தமிழமுதம் நேயர்களுக்கு வணக்கப்பூக்களையும்
தமிழர் திருநாள் வாழ்த்துப்பூக்களையும்
வானலைகளில் வாரி வழங்கி
வளமே சேர்க்க வரவேற்போம் தை
மகளை.
ஆடியில் விதைத்து, ஆவணியில்
நடவு செய்து
ஐப்பசியில் களையெடுத்து, மார்கழியில்
மணிக்கதிர் களம் சேர்த்து
தெருவெங்கும் கோலமிட்டு
வீடெங்கும் நெல் பரப்பும்
தை மாதம்.
உழைத்துக்களைத்து, அயர்ந்து
அலுத்து,
அரை உயிர் போக்கி
வயல் நெல் வீடு வந்து, குதிர்
நிரப்பி
நெஞ்சு நிமிர்த்தி, நெட்டுயிர்த்து
போன உயிர் வளர்க்கும் உழவனின்
அறுவடைத் திருவிழா
புதுப்பானைக் கோலமிட்டு
பொன்மஞ்சள் கொத்தும் கட்டி
புத்தரிசி உலையிலிட்டு
தித்திக்கும் வெல்லம் கூட்டி
பசுந்தோகைச்செங்கரும்புடன்
பகலவனை வணங்கும் பெரு விழா
இன்று எம் தாயகத்தில்
பொங்கி உலையிலிட புத்தரிசி
இல்லை
பசுந்தோகைச் செங்கரும்பில்
இனிப்பும் இல்லை.
வாய்க்கால், வயலெல்லாம் வழிந்தோடும்
நீரில்லை.
சேற்று வயலாடி நாற்று நடும்
வேலை இல்லை
ஆடு, மாடு மேய்வதற்கு பசும்புல்
இல்லை.
ஆடு, மாடு, கோழி வளர்த்து
குடி பெருக்கும்
குடியானவன் குடி தாழ்ந்து
தரிசாய்ப்போன நிலங்களுடன்
வெறுமையாய்க்கிடக்கும் கிராமங்கள்.
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு
போற்றுதும்- போற்றினோம்
திங்கள் போற்றுதும், திங்கள்
போற்றுதும் – போற்றினோம்
சூலுற்ற மேகங்கள்
மழையைப்பிரசவிக்க மரங்களைப்
போற்றினோமா?
மரங்களைப்போற்ற மறந்ததால்
மாரியும் பொய்த்தது.
வாரி வழங்கும் இயற்கையின்
கரங்கள் முடமாய்ப்போனது.
இயற்கைக்குத்திரும்புங்கள்
என
வளர்ந்த நாடுகள் பழமைக்குப்பயணிக்க
புதுமையின் மோகத்தில்
செயற்கையின் சிகரத்தில் மூச்சு
முட்டி நாம்….
விளை நிலங்களை விலையாக்கி
விலையரிசி உலையிலிட்டு
கான்கிரீட் காடுகளாம் நகரங்களில்
குக்கர் பொங்கலிலும் குதூகலம்
பொங்க,
முப்போகம் விளைக்கும் கிராமங்கள்
செழிக்க வேண்டும்.
நந்தன வருடத்தின் இந்தப்பொங்கலை,
கறுப்புப்பொங்கலென
கண்கள் கசியும் எங்கள் உழவர்
சிறக்க வேண்டும்
உழவும் தொழிலும் தமிழனின்
அடையாளம்
மலைத்தலைய கடற் காவிரி, வைகை,
பாலாறு
புனல் பரந்து பொன் கொழிக்கும்
தமிழகம்.
கலை, ஞானம், மானம், வீரம்,
வாணிபம்,படைத்தொழில்,
தானம், தவம், நல்வண்மை படைத்தவர்
தமிழர்.
திரைகடலோடி, திரவியம் தேடும்
இடமெலாம்
தமிழுக்கு அரியணையும், தம்
பண்பாட்டிற்கு
தனியிடமும் தருபவர் தமிழர்.
இயற்கையே நம் அன்னை
இயறகையே நம் ஆசான்
இயற்கையே நம் ஆண்டவன்
இயற்கையை வழிபட்டு, பசுமையை
மீட்டெடுப்போம்
எதிர் வரும் பொங்கலெல்லாம்
திகட்ட, திகட்டத் தித்திக்க
இறைவனை வேண்டி
நன்றி மலர்களை
வாரி வழங்கி விடை பெறுகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக