விகடன் குழுமம் என்றாலே எழுத்தை சுவாசிக்கும்
ஒவ்வொருவருக்கும் ஒரு மயக்கம் உண்டு. சிறுவயது முதலே ஆனந்த விகடன் என்னை பாதித்த
அளவு மற்றெந்த வார இதழும் பாதித்ததில்லை. மணமாகி 1991ல் அந்தமான் வந்ததும் ஆனந்த
விகடன் தொடர்ந்து கிடைக்காத காரணத்தாலேயே, அந்தமான் வெறுத்தது. பிறகு 2002ல் அவள்
விகடன் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை அவள் விகடனின் தீவிர வாசகியானேன். சமையல்
குறிப்பு, அழகுக்குறிப்பையும் தாண்டி, சாதனைப்பெண்கள், தொழில் தொடங்க வழிகாட்டும்
கட்டுரைகள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு போன்றவை என்னை அவள் விகடனுக்கு
அடிமையாக்கின. மற்ற பெண்கள் பத்திரிக்கை படிப்பதும் உண்டு. ஆனாலும் ஒவ்வொரு அவள்
விகடன் இதழ் படித்து முடித்ததும் நமது தன்னம்பிக்கையின் அளவு ஒரு அங்குலமாவது
உயர்ந்திருக்கும். இதை அவள் விகடனை ஆழ்ந்து படிக்கும் ஒவ்வொரு வாசகியரும்
உணர்ந்திருப்பார்கள். நான் அவள் விகடன் வாங்க ஆரம்பித்ததில் இருந்து அத்தனை
இதழ்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு இதழிலும் பயிற்சி முகாம் குறித்த
அறிவிப்புகளைப் பார்க்கும் போது நாம் தமிழ் நாட்டில் இல்லையே என்று ஏக்கம்
இருக்கும். இது ஒரு புறம்.
கடந்த 16ம் தேதி வானொலி நண்பர் வரதராஜனின்
தொலைபேசி அழைப்பு. "சாந்தி! அவள் விகடன் இணை ஆசிரியர் வந்திருக்காங்க. நேர்முகம்
ஒலிப்பதிவு செய்ய சம்மதம் சொல்லியிருக்காங்க. நீங்க 9 மணிக்கு வரணுமே" என்றார்.
காலை நேரம் பள்ளிகளுக்கு சத்துணவு தயாரித்து அனுப்ப வேண்டும் என்பதால் காலை 4 மணி
முதல் 11.30 மணி வரை காலில் சக்கரம் கட்டிக்கொண்டே ஆக வேண்டும். வேறெந்த வேலையும்
ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் அவள் விகடன் ஆசிரியரை சந்திக்காமல் விடுவதா? சமையலை
முடித்து உதவியாளர்களிடம் பள்ளிக்கு எடுத்து வரப்பணித்து வானொலி நிலையத்திற்கு
நிஜமாகவே ஓடினேன். நண்பர் இரண்டு நேர்முகத்தை முடித்திருந்தார். பின் அவள் விகடன்
மற்றும் பசுமை விகடன் இணை ஆசிரியர் உயர் திரு. அறிவழகன் ஐயா அவர்களையும், புகைப்பட
நிபுணர் உயர் திரு ராஜசேகரன் அவர்களையும் அறிமுகப்படுத்த சந்தோசம் ஒரு நீருற்று
போல பொங்கியது. நெருங்கிய உறவினரை சந்தித்தது போல மகிழ்ச்சியான மகிழ்ச்சி.
படபடவென பேசிக்கொண்டே இருந்தேன். நேர்முகமும் படபடப்பில் திருப்தியாக இல்லை.
தோழியர் என்ன சொதப்பிட்டீங்க? என்று கடிந்து கொண்டார்கள்.
ஆனால் இணை ஆசிரியர்
நிதானமாக அழகாக பதிலிறுத்தார்.
பாக்கு மட்டையில் தட்டுகள், குவளைகள்
தயாரிக்கும் பயிற்சியை அளிக்க, தஞ்சை பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின்
திட்ட இயக்குனர் உயர் திரு. ராமசாமி தேசாய் அவர்களையும், இந்தத் தொழிலை
வெற்றிகரமாக நடத்திவரும் திருமதி. நிஷா அவர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
அந்தமான் மகளிருக்கு இலவசப்பயிற்சி அளித்து அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்த
விரும்புவதாக தெரிவித்தார். நீங்கள் எந்தத் துறையில் பயிற்சி பெற விரும்பினாலும் சரி, அதை ஏற்பாடு செய்து தர நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் தொழிலுக்குத் தேவையான கடனுதவியை NABARD வங்கி மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் பொறுப்பாக பதில் சொன்னார். (மேற்படி வங்கியிலும் தற்போது மேலாளராக நம்மவர் பதவியில் உள்ளார்). இந்த பயிற்சி முகாமிற்குப் பாலமிட்டவர் அந்தமான்
நிக்கோபாரின் கடலோரக்காவல் படைத் தலைவர் உயர்திரு. சோமசுந்தரம் அவர்கள். இந்த
பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு 17.07.12 இதழில் வெளிவந்திருந்த போதிலும்,
பயிற்சியே முடிந்துதான் எங்களுக்கு இதழ் கிடைத்தது.
மூன்று பேரின் நேர்முகத்தையும்
பொருத்தமான வர்ணனைகளுடன், பாடல்களுடன் ஒலிபரப்பினோம். திருமதி. நிஷா தனது
நேர்முகத்தில்,
" எங்களுக்குத் தேவையான பாக்கு மட்டைகளை பெங்களூரு அருகில் ஒரு
கிராமத்தில் இருந்து வாங்கி வருகிறோம்.இங்கு எங்கு நோக்கிலும் பாக்கு, பாக்கு,
பாக்கு மரம் தான். அபரிதமான பாக்கு மரங்கள். பாக்கு மட்டைகளும் நல்ல தரமாக உள்ளது.
ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு அதிகம். இங்கு தொழில் முனைய
விரும்புவோர் ஒரு அடி எடுத்து வைத்தால், நூறு அடி கைபிடித்து அழைத்துச்செல்ல
ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு அடி எடுத்து வையுங்கள்" என்று சொல்லியிருந்தார்.
பொதுவாக இங்கு சுயதொழில் முனைய இளைஞர்களிடையே மிகுந்த தயக்கம் உள்ளது. கடை நிலை
ஊழியனாக இருந்தாலும் பரவாயில்லை. அரசு வேலை வேண்டும் என்னும் மனப்போக்கில் தான்
இருக்கிறார்கள். உழைப்பதில் தயக்கம், தடைகளைத் தாண்டி போராடும் மனப்பக்குவமின்மை
ஆகியனவையே காரணம்.
பயிற்சி பெற்ற நண்பர் ஒருவரை, "உங்க பகுதியில எத்தனை பேரு
தொழில் ஆரம்பிக்கப் போறீங்க? என்ற போது அவர் சிரித்தபடி," இது எத்தனையாவதோ
பயிற்சி. எத்தனையாவதோ லோன். லோன வாங்கி தண்ணி அடிப்பானுக. வட்டிக்கு விடுவானுக.
லோனு தள்ளுபடியானதும் அடுத்த லோனுக்கு அலைவானுக" என்றார். இது எப்படி இருக்கு?
இவர்களை என்ன செய்யலாம்?
2 கருத்துகள்:
உங்க பதிவு சூப்பர் madam...
---
எங்கே செல்லும் இந்தப் பாதை?......
http://sindanaisiragugal.blogspot.in/2012/08/blog-post.html#more
நல்ல வாய்ப்பு சரியாகப் பயன்படுத்தி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக