சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 18, 2010

அந்தமான் இலக்கிய மன்ற நிகழ்வு


நீண்ட நாள்களுக்குப் பிறகு வலையுலக நண்பர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நேரமின்மையால் எழுத இயலவில்லை. 
அந்தமான் தமிழர் சங்கத்தில் வாராவாரம் சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறுகிறது. குழந்தைகளின் படிப்பு இன்ன பிற வேலைகளின் காரணமாக செல்ல முடிவதில்லை.4.12.10 அன்று மூத்த தமிழாசிரியை திருமதி. கமலா தோத்தாத்ரி அம்மாவை சந்திக்கவென்று அவர்களின் இல்லம் சென்ற போது அம்மா அவர்கள் அவர்களது இல்லத்தில் இல்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது,"நான் தமிழர் சங்கத்தில் இலக்கிய மன்றக் கூட்டத்தில் இருக்கிறேன். இங்கு வா! வரும் போதே நான் ரசித்த கவிதை என்ற தலைப்பில் யோசித்துக் கொண்டே வா. இலக்கிய மன்றத்தில் இன்றைய தலைப்பு இது தான்" என்றார்கள். போனதும் நினைவில் நின்றதைச் சொல்லிவிட்டு விடை பெறும் போது கமலா அம்மா அவர்கள் அடுத்த வாரம் இலக்கிய மன்றக்கூட்டத்திற்கு சாந்தி தான் தலைவி என்று அறிவித்தார்.( அட! நிஜமாங்க. நம்புங்க) அடுத்த வாரம் ஆளுக்கொரு தலைப்பில் கவிதை எழுதி வருவோம் என்று கூறி விடை பெற்றோம்.

11.12.10 அன்று கடுமையான மழை. அடாது மழையிலும் விடாது இலக்கிய மன்றத்திற்கு வந்தவர்கள் எட்டு பேர். யாருமே கவிதை எழுதி வரவில்லை. நண்பர் ஒருவர் இன்று தலைவரின் விருப்பம். ஆகவே நீங்கள் ஒரு தலைப்பு கொடுங்கள். இப்போது கவிதை எழுதுவோம் என்றார். முதியவர் ஒருவரை சாலை ஓரம் சாக்கில் சுற்றி வீசி விட்டுப் போன கொடூரம் நினைவில் வர முதுமை என்று தலைப்புக் கொடுக்க கவிஞர்கள் கவி மழை பொழிந்து விட்டனர். அந்தமான் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் உங்கள் பார்வைக்காக.

முதலில் உயர்திரு. தஞ்சை மா. அய்யாராஜு அவர்கள். - உதவி இயக்குநர், கல்வித்துறை.

முதுமை - அது பழமை, மூத்தமை - அதில்
முதிர்ச்சி இருக்கும். முதன்மையும் இருக்கும்.
இளமை - அது புதுமை. புது மை
அதில் வேகம் இருக்கும். விவேகம் இருக்காது.
இளமையின் முதிர்ச்சி தானே முதுமை.
அந்த முதுமையில்....
தன்மை,மென்மை,மேன்மை, சொல்வன்மை, வெண்மை
இப்படி இருக்கு மைகள் ஏராளம்.
அதில் ஏது புதுமை 
அதிலே இருக்கும் தனிமை....
அது தான் கொடுமை

அந்த முதுமையில் உடலைப் பற்றும்
தாளாமாய், இயலாமை, ஏழ்மை
இவை யாவும் முதுமையின் இழிமைகள்.
அத்தனையும்
முதுமையை அழித்து
முடிக்கிறது முதுமையை இல்லாமையாய்...

அதுவும் முதுமையில் வறுமை வந்து விட்டால்
அதை விடக்கொடுமை, இழிமை ஏதுளது?
ஒரு தாய் கேட்கிறாள் தன் மகனிடம்...
மகனே!
நீயிருக்க என் கருவறை இடம் தந்தது
நீ கண்ணயர என் தோள்கள் மடம் தந்தன.
நீ தவழ்ந்திட என் மடி தடம் தந்தது.
உன் நினைவுகளே என் மனதை நிரப்பிட இடம் தந்தது.
இத்தனை இடம் தந்த எனக்கு...
மகனே!
உன் மாளிகையின் ஒதுக்கில் கூட இடமில்லையா?
இடமின்மை 
மாளிகையில் மட்டும் தானா? இல்லை
உன் 
மனதிலும் கூடவா?

முதுமையை மதிக்காத இளமையே!
மறந்து விடாதே!
முதுமை எனக்கு மட்டுமல்ல.
ஓர் நாள் உனக்கும் தான்.

ஐயா அவர்கள் கவிதை வாசித்து முடிந்ததும் உறுப்பினர் ஒருவர் என்ன தலைக்கு மையடிக்கிறீங்களா? என்று கேட்க ஐயா அப்பாவியாய்த் தலையாட்ட அதான் கவிதை முழுசும் மை, மைன்னு எத்தன மையப்பா! என்று கலாட்டா செய்ய ஒரே கலகலா!

அடுத்து திருமதி. கமலா தோத்தாத்ரி.(மூத்த தமிழாசிரியை)

முதுமை - கடவுள் தந்த வரம்.
மனிதன் தொடும் சிகரம்

பல நேரங்களில் முதுமை இகழப்படுகிறது
பல நேரங்களில் முதுமை ஒதுக்கப்படுகிறது
பல நேரங்களில் முதுமை சபிக்கப்படுகிறது
சில நேரங்களில் மட்டுமே வணங்கப்படுகிறது

உண்மையில் முதுமை வாழ வழிகாட்டும்
உண்மையில் முதுமை வாழ்க்கைக்கு வழிகாட்டும்
இளமை நினைவுகளை அசை போட முதுமை
இளமைத் தவறுகளை உணரச்செய்ய முதுமை

முதுமை வந்ததன் அடையாளம் தலையில் நரை
அது காலமகள் வரைந்த வெள்ளைக் கோலம்
நாளை நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணா
காளை, கன்னியரின் விபரீத நடத்தையின் 
விளைவுகளே முதியோர் இல்லங்கள்
இவை நாட்டின் விதியை மாற்றிவிடும்
நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்கும்
வருகின்ற தலைமுறையைப் பதம் பார்க்கும்

முதுமை கண்டு அஞ்ச வேண்டாம்
முதுமை கண்டு தளர வேண்டாம்
முதுமையை எதிர்கொள்ள 
இன்றிலிருந்தே தயாராவோம்.
முதியோர்க்கு ஊன்று கோலாய்த் துணை நிற்போம்.
முதியோரை ஊன்றுகோலாய் துணை கொள்வோம்

முதுமையே முழுமையாகும்
முழுமையே நிறைவாகும்
நிறைவை நோக்கி நகர்ந்திடுவோம்
நிறை மதியாய் விகசிப்போம்.

அடுத்த கவிதை திரு சேது கபிலன், பொறியாளர், அந்தமான் பொதுப் பணித்துறை.

முதுமை தான் தவம்
பிறந்தவர்கள் பல கோடி என்றால்
முதுமையாம் வரம் தழுவியவர் அதில் பாதி தான்
பூமியை ஜெயித்து முளைத்த விதைகள் கூட
பல சமயங்களில் முதுமையைத் தொட முடிவதில்லை.
எனவே 
முதுமை ஒரு வரம் தான்
முதுமை ஒரு தரம் தான்.

பனி வாடை வீசும் காற்றும் கூட
அனுபவத்தின் முதிர்ச்சியினால்...
வீசும் போது அதற்கு தென்றல் என்று பெயர்

வாழ்ந்த வாழ்க்கையின் சாதனைகளுக்கு
முதுமை ஒரு நீதிமன்றம்
தளர்ந்து குந்தினால் நடுங்கும் உடலுக்கு
சுகமான ஞாபகங்கள் தான் சுடு நெருப்பு

சராசரி மனிதர்களுக்கு முதுமை ஒரு அசையும் தேர்.
சாதனையாளர்களுக்கு முதுமை தேரை செலுத்தும் குதிரை
பிறப்பு இறப்பு என்னும் வட்டத்தில்
முதுமை முடிவிற்கு திறவுகோல்

பிறப்பறுக்கும் பூட்டும் கூட முதுமை ஆகவேண்டுமெனில்
நாம் செய்கின்ற செயல்களால் தான்
எனவே கிழவனாகி விடை பெறும் வரை
நாம் அனைவரும் முதுமையை விரும்புவோம்.

செல்வி எம். முத்து லெக்ஷ்மி, ஆசிரியை

முதுமை - மனிதனின் ஆறாம் அறிவின் ஒளிச்சுடர்
முதுமை - மனிதகுலத்தின் சீர்திருத்த முதற்படி
முதுமை - தியாகத்தின் மெருகேறிய அஸ்திவாரம்
முதுமை இளமையின் கருவூலம்
முதுமை - தத்துத் தமிழாகிய இளமையின் முற்றுப்பெற்ற இலக்கணம்
முதுமை - பண்பட்ட பண்பாட்டின் பாற்சுவை.

அடுத்த கவிதை திருமதி. சாந்தி லெக்ஷ்மணன் (அடியேன் தான்)

சருகோலையைப் பார்த்து
குருத்தோலை சிரித்தது
சருகோலையும் புன்னகையோடு சொன்னது
அன்று உன்னைப் போல் நான்
நாளை என்னைப் போல் நீ

காலச்சக்கரம் ஒன்று தான்
வெவ்வேறு புள்ளிகளில் நாம்

பருவங்களில் இலையுதிர்காலம் போல்
முதுமை இயல்பானது.
முதுமை சுமையானது எப்போது?
முயலுக்கு சிங்கத்தின் குகை தேவைப்பட்ட போது...
புழுவிற்கு நாகம் போல் படமெடுக்கும் பேராசை வந்த போது...

வாழ்க்கையை வெற்றுத்தேவைகளால் நிரப்பி
விடை கொடுத்தோம் அன்பிற்கு...
விளைவு - முதுமை சுமையானது.
இன்று
முதியோர் கைகளைப் பிணைக்கும் விலங்குகளாய் 
முதியோர் வாழ்க்கைப்பாதையின் வேகத்தடைகளாய் 

முந்தி பிந்தி என்றாலும் கூட
அந்தி எல்லோருக்கும் உண்டு.
அறிவது எப்போது?

கவிதை நல்லாருக்கு. ஆனா தலைப்பு நீங்க தான் குடுத்தீங்க. வீட்டுல எழுதிக்கிட்டு வந்தீங்களோ? என்றார்கள். அங்க இங்க படிச்சத ஞாபகம் வச்சு நா எழுதப்பட்ட பாடு என்ன? இவங்களானா... 

திரு. பி.செண்பகராஜா, எழுத்தர், மாநில ஆணையர் அலுவலகம்.

காணக்கிடைக்காத அதிசயம்
கண்டு கொள்ளாத நிதர்சனம்
முதற்குடிகள் முதல் மூத்த குடிகள் வரை
முடங்காது முயல்வது முதுமை

முதுமை நெடுந்தூரப் பயணம்
வாழ்வின் நிதர்சனங்களை அலசிப்பார்க்கும் தருணம்
தியாகத்தோடு உழைத்திட்டவற்றை
திரும்பிப் பார்க்கும் சமயம்

அனுமதியின்றி நுழைவது - வாழ்விற்கு
அமைதியைக்கொடுப்பது
உல்லாசப்பயணம், ஓய்வு நாற்காலி
பேரக்குழந்தைகளோடு
பேரன்போடு கொஞ்சி விளையாடல்
இங்க்ங்க்னம் கழிந்தால் முதுமையும் இனிமை
முதுமைக் கூடங்களில்
முடங்கிக் கிடக்கும்
முன்னவர்களை நினைத்திட்டால்.....
முதுமை பெறும் துன்பம் தான்.

திரு.சுப. காளை ராஜன், தொலைத்தொடர்பு துறை

ஆலமரம் அழுவதுண்டோ?
வாழை மரம் வழுவியதோ?
கோழையோ நீ? கொடுங்கிழவா!
முதுமையிலும் இளமையாக 
முளைக்கும் போதே பாதையிடு.

இளமையிலே வளமையுண்டு
இயல்பினிலே வாலிபம் நீ
ஆலமரம் நிழல் போல 
ஆகவேண்டும் முதுமையிலே

இயற்கையை நீ பார்த்து நட
இயலாமல் நீ வாழ்ந்துவிட்டால்
கூனிக் குறுகும் நீ 
குனியத்தான் வேண்டுமையா!

காலங்கள் மாறிவரும்
களையெடுக்க மறந்திருப்பாய்
களைகளெல்லாம் நெல் முத்தாய்
நீ நினைத்தால் உன் தவறே!