அந்தமான்
தமிழர் சங்கத்தில் கடந்த 07.08.2012 செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர்
தமிழ்த்தாய் அறக்கட்டளையினர், ராஜபாளையம்,
ராஜுக்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். க.அழகர் அவர்கள் தலைமையில் திருக்குறள்
தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. உலகப்பொதுமறை திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துக்களை,
பேராளர்கள் அழகுத்தமிழில் எடுத்துரைத்தனர்.
அந்தமான்
தமிழர் சங்கத்திற்கு இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட, சுமார் ஒரு லட்ச
ரூபாய் மதிப்பிலான தமிழ்த்தாய் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. சிலை அழகோ அழகு. காணக்கண்
கோடி வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் உயர்திரு. வி.ஜி.பி சந்தோசம் அவர்கள் தலைமையில்
திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத்திற்கு வருகை தந்திருக்கும்,
சங்கத்திற்கு பெருமையும் அழகும் சேர்க்கும் இரண்டாவது அழகுச்சிலை இது.
இந்தச்சிலை
சுவாமிமலை குபேரன் சிற்பக்கலைக்கூடத்தில் திரு.க.மோகன்ராஜ் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்டதாம்.
தமிழ்த்தாய் அறக்கட்டளைக்காக மூன்றாவதாக உருவாக்கப்பெற்ற சிலையாம் இது. இது போன்ற ஐம்பொன்
சிலை ஒன்றை கடந்த 05.11.2011 அன்று மலேசியாவிலுள்ள கிள்ளான் தமிழ்ப்பள்ளிக்கு அன்பளிப்பாக
வழங்கியுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனர் உடையார் கோவில் குணா அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் சிலைக்கான செலவுகளை அறக்கட்டளையினரே பகிர்ந்து செய்துவருவதாகவும், வேறெந்த
நிதி உதவியும் யாரிடமிருந்தும் பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்
மொழியை செம்மொழியாக அறிவிக்கக்கோரி 2003ம் ஆண்டு பாரதத் தலைநகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டது,
பிறகு தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம்
மேற்கொண்டது, தமிழ்க்கருத்தரங்கங்கள், இலக்கியப்பயணங்கள் மேற்கொள்வது என நீண்டு கொண்டே
செல்கிறது இவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணிகள்.
தஞ்சையில்
தமிழ்த்தாய்க் கோட்டம் ஒன்றைக் கட்டிவருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர்
உலகப்பொது மறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும்
தெரிவித்தார் அறக்கட்டளை நிறுவனர். தமிழ்த்தாய் அறக்கட்டளையினரின் தமிழ்ப்பணிகள் தொடரட்டும்.
1 கருத்துகள்:
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக