்கி வந்தேன். அதிலிருந்து கவனமாக அவன் பின்னாலேயே திரிவேன்.பக்கத்துவீட்டுக்குழந்தைகளும்,என் மகளும் பள்ளி விட்டு வந்ததும் அவர்களுடன் விளையாடுவான்.

                    வீட்டுக்கு வரும் உறவு, நண்பர் வட்டாரம் நிறைய வீடு பார்த்து சொல்வார்கள். வாடகை,வீட்டு உரிமையாளர்கள் இவற்றை யோசித்து வீடு மாற்றுவதைத் தள்ளிப்போட்டோம்.பக்கத்து வீட்டில் இவனுக்காக எந்தப் பொருளையும் கீழே வைக்காமாட்டார்கள்.ஒரு நாள் அவர்கள் வீட்டில் அவன் விளையாடிக்கொண்டிருக்க,நான் அவர்களுக்கு பால் காய்ச்சி ஆறவைத்துவிட்டு எனக்கு தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு வராந்தாவிற்கு வர அவன் சட்டை எல்லாம் ஈரமாக,மூக்கை நிரடிய படி மூச்சு விட முடியாது வரவே நான் பதறிப்போய் என்னடா? என்னாச்சு? என்று அருகே ஓடினால் ஒரே மண்ணெண்ணெய் வாடை.பக்கத்துவீட்டார் வராந்தாவில் அமர்ந்திருக்க அவர்கள் பெண்," அத்த அடுப்புக்கு எண்ணய ஊத்திட்டு கப்புல வச்சிருந்தேன். குடிச்சிட்டான். கொஞ்சுண்டு தான்" என்றாள்.அதற்குள் இவன் என் மடியில் துவள நான் பெருங்குரலில் அழுது கத்த கீழிருந்த ஒரு தெலுங்குத்தோழி,"சாந்தி! அது ஒண்ணும் செய்யாது. பயப்படாத.இன்னும் சொன்னா சளிக்கு நல்லது" என்று இந்தியில் கத்த பக்கத்து வீட்டு சகோதரர் அவனை அள்ளிக்கொண்டு ஓட அவரது மனைவி பின்னால் ஓட, பணம் எடுத்துக்கொண்டு பின்னாலே நானும் ஓட தெருவே வேடிக்கை பார்க்க என் உறவுச்சகோதரர் ஒருவர் அந்த வழி வந்தவர் நிலைமை அறிந்து வாடகை வாகனம் பிடித்து எங்களுடன் வந்தார்.அரசு மருத்துவமனை போனால் ஒரு ஆயா, தமிழ்காரர்,எங்கள் வீட்டு அருகில் இருப்பவர் வேறு, அவர் எங்களைப்பார்த்து குழந்தையின் நிலை அறிந்தும் சற்றும் பதற்றப்படாமல்,"இருங்க. டாக்டரு ரவுன்டுக்குப் போயிருக்காரு. வருவாரு" என்றார். சீ! இது ஒரு பொம்பளையா? என்று பக்கத்துவீட்டு சகோதரரும்,என் உறவுச்சகோதரரும் மருத்துவரை அழைத்துவரப்போய் விட்டார்கள்.

           என் மகனின் தொண்டைக்கும் மூக்குக்கும் இடையில் கொர் என்று வந்து கொண்டிருந்த சத்தமும் நின்று விட நான் மௌனமாக அழுது கொண்டிருந்தவள் சப்தமாக அழ ஆரம்பிக்க அப்போது கழிவறை சென்று வந்த மலையாளச்செவிலியர் ஒருவர் அருகில் வந்து, 'என்னாச்சு?' என்றவர் குழந்தையைப் பார்த்ததும், தன் கைகளால் குழந்தையைப்பறித்துக்கொண்டு உள்ளே ஓடி "மை காட்! நீ ஒரு அம்மாவா! இப்புடி நிலையில குழந்தைய வச்சுக்கிட்டு அழுதுக்கிட்டுருக்கியே" என்னிடம் தமிழில் திட்டி வெளியில் இருந்த பணியாட்களையும் இந்தியில் திட்டி அவர்களை அழைத்து அவர்கள் வருவதற்குள் பிராண வாயு கொள்கலனை இழுத்து இணைப்புக்கொடுத்து குழந்தையின் மூக்கில் செருக அப்போது குழந்தை வலியில் சப்தமாக அழ எனக்கு உயிர் வந்தது.மண்ணெண்ணெய்யை உறிஞ்சி எடுத்து இதுதான் கொஞ்சமா? என்றார் செவிலி. அதன் பிறகு மருத்துவர் வந்து நாடி பரிசோதித்து அபாயம் ஒன்றுமில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கச்சொன்னார்கள். இப்போது அந்த மலையாளச்செவிலியரைப் பார்த்தால் மானசீகமாக மனதுள் வணங்குவேன்.என் மகனிடம் உனக்கு உயிர் தந்த தெய்வம் அவர்கள் என்று சொல்வேன்.வெளியுலகம் தெரியாத நாடகள் அவை. இப்போதைய நாட்களாய் இருந்திருந்தால் இந்த நிகழ்வை வானொலிச்செய்தியாக்கி,தொலைக்காட்சிச்செய்தியாக்கி,
பத்திரிக்கைச்செய்தியாக்கி அந்த செவிலியரையே சாட்சியாக்கி மருத்துவமனை ஆயா மற்றும் பணியாளரை ஒரு வழி செய்திருப்பேன். இங்குள்ள G.B.பந்த் மருத்துவமனை தாயகத்தின் தனியார் மருத்துவமனை போல் அத்தனை வசதியோடும்,சுத்தம் சுகாதாரத்தோடும் இருக்கும். அதுவும் சுற்றுலா இடமாக வந்து வெளியார் பார்வையிடும் அளவு அழகாகவும் பராமரிக்கப்படுகிறது.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் தினம் இலவசமாக் தீவு நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் பெரிய அரசு மருத்துவமனை. ஆனால் நம்மவர்கள் கடுமையான நோய்களுக்கு தாயகம் வரும்படி மருத்துவர்களின் சேவை.அங்கே பணிபுரியும் தமிழ் ஆயாக்கள் தமிழில் பேசமாட்டார்கள். தேவ தூதர்களைப்போல் நடந்து கொள்வார்கள். அரசின் பல மக்கள் நலத்திட்டங்கள் மக்களைப் போய்ச்சேராததற்கு இவர்களைப் போன்றோரே காரணம். தெரிந்தவர்கள்,சிபாரிசு உள்ளவர்கள்,உறவுகளுக்கு அங்கு ராஜமரியாதை. இப்போது மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதால் கொஞ்சம் பரவாயில்லை.

              அந்த நிகழ்விற்குப்பிறகு என் மகனுக்கு வயிறு புண்ணாகி ஒரு மாதம் வயிற்றுப்போக்கு இருந்தது. மூக்கில் குழாய் செருகியதில் மூக்கு வீங்கி அவன் பட்ட பாடு எந்தத் தாயும் பார்க்கப்பொறாதது.இன்றும் அந்த நிகழ்வு நினைவு வந்துவிட்டால் தாய் என்ற சொல்லுக்கே தவறான உதாரணமோ நான் என்ற குற்ற உணர்வு என்னை அரிக்கும்.வானொலி நிகழ்ச்சிக்காக மருத்துவர் ஒருவர் வந்திருந்த போது மண்ணெண்ணெய் குடிப்பது சளிக்கு நல்லதா? என்றேன்.ஐயய்யோ! யார் சொன்னது? விபரம் சொன்னதும் அந்த மாதிரி முரட்டு வைத்தியம் பண்ணாதே! சாந்தி!. கடவுள் அருளால் உன் மகனுக்கு இத்தோடு போனது.கவனம் என்று அறிவுறுத்தினார்.சமீபத்தில் தினசரி ஒன்றில் 4 வயதுக் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்து இறந்து போனது என்று போட்டிருந்தார்கள்.இந்த செய்தியை நானும் என் கணவரும் படித்துவிட்டு நமது இரண்டு வயதுக் குழந்தை பிழைத்தது இறையருள் என்று வியந்தோம்.

       இப்போது என் மகனுக்கு அவனது சேட்டைகள் எல்லாம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வீரவிளையாட்டுகளின் அடையாளங்களாகிப்போனது.. எனக்கோ மற்ற இளம் தாய்மார்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள்.குளிர் பானப்பாட்டில்களில் மண்ணெண்ணெய்,பினாயில் மற்ற மருந்துகளை குழந்தைகள் முன் வைக்காதீர்கள் என்று அறிவுருத்துகிறேன்.என் கணவர்,'ஆமா! ஊருக்குத்தான் உபதேசம்.உனக்கும்,எனக்குமில்லங்கற கதைதான் உங்கத!' என்பார்.என்ன செய்வது? அறிவாளிகள் அடுத்தவர் அனுபவத்தில் பாடம் பெறுகிறார்கள்.முட்டாள்கள் தங்கள் அனுபவத்தில் பாடம் பெறுகிறார்கள். நான் முட்டாள் என்பேன். சரிதானே?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Matravargalai kurai sollum en gunathirkku saatai adiyaga irunthathu ungal idukkai. katren nalla paadam. nandri

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நல்ல பதிவு
மு.இளங்கோவன்
புதுச்சேரி