சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 30, 2009

தமிழ் உச்சரிப்பு


        கண்ணுக்கு மை அழகு.கவிதைக்கு பொய் அழகு.அவரைக்குப் பூ அழகு.அவளுக்கு,அன்னைத்தமிழுக்கு 'ழ' அழகு.தமிழில் இதை சிறப்பு ழகரம் என்கிறோம். எனக்குத் தெரிந்து தமிழிலும்,மலையாளத்திலும் இந்த சிறப்பு ழகரம் உண்டு.மலையாளம் என்பது கொடும் தமிழ் அதாவது தமிழில் இருந்து வந்த மொழி என்கிறார்கள்.அதனால் ழகரமும் தமிழுக்குப் பிறகு தான் மலையாளம் எடுத்தாண்டிருக்க வேண்டும்.ஆனால் தமிழர் ழகரத்தை அதன் அழகோடு உச்சரிப்பதில்லை.மலையாள நண்பர்கள்,அவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, "அம்மை! மழை வருன்னு" என்று அழகுற உச்சரிக்கிறார்கள்.தமிழில் ழகரம் இருந்தால் மட்டும் போதுமா?அதைப் பயன்படுத்துவதில் தானே மொழியின் ஆளுமையும்,பயன்பாடும் என்கிறார்கள் அவர்கள்.

          எங்களின் பால பருவத்தில் எங்கள் தமிழ் ஆசிரியர்கள் மெய்யெழுத்துக்களைச்சொல்லிக்கொடுக்கும் போது 'ல' வை உச்சரிக்கும் போது நாவின் நுனியை பல்லில் படுமாறு உச்சரித்தால் 'லகர' உச்சரிப்பு சரியாகவரும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.அதனை நாங்கள் பல்லு 'ல' என்று நினைவில் வைத்துக்கொண்டோம்.'ள' வை உச்சரிக்கும் போது நாக்கை பல்லுக்கு சற்று மேல் அன்னத்தில் வைத்து உச்சரிக்க அதன் உச்சரிப்பு சரியாகவரும்.'ழ' வை உச்சரிக்கும் போது நாக்கை நன்றாக மடித்து மேலன்னத்தின் உட்புறம் வைத்து உச்சரிக்கத் தானே வரும்.இப்படிப் பாடம் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் மத்தியில் உச்சரிப்பு பற்றிய போதிய கவனமின்றி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களால் உச்சரிப்பு சிதைந்து போகிறது.அந்தமான் தமிழர் சங்கத்தில் பொன்விழா மேடையில் கவிஞர்.திரு.வைரமுத்து அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மாணவிகள் உச்சரிப்பு பிழையுடன் பாட கவிஞர்,உச்சரிப்பின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைத்தார்கள் இப்படி,

"ஔவைக்குக் கூன் அழகு
அவரைக்கு பூ அழகு
அவர்க்கு நான் அழகு
தென்னைக்கு கீற்றழகு
நெல்லுக்கு நாற்றழகு
தமிழுக்கு 'ழ' அழகு என்று எழுதியவன் அல்லவா வந்திருக்கிறேன். அந்த ழகரத்தை ஆசிரியப் பெருமக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் இளம் பிள்ளைகளுக்கு. மொழி ஒலியால் வாழ்கிறது.ஒலி எழுத்தால் வாழ்கிறது.எழுத்தும் ஒலியும் உறவினர்களாக இருக்க வேண்டும்.ழகரத்தை ழகரமாக உச்சரிக்க வேண்டுமல்லவா!"

              உச்சரிப்பிற்கு ஆங்கிலத்தில் 'tongue twister' என்று சொல்வார்களே அப்படிப்பல.அதை தினம் முயன்றாலே உச்சரிப்பு,வேகமான வாசிப்பு பழகிவிடும்.
1.திருவீழிமிழலையில் வீரராகவன்.
2.வாழைப்பழத்தோலில் வழுக்கி கிழவி கீழே விழுந்து இறந்தாள்.
3.மலை வாழைக் குலை ஒன்று
மழையால் மலைச்சரிவில் விழுந்து
பழமெல்லாம் பாழாயின.
4.அலைகடல் மேலே மரவுரல் உருளுது,புரளுது.
5.வாய்க்கா வரப்புல வரகான் தலையில (அறுவடை வயல் பெயர்) ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி.கிழ நரி தலையில ஒரு பிடி நரை முடி.
இதெல்லாம் விளையாட்டாகச்சொல்லிக் கொடுத்தது.இன்று என் பணிக்கு இது மிகவும் உதவுகிறது.தமிழ் ஆசான் களே குழந்தைகளுக்கு இனி உச்சரிப்பையும் வலியுறுத்தி சொல்லிக்கொடுங்கள்.

0 கருத்துகள்: