சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், செப்டம்பர் 01, 2011

அந்தமான் தமிழர் சங்கமும், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய பல்சுவை நிகழ்ச்சி.


அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் 31.08.11 அன்று கலைமாமணி முனைவர். வாசவன் அவர்கள் தலைமையில், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் சுமார் 70 தமிழ்ப்படைப்பாளிகள் குழுவினர் வந்திருந்தனர்.

29.08.11 அன்று ஸ்வராஜ் தீப் கப்பலில் வந்திறங்கிய குழுவினர், 30.08.11 அன்று தீவுகளின் சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்ந்தனர். 31.08.11 அன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் உள்ளூர் படைப்பாளிகளுடன் இணைந்து பட்டிமன்றம், கவியரங்கம், திருக்குறள் விளக்க விளக்கு நடனம், திரைப்பாடல்களுக்கு நடனம் என கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்து படைத்தனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேராசிரியர் திருமதி. பூங்கொடி பாலு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு. வாசவன் ஐயா அவர்கள், அந்தமான் தமிழர் சங்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் திரு. கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் பலர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக கவியரங்கம் அரங்கேறியது. கவியரங்கத்திற்கு தலைமை தாங்கியவர் சிவகங்கை மாவட்ட உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.அய்க்கண் அவர்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் மூன்று நிமிடங்கள் கால அவகாசமாக வழங்கப்பட்டது. ஆறு கவி்ஞர்கள் பங்கேற்றனர். கவியரங்கில் நானும் பங்கேற்றேன்.

நிகழ்ச்சியில் அடுத்து “இன்றைய இளைஞர்களின் தேடல் -  பணமே! பாசமே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ’பணமே’ என்ற அணியில் அரிமா. அனகை. நா.சிவன் அவர்கள், திரு.கரடிப்பட்டி பொன்னுசாமி அவர்கள், மற்றும் திரு. பி.செண்பகராஜா அவர்கள் ஆகியோரும், ’பாசமே’ என்ற அணியில் திரு கருமலைத் தமிழாளன் அவர்கள், திரு ந. நாகராஜன் அவர்கள் மற்றும் திரு ந.ஜெயராமன் அவர்கள் ஆகியோர் வாதிட்டனர். வாதி, பிரதிவாதிகளில் திரு.பி.செண்பகராஜா அவர்களும், திரு. ந. ஜெயராமன் அவர்களும் தீவின் தமிழ்ப்படைப்பாளர்கள். பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்தவர் தீவின் கல்வித்துறைத் துணைத்தலைவர் முனைவர் திரு தஞ்சை மா.அய்யாராஜு அவர்கள். பட்டிமன்றத்தின் நிறைவில் நடுவர் அவர்கள் ’பாசமே’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

அடுத்து உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் தமது புத்தகங்களை வெளியிட்டனர். அனைவரும் தமது புத்தகங்களின் பிரதிகளை அந்தமான் தமிழர் சங்கத்தின் நூலகம் “பாரதி படிப்பகத்திற்கு” வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் கவியரங்கம், பட்டிமன்றம், கப்பலில் நடைபெற்ற கவிதைப்போட்டி, சொல்லாடல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு, உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வாசவன் ஐயா அவர்கள் தமது திருக்கரத்தால் பரிசு  வழங்கினார்கள்.

கவியரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. வாசவன் ஐயா அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றது எனது பாக்கியம்.

கவியரங்கில் பரிசு பெற்ற எனது கவிதை.

காற்றிலும் உப்பிடும் கன்னித்தீவு வாழ் தமிழ்ப்பெருமக்களுக்கும்
எழுத்தாளர் பெருமக்களுக்கும்
பாலைய நாட்டின் பைந்தமிழ் படைப்பாளர் எங்கள் கவியரங்கத்தலைவர் அவர்களுக்கும்
கொஞ்சு தமிழ் கவிதையிலே நெஞ்சங்களை அள்ள வந்திருக்கும் கவிகளுக்கும் என் பொன் மாலை வணக்கம்.

இருந்தமிழே! இருந்தேன் உன்னால்
இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்னும்
இளையவள் நான்
இந்த மன்றினிலே வடிக்கும் கவிதை
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன.

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நா வறண்டு
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், தொலைக்காட்சி வட்டுகளுமாய் எங்கள் கிராமங்கள்
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்..
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வீதியின் அகன்ற முச்சந்திகளில்
உழுதுகிடக்கும் புழுதியின் படிமங்கள்
முழங்கால் வரையிலும்.

வீதிச்சண்டையை வீதியில் தொலைத்து
காயும்,பழமும் நூறு முறை.

விருந்துகள் வரவறிந்தால்
கைவிரித்தோடி எதிர்கொண்டு
கைச்சுமை பகிர்ந்து
கண்களில் சிரிக்கும் பிரியமும் பாசமும்.

வறுமையும்,வெறுமையும் அறியா எனது
குழந்தைமையின் காலங்கள்
கடுகு போட்டிசைக்கும் ஒற்றை பலூனில்
எனக்கான உலகம்

இன்று
ஒற்றைக் குழந்தைக்காய்
உலகின் நவீனங்கள்
ஒட்டு மொத்தமாய் வீட்டிற்குள்.

வாரா விருந்து வலிய வந்தாலும்
சாளரத் திரையகற்றி சின்னதாய்
உதடு விரிப்பார்.

வானவியலும்,வடிவியலும்
வசமான அளவு
வசமாகவில்லை கூடி விளையாடுவது

தனித்தனி தீவுகளாய்
சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
அடித்து,அடிவாங்கி,
சண்டையிட்டு சமரசம் செய்து
இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

இன்று
ஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்
பாண்டவரும்,கௌரவரும்.

பாஞ்சாலிகள் வரும் வரை
பாண்டவர்கள் தான்.
பாசத்தையும், நேசத்தையும் மட்டுமே
பகிர்ந்து கொண்டவர்கள்
பாஞ்சாலிகளின் வருகைக்குப்பின்
பங்கீட்டை மட்டும் விவாதிக்கிறார்கள்.

முகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை
பாகம் பிரித்து கோடு போட்டு
பங்காளிகளாய் அண்ணன் தம்பிகள்
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட
வேற்றுமை விதைகளின் விஷம்
வேர்வழி ஊடோடி விழுதுகளுக்கும்.

குருஷேத்திர சீற்றம்
பிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்க.

கோடுகள் அழியும்
நாட்களுக்காய்க் காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
அழும் மனதை ஆற்றுப்படுத்துகிறது அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

பி.கு.: என்ன இந்தக்கவிதைகள் எல்லாமே எங்கோ படித்தது போல் இருக்கிறதா?
சரிதான். எனது வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் சிறு மாற்றங்கள் செய்து வழங்கினேன். நடுவர் அவர்கள் எனது கவிதை குறித்து கூறுகையில் அருமையான ”உருவகக்கவிதை” என்று பாராட்டினார்கள்.


0 கருத்துகள்: