சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜூலை 12, 2010

அந்தமானும் தமிழர்களும்


நண்பர்களே! அண்மையில் கோவையில் நடைபெற்ற, உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்ற, உலகச்செம்மொழி மாநாட்டில் அந்தமான் தமிழர்கள் சார்பில் பங்கேற்ற ”அந்தமான் முரசு” பத்திரிக்கை ஆசிரியர் திரு.சுப.கரிகால் வளவன் அவர்கள் மாநாட்டில் வாசித்தளித்த ஆராய்ச்சிக்கட்டுரை.
அந்தமானும் தமிழர்களும்
கட்டுரையாளர் : திரு.சுப. கரிகால்வளவன்.

வங்கக்கடலில் இயற்கை ஓவியனின் தூரிகை வரைந்த அழகு ஓவியம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். நீலக்கடலின் நடுவில் பசுமைத் தீவுகளான இந்த அந்தமான் - நிக்கோபார் தீவுகள் தாய் தமிழகத்திலிருந்து வடகிழக்கே 1200 கி.மீ. தொலைவில் இந்தியப்பெருங்கடலில் தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையே வளைந்தும் நெளிந்தும் காணப்படுகிறது.. சுமார் 8249 சதுரக்கிலோமீட்டர் நிலப்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 572 தீவுக்கூட்டங்கள் இருந்தாலும் வளமிக்க இத்தீவுகளில் வெறும் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் குடியிருப்பு உள்ளது.

இத்தீவுகளுக்கு அந்தமான் நிக்கோபார் என்ற பெயர் வந்தது, 'அந்தோ மான் நிக்குது பார்' என்று கடல் வழி பயணித்த தமிழகத்து வணிகர்கள் கூறியதால் தானோ? உரோமானிய வரலாற்று அறிஞன். கிளாடியஸ் தாலமி கி.மு.2ம் நூற்றாண்டில் இத்தீவைக் கண்டறிந்து 'நல்வளம் கொண்ட தீவு' என்று குறிப்பிடுகிறார்.சீன மலேய நாட்டு வணிகர்கள் மற்றும் கடல் கொள்ளையர்கள் தமது தொழிலுக்கு ஆள் பிடிக்க வந்தனர்.'குரங்கு முகம் கொண்ட மக்களைக்கொண்ட தீவு' என்றும் 'ஹண்டுமான்' என்றும் கூறினர்.அதுவே அனுமான் என்றும் அந்தமான் என்றும் மருவியதாக கூறுகின்றனர் மலேய வரலாற்று ஆசிரியர்கள்.அதற்குப்பிறகு வந்த சீனர், அரேபியர் இத்தீவுகளைக் கொடியவர்களின் கொலுமண்டபம் என்றும் கரிய நிறம் கொண்ட மனிதர்கள் நிர்வாணமாக வாழும் தீவு என்றும் குறிப்பிடுகின்றனர்.கி.பி.10ம் நூற்றாண்டில் மலேசியமக்களின் இதழ்களில் 'மணிமேகலை' கதைப்பாடல்கள் களிநடம் புரிந்தன. 

சோழர்களின் தீவு.

தஞ்சைக்கல்வெட்டுகளிலும், மலேய நாட்டு கல்வெட்டுகளிலும் 'நக்காவரம்' என இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. ' தேனக்கவார் பொழில் மாநக்காவரம்' என்பது முதல் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தித்தொடராகும். மணிமேகலையில் நக்கசாரணர்,நாகர் வாழ் மலை என்று குறிப்பிடப்படும் பகுதியும் இதுவே ஆகும். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் (பழங்குடிகள்) அண்மைக்காலம் வரை அம்மணமாகவே வாழ்ந்தவராவர்.கி.பி.11ம் நூற்றாண்டில் இத்தீவுகள் முழுவதுமே சோழப்பேரரசின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன என்று வரலாற்று ஆசிரியரான டாக்டர்.கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகிறார்.பெரிய நிக்கோபார்த்தீவருகில் புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் தமது 'கடல் புறா' நாவலில் இதனைக்குறிப்பிடும் போது, மலேசிய நாட்டிற்கு இராஜேந்திர சோழன் செல்லும் வழியில் 'காலத்தி' நதியோரம் ஓய்வெடுத்ததாக குறிப்பிடுகிறார்.

கி.பி.1050 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தஞ்சைக்கல்வெட்டுகளில் இத்தீவுகளின் பெயர் 'நக்காவரம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் ஆகிய தீவுகளை சோழர்கள்,'கார்த்தீபம், நாகதீபம்' என்று அழைத்திருக்கின்றனர். சோழர்களின் வணிகக்கப்பல்களும், போர்க்கப்பல்களும் அந்தமான் நிக்கோபார்த்தீவுகளுக்கு அடிக்கடி வந்து சென்றன. இங்கு மக்கள் தங்கிய காலகட்டத்தில் பலவகைக் கொடிய நோய்கள் ஏற்பட்டதால் பலர் உயிருக்கு பயந்து இத்தீவுகளில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் நிறுவிய சிறைத்தீவு
இந்திய நாட்டில் கொடுங்குற்றவாளிகளை சிறை வைக்க எண்ணிய ஆங்கிலேயன் 1858ல் கண்டெடுத்த தீவு இதுவாகும்.200 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு 04.03.1958 அன்று 'சமிரமீஸ்' கப்பல் சாத்தம் தீவிற்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் ஆங்கிலேய அரசு இத்தீவைக்கைப்பற்றி ' கொடுங்குற்ற வாளிகளின்' சிறைத்தீவாக, பின்னர் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் சிறைத்தீவாக மாற்றியது.
அரசிதழ்
1908ல் தான் அந்தமானில் முதன் முதலில் அரசிதழ் ஒன்று வெளியிடப்பட்டது. அதன் 13ம் பக்கத்தில் தஞ்சை கல்வெட்டுத் தொடர்ச்சி இத்தீவில் உள்ளதாகவும் இத்தீவை 'தங்கத்தீவு' என்றும் 'தீமைத்தீவு' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலனுடைய முன்னோர் கடலில் கலம் உடைந்து இத்தீவில் ஒதுங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'நக்க சாரணர், நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையின் ஆயினன்' எனவும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பிராமணர்கள் 'நார்கொண்டம்' எரிமலையை பார்த்து நரககுண்டம் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு விளையும் நிக்கோபார் குறுந்தென்னை தஞ்சையின் சில பகுதிகளிலும் காணக்கிடைக்கிறது.அங்கு அதற்கு 'நக்காவரம் பிள்ளை' என்று பெயர். சௌரா தீவில் உள்ள நிக்கோபாரி பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் தொல் பழமையான பழக்கவழக்கங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்த உதயப்பூர் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த எல்.பி.மாத்தூர் அவர்கள் அப்பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் பழம்பெரும் தென் இந்திய இன மக்களின் பழக்கவழக்கங்களை கொண்டது என தனது நூலில் குறிப்பிடுகிறார். அங்குள்ள மக்கள் 'மண்பானை' செய்யும் பழக்கத்தையும் அதில் சமைத்து உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். சமீபத்தில் அத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது பழமை வாய்ந்த 'முதுமக்கள் தாழிகள்' கிடைத்துள்ளதும் இதற்கு சான்று பகருகின்றன. 


தெரசா மக்களைப்பற்றி அவர் குறிப்பிடும் போது அவர்கள் இளம் கருத்த மேனி உடையோராகவும், ஒரு சிலர் குடுமி வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.இவர்களைப்பற்றி நிக்கோபார் மாவட்ட இணை ஆணையராக பணிபுரிந்த திரு.கௌஷல் குமார் மாத்தூர் அவர்கள் தமது நூலில் குறிப்பிடும் போது தெரசா மக்கள் தமிழகத்து வைதீக மக்களைப் போல தலை மயிரை முடிந்து குடுமி வைத்திருக்கிறார்கள். சோழர் காலத்தில் தமிழ் நாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்த போது இப்பழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

பெரிய நிக்கோபார்த்தீவின் உள்பகுதியில் வசிக்கும் 'சோம்பன்' இனத்தவரின் உடலமைப்பும், சில பழக்க வழக்கங்களும் தமிழரின் சாயலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'சோம்பன்' என்ற வார்த்தைக்கு 'சிவபிரான்' என்று பொருள் உரைக்கிறது லிப்கோ தமிழ் - ஆங்கில அகராதி. ஒரு வேளை 'சாம்பன்' பழங்குடியினத்தவர்கள் சிவ வழிபாடு செய்பவர்கள் என்று பிரித்துக்காட்ட எடுத்துக்கொண்ட முயற்சியாகவும் சாம்பன் என்ற வார்த்தை பயன் பட்டிருக்கலாம். சிவ வாகனமான ரிஷப வழிபாடு - காளை வழிபாடு இந்தத் தீவில் நடைபெற்றதாக ஜெரினியின் புத்தகம் கூறுகிறது.

 "Fariar odoric tells us instead of Nichomeran that there is a king, the native go stark naked have faces like (cow) dog and worship the bull""
இதன் மூலம் சாம்பன் - சிவ வழிபாடு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.தமிழகத்தில் சாதி அமைப்புகளால் நசுக்கப்பட்ட சமூகம் ஒன்று ' சாம்பன் ' என்று அழைக்கப்படுகிறது. தமிழரின் சாயல் அவர்களில் தெரிகிறது. பெரிய நிக்கோபார் பழங்குடியினரான இந்த 'சாம்பன்' இனப்பெண்கள் தமிழ்நாட்டில் பழங்காலப்பெண்கள் காது வளர்த்து காதோலை அணிந்தது போல காதுகளில் பெரிய அளவிலான மரக்கட்டைகளை அணிகின்றனர்.

தமிழர்கள் கொடூரக்குற்றவாளிகளா?
10.12.1882ல் முத்துச்சாமி என்பவர் கொலைக்குற்றவாளியாகக் கொண்டுவரப்பட்டு பின், வைபர் தீவில் தூக்கிலிடப்பட்டார்.1889ல் நான்கு தமிழர்கள் குற்றவாளிகளாக அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்ப்பாதிரியாரின் தொண்டு
1895ல் அந்தமான் தீவுகளுக்கு வந்து சேர்ந்த தமிழகத்து பாதிரியார் வேதப்பன் சாலமன் அவர்கள் தம் மனைவியுடன் நிக்கோபாரில் உள்ள மூஸ் தீவில் கல்விக்கூடம் ஒன்றைத்தொடங்கினார். அதில் 12 இளைஞர்கள் கல்வி பயின்றனர். அவர்களில் நிக்கோபாரின் தந்தை என்றழைக்கப்படும் தீவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பிஷப் ஜான் ரிச்சர்டுசன் அவர்கள் முதன்மையானவர் ஆவார்.
அந்தமானும் வ. உ.சியும்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தீரமுடன் போராடிய வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பல் முதன் முறையாக அந்தமான் தீவுகளுக்குத்தான் சென்று வந்தது.அவரின் கப்பல் சென்று வந்த அந்தமான் தீவுக்கே அவரைக் கைதியாக அனுப்ப வெள்ளைய ஏகாதிபத்தியம் திட்டமிட்டது. தேசத் துரோகக் குற்றத்தை சுமத்தி 40 ஆண்டு சிறைத்தண்டனையை அவருக்கு விதித்தது. ஆனால் மேல் நீதிமன்றம் அவரது தண்டனையைக் குறைத்ததின் காரணமாக அவர் அந்தமானுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், வ.உ.சி தப்பினாலும் அவரது தேச பக்திக்கனல் மூட்டப்பெற்ற இரு தமிழர்கள் பிரதிவாதி பயங்கரம் வேங்கடாச்சாரி மற்றும் டி. சச்சிதானந்த சிவா ஆகியோர் அந்தமான் கொடுஞ்சிறையில் வாடி வதங்கினார்கள். 

'பெருமாள்' என்ற ரெயில்வே தொழிலாளிக்கு ஆங்கில அரசு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் அந்தமான் சிறைக்கு அனுப்பபட்டதாக ராணி இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப்பிறகு படிப்படியாக மருத்துவர்களாக, கைதிகளாக, அரசு ஊழியர்களாக, தொழிலாளர்களாக தமிழர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர்.செல்லுலர் சிறையில் இருந்த தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது. இந்நிலையில் 1931ல் மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி இத்தீவுகளில் வாழ்ந்த தமிழ்மக்களின் எண்ணிக்கை 769 மட்டுமே.

நேதாஜி வருகையும், அந்தமானும்

இரண்டாவது உலகப்போர் காலத்தில் 1942 மார்ச் திங்கள் 13ம் நாள் ஜப்பானியப்படை அந்தமான் தீவுகளைக்கைப்பற்றியது. நேதாஜியின்,'இந்திய தேசியப்படை' உருவானதும் அந்தமானில் தற்காலிக இந்திய அரசாங்கம் அமைக்க உரிமை வழங்கப்பட்டது. நேதாஜி 1943 டிசம்பர் 29 முதல் 31 வரை இத்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் இங்கு அமைத்த தற்காலிக இந்திய அரசாங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் 'கர்னல் லோகநாதன்' எனும் தமிழராவார். ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேயருக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முத்துச்சாமி நாயுடு என்பவர் ஜப்பானியர்களின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமையால் உயிரிழந்தார். 

அன்றையத் தலைநகர் ரூஸ் தீவு

ஆங்கிலேயர் குடியேற்றம் தொடங்கிய 1858 முதல் சாத்தம், வைப்பர், ரூஸ் ஆகிய மூன்று தீவுகளும் கைதிகளின் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கைதிகளைக்கொண்டு ரூஸ் தீவை செதுக்கிய ஆங்கிலேயர் அங்கு தமக்காக சொகுசான குடியிருப்புகளை 1863ல் அமைத்தனர்.அங்கு அதிகாரிகளின் பங்களாக்கள், மின்னுற்பத்தி நிலையம், கேளிக்கை அரங்கம், அங்காடி வளாகம், அச்சகம், பேக்கரி, நீச்சல் குளம், சர்ச் மற்றும் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அப்போது ஆங்கிலேய அதிகாரிகளின் சேவைகளுக்காக வீட்டுப்பணியாளர்களாக, சமையல்காரர்களாக, அரசுப்பணியாளர்களாக சென்ற தமிழர்கள் ஒன்றிணைந்து 1939ல் முருகன் கோவிலைக்கட்டி தமிழனின் விழாக்களை சிறப்பாகக்கொண்டாடினர்.1942 ல் இத்தீவில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு தலைநகர் போர்ட் பிளேயருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

நாடு விடுதலைக்குப்பின்

நாடு விடுதலை பெற்ற பிறகு தீவின் வளர்ச்சிப்பணிக்காக, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் இதர தமிழக மாவட்ட மக்கள் வரவழைக்கப்பட்டனர். இத்தீவுகளில் காடுகளை வெட்டி வீடு சமைத்த பெருமை நம் தமிழனையே சாரும்.அப்போது இத்தீவுகளுக்கு வந்த பொன்னுச்சாமி, மூர்த்தி, சுப.சுப்பிரமணியன் போன்றோர் 1950 -51 களில் தலைநகர் போர்ட் பிளேயரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு அருகில் வெள்ளைச்சாமி உணவு விடுதிக்கு மேல் தளத்தில் தமிழர் படிப்பகம் ஒன்றைத்தொடங்கினர். வார விடுமுறை நாட்களில் அங்கு கூடிப்பேசும் தமிழர்கள் தமிழகத்து செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.

அக்காலத்தில் 1500 கிழக்கு வங்க மக்களின் குடியிருப்புகள் இங்கு தொடங்கப்பட்டன. 1954ல் 5 பர்மியத் தமிழ்க்குடும்பங்கள் இங்கு கொண்டு வரப்ப்ட்டன. அதற்குப்பிறகு 1961 வரை குடியமர்த்தப்பட்ட தமிழ்க்குடும்பங்கள் எண்ணிக்கை 52 மட்டுமே. 1951ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இத்தீவுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 1874. 1961ல் 5765 ஆக உயர்ந்தது. சைத்தான் காடி என்ற இடத்தில் இரப்பர் தோட்டத்தில் பணிபுரிவதற்கென 37 பர்மா தமிழ் அகதிக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 1971ல் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த அகதிப் புனர் வாழ்வுத்துறை அமைச்சர் திருமதி. சத்திய வாணி முத்து அவர்கள் 1000 இலங்கை அகதிக்குடும்பங்கள் 'கட்சால்' தீவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் அங்கு குடியமர்த்தப்பட்டதோ வெறும் 47 தமிழ்க்குடும்பங்கள் மட்டுமே. இவர்களுக்கு மட்டும் இது வரை எவ்வித சலுகைகளும் வழங்கப்படாமல் அகதிகளாகவே நடத்தப்படும் அவல நிலை இன்று வரை தொடர்கிறது.

1969 - 75 களில் தென் முனைத்தீவான பெரிய நிக்கோபாரில் மொத்தம் 238 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை மைய அரசு குடியமர்த்தியது. அதில் 45 தமிழ் குடும்பங்களும் அடங்கும். தீவில் வாழும் இனங்களில், மக்கள் தொகையில் இரண்டாவது இடம் பெறுவது தமிழினமாகும்.

தீவில் தமிழர் அமைப்புகள்

அந்தமான் தமிழர் சங்கம், உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கிய மன்றம் தீவில் தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை எடுத்தியம்பும் பணியைச்செய்கின்றன. தவிர வடக்கே டிக்லிப்பூர் தமிழர் சங்கம், மாயா பந்தர் தமிழர் சங்கம், நடு அந்தமான் இரங்கத் அண்ணா படிப்பகம், கட்சால் தமிழர் படிப்பகம் ஆகிய சிறுசிறு தீவுகளில் கூட தமிழர் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆங்காங்கே, தமிழர்கள் பொங்கல் விழா, சித்திரை விழா, பாரதி - பாரதிதாசன் விழா கொண்டாடும் போது இயல், இசை, நாடகம் இணைந்த பண்பாட்டை கட்டிக் காக்கும் விதத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர்.தீவில் தமிழர்கள் உருவாக்கிய முருகன், வ்நாயகர், சிவன், அய்யனார்,அய்யப்பன்,மாரியம்மன், மற்றும் காளி கோவில் யாவும் உள்ளது. பாரம்பரிய ரீதியில் தமிழகத்து கலாச்சாரத்தைக் கட்டிக்காத்து வரும் தமிழர்கள் எடுக்கும் விழாக்களில் தமிழகத்து மண் வாசனை இருக்கும். அது போல தமிழக இசுலாமிய மறுமலர்ச்சி மன்றத்தினரின் நிகழ்ச்சிகளும், தமிழ் கத்தோலிக்க கிறித்துவர்களின் பொங்கல் விழா பிரபலமானவையாகும். 

தீவில் தேசியக்கட்சிகள் யாவும் இருப்பதுடன் தமிழகத்தின் தி.மு.க., அ.தி.மு.க., போன்ற முகாமையான இருபெரும் அரசியல் கட்சிகளும் இயங்கிவருகின்றன. 1981, ஆகஸ்ட் திங்கள் 3ம் நாளன்று தலைநகர் போர்ட் பிளேயரில்  தமிழ்க்கல்விப் பாதுகாப்புக்குழு சார்பில், தீவில் உயர்கல்வி மற்றும் தமிழர் தம் உரிமைகளை வலியுறுத்தி தலைவர்.தெய்வத்திரு.க.கந்தசாமி அவர்கள், பொதுச்செயலர் தெய்வத்திரு. சுப.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் கல்விக்காக 15 நாள் உண்ணாவிரதம் இருந்த தெய்வத்திரு சுப.சுப்ரமணியன் போன்ற சிலரின் உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போராட்டத்தின் விளைவாகத் தீவில் 7 உயர் நிலை பள்ளிகளும், 10 நடுநிலை பள்ளிகளும், 25 ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

தமிழர் சிலைகள்

15.09.1970 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை 'லாங் ஐலேண்ட்' என்னும் தீவில் நிறுவப்பட்டது. நடு அந்தமான் தீவில் ரங்கத் என்னுமிடத்தில் 02.04.1980 அன்று தி.மு.க பேச்சாளர் ஆசைத்தம்பி அவர்களின் சிலை நிறுவப்பட்டது. பெருந்தலைவர் காமராஜ் மன்றத்தின் சார்பில் 15.04.2003 அன்று பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் திரு உருவச்சிலை டெய்ரி ஃபார்ம் (பால் பண்ணை) என்னுமிடத்தின் சந்திப்பு முனையில் நிறுவப்பட்டது. பிறகு தமிழர் சங்க வளாகத்தில் 10.02.2003 அன்று ஒன்றும், 07.11.2009 அன்று மற்றொன்றுமாக, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் இரு திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டன.

வானொலியில் தமிழ்

தீவில் தமிழ் உட்பட 5 போதனா மொழி பள்ளிகள் உயர் வகுப்பு வரை போதிக்கப்படுகின்றன. அது போல் தமிழ் உட்பட 7 மொழிகளில் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது இந்தியாவில் எங்குமே நடைமுறையில் இல்லாத ஒன்று.ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 6.15 முதல்  6.30 வரை தமிழில் பக்திப்பாடல்களுமாக தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழிதழ்கள்

தீவில் எத்தனையோ இதழ்கள் புற்றீசல் போல தோன்றி மறைந்தாலும் 1969ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாளன்று அன்றையத்தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன் சுப.சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்ட 'அந்தமான் முரசு' தங்கு தடையின்றி 41 ஆண்டுகளைக்கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தவிர அந்தமான் குரல் எனும் இதழும் அவ்வப்போது வெளிவருகிறது.

திரைப்படங்கள்

1977 ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த அந்தமான் காதலி முதல் 2009ல் ஜெகன் மோகினி வரை நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டன.பூப்பூவா பூத்திருக்கு, ராஜாளி, சிறைச்சாலை, பேசாத கண்ணும் பேசுமே, இயற்கை, சத்ரியன், கன்னத்தோடு கன்னம் வைத்து, உன்னை நினைத்து, என் மன வானில், என 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டன.எத்தனை அழகு நிறைந்தவை இந்தத்தீவுகள் என்பதை திரைகளில் காணும் போது இன்னும் வியப்பாகிறது.

2001ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழர்கள் 62,961 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 18 விழுக்காடு என்பதும், தலைநகர் போர்ட் பிளேயர் மற்றும் இதரத்தீவுகளில் வணிகம், ஒப்பந்தப்பணிகள் புரிவதில் முன்னிலை வகிப்போர் தமிழர்கள் தான் என்பதும் மிகப் பெருமையான, ஆறுதலான செய்தியாகும். இங்கு சட்ட மன்ற அமைப்பு இல்லை. மைய அரசின் நேரடிப்பார்வையில் துணை நிலை ஆளுநர் ஒருவரின் ஆட்சியே நடைபெறுகிறது. எனினும் உள்ளாட்சி மன்றங்களில் பொதுத்தேர்தலில் தேர்வு பெற்றவர்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 18 நகர மன்ற உறுப்பினர்களில் 9 பேர் தமிழர்கள்.

எத்தனையோ மொழியின மக்கள் வாழும் குட்டி இந்தியா என்று போற்றப்படும் இத்தீவுகளில் சாதிச்சங்கங்களுக்கு சிறப்பிடம் தரும் இனம், தமிழினமே!. தமிழக அரசியல் சூழ்நிலைகளும் அவ்வப்போது இங்குள்ள அரசியல் பிளவுகளுக்கும், அந்தமான தமிழர்களைப் பிரிக்கும் காரணியாகவும், இருந்து வருகிறது. ஒன்றுபட்ட சிந்தனையும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே அந்தமான் தமிழினத்தின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழி வகுக்கும்.

சனி, ஜூலை 10, 2010

குடும்பம்

ஒற்றை விரலால் கலைத்துப்போடும்
சிலந்தி வலையின் வன்மையை
சிக்கி உணவாகும் உயிர்கள் அறியும்

தொட்டதும் விரலில் படியும்
மென்மை நீரின் வன்மை
தீரா நதிகளில் நனைந்து, தேய்ந்து
வன்மை இழக்கும் பாறைகள் அறியும்.

 நீ
சிலந்தி வலையின் நூலெடுத்து
எனை சிறைப்படுத்தும் போதும்
கலைத்தெழ மனமின்றி கட்டுக்குள் நான்.
நதியலையால் தேய்த்து ஓடும் போதும்
விலக்கி விட மனமின்றி உனைத் தாங்கி நான்

கற்களால் சமைத்த சுவர்களை
வீடாக்கி
சின்ன அறையில் ஒரு உலகம் காட்டி
சிறைப்படுத்தி
இயல்பாய் எல்லாம் வெகு இயல்பாய்....

தீயாய்ப்பற்றும் நீயே,
அணைக்கும் நீராகி
என்னை
பரந்த வெளியின் சுதந்திரம் விட்டு,
உன்னில் சிறைப்படவே விரும்பும் கைதியாக்கி
தந்திரமாய் எல்லாம் வெகு தந்திரமாய்.....

சக்கரவாகத்திற்கு மழையாய்
பூக்களில் விலங்கிடும் உன்
அன்பின் வாசம்....


வெள்ளி, ஜூலை 09, 2010

இருவழிப்பாதை

நேசிப்பதை விட சுகமானது
நேசிக்கப்படுவது.
தனிமையான மனவெளியில் இன்றும்
என் கைகள் கோர்த்து துணைக்கு வருகிறது உன் நினைவு.

கூரையின் விளிம்பில்
வழியும் மழை நீர் அளாவுதல்
பனி படர்ந்த அதிகாலை
கனத்த போர்வையின் போர்த்தல்
சோர்ந்த போதுகளில்
சூடான தேனீர் அருந்தல்
பௌர்ணமி இரவில்
கடற்கரை வெளியில்
இப்படி
நான் வாழ்ந்த நிமிடங்களின் பட்டியலில்
கூடுதலானது உன்னோடான சந்திப்புகளும்

நீயற்ற பொழுதுகளை 
நீந்திக் கடக்க கட்டுமரங்களாயும்
முடிவற்ற நிலவெளியில்
நடந்து கடக்க கை கோர்த்து கதை சொல்லி நடப்பதுவும்
உன் நினைவுகள் 

பாதைகள் வேறு
பயணங்கள் வேறு என்ற போதிலும்
எனக்குத்தெரியும்
உன் மன ஆழத்தில் குமிழியிடும் என் நினைவுகள்
நேசமென்பது பெரும்பாலும் இருவழிப்பாதையாகிவிடுகிறது.